இலங்கைக்கு எதிரான பிரேரணையில் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைக்கு எதிரான பிரேரணையில்

அப்துல் காதர்   மஸுர் மௌலானா

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நிலவும் நட்புறவு மற்றும் சவூதி அரேபியாவில் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ், இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தலைமையில் முன்னெடுக்கப்படும் சமூக, பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அந்நாட்டுடன் நெருங்கிய உறவைப் பேணிவரும் இன சௌஜன்யத்திற்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவருமான அப்துல் காதர் மஸுர் மௌலானா வழங்கிய பேட்டி

 

 

கேள்வி-: இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நிலவிவரும் நல்லுறவு தொடர்பில் குறிப்பிட முடியுமா?

பதில்-: ஆம். இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக நட்புறவு நிலவி வருகின்றது. குறிப்பாக இஸ்லாத்தின் இரண்டு பிரதான புனித தளங்களான மக்கா, மதீனா சவூதி அரேபியாவில் தான் உள்ளது. அதனால் முஸ்லிம்கள் தங்களது பிரதான கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற வருடா வருடம் சவூதிய அரேபியாவுக்கு சென்று வருகின்றனர். அதற்கான கோட்டாவை சவூதி அரேபியா வருடா வருடம் இலங்கைக்கும் ஒதுக்கி வழங்கி வருகின்றது.

அதேநேரம் இரண்டு நாடுகளுக்குமிடையில் தூதரக இராஜதந்திர நட்புறவும் இரண்டு தசாப்த காலத்திற்கும் மேலாக நீடித்து வருகின்றது.

 

கேள்வி: இலங்கையின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக சவூதி அரேபியா அளித்தவரும் உதவி, ஒத்துழைப்புகள் தொடர்பில் குறிப்பிடுவதாயின்?

பதில்-: இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சவூதி அரேபியா பல்வேறு வழிகளிலும் உதவி ஒத்துழைப்புக்களை நல்கி வருகின்றது. இலங்கையைச் சேர்ந்த ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அந்நாடு தொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ளது.

அதேநேரம் இலங்கை மாணவர்கள் இந்நாட்டு பல்கலைக்கழகங்களில் பொறியியல், மருத்துவம், பல்வைத்தியம் போன்றவாறான துறைகளில் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரவென இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி ஊடாக அந்நாடு புலமைப்பரிசில்களை வழங்குகின்றது. அத்தோடு நில்லாமல் இந்நாட்டு மாணவர்கள் சவூதி அரேபியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரவும் புலமைப்பரிசில்களை வழங்கி வசதி வாய்ப்புக்களை அளித்துள்ளது. இவற்றுக்கும் மேலாக சகல வசதிகளையும் கொண்ட பல்கலைக்கழகமொன்றை இந்நாட்டினருக்கென மட்டக்களப்பில் அமைத்து வருகின்றது.

மேலும் வருடா வருடம் ரமழான் காலத்தில் இந்நாட்டு முஸ்லிம்களுக்கென பேரீச்சம்பழத்தை இலவசமாக வழங்குகின்றது.

இவை இவ்வாறிருக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காக்கைவலிப்பு நோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய சகல வசதிகளையும் கொண்ட தனியான வார்ட்டு தொகுதி, இலங்கையின் மிக நீளமான பாலமாக விளங்கும் கிண்ணியா பலம் உட்பட இன்னும் பல பாலங்கள் மாத்திரமல்லாமல் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்பட்ட களுகங்கை நீர்ப்பாசனத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் சவூதி உதவி ஒத்துழைப்புக்களை நல்கியுள்ளது.

மேலும் சுனாமி அனர்த்தித்தின் போது பாதிக்கபட்ட இலங்கையை துரிதமாக மீளக்கட்டியெழுப்ப உதவும் வகையில் சவூதி அரேபியாவின் செம் பிறைச்சங்கத்தினர் சுமார் ஒரு வருடகாலம் இங்கேயே முகாமிட்டிருந்து மனிதாபிமான பணிகளை மேற்கொண்டனர். இவற்றை விடவும் சவூதி அரேபிய தொண்டர் அமைப்புக்களும் இந்நாட்டு மக்களுக்கு குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு மனிதாபிமானப் பணிகளை சுமார் இரு தசாப்தங்களுக்கு மேலாக இந்நாட்டில் முன்னெடுத்து வருகின்றனர்.

கேள்வி: இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்பட்டு இந்நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு எதிராக இலங்கைக்கு சவதி அரேபிய ஆதரவு நல்கியமை தொடர்பில் குறிப்பிடுவதாயின்?

பதில்-: அந்த உதவியும் ஒத்துழைப்பும் இலங்கையும் இலங்கை மக்களும் ஒரு போதும் மறக்க முடியாதவையாகும். சவூதி அரேபியாவானது அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை கொண்ட நாடாக இருந்த போதிலும் கூட இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் சர்வதேச ரீதியில் கொண்டு வரப்பட்ட அப்பிரேரணையை எதிர்த்தே இந்நாட்டுக்கு ஆதரவாக ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சவூதி அரேபியா வாக்களித்தது. அதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இவ்வாறு ஆதரவு நல்கியுள்ளது. அந்தளவுக்கு இரு நாடுகளும் நெருக்கமான இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கின்றன.

 

கேள்வி: சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் புதிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோர் தலைமையில் முன்னெடுக்கப்படும் புரட்சிகரத்திட்டங்கள் தொடர்பில் குறிப்பிடுவதாயின்?

பதில்-: சவூதி அரேபியாவின் பொருளாதாரம் பல தசாப்தங்களாக பெற்றோலிய வளத்தில் தான் தங்கியுள்ளது. என்றாலும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் சவூதி அரேபிய பொருளாதாரத்தை பெற்றோலிய வளத்திற்கு அப்பால் கைத்தொழில் துறையில் கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக உருவாக்குவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை வகுத்து முன்னெடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் தான் 'விஷன் - 2030' திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு சவூதி அரேபிய மக்கள் முழுமையான ஆதரவை நல்கி உள்ளார்கள்.

இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீடுகள் சவூதி அரேபியாவில் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. இதன் பயனாக இன்று உலகின் பல முன்னணி முதலீட்டாளர்கள் சவூதி அரேபியாவில் முதலீடுகளை மேற்கொள்ள முன் வந்துள்ளனர். சிலர் முதலீடுகளையும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த விஷன் 2030 திட்டமானது சவூதி மக்களின் வாழ்வில் சுபீட்சத்தையும் நாட்டில் அபிவிருத்தியையும் கொண்டு வருவதை இலக்காகக் கொண்ட ஒன்றாகும்.

 

கேள்வி: இளவரசராக முஹம்மத் பின் சல்மான் பதவி ஏற்ற பின்னர் அவர் தொடர்பில் அதிக விமர்சனங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவே?

பதில்: உண்மை தான். ஆனால் அந்த விமர்சனங்களில் எவ்வித உண்மையும் இல்லை. அதாவது 'காய்க்கின்ற மரத்திற்கு தான் கல்லடி பொல்லடி' என்பது போன்று இளவரசர் இலக்கு வைத்து விமர்சிக்கப்படுகின்றார். ஏனெனில் அவர் சவூதி அரேபியாவை பிராந்தியத்தில் ஒரு தன்னிறைவு அடைந்த நாடாகக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மன்னர் தலைமையில் முன்னெடுத்துள்ளார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகள் தான் அவருக்கு எதிராக விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றன. அதாவது சவூதி அரேபியா இன்று சமய, அரசியல் எதிரிகளால் தாக்கப்படும் ஒரு நிலைக்கு முகம் கொடுத்துள்ளது. அது எந்தளவுக்கு என்றால் அண்மையில் முஹம்மத் பின் சல்மான் இறந்து விட்டார் என்று சமூக வலைத்தலங்களில் பொய்ப்பிரசாரம் செய்யப்பட்டது. அதற்கென பொய்யான மருத்துவ சான்றிதழையும், மரண சான்றிதழையும் கூட தயாரித்து வெளியிட்டனர். ஆனால் அவர் ரஷ்யாவில் நடைபெற்ற உதைப்பந்தாட்டப் போட்டில் பார்வையாளராகக் கலந்து கொண்டதோடு அந்த பொய்ப்பிரசாரத்தின் உண்மை முகம் பகிரங்கமானது.

இதேநேரம் சவூதி இஸ்ரேலுடனும் மொஸாத்துடனும் இரகசிய உறவை கொண்டிருப்பதாக ஒரு கட்டுக்கதையைப் பரப்பியுள்ளனர். இதனூடாக சவூதியை முஸ்லிம் சமுதாயத்திலிருந்து தூரமாக்க எதிர்பார்க்கின்றனர். ஆனால் சவூதிக்கு இஸ்ரேவுடனோ மொஸாத்துடனோ உறவைப் பேண வேண்டிய தேவை சிறிதளவேனும் கிடையாது. சவூதியிடம் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளது. குறிப்பாக சவூதியின் பொது உளவு பணியகம் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றது. அதனால் சவூதி அரேபியா தன் பாதுகாப்புக்காக வேறொருவரின் தயவில் தங்கி நிற்க வேண்டியதில்லை.

இவை இவ்வாறிருக்க, யெமன், சிரிய உள்நாட்டு யுத்தங்கள் தொடர்பிலும் சவூதிக்கு எதிராகவே விரல் நீட்டப்படுகின்றது. ஆனால் பிராந்தியத்தில் அமைதி சமாதானத்தை ஏற்படுத்தவே சவூதி அரேபியா உழைத்து வருகின்றது. இருந்தும் சவூதி அரேபியா மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் அதனைப் பிழையாகக் கூறி மக்களைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அந்த முயற்சிகள் வெற்றியளிக்கப் போவதில்லை.

 

கேள்வி-: சவூதி பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதாகக் கூறப்படுகின்றதே?

பதில்-: பயங்கரவாதத்திற்கு சவூதி அரேபியா முகம் கொடுத்துள்ளது. அதன் பாதிப்புக்களை சவூதி அனுபவித்திருக்கின்றது. அதனால் தாம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளை இன்னுனொரு நாடும் அங்குள்ள மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா ஒரு போதும் எதிர்பார்க்காத நாடு முதலில் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.

சவூதி அரேபியாவானது அமைதி சமாதானத்தை வலியுறுத்தும் இஸ்லாமிய மார்க்கம் அருளப்பட்ட பூமி. இங்கு தான் இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்தார். இஸ்லாத்தின். இரண்டு புனித தளங்களான மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வும், மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியும் இந்நாட்டில் தான் உள்ளது. இஸ்லாமானது அப்பாவிகளைக் கொல்வதற்கோ, வன்முறைகளுக்கோ ஒரு போதும் இடமளிக்கவில்லை.

இவ்வாறான சிறப்புக்களை கொண்டுள்ள சவூதி அரேபியா பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யுமா? அதற்கான தேவையோ அவசியமோ அதற்கில்லை. மாறாக பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுடன் தான் அது கைகோர்த்துள்ளது. பயங்கரவாதம் காரணமாகப் பிராந்திய நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை கூட சவூதி அரேபியா பராமரித்து வருகின்றது.

இருந்தும் சவூதி அரேபியாவுடன் காழ்ப்புணர்வு கொண்டுள்ளவர்கள் தான் இவ்வாறான குற்றச்சாட்டை பரப்புகின்றனர். அந்தக் குற்றச்சாட்டுக்களின் உணமைத்தன்மையை மக்கள் புரிந்து கொள்ளத்தவறக் கூடாது.

 

கேள்வி-: நிறைவாக எமது வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவதென்ன?

பதில்-: சவூதி அரேபியாவுக்கு எதிராகப் பல்வேறுவிதமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றில் சமூக ஊடகங்கள் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையுமே இல்லை என்பதை இந்நாட்டினரும் புரிந்து கொள்வதே சிறந்ததாகும்.

அதேநேரம் மன்னர் சல்மானும் இளவரசர் முஹம்மத் பின் சல்மானும் பிராந்திய நாடுகளுடனும், சர்வதேச நாடுகளுடனும் மனிதாபிமான அடிப்படையில் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வதில் அதிக ஆர்வம் அக்கரை கொண்டுள்ளனர். அந்த வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வளர்த்துக்கொள்வது சிறப்பாக அமையும்.அது இருநாடுகளுக்கிடையிலான சினேகபூர்வநட்புறவை மென்மேலும் நெருக்கமாக்கிப் பலப்படுத்தும்.

பேட்டி கண்டவர் : – 
மர்லின் மரிக்கார்   

Comments