நல்லதொடுதல் கெட்டதொடுதல எது ? | தினகரன் வாரமஞ்சரி

நல்லதொடுதல் கெட்டதொடுதல எது ?

எப்போதும் மழலை மொழியில் செல்லக் கதை சொல்லி ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த உங்கள் சின்னஞ்சிறு மகள் செல்வி, இப்போது ஏதோவொரு அச்சத்தில் உட்கார்ந்த இடத்திலேயே இருக்கிறாள். ஏனென்று கேட்டால் மிரண்டுபோய்ப் பார்க்கிறாள். எப்போதும் போல் விளையாட்டில் ஆர்வம் காட்டவில்லை. வீட்டுப் பாடத்தில் நாட்டம் கொள்ளவில்லை. இவ்வாறான அறிகுறிகள்தான் உங்களுக்கு முதல் எச்சரிக்கை மணியென்று எடுத்துக் கொள்ளவேண்டும்!

உங்கள் மகள் பாலியல் தொந்தரவுக்கு ஆட்பட்டிருக்கலாம். இதனை அப்படியே அலட்சியமாய் விட்டுவிட்டால் நீங்கள் பொறுப்பான அம்மாவோ அப்பாவோ இல்லையென்று தான் அர்த்தம். “அம்மா, அந்த அங்கிள் கூடாது’ என்று மழலையில் உங்கள் மகள் சொல்கிறார் என்றால், அல்லது அவள் பதற்றத்தில் எதையோ உளறுவதுபோல் தெரிந்தால், உடனே அதற்குக்காது கொடுத்துக் கேளுங்கள். விசாரித்து ஆராய்ந்து இத்தொல்லைக்கான நபர்களை, அதற்கான சூழலை பிள்ளையிடமிருந்து விலக்குங்கள்!

அதற்கு முன்னால் Good Touch பற்றியும் Bad Touch பற்றியும் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். பத்திரிகைகளில் படித்திருப்போம். ஆனால் நமக்கு நமக்கென்று, நம் பிள்ளைகளுக்கென்று ஏதாவது பாதிப்புவரும் வரை அதனை சீரியஸாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை.

குழந்தைகளை ஒரு பாதுகாப்பான சூழலில் வளர்த்தெடுப்பதும், நல்லது எது, கெட்டது எது என்பதைப் புரியவைப்பதும் இன்றைய காலகட்டத்தில் மிகமிக முக்கியம். இதை அலட்சியப்படுத்தும் பெற்றோரின் குழந்தைகள் தான் பல்வேறு பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

சரி. எது Good Touch? நல்ல தொடுதல்தான் குட் டச்! ஒரு தாயின் அரவணைப்புப் போல, அன்பான, கள்ளங்கபடமில்லாத தூய்மையான நேசம் உடையவர்கள் குழந்தைகளைத் தொடுவதுதான் நல்ல தொடுதல்! அதாவது, ஒரு துளியளவுகூட தப்பான எண்ணமில்லாமல் தொடுவது. அது கழுத்துக்கு மேலே என்றாலும் சரி, கீழே என்றாலும் சரி!

எது Bad Touch? கேவலமான சிந்தனையோடு தொடுவதுதான் தப்பான தொடுதல்! பெண் குழந்தைகளை, சிறுமிகளை செல்லமாய் கொஞ்சுவது போலவோ, அவர்களுக்கு உதவுவது போலவோ, உடன் விளையாடுவது போலவோ பாவனை செய்வார்கள். ஆனால் மனசுக்குள் வக்கிரமாய்த் தொடுவார்கள்.

தப்பான தொடுதலுக்கு ஆளான குழந்தைகள் வெளியில் சொல்வதில்லையென்பதுதான் அவர்களுக்குச் சாதகமாய் அமைந்துவிடுகிறது. 75 சதவீதமான குழந்தைகள் பயத்தினாலோ, அச்சுறுத்தலினாலோ தங்களைத் தப்பாகத் தொடுவதை யாரிடமும் சொல்வதில்லை.

தப்பாகத் தொடுபவர்களில் வயது வித்தியாசமே கிடையாது. மாமா, மச்சான், நண்பர், தாத்தா, பக்கத்து வீட்டுக்காரர் என்று எல்லா வயதினரும் இருக்கிறார்கள். 90 வீதம் தெரிந்த நபர்கள்தான் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே, பெற்றோர்களே! விழிப்படையுங்கள். உங்கள் பிள்ளை இன்னும் வளரவில்லையே என்று காத்திருக்காதீர்கள். மூன்று வயதிலேயே எது நல்ல தொடுதல், எது கெட்ட தொடுதல் என்பதைப் புரியவையுங்கள். எச்சரிக்கையுடன் இருக்க வழிகாட்டுங்கள்.

சில முன்னெச்சரிக்கைப் பாடங்கள்

01. முதலில் உங்கள் குழந்தைகளை, அந்தச் சின்னஞ் சிறுவர் சிறுமியரை நீங்கள் நம்புங்கள். பள்ளிக்கோ, பக்கத்து வீட்டுக்கோ போய்வந்தால் அங்கே என்ன நடந்தது என்று மெதுவாகக் கேளுங்கள். கள்ளங்கடமில்லாத குழந்தைகள் சொல்வதை கவனியுங்கள். ஒருவேளை ஏதும் தப்பு நடந்திருந்தால் பதற்றமடையாதீர்கள்! குழந்தைகளையும் பயப்பட வைக்காதீர்கள்!

02. யாராவது தப்பாகத் தொடமுயற்சி செய்தால் அதை அனுமதிக்காதிருக்கப் பழக்குங்கள். “NO” சொல்லச் சொல்லுங்கள்; அதையும் சத்தமாகச் சொல்லச் சொல்லுங்கள்!

03. குழந்தைகளின் உடம்பு அந்தக் குழந்தைகளுக்கு மட்டுமே சொந்தமானது. அதைத் தொட பெற்றோரைத் தவிர யாருக்கும் உரிமையில்லையென்பதை பக்குவமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவையுங்கள்.

04. விளையாட்டு, வேடிக்கை அல்லது பகிடி என்ற போர்வையில் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாராவது அத்து மீறிகிறார்களா என்பதை நாம் தான் கவனிக்க வேண்டும். விளையாடிவிட்டு வரும் குழந்தைகளிடம் போகிறபோக்கில் கேட்பதுபோல் கேளுங்கள். எதையும் வற்புறுத்திக் கேட்டால் பயந்துபோய் அவர்கள் எதையும் சொல்லமாட்டார்கள்.

05. வக்கிரம் பிடித்த பேர்வழிகள் குழந்தைகளை வழிக்குக் கொண்டுவர முதலில் சொக்லோட், ஜஸ்கிறீம் போன்றவற்றைத் தருவார்கள். அடுத்ததாக “சும்மா வாங்கிக்கோ, இல்லாட்டா அம்மாவிடம் சொல்லி விடுவேன்’ என்றும் பயமுறுத்துவார்கள். இப்படி யாராவது சொன்னார்களா என்று மெல்ல விசாரியுங்கள்.

06. இந்த விடயத்தில் படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள் பணக்காரர்கள் என்ற வித்தியாசமே இருக்காது. எவ்வளவு தெரிந்தவர்களென்றாலும் உள்ளுக்குள் ஒரு குரூரம் அல்லது வக்கிரம் ஒளிந்திருக்கலாம்.

07. இது விடயத்தில் யார்மேலாவது சந்தேகம் வந்தால் அவர் எவ்வளவு நெருங்கிய உறவுக்காரராக இருந்தாலும் சரி, அவர்களிடமிருந்து பிள்ளையை அந்நியப்படுத்துங்கள். அண்டவிடாதீர்கள். ஆனால் அதை வெளியில் தெரியாதபடி செய்ய வேண்டும்.

08. குழந்தை பதற்றமாகவோ, சோகமாகவோ இருந்தால் அதனை ஆசுவாசப்படுத்தி நடந்ததை விசாரியுங்கள். உடம்பில் காயமோ அடையாளமோ இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் உஷாராகிவிடுங்கள்!

09. இதில் இன்னுமொரு முக்கியமான விடயம்; நீங்கள் வீட்டில் இல்லாதபோது மூன்றாவது நபர் யாரிடமாவது பிள்ளையை விட்டுப்போக நேர்ந்தால் நீண்டநேரம் விட்டுவைக்காதீர்கள்.

10. அந்த அங்கிளை, அல்லது அண்ணாவை எனக்குப் பிடிக்கவில்லையென்று பிள்ளை சொன்னால், அப்பேர்வழிகளை தவிர்க்க வேண்டியது ஒரு அம்மாவுக்கு கட்டாயமாகிறது.

11. அம்மாவிடம் எதையும் தைரியமாகச் சொல்லலாம் என்ற நம்பிக்கையை பிள்ளைக்கு ஊட்டுங்கள். தனக்கு எல்லாவிதத்திலும் அம்மாதான் பாதுகாப்பு என்பதை பிள்ளை உணரவேண்டும்.

12. அம்மா தன் வயதிலிருந்து இறங்கி பிள்ளையிடம் சக தோழிபோல் உரையாடிப் பழக வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் எதுவானாலும் மறைக்காமல் சொல்லுவார்கள்.

13. எந்தக் குழந்தையும் பாலியல் தொடர்பான தொந்தரவுகளை தானே தப்பாக உருவாக்கிச் சொல்லாது. ஏதாவது நடந்திருந்தால்தான் அது பற்றிச் சொல்லும். அதனால் உங்கள் குழந்தைக்குத்தான் அதில் முதலிடம் தரவேண்டும். அது சொல்வதைத்தான் நீங்கள் நம்பவேண்டும்.

14. பொது இடங்களில் குழந்தைகள் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டுமென்பதை நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

15.சொந்தக்காரர்கள் யாராவது திடீரென்று பிள்ளையை கடைக்குக் கூட்டிச் செல்வது, சினிமாவுக்குக் கூட்டிச் செல்வது என்றால் அவற்றைக் கண்காணியுங்கள். அவைகளை முடிந்தவரை தவிர்க்கப்பாருங்கள்.

“காலமெல்லாம் எப்படி இதையே கண்காணித்துக் கொண்டு இருக்கமுடியும்? எங்களுக்கு வேறு வேலை இல்லையா?” என்ற விட்டேற்றியான மனோநிலையோடு பெற்றோர்கள் இருக்கக்கூடாது. அனர்த்தங்கள் நிறைந்த இந்த அவசர யுகத்தில் இந்த விடயத்திலும் பெற்றோர் விழிப்புடனிருந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் காலமெல்லாம் உங்கள் பிள்ளை ஒரு பாரிய மனத்தாக்கத்தை, மாறாத ஒரு வடுவை சுமந்தே வாழ வேண்டியிருக்கும். அது பெண் குழந்தையென்றாலும் சரிதான்; ஆண் குழந்தையென்றாலும் சரிதான்!.

எஸ்.ஜோன்ராஜன் 

Comments