இரந்துண்டு வாழும் அப்பா! | தினகரன் வாரமஞ்சரி

இரந்துண்டு வாழும் அப்பா!

பிள்ளையொன்றைப் பெற்றெடுத்து

பெயர்வைத்து வளர்த்தெடுத்து

கொள்ளையாக ஆசை நெஞ்சில்

கொட்டிநான் படிப்பித்தேன்

எண்ணம் போல அவள் படித்து

ஏற்றங்கள் பல கண்டாள்

இன்னும் சில நாளில்

இவளரச பதவியேற்பாள்

என நினைத்துக் காத்திருந்தேன்

வேலையொன்றும் இல்லாத

வீணன் ஒருவனெந்தன்

சோலைக் கிளிமொழியாள்

சுந்தரியைக் கடத்திச் சென்றான்

இன்றெனக்கு மகளுமில்லை

இவளுழைப்பும் கிட்டவில்லை

ஒன்றும் புரியாமல் நான்

ஒப்பாரி வைத்தழுகின்றேன்

பலவருடம் எங்களுக்குள்

பதியமிட்ட காதலென்று

பொலிஸில் பொய்ப் புகார் செய்து

பொன்மகளை மடக்கிவிட்டார்

படித்த என் மகளுக்கு

பகுத்தறிவு எங்கே போச்சு?

இடித்துரைத்து வெளியேவர

ஏன்துணிவு வரவில்லை?

உதவி பதவியென்று ஒன்றுமில்லை

உதைகால் கொடுப்பதற்கும்

எவரும் எனக்கு இல்லை

ஏதிலி நான் என் செய்வேன்?

இப்போது எனது மகள்

எடுக்கின்ற சம்பளத்தை

அப்படியே புருஷன் கையில்

ஒப்படைப்பதாகக் கேள்வி

பிள்ளையை நம்பி வாழ்ந்த

பித்தன் நான், உண்பதற்கு

இல்லாமல் தெருத் தெருவாய்

இரந்துண்டு அலைகின்றேன்

Comments