பாரம்பரிய புத்தளம் உப்பு வயல்களை அரச காணிகளாக அறிவித்ததன் மர்மம் என்ன? | தினகரன் வாரமஞ்சரி

பாரம்பரிய புத்தளம் உப்பு வயல்களை அரச காணிகளாக அறிவித்ததன் மர்மம் என்ன?

இந்நாட்டின் உப்பு உற்பத்தியில் நான்கு இடங்கள் பிரபல்யமானவை. அவற்றில் புத்தளம் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இலங்கையின் உப்பு தேவையில் மூன்றில் ஒரு பகுதியை புத்தளமே நாட்டுக்கு அளிக்கின்றது.

உலகில் உற்பத்தி செய்யப்படும் உப்பில் வெறும் 07 வீதம் மாத்திரம் தான் உணவுத் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சிய 93 வீத உப்பும் கைத்தொழில் நோக்கங்களுக்காகவே பாவிக்கப்படுகின்றது. அந்தளவுக்கு உப்பு முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றது.

புத்தளத்தின் களப்பிலிருந்து பெறப்படும் உவர் நீரின் செறிவுத்தன்மை 0 – 4 வீதமாகக் காணப்படும். இந்நீரை உப்பு வயல்களுக்கு பாய்ச்சும் போது 24 வீதத்திற்கு மேல் செறிவுத்தன்மை கொண்ட உப்பு விளைய ஆரம்பிக்கும்.

புத்தளம் உப்பு செய்கைக்கு நீண்ட வரலாறு உள்ளது. அதாவது மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த தேச சஞ்சாரியான இப்னு பதூதா 1345ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் திகதி புத்தளத்தின் ஊடாகவே இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவரது பயணக்குறிப்புக்களில் கூட புத்தளத்தில் அவர் வந்திறங்கிய சமயத்தில் உப்பு செய்கை பண்ணப்பட்டிருந்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் புத்தளத்தையும் அதனை அண்டிய பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுகின்ற உப்பு செய்கைக்கு சுமார் 900 வருட வரலாறு இருப்பதாகத் தெரிகிறது.

தற்போது புத்தளத்தில் மாத்திரமல்லாமல் புத்தளம் நகருக்கு அருகிலுள்ள பிரதேசங்களான தில்லையடி, பாலாவி, கரம்பை, மதுரங்குளி, விருதோடை, புத்தளத்திற்கு வடக்காக உள்ள மன்னார் வீதி பிரதேசங்கள் உட்பட புத்தளம் களப்பை அண்டிய பல பிரதேங்களிலும் உப்பு உற்பத்தி இடம்பெற்று வருகின்றது.

ஆனாலும் புத்தளம், மன்னார் வீதியிலுள்ள 'புத்தளம் சோல்டன் உப்பு வாய்க்கால்களில் மிகவும் நீண்ட காலமாக உப்பு உற்பத்தி இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக இந்த உப்பு வாய்க்கால்கள் தனியாருக்கு சொந்தமானவை. அவை பரம்பரையாக செய்கை பண்ணப்பட்டுவரும் உப்பு வாய்க்கால்களாகும். இந்த வாய்க்கால்களுக்கான காணி உறுதியை இப்பிரதேச உப்பு உற்பத்தியாளர்கள் நூறு வருடங்களுக்கும் மேலாகக் கொண்டிருக்கின்றனர். அதாவது இப்பகுதியில் சுமார் 400 ஏக்கர் தனியாருக்கு சொந்தமான பரம்பரைக் காணிகளாக உள்ளன. இவை இப்பகுதியைத் சேர்ந்த 300 பேருக்குரிய காணிகள்.

அதேநேரம் 90 பேர் இப்பகுதியிலுள்ள அரச காணிகளில் சுமார் 100 ஏக்கர் காணியை வருட அனுமதிப் பத்திரத் திட்டத்தின் கீழ் அரசிடமிருந்து பெற்று உப்பு செய்கையை மேற்கொள்கின்றனர். இந்த நூறு ஏக்கர் காணி உட்பட 528 ஏக்கர் உவர் நீர்த்தேக்க காணி அரச காணிகளாக இப்பிரதேசத்தில் உள்ளன. இந்தக் காணிகளை புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரி சங்கம் 2004 முதல் புத்தளம் பிரதேச செயலகத்தின் ஊடாக வருட அனுமதிப் பத்திரத்திட்டத்தின் கீழ் பெற்று உப்பு செய்கைக்காகப் பயன்படுத்தி வருகின்றது. இது தான் புத்தளம், மன்னார் வீதியிலுள்ள புத்தளம் சோல்டன் உப்பு வாய்க்கால்கள் தொடர்பான வரலாறாகவும் உண்மையாகவும் உள்ளது.

என்றாலும் 1973 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 43 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் இப்பகுதியிலுள்ள சுமார் 1500 ஏக்கர் காணி அரச காணிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இக்காணிகள் அரச காணிகளாக காணி தீர்த்தல் கட்டளைச் சட்டத்தின் (Land settlement ordinance) 04 வது ஷரத்தின் கீழேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த ஷரத்தின் படி ஒரு காணியை அரச காணியாக அறிவிப்பதற்கு அக்காணி காடுகளைக் கொண்டதாகவோ அல்லது பாவனைக்கு உதவாத நிலமாகவோ அல்லது விவசாயம் செய்யப்படாத காணியாகவோ அல்லது எவரும் குடியேறாத காணியாகவோ இருக்க வேண்டும். ஆனால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்ட காலப்பகுதியிலும் இப்பிரதேசத்தில் உப்பு செய்கை இடம்பெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதனால் இப்பகுதியை பயன்படுத்தப்படாத நிலமாகவோ, காட்டு நிலமாகவோ, விவசாயம் செய்யப்படாத நிலமாகவோ கொள்ள முடியாது என்று புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரிச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் நஸ்லியா காதர் குறிப்பிடுகின்றார்.

இதேநேரம், 'ஒரு பகுதியை அரச காணியாக அறிவிப்பதாயின் அது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அக்காணியில் மக்கள் வாழ்ந்து கொண்'டிருந்தால் அல்லது மக்கள் அக்காணியை பயன்படுத்திக் கொண்டிருந்தால் அக்காணியை அரச காணியாக அறிவிக்க முன்னர் அதனை பயன்படுத்துபவர்களுக்கு முதலில் அறிவூட்ட வேண்டும். ஆனால் இந்த வர்த்தமானி கொண்டிருக்கும் திகதியை உள்ளடக்கிய காலப்பகுதியில் அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றதாக தெரியவில்லை. அதேநேரம் இவ்வர்த்தமானி தனியே ஆங்கில மொழியில் மாத்திரமே காணப்படுகின்றது. மாறாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் அது வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இவ்வர்த்தமானியில் பிச்சைத்தம்பி மரைக்கார் சைனம்பு நாச்சியா என்ற பெண்மணியின் பெயர் உள்ளடக்கப்பட்டு அவரது 06 ஏக்கர்கள் 2 ரூட் மற்றும் 27 பேர்ச்சஸ் விஸ்தீரணம் கொண்ட காணி மாத்திரம் தனியார் காணியாக அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பணிமணியின் காணிக்கு இரு மருங்கிலும் அவரது சகோதரிகளின் காணிகள் தான் உள்ளது. இருந்தும் அவர்களது காணிகளும் அரச காணிகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனால் சைனம்பு நாச்சியா அன்று என்ன ஆவணங்களைக் கொண்டிருந்தாரோ அந்த ஆவணங்களையே ஏனையவர்களும் கொண்டிருந்தனர். இருந்த போதிலும் அவர்களது காணிகளைத் தவிர்த்து தான் சைனம்பு நாச்சியாவின் காணி மாத்திரம் தனியார் காணியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் அவரது மகனிடம் வினவிய போது அவர் தாமறிந்த வகையில் அவ்வாறன காணி தீர்வு ஏற்பாடுகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை' என்று சொன்னார்.

அதேநேரம் இவ்வர்த்தமானி திகதியின் படி 1973 காலப்பகுதியில் புத்தளத்தின் முன்னணி அரசியல்வாதிகளாக விளங்கிய முன்னாள் சபாநாயகர் எச். எஸ். இஸ்மாயில், முன்னாள் நிதியமைச்சர் எம். எச். எம் நைனா மரிக்கார் போன்றோருக்கும் இங்கு சொந்த உப்பு வாய்க்கால்கள் அக்காலப்பகுதியில் இருந்தன. அதனால் இவ்வாறான வர்த்தமானி அக்காலப்பகுதியில் வெளியிடப்பட்டு இருந்தால் அது தொடர்பில் அவர்கள் அறியாதிருக்க நியாயமே இல்லை என்பது தான் பிரதேச வாசிகளின் கருத்தாக உள்ளது.

மேலும் அக்காலப்பகுதியில் ஒப்பந்த தொழிலில் ஈடுபட்டு ஆசிரியர் எஸ்.எம். முபாரக், 'தாம் வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பில் அடிக்கடி அரசாங்க அலுவலகங்களில் பார்த்து வந்துள்ளேன். இருந்தும் இவ்வாறான ஒரு வர்த்தமானியை தாம் காணவில்லை' எனக் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் இந்நாட்டில் தனியார் உப்பு செய்கையில் ஈடுபட்ட போதிலும் அவர்கள் தம் உப்பை உப்பு கூட்டுத்தாபனத்திற்கு மாத்திரம் தான் அக்காலப்பகுதியில் விற்பனை செய்ய முடியும். அந்தவகையில் இக்காணிகளில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பு தனியார் துறை 

 

 

உப்பு எனக் குறிப்பிட்டே அன்று கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றது. இவ்வாறு குறித்த உப்பு வயல்களை முடிக்குரிய காணிகளாக அறிவிப்பதற்கு எவ்வித நியாயப்பாடும் இல்லாத நிலையில் தான் இவ்வர்த்தமானி வெளியிடப்பட்டு இருக்கின்றது. இதனுடாக 1500 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட காணிகள் இந்த அரச காணிகள் வர்த்தமானிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. இதன்படி இப்பிரதேசத்திலுள்ள 528 ஏக்கர் அரச காணி, தனியாருக்கு சொந்தமான 400 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட காணி என்பன அரச காணிக்குள் உள்ளடங்குகின்றன. இந்த வர்த்தமானியின் படி இவற்றுக்கு மேலதிகமான காணிகளுக்கு பிரதேசத்திலுள்ள சில குடியிருப்புகள் கூட இந்த அரச காணிக்குள் உள்ளடங்கப்படக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதேசவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவ்வர்த்தமானி தொடர்பில் கடந்த 45 வருடங்களாக பிரதேச மக்களுக்கு எதுவுமே கூறப்படவில்லை. அது தொடர்பில் அவர்கள் அறிந்து கொள்ளவும் இல்லை. இருந்தும் 45 வருடங்கள் கழிந்த பின்னர் குறித்த வர்த்தமானியை அடிப்படையாகக் கொண்டு குறித்த காணிகளை அரச காணிகள் என்ற அடிப்படையில் அளவீடு செய்யவென இவ்வருடம் (2018) ஜுலை 30 ஆம் திகதி காணி ஆணையார் அலுவலக உத்தியோகத்தர்கள் இந்த புத்தளம் சோல்டன் உப்பு செய்கைப் பகுதிக்கு வந்துள்ளனர். இந்நடவடிக்கை புத்தளம் உப்பு செய்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால் மறுநாள் 31 ஆம் திகதி புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் அலுவலகத்திலிருந்து புத்தளம் மாவட்ட செயலகம் வரை எதிர்ப்பு ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று நடாத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், எங்கள் காணிகளை அளவீடு செய்யாதே...', காணி அளவீட்டை உடன் நிறுத்து', 'பத்தாயிரம் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே...' உள்ளிட்ட பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்திய வண்ணம் சென்றனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மகஜரொன்று மாவட்ட மேலதிக செயலாளர் வன்னிநாயக்காவிடம் புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரிச்சங்க பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது. இம்மகஜரைக் கையேற்ற மாவட்ட மேலதிக செயலாளர், 'அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் இக்காணிகளுக்கான தமது உரித்துரிமையை நிரூபிக்குமாறு கேட்டுக்கொண்டதோடு அது வரைக்கும் காணி அளவீடுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளிடம் மேலதிக மாவட்ட செயலாளர் உறுதியளித்தார். அதனடிப்படையில் ஜுலை 31 ஆம் திகதி முதல் இக்காணி அளவீடு செய்தல் நடவடிக்கையும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் அரச காணிகளாக அறிவித்துள்ள இந்த உப்பு வாய்க்கால்களில் சுமார் பத்தாயிரம் பேர் தொழில் வாய்ப்பைப் பெற்றுள்ளதோடு இத்துறையில் மேலும் பல ஆயிரக்கணக்கானோர் தங்கி வாழுகின்றனர். இங்கு 390 தனியார் உப்பு வாய்க்கால்கள் காணி உரிமையாளர்களும், செய்கையாகளும் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களில் 90 பேர் அரச காணிகளை வருடாந்த அனுமதிப்பத்திர அடி்பபடையில் புத்தளம் பிரதேச செயலகத்தில் பெற்று 2004 முதல் உப்பு உற்பத்திய்ல ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் 2016 ஆண்டு வரையும் வருடத்திற்கு 5000 ரூபா தான் வருட அனுமதிப்பத்திரத்திற்கு அறவிடப்பட்டது. இக்கட்டணமும் 2017 இல் 50 வீதமாக அதிகரிக்கப்பட்டது. இதேவேளை இங்கு உப்பு செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களின் நலன்களை கவனிக்கும் பணியில் 1950 இல் அமைக்கப்பட்ட புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரிச் சங்கம் ஈடுபட்டு வருவது தெரிந்ததே.

இவ்வாறான பின்புலத்தில் தான் 45 வருடங்களுக்கு முன்னரான இந்த வர்த்தமானி களத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு இக்காணிகளை அளவீடு செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இந்நடவடிக்கை புத்தளம் உப்பு செய்கையாளர்களை அதிர்ச்சிக்கும் மன உழைச்சலுக்கும் உள்ளாக்கியுள்ளன. ஆகவே மக்களின் நலன்களில் முன்னுரிமை அளித்து நியாயபூர்வமாக செயற்ட வேண்டியது அரசின் கடமையும் பொறுப்புமாகும்.

மர்லின் மரிக்கார்

Comments