ஆரவாரமற்ற அபிவிருத்தி புரட்சி | தினகரன் வாரமஞ்சரி

ஆரவாரமற்ற அபிவிருத்தி புரட்சி

ஒருகாலத்தில் யுத்தம் காரணமாக நமது நாட்டவரும் உலகமும் யுத்தத்திற்கு முகங்கொடுத்திருந்த எல்லைக் கிராமங்களைக் கொண்ட வெலிக்கந்த எனும் பிரதேசம் இலங்கையில் இருந்ததாக அறிந்திருப்பார்கள். ஆனால் அந்த யுத்த காலத்திலும் இன்றைய சமாதான சூழ்நிலையிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழும் ஒரு பின்தங்கிய பிரதேசம் அங்கிருக்கின்றது என்பதை ஒரு சிலரே அறிந்திருப்பார்கள். மறுபுறத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் இன மாணவர்கள் கற்கும் பாடசாலைகளும் அங்கிருக்கின்றன என்பதை வெகுசிலரே அறிந்திருப்பார்கள்.

 

மூன்று தசாப்தங்களுக்கும் மேல் நீடித்த யுத்தத்தின் பின்னடைவுகளும் தூரத்து பிரதேசம் என்பதால் ஏற்படும் கவனிப்பாரற்ற நிலையும் காரணமாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துவரும் ஹெவன்பிட்டிய தமிழ் வித்தியாலயம், கட்டுவன்வில முஸ்லிம் வித்தியாலயம், நெலும்வெவ மற்றும் நவகிரிதமன சிங்கள வித்தியாலயம், நூராணியா வித்தியாலயம், திருகோணமடு முஸ்லிம் வித்தியாலயம், சேனபுர அல் அமீன் முஸ்லிம் வித்தியாலயம், மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை எந்தவித இன மற்றும் மத பாகுபாடுகள் இன்றி அபிவிருத்தி செய்வதற்காக அனைத்து அடிப்படை வசதிகளையும் இப் பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எழுச்சிபெறும் பொலன்னறுவை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக இம்மாதம் 02 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் மாணவ சமுதாயத்தின் பாவனைக்காக கையளிக்கப்பட்ட அடிப்படை வசதிகள் அவ்வாறான பின்தங்கிய பாடசாலைகளுக்கு கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

இதுவரை இத்திட்டத்தின் கீழ் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்ற அடிப்படை வசதிகளுக்கு மேலதிகமாக அப்பாடசாலைகளில் இடம்பெற்ற அங்குரார்ப்பண வைபவங்களின் போது குறிப்பிட்ட பாடசாலையின் மாணவ மாணவிகள் ஜனாதிபதி அவர்களிடம் நேரடியாக விடுத்த சினேகபூர்வமான வேண்டுகோள்களுக்கு அமைய இப்பாடசாலைகளுக்கு மேலும் தேவைப்படுகின்ற வகுப்பறைக் கட்டிடங்கள், விஞ்ஞான ஆய்வுகூடங்கள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலையை சுற்றிய பாதுகாப்பு வேலிகள், சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வசதிகள் ஆகியவற்றை வெகு சீக்கிரத்தில் பெற்றுத் தருவதாக உறுதியளித்த ஜனாதிபதி அவர்கள், அப்பிரதேசத்தின் பாடசாலை அபிவிருத்தி தொடர்பான நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துவரும் கடற்படைத் தளபதியிடம் அப்பொறுப்புக்களை வழங்கியதுடன் அவற்றிற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டையும் மிகத் துரிதமாக பெற்றுத் தருவதாக அவ் வைபவங்களில் உரையாற்றும்போது உறுதியளித்தார்.

அத்தோடு அப்பாடசாலைகளில் நடைபெற்ற விழாக்களில் பிரதம அதிதியாக பங்கேற்ற ஜனாதிபதி, புதிதாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட வகுப்பறைகளில் முன்னெடுக்கப்பட்ட கற்பித்தல் நடவடிக்கைகளை பார்வையிடச் சென்றதுடன் அதன்போது மாணவ, மாணவிகளுடன் மிகுந்த அன்புடன் அவர்களை அரவணைத்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவற்றை பூர்த்தி செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்தார்.

எமது நாட்டு வரலாற்றில் எந்தவொரு தனி மாகாணத்தையோ அல்லது ஒட்டுமொத்த நாட்டையோ உள்வாங்கும் விதத்தில் இதுவரை காலமும் எவராலும் முன்னெடுக்கப்படாத வகையிலான பாரிய அபிவிருத்தி திட்டமாகிய எழுச்சிபெறும் பொலன்நறுவை, இன்று 6000 கோடி ரூபாய் செலவில் யதார்த்தமாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் வரலாறு கண்டிராத இந்த பாரிய அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் நிகழ்ந்துவரும் கடந்த 01 ஆம், 02 ஆம் மற்றும் 03 ஆம் திகதிகள் நம் நாட்டு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாட்களாகும்.

மறுபுறத்தில் காளான் பூத்தாற் போல் அடிக்கல் நாட்டு விழாக்கள் நடைபெற்ற போதிலும் அவற்றை அடித்தளமாகக் கொண்டு எவ்விதப் பணிகளும் முன்னெடுக்கப்படாத ஏமாற்று அரசியலைக் காலங்காலமாகக் கண்டு கசந்துப் போயிருந்த வசதி வாய்ப்பற்ற கிராமப்புற மக்களினதும் மாணவ சமுதாயத்தினதும் அடிப்படைத் தேவைகளை பிறரின் வேண்டுகோள் இன்றி தன்னிச்சையாகவே உணர்ந்து எந்தவித ஆரவாரமும் இன்றி மிக அமைதியான முறையில் ஆரம்பிக்கப்பட்டு முப்படையினரின் பங்களிப்பினால் பூர்த்தி செய்யப்பட்ட 180 அபிவிருத்தி திட்டங்களை கட்சி பேதமின்றி நாட்டின் அனைத்து பிரதேச மற்றும் தேசிய மட்டத்திலான அரசியல்வாதிகளின் பங்களிப்புடன் மிக நேர்த்தியான முறையில் மக்களின் பாவனைக்காக கையளிக்கும் இந்த அபிவிருத்தி புரட்சி ஆரவாரமற்ற விதத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை நமது நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கியிருக்கும் அதேநேரம் மக்கள் அரசியலுக்கு முன்மாதிரியான ஓர் எடுத்துக்காட்டாகவும் அமைந்திருக்கின்றது.

ரவி ரத்னவேல்

Comments