தலவில புனித அன்னம்மாள் வருடாந்த திருவிழா | தினகரன் வாரமஞ்சரி

தலவில புனித அன்னம்மாள் வருடாந்த திருவிழா

இலங்கையின் வடமேற்கு, புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி என்ற குறுகலான நிலப்பகுதியான தலவிலவில் புனித அன்னம்மாள் பேராலயம் அமைந்திருக்கிறது.

பேராலயத்தைச் சுற்றியுள்ள இடம் கடலுக்கு அண்மையில் உள்ளது. எனவே மணலும், பனை மரங்களும் அடர்ந்த பகுதியே தலவில.

பிரபல கிறிஸ்தவ தலங்களை எடுத்துக் கொண்டால் மடு திருப்பதி முதல் இடத்தையும், தலவில இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றன. மடுவைப் போலவே, தலவில வருட உற்வசத்திற்கு நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அடியார்கள் இங்கே பக்தியுடன் யாத்திரை வருகின்றனர். பழைமையான தேவாலயமும் கிறிஸ்தவமும் இங்கே உருவாவதற்கும் முன்னரேயே, ஆண்டவரை நேசித்து மரித்து போனவர்களின் சாட்சியாக இத்தேவாலயம் உள்ளது. தலவில பதிக்கு வந்து சேவித்து திரும்புவது என்பது கத்தோலிக்கரின் ஆன்மீக கலாசாரமாகவே மாறியிருக்கிறது.

அனைத்தும் தெய்வீக செயல்கள் போலவே தலவில தெய்வீக வரலாறு ஒரு சிறிய வழியிலேயே ஆரம்பமானது.

தேவஸ்தலத்தின் தோற்றம்

தேவஸ்தலத்தின் தோற்றத்திற்கு இரண்டு பாரம்பரிய வரலாறுகள் உள்ளன. அவை இரண்டுமே முக்கியத்துவம் நிறைந்தவைகள். 17 ஆம் நூற்றாண்டில் ஒரு போர்த்துக்கேயர் மிக கடினமான சூழ்நிலையில் மன்னாரிலிருந்து கொழும்பிற்கு வாழ்வாதாரத்தை தேடிப் புறப்பட்டார். ஆனால் சென்றவழி தவறவிட்டதால், பிரயாண களைப்பினாலும், அவர் இப்பகுதி கடற்கரைக்கு திரும்பி வரும்போது, தலவிலவில் தற்போது அமைந்திருக்கும் பேராலயத்திற்கு அருகில் இருக்கும் ஒரு உயரமான மரத்தின் கீழ் களைப்பு மேலிட உறங்கிப் போனார். அவ்வேளை, அவரின் கனவில் ஒரு தோற்றம் தென்பட்டது. நிலத்தின் அடியில் காணப்பட்ட ஒரு படத்தின் ஒவ்வொரு முனையிலும் ஒரு ஒளிக்கோலத்தைக் கண்டார். அவர் தூக்கத்திலிருந்து எழுந்து பார்த்தபோது, அந்தப் படம் உண்மையாகவே அங்கிருப்பதை கண்டார். கனவில் இருந்து சடுதியாக விழித்ததால் வித்தியாமான உணர்விலும் குழப்பத்திலும் இருந்த அவர் பெரிய சத்தத்துடன் ஜெபிக்கத் தொடங்கினார். புனித அன்னம்மாளின் வடிவத்திலான அந்த பெரிய விழிப்புணர்வு ஔியினை கண்டு அவ்விடத்திலே மயங்கிவிட்டார். புனித கன்னியாகிய மரியாள் அவருக்கு முன்பாக நின்று காட்சியளித்தார். அவர் அங்கே அன்னைக்கு ஒரு தேவாலயத்தை அமைத்து அதற்கு அன்னையின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் அதை பாதுகாத்து வழிபட்டுவர வேண்டுமென அவருக்கு உணர்வுகள் ஊடாக வெளிப்படுத்தினார். அந்த ஏழை மனிதர் சிறிய தேவாலயத்தை அங்கே அமைத்தார். அது ஒரு கொட்டிலாக இருந்தது.

புனித அன்னம்மாள் அவருக்கு மீண்டும் தரிசனமாகி, சில தங்க நாணயங்களை அவரிடம் கொடுத்தார். விரைவில் அவர் தனது நாட்டிற்கு திரும்புவதற்கும் இப்பணம் உதவியது. தனது நாட்டிற்கு திரும்பிய அவர், தலவிலவில் ஒரு நிரந்தர தேவாலயத்தை கட்ட நிதி திரட்டினார். பின்னர் அவர் இவ்விடத்தில் ஒரு கட்டடத்தை கட்டினார். தேவாலயத்திலுள்ள ஒரு படம் இப்போர்த்துக்கேய மனிதரின் படம் எனக் கூறப்படுகிறது.

புனிதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கப்பல்

18 ஆம் நூற்றாண்டில் ஒரு ஐரோப்பிய வர்த்தகரின் கப்பல் தலவில கடற்கரைக்கு அப்பால் தரை தட்டியது. அந்நாட்களில் இப்பகுதியில் வசித்த மக்கள் யானைத் தந்தங்கள், கூழங்கற்கள், கருங்காலி மரம், கொம்புகள், தேன் மற்றும் மெழுகு போன்றவற்றை சேகரித்து, கடல் வழியாக தெற்கு துறைமுகங்களுக்கு அனுப்புவது வழக்கம்.

கப்பல் தரை தட்டியதும் கல்வர மடைந்து போய் கப்பல் கப்படனும் ஏனைய மாலுமிகளும் படகுகளில் ஏறி தலவில கிராமத்தை அடைந்தனர். அங்கே ஒரு கொட்டில் இருக்கவே அங்கு சென்று கடவுளை நோக்கி ஜெபித்தனர். கிராமவாசிகளிடம் தமது பிரச்சினைகளைக் கூறியதும், அம்மீனவர்கள் தரை தட்டிய கப்பலில் இருந்த பொருட்களை தமது படகுகளில் ஏற்றி அவை செல்ல வேண்டிய காலி நகருக்கு அனுப்பி வைத்தனர். தமது சரக்குகள் அனைத்தும் வீணாகிவிடுமோ என்று அஞ்சிய கப்டனுக்கு உள்ளூர்வாசிகள் உதவ முன்வந்தமையை கடவுளின் கிருபையாகவே உணர்ந்தனர். கப்பலில் இருந்த புனித அன்னையாரின் திருச்சொரூபத்தை ஒரு மரத்தடியில் வைத்துச் சென்றார் கப்டன்.

இதனால் மனத்திருப்தியடைந்த அக்கப்டன் தனது வர்த்தகம் செழித்தோங்குமானால் மீண்டும் தலவிலவுக்குத் திரும்பி வந்து தேவாலயமொன்றை அமைத்துத் தருவேன் என்று உறுதிமொழி ஒன்றை வழங்கிவிட்டு திரும்பிச் சென்றார்.

ஆல மரத்தின் கீழ் அன்னை சொரூபத்தை கண்ட அப்பகுதி மக்கள் தமக்கு புனித செய்தியொன்று கிடைத்திருப்பதாகவும் தாம் இரட்சிக்கப்பட்டிருப்பதாவும் கருதி அச்சொரூபத்தை வழிபட, அது படிப்படியாக அப்பிரதேசமெங்கும் வாய்மொழிச் செய்தியாகப் பரவியது. கத்தோலிக்கர்கள் வண்டி கட்டிக் கொண்டு அங்கு வந்து அன்னையை சேவித்தனர்.

இதற்கிடையில் காலியிலிருந்த அந்த போர்த்துக்ேகய வர்த்தகர் வியாபாரத்தில் வெற்றி மேல் வெற்றி கண்டதால் தலவிலைக்கு மீண்டும் வருகை தந்தார். அவர் வாக்களித்தப்படி ஒரு சிறிய தேவாலயத்தை அங்கே கட்டியெழுப்பினார். அதனுள் திருவுருவச் சிலையை வைத்தார்.

மேலும் அவரது வியாபாரமும் கற்பிட்டிக்கு இடமாறியது. அத் தேவாலயத்திற்கு ஏராளமானோர் அன்றிலிருந்து புனித யாத்திரை செய்தனர். அந்த ஆலமரம் சிறிய தண்ணீர் குளத்தின் அருகில் இருந்ததாகவும் அங்கு அந்த யாத்திகர்கள் தண்ணீர் அருந்தியதாகவும் பின்னர் அது ஒரு கிணறாக கட்டப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

இது நடந்து எண்பது வருடங்களின் பின்னரேயே யாத்திரிகர்கள் உதவியினால் தேவாலய கட்டடத்துக்கு கூரை அமைக்கப்பட்டது. இப்படியாகத்தான் படிப்படியாக தேவாயலயம் நிறைவான அமைப்புக்குள் வந்தது.

டச்சு காலம் முடிவடைந்து ஆங்கிலேயே காலம் மலர்ந்த பின்னரேயே கத்தோலிக்கம் மீண்டும் இந்நாட்டில் துளிர்க்கத் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டில் புனித அன்னம்மாள் தேவாலயத்தின் புகழ் பரவ ஆரம்பித்தது. 1837 ஆம் ஆண்டில் புதிய தேவாலயத்திற்கு அடித்தளம் இடப்பட்டது. 1843ல் அருட்தந்தை பெட்ரோ டி நேரோனோ தேவாலயத்தை கட்டிமுடித்தார். அருட்தந்தை ப்ரை ரானா ஒருனா அதனை மாற்றயமைத்து, தேவாலயத்தின் அமைப்பில் பல மாற்றங்களை செய்தார். சிறிய தேவாலயமானது புனித இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

ஆரம் பகாலத்தில் இப்பகுதிக்கு யாத்திரை செய்வது மிகவும் கஷ்டமானது.

வீடுகளும், தண்ணீருமற்ற கரடுமுரடான பாதைகளிலேயே மக்கள் மாட்டுவண்டி, குதிரை வண்டிகளில் பயணித்தனர். மரங்களின் கீழ் தங்கி சமைத்து பயணத்தைத் தொடர்ந்தனர். ஆனால் இன்று பயண, தங்குமிட வசதிகள் வந்து விட்டன.

1950இல் 16 அடி அகலமான பாதை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் வசதிகள் படிப்படியாக வந்தன.

250 வருட வரலாற்றைக் கொண்ட இத்திருப்பதியின் தடங்களைப் பதிவு செய்யும் வகையில் ஒரு காட்சியகம் இங்குள்ளது. அசுத்த ஆவிகளினால் பீடிக்கப்பட்டவர்களை அக்காலத்தில் இங்கு கொண்டு வந்து கட்டி வைப்பார்கள். அன்னையின் ஆசீர்வாதத்தினால் அவர்கள் சுகப்பட்டு திரும்பிச் செல்வது கதை கதையாக பேசப்படும் ஒரு பொருளாக இருந்தது. அந்த இடங்களை இப்போதும் காணலாம்.

புனித அன்னையின் சக்திவாய்ந்த அருளாட்சி பக்கதர்களை இரட்சித்து வருகிறது. அவரது அருட்கொடைகளுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் அவரது புகழைப் இந்நாளில் பாராட்டிப் புகழ்வோம். புனித அன்னையின் விருப்பத்தின்படியே அவர் எங்களுக்கு காட்சியருளினார்.

"நாங்கள் திருவிழாவிற்கு ஒரு வாரம் முன்பு வந்து படகுகளில் நமக்கு தேவையான அனைத்தையும் எடுத்து செல்கிறோம்'' என்று தலவில யாத்திரிகர் ஒருவர் கூறுகிறார்.

அன்னம்மாள் முதலில் காட்சியளித்தது பிரான்ஸின் லூர்து பகுதியில். எனினும் புனித அன்னம்மாளுக்கு இலங்கையில் வலுவான ஒரு பக்தி இயக்கம் உள்ளது.

இன்று தலவில திருவிழாவிற்கு வருகைதரும் மக்களுக்கு தேவ கிருபையும் வழிநடத்தலும் நிறைவாக கிட்டுகிறது. புனித அன்னை ஆலயத்திற்குள் பக்தர்கள் கூடி நடத்தும் பிரார்த்தனைகள், அன்னையின் அருளாசிகளை இந்நாட்டின் மேல் விரிந்து பரந்து அருட்கொடைகளைத் தர உதவட்டும்.

 போல் வில்சன்..

 

Comments