தேசிய மென்பொருள் Codefest 2018 போட்டி | தினகரன் வாரமஞ்சரி

தேசிய மென்பொருள் Codefest 2018 போட்டி

SLIIT கல்வியகத்தின் கணினிப் பிரிவு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து தொடர்ந்து ஏழாவது வருடமாக Codefest 2018 போட்டியை நடத்தவுள்ளது.

ஆசியாவின் அறிவியற் களஞ்சியமாக இலங்கையை உருவாக்கும் முகமாக, நாடெங்கிலும் உள்ள பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மென்பொருள் பயன்பாட்டு வடிவமைப்பு தொடர்பான அறிவை விருத்திசெய்யும் நோக்கோடு இந்நிகழ்வு நடாத்தப்படுகிறது.

‘Coding for Humanity and Beyond’ எனும் தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு பாடசாலை, கல்லூரி மற்றும் திறந்த பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளின் கீழும் நடாத்தப்படும் Codefest 2018 நிகழ்வானது, இளைய தலைமுறையினரின் தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கானதொரு அடித்தளமாய் அமையும்.

பாடசாலை மாணவர்கள் இரண்டாந்தர கனிஷ்ட பிரிவு, இரண்டாந்தர சிரேஷ்ட பிரிவு, தகவல் தொழில்நுட்ப கேள்விப் பிரிவு ஆகிய மூன்றின் கீழ் போட்டியிடலாம். மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பிரிவுகளின் கீழ் போட்டியிடவுள்ளனர். அவையாவன: Overnight Hackathon,Designation, Capture the flag and Netcom contest என்பவற்றுடன் திறந்த பிரிவின் கீழ் Emerging Innovator contest எனும் தலைப்புக்களும் ஆகும்.

“இலங்கை முழுவதும் தகவல் தொடர்பாடலை விருத்தி செய்து, நம் நாட்டை ஆசியாவின் தொழில்நுட்ப மத்தியஸ்தளமாக மாற்றுவதே Codefest நிகழ்வின் நோக்கமாகும். தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சு இதனை ஒரு தேசிய நிகழ்வாக அமுல்படுத்தியுள்ளது.

ஆறு வருடங்களாக தடம்பதித்து வந்த இந்நிகழ்வு இவ்வருடமும் வழமைப்போல் மிகவும் சிறப்பாக நடைபெறும் என எதிர்ப்பார்ப்பதாக Codefest 2018 நிகழ்வின் ஒருங்கமைப்பாளரான Dr. பிரதீப் அபேவர்தன தெரிவித்தார்.

 

 

 

மேலும் இந்நிகழ்வில் பங்குகொள்வோருக்காக Codefest, கல்வி அமைச்சினோடு இணைந்து கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி போன்ற பகுதிகளில் தகவல் தொடர்பாடல் பயிற்சி பட்டறைகளையும் நடாத்துகின்றது.

பாடசாலை மாணவர்களுக்கு தமது தகவல் தொடர்பாடல் திறனை விருத்தி செய்துக் கொள்வதற்கான தளமாக Codefest அமைந்துள்ளது.

Comments