பொருத்தமற்ற முச்சக்கர வண்டி சுற்றுலாத் திட்டமும் அரசு அதிகாரிகளின் வாகன 'காய்ச்ச'லும் | தினகரன் வாரமஞ்சரி

பொருத்தமற்ற முச்சக்கர வண்டி சுற்றுலாத் திட்டமும் அரசு அதிகாரிகளின் வாகன 'காய்ச்ச'லும்

இலங்கையில் முச்சக்கர வண்டிச் சாரதிகளை சுற்றுலா வழிகாட்டிகளாக மாற்றும் செயற்திட்டம் அண்மையில் அறிமுகமானது. சுற்றுலாக் கைத்தொழிலை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இது அமைந்தது. கோலாகலமாக நடந்த இந்நிகழ்வு, சாதாரண மனிதனின் பார்வையில் பாராட்டுக்குரிய ஒன்றாகவும் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு தமது தொழிலை மேம்படுத்தும் ஒரு வழியாகவும் நோக்கப்படலாம். ஆயினும் ஆழ்ந்து நோக்குமிடத்து இது பிழையான ஒரு முன்னுதாரணமாக அமையலாம்.

உண்மையில் முச்சக்கர வண்டிகள் பாதுகாப்பற்ற சுற்றாடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு போக்குவரத்துச் சாதனமாகும். ஆபிரிக்காவின் வறிய நாடுகளில் கூட முச்சக்கர வண்டிகள் இல்லை. ஆசிய நாடுகள் சிலவற்றில் மட்டுமே இதன் பயன்பாடு உள்ளது. இலங்கையில் வாகன விபத்துகளுக்கு கணிசமான பங்களிப்பை இம்முச்சக்கர வண்டிகள் செய்கின்றன. ஒழுக்கமற்ற ரீதியில் சாலை விதிகளை மீறும் வாகனங்களில் முச்சக்கர வண்டிகளுக்கே முதலிடம். குறிப்பாக கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் இவற்றின் பெருக்கம் காரணமாக சாலை நெரிசல்கள் அதிகரித்துள்ளன. குறைந்தபட்சம் நகரங்களில் இவற்றின் உபயோகத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது. இவ்வாகனங்களின் உற்பத்தியில் முதன்மை இடத்தை பெறும் நாடாகிய இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் பெற்றோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலாத்துறையின் விரிவாக்கத்துக்கு முச்சக்கர வண்டிகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதென்பது கொள்கை ரீதியில் தூரநோக்கற்ற நீண்டகாலத்தில் தீய விளைவுகளை ஏற்படுத்தும் ஒன்றாக அமையும். ஏற்கனவே இளைஞர்கள் பலர் உயர்கல்வியிலிருந்து விலகி முச்சக்கர வண்டிச் சாரதிகளாக மாறிவரும் நிலையில் அதற்கு பரிகாரமாக முச்சக்கர வண்டிச்சாரதி அனுமதிப்பத்திரம் பெறத் தகுதியான வயது எல்லையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே முச்சக்கர வண்டிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. இது சாதாரண மனிதனின் போக்குவரத்துச் சாதனம், மிகக் கணிசமானோர் அதில் ஈடுபட்டு வருமானம் உழைக்கின்றனர் போன்ற காரணங்களோடு கணிசமான வாக்குவங்கியும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடம் இருப்பதால், துணிச்சலாக நாட்டின் எதிர்கால நலன்கருதி, முறையான நடவடிக்கை எடுக்கத் தயங்குவது போலவே தெரிகிறது.

அண்மைக்காலத்தில் சிறியரக மோட்டார் வாகனங்கள் குறிப்பாக Wagon R, Stringray போன்ற சிறியரக ஹைபிரிட் வாகனங்களின் இறக்குமதி பெருமளவில் அதிகரித்துள்ளது. இவற்றின் சந்தை விலை 26 இலட்சத்திலிருந்து 35 இலட்சம் ரூபா வரை காணப்பட்ட போதிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது

முச்சக்கர வண்டிகளுக்குப் போட்டியாக சிறியரக வாகனங்களை வாடகைக்கு விடும் சம்பனிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊபர் (Ufer) போன்ற நிறுவனங்களின் வருகை காரணமாக தொழில்சார்ந்த தரத்துடன் சௌகரியமான அதேவேளை தாங்கிக் கொள்ளக்கூடிய கட்டணத்தில் குறுந்தூர பயணங்களை மேற்கொள்ள இவை பொருத்தமானவையாக உள்ளன.

குறைந்தபட்சம், நகர்ப்புறங்களில் இவற்றின் சேவைகள் பிரபலமடைந்துள்ளன. முச்சக்கர வண்டிக் கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் இவற்றின் கட்டணங்கள் சிறிதளவு அதிகமாக இருப்பினும் குளிர்சாதன வசதி பாதுகாப்பு, தொழில்சார் ரீதியில் நிபுணத்துவ சேவை போன்ற அம்சங்களை கருத்திற்கொள்ளுமிடத்து இம்மேலதிக கட்டணங்கள் பெறுமதி வாய்ந்தனவாக உள்ளன.

உண்மையில் இவை முச்சக்கர வண்டிகளுக்கு நேரடியான ஒரு போட்டியை வழங்கியுள்ளன. முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பலர் அவற்றை விற்றுவிட்டு இத்தகைய சிறிய ரக வாகனங்களுக்கு மாறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தபட்சம் நகர்ப்புறங்களிலிருந்து முச்சக்கர வண்டித் தொல்லையை அகற்றும் நடவடிக்கைக்கு இது உதவும்.

ஆயினும் கடந்த புதன்கிழமை 1000 ccக்கு குறைவான வலுகொண்ட ஹைபிரிட் வாகனங்களின் மீதான இறக்குமதித் தீர்வையை 50 சதவீதத்திற்கும் மேலாக அரசாங்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு சிறிய ரக ஹைபிரிட் வாகனம் மீதான தீர்வை 425 000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு வாகனத்திற்கும் செலுத்தப்படும் மொத்தத் தீர்வையின் அளவு குறைந்தபட்சம் 1,250,000 ரூபாவுக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 650 cc வலுகொண்ட ஹைபிரிட் வாகனத்தின் விலை 35 _ 40 இலட்சம் ரூபா வரையில் உயரும்.

அண்மையில் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு மற்றும் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகளுக்கு தேவையான நிதியை திரட்டும் குறுக்கு வழியாக இத்தீர்வை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகிறது.

இறக்குமதி செலவினங்கள் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் துரிதமாக அதிகரித்துள்ளதால் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் இறக்குமதிகளை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறிய ரக ஹைபிரிட் கார்களின் மீது தீர்வை அதிகரிப்பு நியாயமானது என மத்திய வங்கி வாதிடுகிறது.

இறக்குமதி செலவினத்தைக் கட்டுப்படுத்த வேண்டின் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதே பொருத்தமான நடவடிக்கையாக அமையும்.

இலங்கையில் உள்ளூர் வாகன உற்பத்திக் கைத்தொழில் இல்லாத நிலையில் இதுவே சிறந்த நடைமுறையாக அமையும். எனவே இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதை விட கஜானாவை நிரப்ப வேண்டும் என்பதே இந்நடவடிக்கையின் நோக்கமாயிருப்பதாகவே தெரிகிறது.

இப்போது பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச நிறுவன அதிகாரிகள் மத்தியில் வாகனக் காய்ச்சலொன்று பரவியுள்ளது. எவரைச் சந்தித்தாலும் பேர்மிட் எடுத்துவிட்டீர்களா? என்பதே தற்போது கேள்வியாக மாறியுள்ளது. 36 இலட்ச ரூபா தீர்வை உச்ச விலக்களிப்புக்குட்பட்டு அரச அதிகாரிகள் வாகனங்களைக் கொள்வனவு செய்ய இந்த அனுமதிப்பத்திர நடைமுறை வசதியளிக்கிறது. இப்போது எந்த வாகனத்தை இறக்குமதி செய்யலாம் யாரிடமிருந்து இறக்குமதி செய்யலாம் என்று அல்லோல கல்லோலப்படுகிறது அதிகாரிகள் கூட்டம். இதுவும் வாகனங்களின் இறக்குமதியை கணிசமானளவு அதிகரிக்கச் செய்யப்போகிறது. அரசியல்வாதிகள் இறக்குமதி ​ெசய்யும் வரி விலக்களிக்கப்பட்ட சலுகை வழங்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வாகனங்கள் இறக்குமதிகளும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும்.

வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதன் நோக்கம். அது ஒரு போக்குவரத்துச் சாதனம் என்பதால்தான்! மேற்குலக நாடுகளில் இதுவே நோக்கம். ஆனால் இலங்கை ஆசியாவின் ஆச்சரியம் அல்லவா? வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வது இங்கே ஒரு முதலீடாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியாக அவற்றின் விலைகள் அதிகரிப்பதன் காரணமாக சிலவருட உபயோகத்தின் பின்னர் வாங்கிய விலையை விடக்கூடுதலாக விற்கக்கூடியதாகவும் உள்ளது. குறிப்பாக டொயோட்டா போன்ற பிரபல வாகனங்கள் கைவசம் இருப்பது பணம் கையில் இருப்பதைப் போன்றது என சாதாரண வழக்கில் குறிப்பிடுவார்கள்.

அரசாங்கத்துக்கு வருமானத்தை திரட்டித்தரும் முக்கிய மூலாதாரங்களில் ஒன்றாக வாகன இறக்குமதித் தீர்வை அமைந்துள்ளன. இவற்றை உயர்த்துவதன் மூலம் வாகனங்களை ஒரு முதலீட்டுச் சாதனமாக பார்க்கும் நிலையை அரசாங்கங்கள் உருவாக்கியுள்ளன. இதன் காரணமாக வாகனங்களின் விலை கூடினாலும் அவற்றை அதிகம் கொள்வனவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் வாகன நெரிசல் காரணமாக நகரங்களுக்குள் பிரவேசிப்பதென்பது சவால்மிக்கதாக மாறியுள்ளது. நேர விரயத்தையும் எரிபொருள் விரயத்தையும் உளவியல் பாதிப்புக்களையும் ஏற்படுத்துகிறது.

சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை தரமானதாகவும், நம்பகமானதாகவும், நேர அட்டவணைக்கமையவும், சுத்தமானதாகவும் வழங்குவதன் மூலம் தனியார் வாகனங்களின் உபயோகத்தை கணிசமானளவு குறைத்துள்ளது.

வெறும் 26 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட ஒரு நாட்டில் நம்பகத்தன்மை வாய்ந்த தரமான ஒரு பொதுப்போக்குவரத்துச் சேவையை வழங்க முடியாதாயின் அது கையாலாகத் தனத்தையே பிரதிபலிப்பதாய் அமையும்.

அசுத்தமான தரங்குறைந்த, நேர அட்டவணைப்படி இயங்காத புகையிரத சேவை; இன்னும் 20ஆம் நூற்றாண்டில் பயன்படுத்திய அதே பேருந்துகளின் அடிப்படையிலான சாலைப் பயணிகள் போக்குவரத்துச் சேவை என்பன எவ்விதத்திலும் இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாது.

தூரநோக்கற்ற திட்டமிடலும், அவ்வப்போது ஏற்படும் புண்ணுக்கு மருந்து கட்டுவது போன்ற கொள்கை மாற்றங்களும் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவாத போக்குவரத்துத் துறையும், முச்சக்கர வண்டி சுற்றுலாவும் வாகனக் காய்ச்சலும் இவ்வகையைச் சார்ந்தன என்பதில் சந்தேகமில்லை.

கலாநிதி எம். கணேசமூர்த்தி,

பொருளியல்துறை,

கொழும்புப் பல்கலைக்கழகம்.

Comments