சம்பள உயர்வு மட்டுமல்ல; ஏனைய நலன்களும் இம்முறை கவனத்தில் கொள்ள வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

சம்பள உயர்வு மட்டுமல்ல; ஏனைய நலன்களும் இம்முறை கவனத்தில் கொள்ள வேண்டும்

கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக பெருந்தோட்ட மக்களின் கவனம் தற்போது உள்ளீர்க்கப்பட்டுள்ளது. புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான முன்னேற்பாட்டு நகர்வாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தோடு கலந்துரையாட கால அவகாசம் கோரி அனுப்பப்பட்ட கடிதத்துக்கு பதில் கிடைத்திருப்பதாக பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ். இராமநாதன் தெரிவித்திருக்கிறார். விரைவில் பேச்சுவார்த்தைக்கான திகதி குறித்து அறிவிக்கப்படுமென தெரியவருகிறது. சிலவேளை கூட்டு ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்னரே கூட அடுத்த ஒப்பந்தம் இடம்பெறலாமென நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இவ்வருடம் காலாவதியாகிறது. எல்லாம் சரியாக நடைபெறுமானால் எதிர்வரும் அக்டோபர் 15 ஆம் திகதி புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும். கடந்த காலங்களில் (கூட்டு ஒப்பந்தத்துக்கு முன்பும் பின்பும்) மலையக சமூகம் பற்றிய கவனயீர்ப்புகள் எதுவுமே தேசிய மட்டத்தில் ஆராயப்பட்டது கிடையாது. இன்று மலையக வீடமைப்புக்கான அதிகார சபை ஏற்படுத்துமளவுக்கு நிலைமை மாறிவிட்டுள்ளது. எனினும் இம்மக்களின் வாழ்வாதாரமும் அதற்கான பின்புலமும் கேள்விக்குறியாகி வரும் ஆபத்து இன்றும் நிலவிக் கொண்டிருக்கிருக்கிறது.

தேயிலைப் பயிர்ச்செய்கை நாட்டின் பொருளாதாரத்துக்கு ஈடுகொடுக்கும் துறைகளில் தற்போது நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முதலாம் இடத்திலும் ஆடைத்தொழில் இரண்டாம் இடத்திலும் 2000ஆம் ஆண்டு வரை மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்த தேயிலைப் பயிர்ச்செய்கை இன்று நான்காம் இடத்துக்கும் நகர்த்தப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தை சுற்றுலாத்துறை வளைத்துப் போட்டுக் கொண்டுள்ளது. இது மலையக மக்களின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல். தேயிலைத் தொழிற்துறை நாட்டின் அந்நியச் செலாவணி ஈட்டுதலில் முதலிடத்தைப் பிடித்திருந்த ஒரு காலமும் இருக்கவே செய்தது. 1970ஆம் ஆண்டு வரை நாட்டின் பொருளாதாரத்தை தமது கூடைக்குள்ளேயே தாங்கிக் கொண்டிருந்தது மலையக சமூகம். அவ்வாறான சூழ்நிலையிலும் கூட இம்மக்களின் அடிப்படை வசதிகளைத்தானும் நிறைவேற்றிக் கொடுக்க எந்தவொரு அரசாங்கமும் மனம் வைக்கவில்லை. வெறும் வாக்குறுதிகளும் திட்ட வரைபுகளுமாகவே இதுவரை காலம் கடத்தப்பட்டு வந்துள்ளது.

உலக வங்கி இறுதியாக வாழ்க்கைச் சுட்டெண் பற்றிய அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 40 சதவீதமானோர் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்வதாக குறிப்பிட்டிருந்தது. இதில் 60 சதவீதமானோர் மலையக மக்களே என கண்டறியப்பட்டுள்ளது. மலையக சமூகம் சமூக அபிவிருத்தியின் சகல அம்சங்களிலும் பாரிய பின்னடைவைக் கொண்டிருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேநேரம் மலையக சமூக அபிவிருத்திக்காக உலக நிறுவனங்கள் வழங்கிய நிதியுதவி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்பது பொதுவானதொரு குற்றச்சாட்டாகவே காணப்படுகிறது. பொருளாதாரத்தை முதுகில் சுமந்த அந்தக் காலகட்டத்திலேயே அடிமைகள் போல நடாத்தப்பட்ட சமூகம் இது. 1948இல் ஐ.தே. கட் சி அரசாங்கம் குடியுரிமை, வாக்குரிமையை பறித்தது.

ஸ்ரீமாவோ அரசாங்கம் 1963இல் செய்த மக்கள் பகிர்வு ஒப்பந்தம் இம்மக்களை மனோரீதியில் பாதித்தது. ஸ்ரீமாவோவும் இந்தியப் பிரதமர் சாஸ்திரியும் தான்தோன்றித்தனமாக எடுத்த முடிவால் மலையக சமூகத்தின் சனசெறிவில் வீழ்ச்சியேற்பட்டது. இம்மக்களின் விகிதாசாரத்தை குறைப்பதற்காக தோட்டப்பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றன. இன்னும் கூட நில அபகிரிப்புகள் நடக்கவே செய்கின்றன. மக்கள் குடியிருக்கும் இடங்களைக்கூட விட்டுவைக்க விரும்பாத சக்திகளும் உண்டு. இந்த காரியத்தில் சகட்டுமேனிக்கு ஆட்சியைப் பிடிக்கும் சகல அரசாங்கங்களும் ஆர்வம் காட்டவே செய்கின்றன. 1972இல் கொண்டுவரப்பட்ட நில உச்சவரம்புச் சட்டம் திட்டமிடப்பட்ட இனவாத நடவடிக்கையாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. 1992ஆம் ஆண்டு பெருந்தோட்டத்துறை கம்பனிகளிடம் கையளிக்கப்பட்டது. இப்பொழுது கூட இங்கு வாழும் சமூகத்தின் நலன் சார்ந்த எந்தவொரு புரிந்துணர்வும் வெளிக்காட்டப்படவில்லை.

தவிர தொழில் வாய்ப்புகள் அற்ற ஒரு கட்டமைப்புக்குள் சிக்கிக் கொண்டுள்ளன. இதன் காரணமாக இளையதலைமுறை இங்கிருந்து வெளியேற மறைமுகமாக உந்துதலை ஏற்படுத்துவதே இவர்களின் எதிர்பார்ப்பு. தற்போது தேயிலைப் பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சி குறித்துக் காட்டப்படும் அசமந்தபோக்கு இத்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதறடிக்கச் செய்யும் தந்திரமாகவே கருதுவோரும் இருக்கவே செய்கின்றார்கள். 7 பேர்ச் காணியை வழங்குவதன் மூலம் இம்மக்களின் எழுச்சியையும் எதிர்பார்ப்புகளையும் மழுங்கடிக்கச் செய்ய முடியுமென எதிர்பார்த்தாலும் ஆச்சரியமில்லை.

குத்தகைப் பண பரிமாற்றல்களைத் தவிர இங்கு கம்பனிகளின் முதலீடோ புதிய கட்டுமாணங்களோ இல்லை. தோட்டங்களைப் பொறுப்பேற்றபோது கம்பனிகள் சில உத்தரவாதங்களை வழங்கின. கூடுதலான வேலைவாய்ப்பு, பயிர்ச்செய்கைக்காக முழு நிலங்களும் பயன்படுத்தப்படல், இத்துறை சார் மக்களின் மேலதிக வருமானத்துக்கு வழிவகைகளை ஏற்படுத்தல் என்பன அவற்றுள் சில. ஆனால் இதில் எதுவுமே நடைமுறைக்கு வரவில்லை. இதனால் வருடாந்தம் குறைந்தது 2500 பேர் வரை வேலைவாய்ப்பை இழக்கிறார்கள். கம்பனிகள் தோட்டங்களைப் பொறுப்பேற்றபோது இருந்த தொழிலாளர் தொகை 327123 ஆகும். இன்றைய நிலையில் இத்தொகை 180168 என்ற அளவில் குறைந்து விட்டது. சுமார் 153000 பேர் தொழிலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர், அல்லது விலகிக் கொண்டுள்ளனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது.

இதுபோலவே பயிர்ச்செய்கை காணிகளும் பெருவாரியாக கைவிடப்பட்டுள்ளன. காடுகளாக மாறிவருகின்றன. ஆங்கிலேய காலத்துப் பயிர்பாதுகாப்பு, மீள் நடுகை முறைகள் தற்போது நடைமுறையில் இல்லை. இது பழைய நடைமுறை தான் என்று கூறப்படுகின்றன. அப்படியானால் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்த முன்வந்த பாடில்லையே!

ஊதிய உயர்வின்மை இம்மக்களிடம் அதிருப்தியாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. பிறவருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. பொதுவாக இங்கு வாழும் மக்களுக்கும் நிர்வாகங்களுக்கும் இடையில் அந்நியோன்யம் காணப்படுவதாயில்லை. இத்துறை பற்றியதான தெளிவான கொள்கையேதும் அரசாங்கத்திடமும் இருப்பதாகத் தெரிவில்லை. பரஸ்பர புரிந்துணர்வுக்கான பக்குவம் எத்தரப்பிடமும் இல்லை. இந்நிலை மாறவேண்டும். அரசாங்கம் உறுதியான கொள்கையோடு செயல்பட்டால் மட்டுமே கம்பனிகள் மீது அழுத்தம் படியும்.

மத்திய வங்கி இரண்டுவருடங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் நால்வர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு மாதாந்தம் செலவுக்கு 29090 ரூபா தேவையென குறிப்பிட்டிருந்தது. அந்த வகையில் பார்க்கும்போது தோட்ட மக்களுக்கு 1000 ரூபா கூட கட்டுப்படியான சம்பளமாக இருக்க முடியாது. புதிய கூட்டு ஒப்பந்தத்தில் காத்திரமான அம்சங்களை நடைமுறைப்படுத்துவது என்ற நிலையான உறுதிப்பாட்டில் மலையகத் தொழிற்சங்கங்கள் இருப்பதாக தெரிகின்றது. குறிப்பாக சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தத்துக்கு அப்பால் தொழிலாளர்கள் நலன் சார்ந்ததான ஒப்பந்தம் பற்றி பெரிதும் அக்கறை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவ்வாத்து வெட்டுபவர்கள், மருந்து தெளிப்போருக்கு மேலதிக கொடுப்பனவு, பண்டிகை முற்பணம் இரட்டிப்பு தொகை கோரல் என தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. சிறுத்தைகளின் நடமாட்டம், குளவி, தேனீ கொட்டுதல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தோட்டங்களை துப்புரவு செய்வது பற்றியும் கம்பனி தரப்புக்கு அழுத்தம் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கம்பனி தரப்போடு பேசுவதற்கு முன்பு உரிய ஏற்பாடுகளோடே இம்முறை செல்ல விருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தவிர ஒக்டோபர் மாதத்திலேயே கூட்டு ஒப்பந்தத்ததைச் செய்து கொள்வதே 

 

தமது நோக்கம் எனவும் இதனால் கடந்த தடவை போல கால இழுத்தடிப்புச் செய்ய வாய்ப்புக் கிட்டாது என்பதே தமது நிலைப்பாடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டு ஒப்பந்தத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்களை வீதிக்கு இறக்கி கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப் போவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத ஏனைய தொழிற்சங்கங்களோடும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரை எவரும் கவனத்திற் கொண்டபாடில்லை. இந்த நிலையில் அரசாங்கத்தின் தலையீடோ அல்லது ஆலோசனையோ இவ்விவகாரத்தில் அவசியமெனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அரசாங்கம் இம்மக்களுக்கு உத்தேச சம்பள யோசனையொன்றை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். தோட்ட மக்களுக்கு காணிப்பகிர்வு விடயத்தில் காட்டப்படும் கடப்பாட்டை இதிலும் காட்டுவது நல்லது. வீடமைப்பு விவகாரத்தில் துரித ஈடுபாடு காட்டும் அமைச்சர் பழனி திகாம்பரத்தை மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். இதற்கான பிரதிபலனை அவர்கள் வழங்கவே செய்வார்கள். அமைச்சர் தேயிலைப் பயிர்ச்செய்கையை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பாரேயானால் அதுவும் வரவேற்பை பெறும். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் தமது நிதானமான காய் நகர்த்தலாலும் இராஜதந்திர அணுகுமுறையாலும் நியாயமான சம்பள அதிகரிப்பு, நலன்சார் நடவடிக்கைகளில் உரிய நகர்வுகாண முழு வீச்சுடன் செயல்படுமாயின் அவைகளையும் மக்கள் வரவேற்கவே செய்வார்கள், பிரதியுபகாரம் செய்யத் தயாராகவே இருப்பார்கள்.

பன். பாலா 

Comments