இருபத்தையாயிரம் வீடுகள் என்ற இலக்கை நோக்கியே பயணிக்கிறோம் | தினகரன் வாரமஞ்சரி

இருபத்தையாயிரம் வீடுகள் என்ற இலக்கை நோக்கியே பயணிக்கிறோம்

ந்திய வீட்டுத் திட்டத்தின் நான்காயிரம் (4000) வீடுகள் எப்போது கட்டி முடிக்கப்படும். அத்துடன், இந்திய வீடமைப்பான பத்தாயிரம் வீடுகளுக்கான அடுத்த கட்டநடவடிக்கை எப்போது ஆரம்பிக்கப்படும்?

இக்கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்னர் பெருந்தோட்ட மலையக மக்களுக்கு 14,000 தனி வீடுகளை கட்டுவதற்கு நிதி உதவி வழங்கியுள்ள இந்திய அரசாங்கத்திற்கு மலையக மக்கள் சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசாங்கம் முதலில் வழங்கிய 4000 வீடுகள் கட்டப்படாமல் கிடப்பில் இருந்த போது, தோட்ட உட்கட்மைப்பு அமைச்சராக நான் பதவியேற்றேன். அப்போது குறித்த வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்தேன். முதலாவது இந்த வீட்டுத்திட்ட கட்டுமான ஒப்பந்தகாரர்கள் குறித்து முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்களின் தலையீடு இருந்தது. நான் அமைச்சரான பின்னர் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முழு சுதந்திரத்தையும் வழங்கினேன். இரண்டாவதாக காணி உரிமை பிரச்சினை காணப்பட்டது. காணி உரிமை அற்ற மக்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசாங்கம் விரும்பவில்லை. அதனால் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கிய வேண்டுகோளாக 7 பேர்ச் காணித் திட்டத்தை முன்வைத்தோம். அதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியதை அடுத்து இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி 4000 வீடுகளை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அதன் முதல் கட்டத்தில் 1134 வீடுகள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. நுவரெலியாவில் டன்சினன், டயகம, கண்டியில் ஹெல்பொட, பதுளையில் நாராங்கல போன்ற தோட்டங்களில் புதிய கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளின் நிர்மாணப் பணிகள் 80% நிறைவுற்றுள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் முழுமையாக பூர்த்தி செய்யப்படும். அதனிடையே 10,000 வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு தற்போது நடைபெற்று வருகிறது. காணியை ஒதுக்குவதில் இருந்த பிரச்சினையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு தீர்த்து வைத்துள்ளார். எனவே, விரைவில் இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து நிர்மாணப் பணிகள் தொடரப்படும்.

* அடுத்த ஒன்றரை (1 1/2) வருட காலத்திற்குள் எத்தனை வீடுகளை அமைக்க முடியும்? எத்தனை மாதிரிக் கிராமங்களை அமைத்திருக்கிறீர்கள்? இன்னும் எத்தனை மாதிரி கிராமங்களை அமைக்க உத்தேசம்?

அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எங்களது இலக்கு 25,000 வீடுகள். அந்த இலக்கை நோக்கியே பயணிக்கிறோம். கிட்டத்தட்ட 200 மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப கிராமங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளோம்.

* ஏழு பேர்ச் காணி குறித்ததான பல்வேறு விமர்சனங்களை பலர் முன் வைக்கின்றனர். இது குறித்து உங்கள் கருத்து?

ஒருவர் நல்ல விடயங்களை செய்யும் போது அதனை விமர்சிக்க சிலர் இருக்க வேண்டும். அப்போதுதான் செய்பவருக்கு மேலும் நல்லது செய்ய உற்சாகம் ஏற்படும். அதுபோலவே நான் செய்யும் சேவையை விமர்சிப்பவர்கள் அதிகரிக்க அதிகரிக்க எனது சேவையின் அளவும் அதிகரித்தே செல்லும். தற்போது எனது அமைச்சின் மூலம் கட்டப்படும் வீடுகளுக்கு வழங்கப்படும் காணி உறுதிப் பத்திரமானது காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் வழங்கப்படும் ஒன்றாகும். அதனை நாங்கள் 'தூய காணி உறுதி' என அழைக்கிறோம். பெருந்தோட்ட கம்பனிகளிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ள காணிகளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, நிதி அமைச்சு ஊடாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு பெற்று தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணிக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படுகிறது. இந்த காணி உறுதியில் சந்தேகம் உள்ளவர்கள் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவில் விளக்கம் பெறலாம். ஆனால் ஒரு சான் நில உரிமை கூட இல்லாத பெருந்தோட்ட மக்களுக்கு நான் அமைச்சர் பதவி வகிக்கும் காலத்தில் 7 பேர்ச் சொந்த நிலம் வழங்கி அந்த மக்களின் நில உரிமையை உறுதி செய்ததையிட்டு பெருந்தோட்ட சமூகத்தில் இருந்து வந்தவன் என்ற அடிப்படையில் திருப்தி அடைகிறேன்.

* மலையக அதிகார சபை அமைக்கப்படுவதால் மலையக மக்களுக்கு ஏற்படும் பிரதிபலன்கள்?

மலையக மக்களுக்கு நேரடியாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதில் தற்போதும் எனது அமைச்சு சிரமங்களை எதிர்கொள்கிறது. எனது மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் என்று சொல்லப்படும் ட்ரஸ்ட் நிறுவனம் மாத்திரமே உள்ளது. இது முழுமையான அரச நிறுவனமல்ல. அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சுக்கள் பலவற்றிற்கும் அதிகார சபை, திணைக்களம் என நிறுவனங்கள் உள்ளன. ஆனால் எனது அமைச்சுக்கு இல்லை. முன்னர் இந்த அமைச்சு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சாக இருந்தபோது தமது குடும்ப நலனுக்கு நிறுவனங்களை ஆரம்பித்தனர். அதனால் மக்களுக்கு பெரியளவு நன்மை கிடைக்கவில்லை. மலையக மக்களுக்கு முறையான வீட்டுத் திட்டம், முறையான அபிவிருத்தி தேவையெனில் கட்டாயமாக அரச நிறுவனம் ஒன்று இந்த அமைச்சின் கீழ் இயங்க வேண்டும். அதனால் நாங்கள் மலையக அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த அதிகார சபையை அமைப்பதற்கு எனது அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை மற்றும் எனது ஆலோசகர் எம். வாமதேவன் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். மலையக அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் முறையான அபிவிருத்தியை பெருந்தோட்ட மக்களுக்கு செய்ய முடியும் என்பது எனது நம்பிக்கை. மேலும் இந்த அதிகார சபையை ஏற்படுத்துவதன் மூலம் மலையக மக்களுக்கென்று புதிய அரச நிறுவனம் காணப்படும் என்பது மிகவும் பயன்தரக்கூடியதே.

* எதிர்காலத்தில் மலையக மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்தான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறதா? அவை குறிப்பிடவும்?

இன்று மலையக பகுதிகளில் மாத்திரமல்ல முழு இலங்கையிலுமே வேலைவாய்ப்பு குறித்த பிரச்சினை காணப்படுகின்றது.

 

வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு என்பது ஒரே தடவையில் தீர்வு காணப்பட முடியாது. குறிப்பாக மலையகத்தில் வேலைவாய்ப்பு எனும்போதெல்லாம் ஆசிரியர் நியமனங்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. ஆனால் ஆசிரியர் தொழிற்துறை அல்லாத ஏனைய துறைகளிலும் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தோடு பேச்சுநடத்தி வருகின்றோம்.

சாத்தியப்படும் பட்சத்தில் மலையகத்தில் வேலைவாய்ப்பு பிரச்சினை ஓரளவேனும் குறைவடையும். அதேநேரம் அரச மற்றும் தனியார் தொழிற்துறைகளை மாத்திரம் நம்பியிராது தங்களின் திறமைக்கேற்ற, தகைமைக்கேற்ற வகையில் சுயத்தொழில் முன்னெடுப்பதற்கான வழிகாட்டல்களையும் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றோம்.

* நீங்களும் முற்போக்கு முன்னணியும் பல நல்ல காரியாலங்கள் செய்திருக்கிறீர்கள். எனினும் நுவரெலிய மாவட்டத்தில் இ.தொ.கா.வுக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. உங்களது முன்னணி ஆற்றிவந்திருக்கும் சேவைகளை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். இல்லையா அல்லது மதகு, மணி, கோவில் உற்சவம் போன்ற சில்லறை உதவிகளைத்தான் இம்மக்கள எதிர்பார்த்து திருப்தி அமைகிறார்களா?

இ.தொ.காவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக வெளியில் தெரிவது ஒரு மாயை. மக்கள் தெளிவோடு இருக்கின்றார்கள். தங்களுடைய உரிமை என்ன, சலுகை என்ன என்பதை புரிந்து கொண்டுள்ளார்கள். சலுகைக்காக ஏமாந்த காலம் போய் இன்று மலையக மக்கள் உரிமைக்கு முன்னுரிமை அளித்து வருகின்றார்கள். நீங்கள் கூறுவதுபோல் மதகு, மணி, கோவில் உற்சவம் போன்ற சில்லறை உதவிகளுக்கு முன்னுரிமை வழங்கிய காலம் இருந்தது. இதனையே அரசியல் உரிமையென மக்களை ஏமாற்றிய காலம் இருந்தது.

இன்று முப்பது வருட ஆட்சியாளர்களால் பெற்றுக்கொடுக்க முடியாத உரிமைகளை மூன்றே வருடத்தில் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். காணியுரிமை, வீட்டுரிமை, அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபைகள், பிரதேச சபை சட்ட திருத்தம் போன்ற ஆக்கபூர்வமானதை செய்துள்ளோம் செய்து வருகின்றோம்.

இது தொடர்பில் மக்கள் தெளிவுடன் இருந்தாலும் அவர்களை குழப்பியடிக்கவே ஒரு கூட்டம் எங்கள் வேலைத்திட்டங்களுக்கு பின்னால் செல்வதையும் காணக்கூடியதாகவே உள்ளது.

* அரசாங்கம் தற்போது எதிர்கொண்டிருக்கும் பின்னடைவுகள்தான் தமிழ் முற்போக்கு முன்னணியின் பின்னடைவுகளுக்கு காரணம் என்று நினைக்கிறீர்களா?

அரசாங்கமும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் பின்னடைவுகள் சந்தித்துள்ளன என்பது இன்று நிலவும் மெதனப்பார்வையாகும். தமிழ் முற்போக்குக்கூட்டணி முன்னடைவையே சந்தித்துள்ளது. சந்தித்து வருகின்றது. பார்க்கின்றவர்களின் பார்வையினை பொறுத்தே எதுவும் தங்கியிருக்கின்றது. இது தேர்தல் கூட்டணி என்று கூக்குரலிட்டவர்கள் வியக்கும் வண்ணம் தமிழ் முற்போக்குக்கூட்டணி பலமடைந்து வருகின்றது. பதிவு செய்வதற்காக தேர்தல் காரியாலயத்திற்கு ஆவணங்கள்கூட சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று கூட்டணி தொடங்கி 3 வருடத்திற்குள் கூட்டணி என்ற ரீதியிலும் மக்களின் உரிமை என்ற ரீதியிலும் பல வெற்றிகளை கண்டுள்ளோம். இவற்றை பிரஸ்தாபிக்காதவர்கள் வெறுமனே பின்னடைவை சந்தித்திருக்கின்றோம் என்பது வேடிக்கையானது.

* நாட்டின் பொருளாதார நலிவுக்கு எவற்றை பிரதான காரணங்களாக கருதுகிறீர்கள்? நாட்டு அபிவிருத்தியில் பற்று இல்லாதவர்களும் பணம் சேர்ப்பதையே குறிக்கோளாக கொண்டவர்களும் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களும் அரசியலில் அதிகரித்து விட்டார்களா?

இலங்கை நாட்டின் பொருளாதார நலிவு என்பது இன்றைய சர்வதேச பொருளாதார சூழலிலும் தங்கியுள்ளது. கடந்தகால ஆட்சியாளர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் அதிக கடன்களை பெற்றதோடு இலங்கையிலும் சிற்சில பிரதேசங்களை வேறுநாடுகளுக்கு கொடுக்க முன்வந்தனர். கடந்த அரசாங்கத்தில் பெற்ற கடன்களை மீளசெலுத்தி நாட்டினை ஸ்திரமான பொருளாதார நிலைக்கு கொண்டு வரவேண்டிய தேவை இந்த அரசாங்கத்துக்கு உள்ளது. அதனையே செய்து வருகின்றது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது பொருளாதார நலிவாகபடுகின்றது.

* தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீங்கள் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் யாவை?

தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு இம்முறை உரிய வகையில் தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் நாங்கள் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றோம். வெறுமனே சம்பள உயர்வோடு மட்டுமல்லாது, பெருந்தோட்ட மக்களின் சேம நலன் தொடர்பிலும் இம்முறை கவனம் செலுத்த வலியுறுத்தி வருகின்றோம். அரசியலுக்காக இக்கூட்டொப்பந்தத்தினை முன்னெடுக்காமல் மக்களுக்காக முன்னெடுக்கப்படுவதையே நாமும் விரும்புகின்றோம்.

தொழில் அமைச்சர் இக்கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக எங்களின் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் வழங்குவதாக குறிப்பிட்டிருந்தார். அவ்வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்தி எங்களுடைய கோரிக்கைகளை முன்வைப்போம். முறையான சம்பள தீர்வோடு மக்கள் சேம நலன் உபாயங்களையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

போல் வில்சன்

Comments