நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்...! | தினகரன் வாரமஞ்சரி

நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்...!

இண்டைக்குத் தரம் அஞ்சு புலமைப்பரிசில் பரீட்சை. நாளைக்கு உயர்தரப் பரீட்சை. இரண்டு பரீட்சையிலையும் தோற்றுகிற மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

புலமைப்பரிசில் பரீட்சையிலை சுமார் மூணரை இலட்சம் பிள்ளைகள் எழுதுறாங்க. எல்லாரும் திறமையாகப் பாஸ் பண்ண வேணும் என்பதுதான் நமது பிரார்த்தனை. ஆனால், சில அம்மாமார் அப்பிடி நினைக்க மாட்டாங்க. தங்கட பிள்ளை மட்டுந்தான் பாஸ் பண்ண வேணும் என்று நினைப்பாங்க, சில நிறுவனங்கள்ல மற்றவங்களுக்கு ஏதாவது நன்மை கிடைச்சா பொறாமைப்படுறவங்கள் மாதிரி. நாங்கள் என்ன நினைக்கின்றோமோ, அஃது அப்பிடியே நடக்கும் என்று பல மகான்கள் சொல்லி வைச்சிருக்காங்க. அதனாலை, ஒருபோதும் நேர்மறைச் சிந்தனை வேண்டாம். எல்லாப் பிள்ளைகளும் பாஸ் பண்ணட்டும் என்று வேண்டிக்ெகாள்ளுங்க. உங்கள் பிள்ளை தானாய் பாஸாகும். ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானாய் வளரும் என்ற பழமொழி இப்ப உங்களுக்கு நினைவிற்கு வந்திருக்கும். இந்தப் பழமொழிக்கும் சிறு பிள்ளைகளுக்கும் சம்பந்தமில்லை. இருக்கு, ஆனால் இல்லை!

என்னெண்டு சொன்னால், ஊரான் பிள்ளை என்று சொல்வது மனைவியை. அப்ப, மனைவியை, (ஊரான் பிள்ளையை, எல்லோருக்கும் அத்தை மகள் மாமன் மகள் கிடைப்பதில்லையே) ஊட்டி வளர்த்தால், வயிற்றில் இருக்கும் தன்னுடைய பிள்ளை தானாய் வளரும் என்பதுதான் அந்தப் பழமொழியின் அர்த்தம். சரி அதை விடுங்க.

புலமைப்பரிசில் பரீட்சை நடத்தக்கூடாது என்றுகூட ஒரு கருத்து இருக்கிறது. பிள்ளைகளுக்கு அம்மாமார் கொடுக்கும் இம்சைதான் அதற்குக் காரணம். இன்றையில இருந்து பரீட்சை பெறுபேறு வர்ற வரைக்கும் அம்மாமாருக்கு நித்திரை வராது. பிள்ளை பாஸாகுவானா, பெயிலாகுவானா? என்றது தான் அவங்கட கனவே. தயவுசெய்து அப்பிடி நினைக்காதீங்க. என்ர பிள்ளை பாஸாகிடுவான் என்று மட்டும் நினையுங்கள் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. நாங்கள் எப்போதும் நல்லதை மட்டுமே, சாதகமானதை மட்டுமே சிந்திக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து.

"உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றையது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து" என்கிறார் வள்ளுவர். அதைத்தான் வெள்ளைக்காரர்கள், "திங் பொஸிற்றிவ் ஆல்வேஸ்..." என்றார்கள். என் பிள்ளை பாஸ் பண்ணிடுவான்! அவ்வளவுதான். பாஸ் பண்ணாவிட்டாலும் அவன் என் பிள்ளைதான், அவள் என் மகள்தான் என்பது இல்லாமற்போகுமா? இந்தப் பரீட்சை என்பது ஓர் அவசியமான அவஸ்தை. இதில் பிள்ளை பாஸாகாவிட்டால், ஒன்றும் குடிமுழுகிப்போய்விடாது! படிக்கின்ற பிள்ளை எப்பிடியும் படிக்கும். புலமைப்பரிசில் பரீட்சையில் பாஸாகாத இலட்சக்கணக்கான பிள்ளைகள் உயர் கல்வியிலை திறமை காட்டுகிறார்கள். புலமைப் பரிசில் பரீட்சையிலை திறமையாகப் பாஸ்பண்ணிய பிள்ளையள், உயர் கல்வியிலை கோட்டை விடுறதையும் பார்க்கத்தான் செய்யிறம். ஆகையால், புலமைப்பரிசில் பரீட்சை அலட்டிக்ெகாள்ளவே வேண்டாம்! சொந்தக் காரங்களுக்கு சோக்கு காட்ட வேண்டும் என்றதுக்காகப் பிள்ளைகளை வருத்தாதீங்க! கனடாவிலை இருக்கிற எழுத்தாளர் குஞ்சிதபாதம் சொல்லுவார், "பிள்ளைகளை வளர்க்காதீங்க, வளரவிடுங்கள்" என்று. அதுதான் உண்மை. பரீட்சை முடிஞ்சோன, என்ன றிசல்ற் வந்தாலும் பரவாயில்லை, ஏற்றுக்ெகாள்ளுங்கள்! பிள்ளைகளைத் திட்டாதீர்கள், என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்கிறன். உயர்தரப் பரீட்சைக்குப் பிறகும் இதைக் கையாளுங்க.

உங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமா? இந்த முறை பரீட்சை எழுத இருந்த ஒரு மாணவன், பலாங்கொடைப் பகுதியிலை காணாமற்போய் இரண்டு வாரத்திற்கும் மேலாகுது. அவன் என்ன கனவிலை இருந்தானோ ஆருக்குத் தெரியும். அவனோட அம்மா அப்பாவிற்கு எப்பிடி இருக்கும்! அதையும் கொஞ்சம் நினைச்சுக்ேகாங்க!

உங்களுக்கு இன்னொண்டையும் சொல்ல வேணும். ஒசாமா பின்லேடன உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. ஆனால், அவரோட அம்மாவை உங்களுக்குத் தெரிந்திருக்காது. எனக்கும் தெரியாது.

அவ முதல் தடவையாக மீடியாவிற்குக் கருத்து தெரிவிச்சிருக்கா. தன்னுடைய மகன் மிக நல்லவனாம். சவூதி அரேபியாவிற்குப் படிக்க போகும் வரை, அவருக்கு எந்தவிதமான அடிப்படைவாத சிந்தனையும் இருக்ேகல்லயாம். சவூதி பல்கலைக் கழகம்தான் அவரை மூளைச்சலவை செய்துவிட்டதாம். ஒரு தாய் தன்ர பிள்ளையைப் பற்றிக் குறையா சொல்ல மாட்டாள் என்பது உண்மை. அதேநேரம், பல்கலைக்கழகம் மூளைச் சலவை செய்கிறது என்பதை மறுக்க முடியாது.

எல்லாப் போராட்டங்களுக்கும் வித்திடும் ஒரு தளம் என்றால், அது பல்கலைக்கழகம்தான். நம் நாட்டில் ஜேவிபி உருவாக்கம் உள்ளிட்ட எல்லாப் போராட்டத்திற்கும் பல்கலைக்கழகம் என்றது உங்களுக்குத் தெரியாதா என்ன!

சில பேர் வெளிநாட்டுக்குப் பட்டப் படிப்பு படிக்கப்போய், படிப்பை இடையிலை விட்டிட்டுப் போராட்டத்தில் இறங்கிய சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு.

அதில் முக்கியமான ஒருவர் மறைந்த தொழிற்சங்கவாதி எஸ்.நடேசன். பின்லேடனின் அம்மா சொன்ன விசயத்தை வைச்சு, இப்ப எங்கட நாட்டு பல்கலைக்கழகங்கள்ல நடக்கிறதையும் கனெக்ற் பண்ணிப் பார்த்தால், நிறைய விசயங்கள் நினைவிற்கு வருகுது!

Comments