மாகாண சபைத் தேர்தல் | தினகரன் வாரமஞ்சரி

மாகாண சபைத் தேர்தல்

பதவிக்காலம் முடிவடைந்துள்ள மாகாணசபைகளுக்கு தேர்தலை நடத்துவது தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. உடனடியாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், தேர்தலை நடத்துவதற்கு எமக்கு எந்தவிதமான அச்சமும் இல்லையென அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக இது தொடர்பில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்கில் கட்சித் தலைவர்களின் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி தேர்தலை நடத்துவது என கட்சிகள் இணக்கம் கண்டுள்ளபோதும், எந்த முறையில் அதாவது கலப்பு முறையைக் கொண்ட புதிய முறையிலா அல்லது விகிதாசாரத்தைக் கொண்ட பழைய முறையிலா தேர்தலை எதிர்கொள்வது என்பதில் இன்னமும் இழுபறிநிலை காணப்படுகிறது. சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அழுத்தங்களைக் கொடுத்துவரும் நிலையில், ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சி புதிய முறையிலேயே மாகாணசபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என விடாப்பிடியாகவுள்ளது. மோசடி நிறைந்த விகிதாசார முறையை மாற்றுவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்திவிட்டு மீண்டும் பழைய முறைக்குச் செல்வது அநாவாசியமானது என்ற தமது நிலைப்பாட்டை ஜே.வி.பியும் முன்வைத்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கிடையில் இவ்வாறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதால் எந்த முறையில் தேர்தல் என்பது இன்னமும் இழுபறியாக உள்ளது. மறுபக்கத்தில் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்பதில் ஒத்துழைப்பு வழங்கிய சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் உள்ளடங்கலான சிவில் அமைப்புக்கள் மீண்டும் பழைய முறைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றன. மாகாண சபைகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ள கலப்புமுறையிலான தேர்தலில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்துகொண்டு முன்வைத்த காலை பின்வைக்காது புதிய முறையில் செல்லவேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

யார் என்ன பரிந்துரைகளை அல்லது ஆலோசனைகளை முன்வைத்தாலும் சட்டவாக்கம் எனப்படும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களே எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்பதை தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த உரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். எனவே காலம் தாழ்த்தாது தேர்தலை நடத்துவதற்கு உரிய சட்டச்சிக்கல்களை நிவர்த்தி செய்யுங்கள் என்பது சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் வலியுறுத்தல். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை பல தடவைகள் சுட்டிக்காட்டியிருப்பதுடன், “சட்டச் சிக்கல்களை நிவர்த்திசெய்து தாருங்கள் உடனடியாக தேர்தலை நாங்கள் நடத்துகிறோம்” என்பது அவருடைய கருத்து.

மஹிந்த தேசப்பிரிய கூறுவதைப்போன்று சட்டச்சிக்கலை நிவர்த்திசெய்ய வேண்டியது பாராளுமன்றத்தின் கைகளில் தங்கியுள்ளது. அவர்களுக்கு இரண்டே இரண்டு தெரிவுகளே உள்ளன. ஒன்று கலப்பு முறையில் தேர்தலை நடத்துவதாயின் மாகாணசபைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட எல்லைநிர்ணய அறிக்கையை மீளாய்வுக்கு உட்படுத்தி அதனை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றிக் கொடுப்பது. இல்லாவிட்டால் புதிய தேர்தல் சட்டத்தை இரத்துச் செய்து பழைய முறைக்குச் செல்வதாக சட்டமொன்றை நிறைவேற்றிக் கொடுப்பது. இதில் எதனை அவர்கள் செய்யப்போகின்றார்கள் என்பதிலேயே அடுத்த மாகாணசபைத் தேர்தல் முறை தங்கியுள்ளது.

இதற்கிடையில், புதிய தேர்தல் முறை பின்பற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவிருக்கும் சிவில் அமைப்புக்கள், தேர்தல் மறுசீரமைப்புத் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றை தயாரித்துள்ளன. இந்த அறிக்கை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர், சபாநாயகர் என பல தரப்பினரிடமும் கையளிக்கப்பட்டுள்ளன. சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான பவ்ரல் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையத்தின் பிரதிநிதிகள், ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுதந்த லியனகே, சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் கலாநிதி சுஜாதா கமகே உள்ளிட்ட துறைசார் வல்லுநர்களைக் கொண்டதாக அமைக்கப்பட்ட சிவில் சமூகக் குழு கடந்த இரண்டரை மாதங்களாக கலந்துரையாடல்களை நடத்தி அறிக்கையொன்றை தயாரித்துள்ளது. இதில் முக்கியமாக ஆறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கலப்புமுறையை கொண்ட புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு தமது இந்த பரிந்துரைகளில் உள்ள விடயங்களை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் சட்டத்தில் சிறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாக அமைந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிடைத்த அனுபவமே கட்சிகளுக்கு மாகாணசபைத் தேர்தல் பற்றிய சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளன. எனினும், மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளைப் போன்று மோசமான நிலைமைகள் ஏற்படாது என அந்த சிவில் குழு அடித்துக் கூறுகிறது. மாகாணசபைத் தேர்தலை புதிய முறையில் நடத்தினாலும், முன்னைய விகிதாசார தேர்தல் முறையில் கிடைத்ததைப் போன்றே முடிவுகள் அமையும் என்பது சிவில் குழுவின் சிபாரிசாகும்.

2017ஆம் ஆண்டு மாகாணசபைத் திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக 50 : 50 விகிதத்திலான கலப்புமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 50 வீதமானவர்கள் தொகுதி வாரியாகவும், 50 வீதமானவர்கள் பட்டியல் ஊடாகவும் நியமிக்கப்படுவர். 50:50 விகிதத்திலான கலப்புமுறை எனக் கூறப்பட்டாலும் இது 100 வீதம் விகிதாசார முறையைக் கொண்டது என்பதால் எந்தவொரு கட்சிக்கும் கிடைக்கக் கூடிய ஆசனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படாது. அவர்கள் கொண்டிருக்கும் வாக்கு விகிதாசாரத்தின் அடிப்படையில் ஆசனங்கள் கிடைக்கும். இதனை அடிப்படையில் பார்த்தால் புதிய கலப்புமுறையில் தேர்தலை நடத்தினாலும், பழைய முறையான விகிதாசார முறையில் தேர்தலை நடத்தினாலும் ஒரே மாதிரியான முடிவுகளே வரும்.

எந்தவொரு கட்சிக்கும் விசேட நன்மையோ அல்லது பாதிப்போ ஏற்படாது என தேர்தல் திருத்தம் தொடர்பில் ஆராய்ந்த சிவில் குழுவில் அங்கம் வகித்த ஜயவர்த்தன பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் சுதந்த லியனகே சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச்சட்டத்தில் சில சபைகளுக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும், மாகாணசபை தேர்தல் சட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அல்லது ஆசனங்களின் எண்ணிக்கையை மாற்றுவதற்கான அதிகாரம் எவருக்கும் வழங்கப்படவில்லை. இதனால் சகல மாகாண சபைகளிலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை நிலையானதாக இருக்கும். எனவே, போனஸ் உறுப்பினர்கள் அல்லது தொங்கும் உறுப்பினர்கள் போன்ற பிரச்சினை ஏற்படாது. உறுப்பினர்களின் எண்ணிகையில் மாற்றம் ஏற்படாது என்பது அவருடைய கருத்தாகவும், சிவில் குழுவின் பரிந்துரையாகவும் அமைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு ஸ்திரமான ஆட்சியை அமைப்பது குறித்த விமர்சனங்கள் பல கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. இதனால் தான் மாகாணசபைத் தேர்தல்களில் 50:50 கலப்புமுறையைவிட 60:40, 70:30 என்ற அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சில கட்சிகள் வலியுறுத்துகின்றன. எனினும், தொகுதிவாரி முறையை அதிகரித்தால் குழப்பங்களும் அதிகரிக்கலாம் என அந்தக் குழு சுட்டிக்காட்டியிருப்பதுடன், கட்சிகளுக்கு போனஸ் ஆசனங்கள் வழங்குவதில் திருத்தங்களையும் பரிந்துரைத்துள்ளது. அதற்கமைய 100 ஆசனங்களுக்கு அதிகமாகப் பெறும் கட்சிக்கு 5 போனஸ் ஆசனங்களையும், 100 ஆசனங்களுக்குக் குறைவாகப் பெறும் கட்சிகளுக்கு 4 போனஸ் ஆசனங்களையும் வழங்குமாறு அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவ்வாறு வழங்குவதன் மூலம் ஸ்திரமான ஆட்சியை அமைக்கமுடியாது என்ற பிரச்சினையை இல்லாமல் செய்யலாம். உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றியீட்டிய கட்சிகளுக்கு பட்டியல் ஊடாக உறுப்பினர்களை நியமிக்க முடியாது போனது. எனினும் எமது பரிந்துரையின் கீழ் வெற்றியீட்டும் கட்சிகளுக்கும் போனஸ் ஆசனங்கள் வழங்குவது ஸ்திரமற்ற தன்மையை நீக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

கட்சிகளின் செயலாளர்கள் அல்லது கட்சிகளின் தலைவர்களால் 50 வீதமான உறுப்பினர்களைப் பெயரிடுதல் தொடர்பிலும் சில குழப்பங்களுக்கும் அவர்கள் தீர்வுகளை முன்மொழிந்துள்ளனர். கட்சி செயலாளர்கள் பட்டியலுக்கு உறுப்பினர்களை பெயரிடும்போது பாரபட்சம் காண்பிப்பதாக விமர்சனம் உள்ளது. இந்த சிக்கலைத் தவிர்க்கும் நோக்கில் 50 வீதமான பட்டியல் உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும்போது மூன்றில் ஒரு வீதமானவர்கள் போட்டியிட்டு சிறிய வித்தியாசத்தில் தோல்வியுற்றவர்களாக இருக்க வேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வட்டாரமொன்றுக்குப் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் ஒரேயளவான வாக்குகளைப் பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் திருவுளச்சீட்டின் அடிப்படையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் தோல்வியுற்ற நபர் உறுப்பினர் பதவியைப் பெறுமுடியாத நிலை ஏற்பட்டது. இதுபோன்ற அசௌகரியத்தைத் தவிர்க்க இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தலில் 25 வீதம் பெண்கள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். பெண்களும் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு கட்சிகள் இடம் வழங்க வேண்டும். மாகாணசபை தேர்தல் சட்டத்துக்கு அமைய 1/6 வீதமான பெண் உறுப்பினர்கள் தொகுதிவாரியாக தெரிவுசெய்யப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்த எண்ணிக்கை 1/5 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். பெண்களை பட்டியலின் ஊடாக நியமிக்கும்போது பல்வேறு மோசடிகள் இடம்பெறுகின்றன. எனவே பட்டியல் ஊடாக பிரதிநிதிகளை தெரிவுசெய்யும்போது மூன்றில் ஒரு வீதமான பெண்களை கட்சியின் செயலாளர்கள் தெரிவுசெய்ய வேண்டும் என சிவில் குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானதாகும்.

புதிய முறை காரணமாக மாகாண சபை அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காது. இந்த தேர்தல் முறை மாகாணத்திற் தெரிவாகும் அங்கத்தவர்களின் முறையை மட்டுமே மாற்றியுள்ளது. ஒரு பகுதி தேர்தல் தொகுதிகளில் இருந்தும் எஞ்சிய பகுதி மாவட்ட பட்டியலில் இருந்தும் தெரிவு செய்யப்படும். மாகாண சபைகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்தல் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை சபையின் மொத்தத்தில் 50 வீதமாகும். மாகாண சபை அங்கத்தவர்களின் எண்ணிக்கையை எதேச்சையாக அதிகரிக்க முடியாது. மொத்த அங்கத்தவர்களிலில் இருந்து தொங்குநிலை எண்ணிக்கையை கழித்து வரும் மீதியை விகிதாசார (PR) முறைப்படி கணிப்பதன் மூலம் மேம்பாட்டு அங்கத்தவர்கள் தீர்மானிக்கப்படுகிறனர். எனவே புதிய முறையின் கீழ் தேர்தலை நடத்துவதால் மாகாண சபைகளில் தொங்குநிலை ஏற்படாது என்பது அவர்களின் உறுதியான நம்பிக்கை.

அது மாத்திரமன்றி மாகாண சபைகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள கலப்புமுறையானது 50:50 என்பதால் இதுவும் 100 வீத விகிதாசார முறையே என்பதால் எந்தக் கட்சிக்கு வாக்குகள் குறைந்துவிடும் என அச்சப்படத் தேவையில்லை என சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். எனினும், பெரும்பாலான கட்சிகள் மாகாணசபை திருத்தச்சட்டத்தை முழுமையாக வாசித்து ஆராய்ந்து பார்க்காது தேவையற்ற சந்தேகங்களை வெளிப்படுத்தி வருகின்றன என்பது அவருடைய குற்றச்சாட்டாக அமைகிறது.

அது மாத்திரமன்றி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளிடமும் கலந்துரையாடல் நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு எழுத்துமூலம் கோரிக்கைவிடுத்திருந்தபோதும், பெரும்பாலான கட்சிகள் உரிய பதில்கள் வழங்கவில்லை என்கிறார் அவர். பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய உண்மையான தேவை இல்லையென்றே கருதுகின்றோம்.

அரசியல் கட்சிகள் பிழையான நிலைப்பாட்டில் இருக்கின்றன. அதாவது இதுவரை இருந்த தமது அரசியல் பிரதிநிதித்துவம் புதிய முறையின் கீழ் குறைந்துவிடும் என்று அவர்கள் நினைக்கின்றனர். அப்படி எந்தவொரு குறைவும் ஏற்படாது. விகிதாசார முறையில் பெறக்கூடிய வாக்கு வீதத்தை புதிய முறையிலும் பெற்றால் முன்னர் பெற்றளவு ஆசனங்களைப் பெற முடியும் என்பது பவ்ரல் மாத்திரமன்றி சகல சிவில் குழுக்களின் நிலைப்பாடாகும்.

சிவில் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகளுக்கு அமைய மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை ஒன்றரை இரண்டு மாதங்களுக்குள் மேற்கொள்ள முடியும். சட்டரீதியான மாற்றங்களைச் செய்தால் மூன்று மாதத்தில் தேர்தலை நடத்த முடியும் என்பது சிவில் குழுக்களின் கணிப்பாகும். இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கின்றனர் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Comments