ஜனநாயகத்தினை மீட்டெடுப்பாரா? | தினகரன் வாரமஞ்சரி

ஜனநாயகத்தினை மீட்டெடுப்பாரா?

பாகிஸ்தான் பாராளுமன்றதேர்தல் முடிந்த வாரத்தின் உலக அரசியலில் பிரதான இடம் வகித்திருந்தது. வாக்குச் சாவடிகள் மீதும், வேட்பாளர் மீதும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியும் ஜனநாயக விரோத செயல்களின் பிரதிபலிப்புக்களை கொண்ட தேர்தலாக நடந்து முடிந்த பாகிஸ்தான் தேர்தல் அமைந்துள்ளது. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து ஏறக்குறைய 70 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் 29 பிரதமர்கள் ஆட்சிக்கு வந்தபோதும் ஒருவர் கூட ஆட்சிக் காலத்தை முழுமையாக ஆட்சி செய்ததாக வராலாற்றில் பதியப்படவில்லை. இந்த வகையில் நடந்து முடிந்த பாகிஸ்தானிய பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகத்துக்கான வெளியை ஏற்படுத்தக் கூடியதா என்பதை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாகிஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் அரசியல் கட்சி 117 ஆசனங்களை பெற்று பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. ஏனைய கட்சிகளில் சுயேச்சைக் கட்சிகள் உள்ளடங்கலாக 30 க்குமேற்பட்ட அரசியல் கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட்டு இருந்தன. வன்முறையை தவிர்ப்பதற்கு பொலிசாரையும் இராணுவத்தையும் குவித்தபோதும் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவேட்டா பகுதியில் வாக்குச் சவாடி மீது தற்கொலை தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்பட்டது. இதேபோன்று ஹைபர்- பக்துன்கவா மாகாணத்தில் அவாமிக் கட்சிக்கும் பிரதம வேட்பாளர் இம்ரான் கான் கட்சிக்குமிடையில் மோதல் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதேபோன்று இப்பகுதியின் திக்ரி பகுதியிலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக், அவாமி தேசியக் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.

இவ்வன்முறை ஒன்றும் பாகிஸ்தானுக்கு புதியது அல்ல. கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்தின் ஆதிக்கத்திற்குள் அகப்பட்டு இருந்த பாகிஸ்தானிய அரசாட்சியானது தொடர்ச்சியானதொன்றாகவே காணப்படுகின்றது. 1947 ஆம் ஆண்டு ஜின்னாவின் தலைமையில் பாகிஸ்தான் இந்தியாவிடம் இருந்து பிரிவினை கோரிய போதே இராணுவ ரீதியான மனோ நிலை பாகிஸ்தானிய ஆட்சியாளர்களிடமும் மக்களிடமும் ஏற்பட்டது. இதனை ஊக்குவிக்கும் விதத்தில் ஜின்னாவும் ஜனநாயக ரீதியான எந்த கட்டமைப்புக்களையும் உருவாக்காதது மட்டுமன்றி பாகிஸ்தானுக்கான ஓர் அரசியல் அமைப்பை கூட வரைய தவறியிருந்தார். எல்லையில் நிகழ்ந்த யுத்தங்கள், இந்திய – பாகிஸ்தானுக்கு இடையிலான போருக்கான திட்டமிடல்கள், மோதல்கள், படுகொலைகள் என்பன இந்தியர்கள் மீது பாகிஸ்தானியர்களுக்கு அதிக அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் பிரதிபலிப்பாகவே அய்யூப்கான், யஜியாஹான், ஜியாஉல்ஹக், முசராப் போன்ற இராணுவ தளபதிகள் ஆட்சியாளர்களாக மாறுகின்ற நிலை ஏற்பட்டது. இவர்களுக்கு முன்னர் அலி பூட்டோ, பெனாசீர் பூட்டோ, நவாஸ் ஷெரீப் போன்றமிதவாத ஆட்சியாளர்கள், போலித்தனமான அரசியல்வாதிகளாக இராணுவத்தின் பொம்மைகளாகவும் காட்சிப்படுத்தப்பட்டனர். இவர்கள் இராணுவத்தின் விருப்பினை நிறைவு செய்பவர்களாக மட்டுமே விளங்கினர். இராணுவத்தின் நலனை மீறி இந்தியர்களுடனோ அல்லது இந்திய சார்பு நாடுகளுடனோ உறவு வைத்துக் கொள்வதை விரும்பாத இராணுவம் அத்தகைய சூழலை ஏற்படுத்துகின்ற மிதவாத ஆட்சியாளர்களை இலகுவில் விலக்கிக் கொள்ள, நெருக்கடி கொடுக்க, தூக்கில் இட, ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்த, எப்போதும் தயாராக இருந்தது. இதனை ஒட்டுமொத்த இராணுவ ஆட்சியே என்றே குறிப்பிட முடியும். பாகிஸ்தான் தென்னாசியாவிலேயே இராணுவ மரபுகளையும் இராணுவ ஆதிக்கத்தையும் கொண்டிருக்கும் வலிமையான தேசம். இதனை மாற்றிக் கொள்வதில் இம்ரான் கானிலோ அல்லது இனி வரப்போகின்ற ஆட்சியாளர்களினாலோ இலகுவில் சாத்தியப்படுத்தக் கூடியது அல்ல. இதற்கு ஆதாரமாக இம்ரான் கானின் இராண்டாவது மனைவியாகிய ரெகம் கான் முன்வைத்த குற்றச்சாட்டு மிகப் பொருத்தமானது. இம்ரான் கான் இராணுவத்தின் ஊதுகுழலாக செயற்படக் கூடியவர். தேர்தலில் அவர் வெற்றி பெற்றாலும் அவரது நிலை இராணுவ வேட்பாளர் என்பதாகவே அமையும். அவர் பிரதமராக வேண்டும் என இராணுவம் விரும்புகின்றது. 2013 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நவாப் ஷெரீப் இராணுவத்தின் ஆதரவினால் தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோன்று தற்போதைய பாகிஸ்தானிய இராணுவம் சரியான திட்டத்துடன் இம்ரான் கானை ஆதரித்துள்ளது. ஏறக்குறை இம்ரான் கான் இராணுவத்தால் ஆட்டிவிக்கப்படும் பொம்மையாக செயல்படக் கூடியவர்.

முக்கியமான பிரச்சினைகளில் இராணுவம் எதனை குறிப்பிடுகிறதோ அதனையே இம்ரான் கான் செயற்படுத்துவார். அவருக்கும் இராணுவத்துக்கும் இடையிலான தொடர்பு பற்றி என்னிடம் நிறையவே உண்டு என இங்கிலாந்தைச் சேர்ந்த இம்ரான் கானின் மனைவி மேலும் தெரிவித்தார்.

இவர் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் அனேகமானவை பாகிஸ்தானுக்கு பொருத்தமானவை. பாகிஸ்தானிய இராணுவம் என்றுமில்லாதவாறு பலமான ஓர் இராணுவமாக கட்டி வளர்க்கப்பட்டுள்ளது. இது எல்லை பாதுகாப்பை மட்டுமன்றி உள்நாட்டு அரசியலையும், சமூக முரண்பாடுகளையும் தளர்த்தி வைக்கும் திறன் உடையதாகவும், மக்கள் தொடர்பு கொண்ட ஒன்றாகவும் இஸ்லாமிய மதத்தினை தாங்கிக் கொண்டு இருக்கும் நிறுவனமாகவும் காணப்படுகின்றது. இதற்கான அடிப்படை காரணம் இந்தியா என்கின்ற இந்துத்துவ அரசினை எல்லை நாடாக கொண்டு இருப்பதோடு 1947, 1956, 1965, 1971, 1998 ஆகிய ஆண்டுகளில் பாரிய யுத்தங்களை எதிர்கொண்டு இருப்பதும் பாகிஸ்தானின் சுயபாதுகாப்பை அரசியல் நிறுவனங்களைவிட இராணுவமே பொறுப்பு ஏற்று இருக்கும் நிலை பாகிஸ்தானின் இராணுவ வளர்ச்சிக்குஅடிப்படையாக அமைந்தது. இத்தகைய எண்ணப் பாங்கை வளர்க்கும் விதத்தில் பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும் அதன் பின் சீனாவும் இராணுவ ரீதியில் பாகிஸ்தானை வளர்க்கும் நாடுகளாக காணப்படுகின்றன. ஏறக்குறைய பாகிஸ்தான் இராணுவம் இந்தியா தொடர்பான அச்சுறுத்தலாலேயே கட்டி வளர்க்கப்பட்டது எனலாம். அது பாகிஸ்தானாகவும் இருக்கலாம், அமெரிக்காவாகவும் இருக்கலாம், இந்தியாவாகவும் இருக்கலாம். எல்லாமே இந்திய எதிர்ப்பு வாதத்தில் எழுந்த வளர்ச்சியாகவே உள்ளது. இரண்டுநாடுகளுக்குமிடையில் நீண்டு இருக்கும் எல்லைக் கோடும் காஷ்மீர் விவகாரமும் பாகிஸ்தானுக்குமான மிதவாத அரசியலுக்கான வாய்ப்பினை நிராகரித்தே வந்துள்ளது. இதிலிருந்து இம்ரான் கானினால் விடுபட முடியாது என்பது தேர்தல் காலங்களில் இடம்பெற்ற வன்முறைகள் ஆதாரங்கள் ஆகும். இது தவிர்க்க முடியாத அரசியல் பாரம்பரியத்தை பாகிஸ்தானுக்குள் ஏற்படுத்தியுள்ளது.

இம்ரான் கான் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் மூலம் உலக கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த ஒரு தலைவராக உலகத்திற்கு அறிமுகமானவர். கிரிக்கெட் விளையாட்டின் முடிவுகளை எடுக்கும் போதும் அவற்றை மீறாது செயற்படும் போதும் சக வீரர்கள் மத்தியில் ஒரு சர்வாதிகாரியாகவே செயல்பட்டு இருந்தார் என பதிவுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய சர்வாதிகாரத்தனம் பாகிஸ்தானின் அரசியலில் இயல்பான ஒன்றாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மிதவாத ஆட்சியாளர்கள் போன்று இந்தியாவிற்கு சார்பாகவோ அல்லது இந்தியாவுடனான ஒத்துழைப்பை உருவாக்குவதன் மூலமோ அவரது ஆட்சியை தக்கவைக்க முடியாத நிலை ஏற்படும். இந்தியாவுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தாலும் இம்ரான் கானுக்கு ஆபத்தானதாக அமையும். அதேவேளை அயல் நாடு என்ற அடிப்படையிலும், சார்க் நாட்டின் உறுப்பு நாடு என்ற வகையிலும், கொமன்வெல்த்தின் பங்காளர் என்ற நிலையிலும் இந்தியாவுடனான நட்பு இம்ரானுக்கு அவசியமானது. அதேநேரம் சீனாவுடனான உறவை நிராகரிப்பது என்பதும் இம்ரான் கானின் ஆட்சியின் உறுதிப்பாட்டுக்கு நெருக்கடி மிக்க ஒன்றாக இருக்கும். ஏனெனில் இம்ரான் கானின் எழுச்சிக்கு பின்னால் சீனாவின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். இதனை மிகச் சுருக்கமாக பார்ப்போம்.

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நெருக்கமுடையதாக விளங்குகின்றது. குறிப்பாக கொராகராம் உயர் பாதைகுவாடர் துறைமுகம் மற்றும் உள்கட்டமைப்பு பொருளாதார வலயங்கள், உள்கட்டமைப்பு விருத்தி போன்ற நூற்றுக்கணக்கான சிறு கைத்தொழிலுக்கான முயற்சிகள் இரு நாட்டுக்குமான அரசியல் பொருளாதார நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று அணுவாயுதம் சார்ந்தும், இராணுவ அரசியல் சார்ந்தும் இந்தியாவிற்கு எதிரான நாடு என்ற அடிப்படையில் பாகிஸ்தான் சீனா நெருக்கம் அதிகரித்து வந்துள்ளது. முஷாரப்பினுடைய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட குவாடர் துறைமுக அபிவிருத்தி நெருக்கம் பாரிய அரசியல் இராணுவ முக்கியத்துவத்தை பிராந்தியம் சார்ந்தும் இந்திய அமெரிக்க அரசியல் சார்ந்தும் ஏற்பட்டுள்ளது. குவாடர் துறைமுகத்தை 44 வருடத்திற்கு குத்தகைக்கு பெற்றுள்ள சீனா தென்னாசிய பிராந்தியத்தை மட்டுமன்றி இந்து சமுத்திர பிராந்தியத்தில் கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் செலுத்த ஆரம்பித்துள்ளது. இதற்கு குவாடர் பாரிய பங்களிப்பை அளித்துவருகிறது. இதற்கு பாகிஸ்தானின் ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது. நவாப் ஷெரிப்பின் வீழ்ச்சிக்கு பின்னால் சீனாவின் பங்கு அதிகம் உண்டு என்ற கருத்து நிலவுகிறது. பாகிஸ்தான் இராணுவம் சீனாவுடன் வைத்திருக்கின்ற நெருக்கமான உறவை நவாப் ஷெரிப் மீறமுயற்சித்தார் என்றும், அவர் இந்தியாவோடு மிருதுவான நட்புறவை ஏற்படுத்த முனைந்தார் என்றும் பாகிஸ்தானிய இராணுவம் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றது. இதனாலேயே அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது என்றும் இதில் இம்ரான் கான் இராணுவத்தோடு அதிக ஒத்துழைப்பை பேணுபவராகவும் பேசப்படுகின்றார்.

இம்ரான் கான் பிரதமராக வருவதையிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியூடாக வாழ்த்துத் தெரிவித்த போது பின்வரும் விடயங்களை முதன்மைப்படுத்தியிருந்தார்.

பாகிஸ்தானின் ஜனநாயக வேர்கள் ஆழப்படுத்தப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் முழுவதும் அபிவிருத்தியும் ஜனநாயகமும் பேணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். எனவே, இந்த செய்தி பாகிஸ்தானின் இராணுவ இருப்பு பற்றிய விவாதத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

எனவே, இம்ரான் கானின் ஆட்சி பாகிஸ்தானில் ஜனநாயகத்துக்கான அடிப்படையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிக அரிதாகவே உள்ளது. தொடர்ந்தும் பிராந்திய சர்வதேச அரசியல் ஊடாக இராணுவ இருப்பை தக்கவைப்பதே பாகிஸ்தானின் இருப்புக்கான அடிப்படை என்பதை கடந்த 70 வருடம் உறுதிப்படுத்தியது போன்று அமையவுள்ளது. பாகிஸ்தானின் ஜனநாயகத்தை உருவாக்குவது என்பது சாத்தியமற்ற வழிமுறை என்பதையே இந்திய பாகிஸ்தான் முரண்பாடு உணர்த்துகின்றது. அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் உறவு பாகிஸ்தான் இராணுவத்துக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவத்தை சீனா பெற்று இருக்கின்றது என்பது பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையில் இனம் காணமுடியும். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் இம்ரான் தனது பதவியோற்பு விழாவுக்கு அயல் நாட்டு தலைவர்கள் உட்பட உலகத் தலைவர்களை அழைக்க முடியாதுள்ளமை அவரது ஜனநாகத்தின் தோல்வியையே முன்கூட்டியே உணர்த்துகிறது.

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம் யாழ்.பல்கலைக்கழகம்

 

 

Comments