அப்பாவி மக்களை கேடயங்களாக்கும் வேலைநிறுத்தம் | தினகரன் வாரமஞ்சரி

அப்பாவி மக்களை கேடயங்களாக்கும் வேலைநிறுத்தம்

எப்போதும் பரபரப்பாக இருக்கும் கொழும்பு வெறிச்சோடிக்கிடக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இத்தனைக்கும் காரணம் ரயில் தொழிற்சங்கத்தினரின் திடீர் வேலை நிறுத்தம்.

கடும் வாகன நெரிசலுக்கு மத்தியில் துரிதம் மற்றும் இலாபம் என்ற அடிப்படையில் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் போக்குவரத்து என்றால் அது ரயில் ஆகத்தான் இருக்க முடியும். அதிலும் குறிப்பாக வேறு மாகாணங்களில் இருந்து தொழில் நிமித்தம் கொழும்பு வருபவர்களுக்கு ரயிலைத் தவிர்ந்த வேறு சிறந்த தெரிவு இருக்கவே முடியாது.

இத்திடீர் வேலை நிறுத்தத்தால் நாள்தோறும் கொழும்பு வந்து செல்லும் ஐந்து இலட்சம் பயணிகளின் நிலை பெரும் திண்டாட்டம் கண்டுள்ளது.

சம்பள உயர்வு வேண்டுமெனக் கோரி ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆராய்ச்சி மணி அடித்துள்ளனர். கொழும்பைப் பொறுத்தவரை இவ்வாறான வேலைநிறுத்தமொன்றும் புதிது அல்ல. என்றாலும் இது அரசாங்கத்தால் மாணவர்களுக்கு உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் காலம். ஒரு மாணவனின் எதிர்கால வாழ்க்ைகயை தீர்மானிக்கும் பரீட்சை நடத்தப்படும் சந்தர்ப்பத்திaல் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இவ்வேலை நிறுத்தத்தால் உண்மையில் இடம்பெற்றுள்ள பாதிப்புக்கள் ஏராளம்.

கடந்த புதன்கிழமை 15 ஆம் திகதி வழமை போலவே அனைத்து பயணிகளும் சுமுகமாக ரயிலில் ஏறி தமது வேலை ஸ்தலங்களுக்கு வந்திருந்தனர். பிற்பகலளவில் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக ரயில்வே தொழிற்சங்கத்தினர் விடுத்த திடீர் அறிவிப்பு, தூரப்பிரதேசங்களிலிருந்து கொழும்பு வந்திருக்கும் இலட்சக்கணக்கான அரசாங்க உழியர்களை தவிக்க வைத்தது.

கோட்டை ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் ஆத்திரத்தாலும் ஆவேசத்தாலும் பெரும் களேபரத்தை ஏற்படுத்தினர். ஆனாலும் ரயில்வே அதிகாரிகள் தமது நிலைப்பாட்டிலிருந்து சிறிதும் மசியவில்லை.

'எனது மனைவியும் பிள்ளைகளும் வீட்டில் பட்டினியாக இருப்பார்கள் நான் போய்த்தான் அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும்,' என ஒரு கிராமத்தவர் ஆவேசமாக பேசினாலும் அவரது கண்களில் கலக்கத்தை காண முடிந்தது. பச்சிளம் குழந்தைகளை விட்டு வந்த தாய்மார், சிறுவர் காப்பகங்களிலிருந்து உரிய நேரத்துக்கு தமது பிள்ளைகளை எடுக்க முடியாததால் அன்றையதினம் பெற்றோர் பட்ட துன்பங்களும் அவஸ்தைகளும் சொல்லி மாளாதவை.

மஹவ ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலில் ஏறிய பின்னர் சாரதி ரயிலை விட்டு இறங்கிச் சென்றது, மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லாத அவர்களின் நெஞ்சழுத்தத்தை எமக்கு உணர்த்தியது.

அன்றைய நாளைத் தொடர்ந்து வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமையென இக்கட்டுரை அச்சுக்கு செல்லும் வரை ரயில் வேலை நிறுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

போக்குவரத்து பிரச்சினை காரணமாக பலர் கொழும்புவருவதனை தவிர்த்துக் கொண்டனர். அலுவலக ஊழியர்களின் எண்ணிக்ைகயில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. பல அலுவலகங்களில் நேரகாலத்துடன் ஊழியர்களை வீட்டுக்கு செல்வதற்கு அனுமதித்தனர். இதனால் அரச கருமங்கள் பாதிக்கப்பட்டன.

கொழும்பை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்தோர் நெரிசலுக்குள் நெரிசலாக, ஒரு பக்கத்தில் சாய்ந்து சென்ற பஸ்களில் ஒருவாறாக தொத்திக் கொண்டனர். இதனால் பெண்களும் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் சொல்லொண்ணா அசெளகரியங்களை எதிர் கொள்ள நேரிட்டது.

உரிமை கேட்டு போராடுவதற்காகவே தொழிற்சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் மாற்று கருத்து இல்லை. தொழிலாளர்களின் நலன் கருதி எப்போதும் எச்சந்தர்ப்பத்திலும் ஆராய்ச்சி மணியை அடிப்பதற்கு அரசாங்கம் அவர்களுக்கு பூரண உரிமையையும் சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது. என்றாலும் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதற்கு முன்னர் அறிவித்தல் விடுக்க வேண்டிய தமது உரிமையை தொழிற்சங்கத்தினர் இங்கே மறந்தது தான் இப்பிரச்சினை பூதகரமாக உருமாறுவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

ரயில்வே திணைக்களம் சுமார் 150 வருடங்கள் பழமைவாய்ந்தது. இங்கே சுமார் 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் 150 வெவ்வேறு பதவிகளில் உள்ளனர்.இதற்குள் 125 தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. இவர்கள் தமது சம்பளத்தை அதிகரித்து தருமாறு கோரி சில மாதங்குக்கு முன்னரும் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அரசாங்கம் இவர்களது கோரிக்ைகக்கு செவி சாய்க்க ஆரம்பித்தது.

அமைச்சரவை இவர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் விசேட உப குழுவொன்றை நியமித்தது. ரயில்வே திணைக்களத்துக்கு மட்டும் சம்பளத்தை அதிகரித்தால் அது நாட்டிலுள்ள ஏனைய திணைக்களங்களுக்கு பாதகமாக அமையும் என்பதால் ரயில் திணைக்களத்தை ஒன்றிணைந்த சேவையாக பிரகடனப்படுத்தி சம்பளத்தை அதிகரிப்பதற்கு இந்த உபகுழு பச்சைக்ெகாடி காட்டியது.

அனைத்தும் சாதகமாக கைகூடி வந்த சந்தர்ப்பத்தில் ஏனைய 35 திணைக்களங்கள் இதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தங்களுக்கும் சம்பள உயர்வு கோரி நிதி அமைச்சை நாடின. அதேபோன்று ரயில்வே ஊழியர்களும் தங்களை ஒன்றிணைந்த சேவைக்குள் பிரகடனப்படுத்துவற்கு எதிர்ப்பு வெளியிடத் தொடங்கினர்.

அனைத்தையும் கவனத்திற்கொண்ட அரசாங்கம் உபகுழுவால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்ைகயை தற்காலிகமாக இடைநிறுத்தியது. ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கு மட்டுமன்றி நாட்டிலுள்ள 14 இலட்சம் ஊழியர்களுக்கும் நியாயமான முறையில் சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இரண்டு மாத கால அவகாசம் கோரியது.

இந்நிலையிலேயே ரயில்வே தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்துடன் மோதும் எண்ணத்தில் மாணவர்களுக்கு உயர்தரப் பரீட்சை நடத்தும் சந்தர்ப்பமாக பார்த்து அடலடியாக வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

தொழிற்சங்கத்தினர் உரிமைக்காக போராடலாம் அதில் தவறு இல்லை என்றாலும் இது குறித்து அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் ஏற்கனவே முன்னறிவித்தல் விடுக்காதது தவறு என்பதனை அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. மேலும் இது அரசாங்கத்தை அசெளகரியத்துக்கு உள்ளாக்குவதற்காக பிற அரசியல் கட்சிகளின் பின்னணியுடன் திட்டமிட்டு செய்யும் குளறுபடியென்பதும் அரசாங்கத்தின் கருத்தாகவுள்ளது.

ரயில் சாரதியொருவர் அடிப்படைச் சம்பளமாக சுமார் 46 ஆயிரத்து 800 ரூபாவை பெறுகின்றார். அவர் வாராந்தம் சுமார் ஐந்தரை மணித்தியாலங்கள் மேலதிக நேரம் தொழில் செய்வதன் மூலம் மாதாந்தம் இரண்டு தொடக்கம் இரண்டரை இலட்சம் ரூபா வரை சம்பளம் பெறுகின்றார். இப்போதும் கூட இவர்களுக்கு சம்பளத்தை அதிகரித்து வழங்குவதற்கே அரசாங்கம் விரும்பியுள்ளது. இந்நிலையிலும் அவர்கள் குறைந்த வருமானம் பெறுவதற்காக தூர இடங்களிலிருந்து வரும் அப்பாவி மக்களை மனித கேடயங்களாக கொண்டு வேண்டியதை சாதிக்க நினைப்பது மிகவும் கொடூரமானது.

அத்தோடு, தொழிற்சங்கத்திற்கேயுரிய பண்பாட்டை அத்துமீறும் அடாவடித்தனம் மிக்கது.

'நாம் என்ன தவறு செய்தோம் எதற்காக எம்மை பழி தீர்க்கிறார்கள்', 'இராணுவத்தினரைக் கொண்டாயினும் சேவையை நடத்துங்கள்', 'தொழிற்சங்கத்தினரின் செயற்பாடுகள் அடாவடித்தனம் மிக்கது','எவ்வகையிலும் இந்த வேலை நிறுத்தம் நியாயமில்லை' எனும் மக்களின் புலம்பல் தொழிற்சங்கத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் ஆவேசத்தை எமக்கு புரிய வைத்துள்ளது.

மாவட்டம்தோறும் ரயில்களை கண்காணிக்கும் மெக்கேனிக்குகளைக் கொண்டு ரயில்வே திணைக்களம் இரண்டாம் நாள் எட்டு ரயில் சேவைகளையும் மூன்றாம் நாள் ஒன்பது ரயில் சேவைகளையும் முன்னெடுத்தது. அத்துடன் விமான நிலையத்துக்கு அவசியமான எரிபொருளும் ஒருவாறாக கொலன்னாவையிலிருந்து கட்டுநாயக்கவுக்கு விசேட ரயில் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 2 ஆயிரம் பஸ்களை அரசாங்கம் உடனடியாக சேவையில் ஈடுபடுத்தியதுடன் ரயில் பருவகால சீட்டைப் பயன்படுத்தி இந்த பஸ்களில் பயணிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இதுவரை வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாத தனியார் பஸ்களையும் அரசாங்கம் தனது செலவில் வீதிகளில் சேவைக்காக களமிறக்கியது.

இதுபோன்று அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து ஆறு நாட்களாக நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தின்போது பலர் தமது தனியார் வாகனங்களில் பொது மக்களை ஏற்றிச் சென்று உதவினர். அதே உதவி மனப்பான்மையை நம்மவர்களிடமும் இச்சந்தர்ப்பத்தில் காணமுடிந்தது. என்றாலும் முன்பின் பழக்கமில்லாதவர்களின் வாகனங்களில் ஏறுவதற்கு அனைவரும் முன்வரவில்லையென்பதே உண்மை.

வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின் பேச்சுவார்த்தைக்கு வருமாறு சிவில் விமானசேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஒற்றைக் காலில் நிற்கிறார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் தான் தமது போராட்டத்தை கைவிடுவோம் என்று மறுபக்கம் தொழிற்சங்கத்தினர் விடாப்பிடியாக இருக்கிறார்கள்.

தொழிற்சங்கத்தினரை ஆரம்பத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தாங்கள் முழு மனதுடன் இதனை செய்யவில்லையென நன்றாக சிரித்து பேசிய போதும் வேலை நிறுத்தத்தை அவர்கள் கைவிடுவதாக இல்லை. இப்போது அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லையெனக் கூறி தலையில் கைவைத்தபடி புலம்புகின்றார் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க.

இந்நிலையில் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று விசேடஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

எது, எப்படியோ இத்திடீர் வேலை நிறுத்தத்தால் அவதிக்கும் பாதிப்புக்கும் உள்ளானவர்கள் அப்பாவி மக்களே. பொது போக்குவரத்தை நாடுபவர்களில் 98 சதவீதமானவர்கள் வறிய அல்லது நடுத்தர வருமானம் பெறுபவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய அப்பாவி பயணிகளை மனித கேடயங்களாக வைத்து தமது சலுகைகளை அனுபவிக்க தொழிற்சங்கத்தினர் மேற்கொள்ளும் இந்த கபட நாடகம் நிந்திக்கப்பட வேண்டியதே.

ஜப்பானில் ரயில்வே தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்துடன் மோதும் நோக்கில் தொடர்ந்து சில தினங்களுக்கு ரயில் பயணச்சீட்டுக்களை விநியோகிக்காமல் இலவசமாக மக்களுக்கு சேவை வழங்கியுள்ளனர். இதனால் அந்நாட்டின் அரசாங்கத்துக்கு பாரிய நட்டத்தை அவர்கள் ஏற்படுத்தியபோதும் மக்களுக்கு எவ்வித இடையூறும் நேரவில்லை.

இதுபோன்று மக்களை துன்புறுத்தி முன்னெடுக்கப்படும் உரிமைப் போராட்டங்களை தொழிற்சங்கத்தினர் கைவிட வேண்டும். இது இன்றைய நவீன உலகில் நடைமுறை சாத்தியமாகாது. அண்மையில் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்தின்போது வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்ட ஏழு நாட்களுக்குமான அவர்களது சம்பளம் நிறுத்தப்பட்டது.

அளவுக்கதிகமாக வரம்பை மீறி செயற்படும் தொழிற்சங்கத்தினருக்கு அரசாங்கம் தக்க பாடம் புகட்டியேயாக வெண்டும். இல்லையேல் எதற்கெடுத்தாலும் கத்தி முனையில் கொள்ளையடிப்பதுபோல் மக்களை கேடயங்களாக பயன்படுத்தும் தொழிற்சங்க கலாசராம் நீண்டு கொண்டே போகும்.

தொழிற்சங்கத்தினரும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு இன்றைய உலக நடப்புக்கு ஏற்றாற்போல் தமது போராட்டங்களின் வடிவங்களை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும் என்பதே மக்களின் கருத்து. இந்த ரயில்வே போராட்டமே எதிர்காலத்தில் மக்களின் சிரமங்களுக்கும் தொழிற்சங்கத்தினரின் எல்லை மீறிய அடாவடித்தனத்துக்கும் இறுதி சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

லக்ஷ்மி பரசுராமன்

 

Comments