இலங்கைக்கு தேவை | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைக்கு தேவை

சிவஸ்ரீ. பால. ரவிசங்கர சிவாச்சாரியார்   பிரதம குரு ஆதீனகர்த்தா   ஸ்ரீ ஞான பைரவர் தேவஸ்தானம்

அன்பு, ஜீவகாருண்யம், கொல்லாமை என்பதனை அடிப்படையாகக் கொண்டதே பெளத்தம். அதுபோல குறிப்பாக இவ்வடிப்படையில் கருத்துக்களைக் கொண்டதே சனாதன வைதீக இந்து தர்மம் எனப்படும் இந்து மதமும் அன்பினை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதமும், இம்மதங்களை பின்பற்றும் மக்கள் பெரும்பன்மையாக வாழும் இலங்கைத் திருநாட்டில் தற்போது மனிதகுலத்திற்கே பெரும் அழிவாக உருவாகிவரும் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்கும் அதிகபட்ச அரசாங்க நடவடிக்கையாக மரண தண்டனை எனும் தூக்குத் தண்டனையினை மீண்டும் அமுல்படுத்துவதற்கான துரித ஏற்பாடுகள் அரசாங்க மட்டத்தில் சகல விதத்திலும் முன்னெடுக்கப்பட்டு, அதற்கான தன்நிலை நியாயத்தை ஊடகங்கள் வாயிலாக சமூக முக்கியஸ்தர்கள், மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், சமூகநல செயற்பாட்டாளர்கள் என ஒன்றுதிரட்டி அரசாங்கம் மக்கள் மத்தியில் முன்வைத்து மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மரணதண்டனைக்காக சட்டத்தினை அமுல்படுத்த அரசு அதிக பிரயத்தனம் செய்து வருகிறது.

இவ்விடயம் தொடர்பாக மீண்டும் அதாவது சுமார் 42 ஆண்டுகளின் பின்னர் இச்சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதற்கு சார்பாகவே பெரும்பாலானோர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே இச்சட்டத்திற்கு எதிராக தம் கருத்துக்களை பதிவுசெய்து வருகிறார்கள் எனலாம்.

சமூகத்தில் மதகுருமார், சமூக முக்கியஸ்தர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என தம் கருத்துக்களை மக்களின் முன்வைத்து தெளிவுப்படுத்திவரும் அதேவேளை, வழமைபோல் இந்து மதகுருமார் ஒன்றும் பேசாமல் மெளனியாகவே இவ்விடயத்திலும் உள்ளது வேதனைக்குரியது.

சிவில் சட்டங்களை கடுமைப்படுத்தாது மரண தண்டனை எனும் தூக்கு தண்டனையினை கொண்டு வந்தால் போதைப்பொருள் குற்றத்திற்காக மட்டுமல்ல ஏனைய குற்றங்களுக்காகவும் சேர்த்து வருடத்திற்கு பல நூற்றுக்கணக்கானவர்களை தூக்கில் போடவேண்டிவரும். இதற்கு அரசு தயாரா? அதாவது ஒருவனுக்கு மூக்கில் சளி வைத்துவிட்டது என்பதற்காக மூக்கையே அறுப்பது போன்றதே தூக்கு. சளி வைத்ததற்கான காரணம் அடிப்படையை தேடி சரிசெய்து விடுவோம். மேலும் சளி வைக்காதபடி நடப்போம் என்பதுவே எனது வாதமாகும். நாட்டினுள் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் குற்றங்களை தடுப்பதற்கே இக்கடுமையான தூக்கு தண்டனையினை கொண்டுவருவதாகக் கூறும் அரசு அடிப்படையில் சீர்செய்ய வேண்டிய பல விடயங்களை விட்டுவிட்டது என்பதுவே அடுத்த கடும் குற்றச்சாட்டு.

நாட்டினுள் போதைப்பொருள் கிடைக்கிறதென்றால் குறிப்பிட்ட வகை போதைப்பொருட்கள் எதுவும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டினுள் உலாவும் அனைத்து போதைப்பொருட்களும் ஒன்றில் இலங்கையில் ஒரேயொரு விமான நிலையமாகவுள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாகவோ அல்லது பிரதான துறைமுகங்களான கொழும்பு, காலி துறைமுகங்களுடாகவே குறிப்பாக கொழும்பு துறைமுகத்தினூடாகவே கொண்டுவரப்படுகிறது என்பது மறுக்கப்பட்ட முடியாத உண்மை அல்லது தென் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கடத்தப்படலாம். இவற்றை தடுக்கவேண்டியது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் முப்படையினதும் கடமையல்லவா? தரை, வான், கடல் மார்க்கமாக விடுதலைப் புலிகளை அழித்தொழித்துவிட்டதாக வெற்றிவிழா கொண்டாடும் இலங்கை முப்படைக்கு ஏன் இந்த போதைப்பொருள் மாபியாவை அடக்க முடியவில்லை? முடியவில்லை என்பதெல்லாம் பொய். அவர்களை முடியாதவர்களாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகளும், போதைப்பொருள் மாபியாக்களும் என்பதே உண்மை.

கடந்தகால, ஒரு பத்து வருட காலப்பகுதியில் போதைவஸ்து கடத்தல், விநியோகம், கைமாற்றல், உடந்தையாக இருந்தமை, இலங்கைக்குள் போலியான பெயரில் கொள்கலன்களில் கொண்டுவர உதவியமை போன்ற குற்றங்களுக்காக எத்தனையோ அரசியல்வாதிகள், நிறுவனங்கள், அரச அதிகாரிகள் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. தற்போது வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரிக்கப்படாதே மூடிமறைக்கப்பட்டன என பார்த்தால் தலையே வெடித்துவிடும். உண்மையில் எய்தவன் இருக்க அம்பை நோவது போல இருக்கிறது, இந்நடவடிக்கைகள் ஆகும்.

இச்சட்டம் கொண்டுவரப்பட்டால் இன்று பொலிஸார் போதைப்பொருள் பாவிப்பவர்களை தினமும் நூற்றக்கணக்கில் கைது செய்திருப்பதாகக் கூறுவது போன்று மாதத்திற்கு குறைந்தது பத்து பேருக்காவது அதாவது போதைப்பொருள் பாவனை, சிறுவிநியோகம் போன்றவர்களில் ஈடுபடும் கும்பலை கூட்டம் கூட்டமாகப் பிடித்து தூக்கில் போடலாம். இது அரசின் நோக்கமாக கூடாது. முதலில் போதைப்பொருட்களை இலங்கைக்குள் கொண்டு வருவதை கடுமையாக கண்காணித்து தடுக்க வேண்டும். அப்படியே கொண்டுவரப்பட்டாலும் நேரடியாக அவற்றை கொண்டு வந்தவர் யாராக இருப்பினும் கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும். இருக்கும் சட்டங்களை அமுல்படுத்தினாலே போதும் புதிய கடும் மரண சட்டம் தேவையில்லை.

தூக்கு தண்டனை, மரண தண்டனை என்பது சில காலங்களுக்கு ஒருமுறை அக்காலத்தில் இருக்கும் படுபயங்கர செயலை முன்நிறுத்தி கொண்டுவரப்பட்ட வேண்டும் என கூறப்படுவதுவே வரலாறு. கொலை, வன்முறை, பாலியல் குற்றம் என்பதற்காக நியாயப்படுத்தப்பட்டுவந்த தூக்குத் தண்டனை இன்று போதைப்பொருள் அழிவிலிருந்து மனித குலத்தை காக்கவேண்டி கொண்டுவரப்பட்ட வேண்டும் என்றே கூறப்படுகிறது. நாளை மனித மூலோபாயத் திருட்டு, கணனி, செய்மதி போன்றவற்றை வசப்படுத்தி நிகழ்த்தப்படும் பாரிய குற்றம், அழிவு என்பதோடு முன்னரே திட்டமிட்டு செய்யப்படும் சதி, நாசகார மூலோபாய திட்டம் போன்றவைகள் என பட்டியல் நீளத்தான் போகிறது. இதற்கு என்ன அடிப்படைத் தீர்வு என்பதைத்தான் தேடவேண்டுமே தவிர மரண தண்டனையே தீர்வாகாது.

அமெரிக்க ஜனாதிபதித் தெரிவில் கூட ரஷ்யாவின் வழிகாட்டுதலில் உளவு நிறுவன ஏஜன்டுகள் செயற்பட்டு, டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கான வேலைத்திட்டத்தை அதாவது அமெரிக்க பிரஜைகளை, வாக்காளர்களை முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு ஆதரவு வாக்குகளாக மாற்றியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அதுவும் தற்போது பேசாப் பொருளாகிவிட்டது.

மேலும் இச்சட்டத்தை கொண்டுவரும் முன் மதகுருமார்கள், சட்ட வல்லுனர்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பட்டவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டதா? எவ்வளவு காலம் இவை தொடர்பாக ஆராயப்பட்டது போன்றவை கேள்விக்குறியே.

 

 

தூக்குத்தண்டனை சட்டத்தை கொண்டுவருவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். மேற்குல நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், மனித உரிமை அமைப்பு என்பன போர்க்கொடி தூக்கினாலும், GST சலுகையை முழுமையாக இழந்தாலும் பரவாயில்லை நாட்டில் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார்கள். ஒரு நாட்டில் சட்டத்தை இயற்றும் வல்லமையுடைய நாடாளுமன்றத்திற்கு படித்தவர்கள், அறிவாளிகள், புத்திஜீவிகள் வரவேண்டும் என்பதன் அருமை இவ்விடயத்தில் புரிகிறது. உணர்வு பூர்வமாகவன்றி அறிவுபூர்வமாக சில விடயங்களை சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டுயவர்களின் பொறுப்பற்ற செயற்பட்டால் இப்படியான ஏன் இதைவிட மோசமான சட்டங்கள் கூட வரலாம்.

மரண தண்டனை அமுல்படுத்தல் நிலைப்பாட்டை அவசர அவசரமாக கொண்டுவராமல் முதலில் அதற்கான ஒரு மாற்று ஏற்பாடாக “போதைப்பொருள் தடுப்பு சட்டமூலம்” ஒன்றை கடுமையான சட்ட தண்டனை திருத்தங்களை உள்ளடக்கியாக பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றி குறிப்பிட்ட ஐந்து வருடகால எல்லை நிர்ணயித்து நீதித்துறை, பொலிஸ், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, முப்படைகளுக்கு போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு முழுமையான சுயாதீனமான, சுதந்திரமான வகையில் செயற்படத்தக்க அதிகாரம் மற்றும் தனி நீதிமன்ற அமைப்பு என்பவையே முதலில் தேவை. இவை அனைத்தும் சரியாக நடக்கவேண்டும். சரியாக நடந்தால் மரணதண்டனை அவசியமல்லாது போய்விடும்.

 

 

ஒரு இந்துமத குருவின் - விரிவான பார்வை

Comments