ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“யுத்தத்துக்கு முன்னால யாழ்ப்பாணத்தின்டகல்வி நிலை ரொம்ப நல்லாக் கிடந்துது.”

“எங்கட காலத்தைத்தான சொல்லுறியள்.”

“ஓமோம். அந்தக் காலத்தில யாழ்ப்பாணத்தில இருந்த யாழ்ப்பாண மாணவர்கள் கொழும்பு மாணவர்களோட கல்வியில சமநிலையில இருந்தவை’

“பின்ன எங்கட பெடியளும் பெட்டையலும் எத்தன டிஸ்டிங்சன் எடுத்தவை”

“நானே ஓ.எல் ல 8 டிஸ்டிங்சன் எடுத்தவனில்லே”

“அண்ண யாரன்ண எங்கட பெடியளைப் பத்தி உப்பிடி நல்லதாச் சொன்னவை”

“எங்கட பிரதமர் போன மாசம் யாழ்ப்பாணத்துக்கு விசிட் அடிச்சவரில்லோ. உவர்தான் உப்பிடி கிரெடிட் கொடுத்தவர்”

“வேற என்னண்ண சொன்னவர்”

“அந்தக் காலத்தில யாழ்ப்பாணத்தில இருந்த மாணவர்கள் ஒக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டிக்கும் போனவை. ஆனா இப்ப யாழ்ப்பாணத்தின்ட கல்வி நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லயென்டு அவர் சொல்லிப் போட்டார்”

“உண்மையை சொன்னவரென்ன?”

“உது மட்டுமில்ல. உந்த நிலையை மாத்த வேணுமென்டா நல்ல ஆசிரியர்கள் தேவை. யாழ்ப்பாண அரசியல்வாதிகள் ஒன்டு செய்ய வேணும். யாழ்ப்பாணத்தில இருந்து ஓய்வுபெற்று வெளிநாடுகளில தங்கியிருக்கிற ஓய்வுபெற்ற ஆசிரியர்களை திரும்பவும் யாழ்ப்பாணத்துக்கு கூட்டிவரவேணும். அப்படி கூட்டி வந்தினம் என்டா நிலைமைய மாத்த முடியும் என்டும் சொன்னவர்”

"எங்கட நிலைமைய நாடி பிடிச்சிச் சொன்னவரென்ன”

“இன்னும் பல விசயங்களைச் சொன்னவர். இந்தியாவின்ட உதவியுடன வட மாகாணத்தை பொருளாதார அபிவிருத்தியோட கூடிய மாகாணமாக்குறதுக்கு வேவையான அனைத்தையும் செய்வனாங்கள். குறிப்பா பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை துறைமுகம் வட பகுதியிலுள்ள வீதிகள் எல்லாம் அபிவிருத்தி செய்யப்படும். வடக்கில தீவுகள் இருக்கெல்லோ”

“காரைதீவு நெடுந் தீவு”

“ஓமோம் உந்த தீவுகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில வரவிரும்புகினம். உவையள் வாறதுக்கு படகுச் சேவையொன்டை ஆரம்பிக்க யோசிச்சிருக்கிறனாங்கள். உது மட்டுமில்ல மன்னாரில இருந்து பூநகரி வழியே திருகோணமலைக்கு ஒரு சாலை அமைக்கிற யோசினயும் கிடக்கு. உது மட்டுமில்ல சின்னராசு”

“வேற விசயங்களும் கிடக்கே”

“வடக்கில சுற்றுலா வலயம் கைத்தொழில் வலயங்களும் வரப்போகுது. யாழ்ப்பாண புகையிலைக்கு முன்ன எப்பிடி செல்வாக்கு இருந்துதென்டு உங்களுக்கு தெரியுமென்ன. உந்த புகையிலய இந்தியாவுக்கும் ஏற்றுமதி செஞ்சவை. உதையெல்லாம் திரும்ப செய்ய வேணும் என்டும் சொன்னவர்”

“அப்பிடியே.”

“யாழ்ப்பாணத்தில யுத்தமொன்டு நடந்துது. உதால பொருளாதாரம் அழிஞ்சிட்டுது.அழிஞ்சி போன பொருளாதாரத்தை மீட்டெடுக்குறதுதான் எங்கட நோக்கம.இப்ப யுத்தம் முடிஞ்சிட்டதால வடக்குல உள்ள பிரச்சினைகள தீர்க்க வேண்டிய நேரம் வந்துட்டுது. என்டபடியா வடக்கு மக்களின்ட துக்கத்திலயும் சந்தோசத்திலயும் நாங்களும் பங்கேற்க வேணும் என்டும் சொன்னவர்

“பிரதமர் பேசியவுடன இந்திய பிரதமர் மோடியும் பேசினவர்”

“அவரும் யாழ்ப்பாணம் வந்தவரே?”

“இந்தியப்பிரதமர் இங்க வரேல்ல ஆனா டில்லியில இருந்து விடியோ மூலமாப் பேசினவர்”

“உப்பிடி பேசேலுமென்ன. அவர் என்ன சொன்னவர்?”

“போன வருசம் இலங்கைக்கு வந்த நேரம் இந்திய அம்புலன்ஸ் சேவைய நாடு முழுவதும் விஸ்தரிப்பினம் என்டு சொன்னத இப்ப செய்து போட்டனாங்கள் என்டு சொன்னவர்”

“உந்த சேவை இப்ப யாழ்ப்பாணத்தில கிடைக்குதோ?”

“ உந்த அம்புலன்ஸ் சேவைய 2016 ல இலங்கையின்ட மேல் மாகாணத்திலயும் தென் மாகாணத்திலயும் 2016 ல இந்தியா 7.5 மில்லியன் டாலர் செலவில ஆரம்பிச்சுது. 88 அம்புலன்சோட ஆரம்பிச்சவை. இப்ப உதை நாடு முழுவதுக்கும் விஸ்தரிச்சிருக்கினம். இப்ப 209 அம்புலன்ஸ் வண்டிகள் சேவையில இருக்குது. எந்த தொலைபேசி சேவைக்கூடாகவும் 1990 என்ட எண்ணில தொடர்பு கொண்டமென்டா உந்த சேவைய பெற முடியும்”

“நல்ல விசயமென்ன”

“இலங்கை இந்தியாவின்ட பக்கத்து நாடு என்டு மட்டும் நாங்கள் நினைக்கேல்ல. இலங்கையின்ட துக்கத்திலயும் சந்தோசத்திலயும் பங்கு கொள்கிற முதல்ஆளா நாங்கள் இருப்பனாங்கள். உங்கட நாட்டில இருக்கிற அனைத்து மக்களின்ட அபிலாசைகளையும் உங்கட ஜனாதிபதியும் பிரதமரும் தீர்த்து வைப்பினம் கவலைய விடுங்கோ என்டும் மோடி ஐயா சொன்னவரப்பா”

“உப்பிடியெல்லாம் சொன்னவரே”

“உது மட்டமில்ல சின்னராசு. எங்கட பிரதமர் போன கிழமை கிழக்கு மாகாணத்துக்க போனவர்.”

“அங்கயும் போனவரே. அங்க என்ன சொன்னவர்?”

“கிழக்கு மாகாணத்துக்கு சுற்றுலா பயணியள்”

“டுரிஸ்ட்”

“ஓ டுரிஸ்ட் நிறைய வருகினம். என்டபடியா கிழக்கு மாகாணத்துக்கு விமான சேவைய அதிகரிக்க யோசிச்சிருக்கிறனாங்கள் என்டு சொன்னவராம்”

“ ஆனா உதுக்கு எல்லாம் வடக்கு கிழக்கு மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு தரவேணும் என்டு ஒரு வார்த்தைய சேர்த்துச் சொல்லியிருக்கிறார்”

‘இப்பவும் ஆதரவு கொடுத்துக் கொண்டுதான இருக்கினம். இல்லயென்டு மறுக் கேல்லயே?”

‘ உதைத்தான் நானும் யோசிச்சனான். இந்த அரசாங்கத்துக்கு இன்னும் ஒன்றரை வருசந்தான் கிடக்குது. உதுக்குள்ள இத்தின விசயங்களை செய்யேலுமோ”

“ சொல்லுவினம் செய்ய வேணுமே?”

“சொன்னதில ரென்டு மூனு விசயங்களை செய்து காட்டினமென்டாதான் சனம் நம்பும். இல்லயென்டா உது வெறும் தேர்தல் வாக்குறுதி என்டல்லோ ஆக்கள் நினைப்பினம்”.

“ஒன்றிரண்டு விசயமென்டா நம்பிக்கை வரும் என்ன? தேர்தல் வருதென்டா அரசில்வாதியள் உப்பிடி சொல்லுவினமல்லொ?”

“நீ சொல்லுறது சரிதான் சின்னராசு. யானை தருவம் குதிரை தருவம் என்டு சொல்லிப்போட்டு”

“கடைசியில ஒன்டுமில்லாமப்போடும்”

“இந்த வருசம் முடியிறதுக்குள்ள உதில ரென்டு விசயங்களையாவது ஆரம்பிச்சவையென்டா நல்லது”.

“அண்ண யாரோ கிரிக்கெட் அடிச்சவர் பிரதம மந்திரி ஆகப்போறார் என்டு சந்தியில பேசிக் கொண்டிருந்தவை. அது யாரண்ண”

“உது பாகிஸ்தானில. இம்ரான் கான் என்டு ஒரு கிரிக்கெட் கேப்டன் இருந்தவர். பாகிஸ்தானுக்கு உலக கோப்பைய வென்று கொடுத்தவர்”

“உவர் பிரதம மந்திரி ஆகிப் போட்டவரே?”

“ஓமப்பா போன மாசம் நடந்த தேர்தலில அவருக்குத்தான் அதிக இடங்கள் கிடைச்சிருக்கு. ஆனா அவர் இந்த இடத்துக்கு வர ரொம்ப கஸ்டப்பட்டவர்”

“கஸ்டப்படாம முன்னேற ஏலுமே. அதில்லயண்ண. பெடியள் இலங்கை கிரிக்கெட் வீரர் என்டு சொன்னது போலக் கிடந்துது. அதுதான் யோசிச்சனான்.

"அப்பிடி ஒரு கதையும் கிடக்குது. குமார் சங்கக்கார என்டு ஒரு இலங்கை கிரிக்கெட்காரர் இருக்கிறார். முன்னால கெப்டனா இருந்தவர். இங்கிலாந்தில பிராந்திய கிரிக்கெட்டில சதம் சதமா விளாசினவர். வெள்ளைக்காரன் மாதிரி இங்கிலிஸ் பேசுறவர். உவரை எப்படியும் தேர்தலில நிற்க வைக்க ஒரு சில ஆக்கள் டிரை பண்ணிக் கொண்டிருக்கினம். ஆனால் அவர் மாட்டன் என்டு சொல்லிக்கொண்டிருக்கிறார்”

“அப்ப வெறும் டிரை தானென்ன”

“ஆனா ஒன்டு சின்னராசு இன்னம் ஒரு வரறந்தான் கிடக்குது. உதுக்குல்ல மக்களுக்கு எதுவும் பிரயோசனமா செஞ்சினம் என்டா ஏதோ கொஞ்ச அளவிளயாவது வாய்ப்பு கிடைக்கும்”

“இல்லயென்டா சிக்கல்தான்”

“சரியா செஞ்சினமென்டா ஒரு வருசம் போதும்“

“ஆனா செய்யினமே?”

Comments