தமிழ் மக்களின் அரசியல் கலாசாரம் மாற வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் மக்களின் அரசியல் கலாசாரம் மாற வேண்டும்

வடமாகாணத்தை திறம்பட நடத்தும் வல்லமை எங்களிடத்தில் இல்லை

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மரணச் செய்தி கேட்டு கிளிநொச்சியில் வெடி கொளுத்தி தமிழ் மக்கள் ஆரவாரம் செய்த செய்தி ஒருபக்கம், வட மாகாண சபையில் கலைஞருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி இரங்கலுரையாற்றியது மறுபுறம் இவையிரண்டையுமே நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

வட மாகாண சபை கடந்த வியாழன்று கலைஞருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது. அதன் பின்னர் முதலமைச்சரும் அவரைத் தொடர்ந்து நானும் உரையாற்றினோம். அந்த நிகழ்வின் வீடியோவை கலைஞரின் குடும்பத்தாருக்கும், கழகத்துக்கும் அனுப்பி வைக்குமாறு நான் கேட்டுக்ெகாண்டேன். இது வடமாகாண சபையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு. இரண்டாவது, வடக்கில் ஆங்காங்கே நடைபெற்ற கலைஞரின் மரணத்தைக் கொண்டாடிய நிகழ்வுகள். இது தமிழ் மக்களின் அரசியல் கலாசாரம் முற்றாக மாற வேண்டும் என்பதை மீண்டும் ஒரு தடவை உணர்த்தி நிற்கின்றது.

எனது இரங்கலுரையில் அவர் தமிழ் நாட்டு மக்களுக்கு என்ன சேவை செய்தார், தமிழ்நாட்டு மக்களால் எவ்வாறு நினைவு கூரப்பட்டார், தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் அவர் செய்த தொண்டுகள் என்ன? என்பதையே நினைவுகூர்ந்தேன். அவர் எமது முதலமைச்சர் அல்ல. தமிழ்நாட்டின் முதலமைச்சராகவிருந்தவர். அவர் தமிழ் நாட்டின் முதலமைச்சராகவிருந்தபோது தனது மக்களுக்கு நல்லதையே செய்தார்.

பிழைகள் இருக்கலாம். அரசியலில் தவறுகள், ஏற்ற இறக்கங்கள் இருப்பது சகஜம். குற்றங்கள் சுமத்தப்படாத அரசு, உலகின் எந்த மூலையிலும் இல்லை. அது ஜனநாயகத்தின் ஒரு பண்பாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இங்குள்ள அரசியல் கலாசாரமானது, எமக்கு எவரேனும் சார்பாக இல்லாவிட்டால் அவரை இலகுவாக துரோகி என ஓரம் கட்டி விடுகின்றது. அல்லது மாற்றுக் கருத்துச் சொல்வோரை துரோகியாகப் பார்க்கின்றது.

இது இன்று நேற்றல்ல, சுமார் இருபது முப்பது வருடங்களாக இந்தக் கலாசாரத்தில் நாங்கள் ஊறிப்போயிருக்கின்றோம். ஒரு அரசியல்வாதியிடம் சில நல்ல இயல்புகளும் சில தீய இயல்புகளும் இருக்கும்.

என்னையே உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் வட மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளை எதிர்ப்பவனாகவே நான் பலருக்குத் தென்படுகின்றேன். நான் முதலமைச்சரை எதிர்க்கின்றேன். அதற்காக அவரது செயற்பாடுகள் யாவற்றையும் நான் எதிர்க்கின்றேன் என்பதல்ல அதற்குப் பொருள். அவருடைய மாகாண சபை தொடர்பிலான நிறைவேற்றுச் செயற்பாடுகளை மாத்திரமே எதிர்ப்பவன் நான்.

அதனை ஏற்கனவே பல தடவைகள் வலியுறுத்தியிருக்கின்றேன். அவரது அரசியல் கருத்துக்கள் தொடர்பாகவோ, தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பான அவரது நிலைப்பாட்டிலோ எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் நாங்கள் வட மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள், வட மாகாண சபையை திறம்படவும் வினைத்திறனுடனும் நடத்தவில்லையென்பதுதான் எனது குற்றச்சாட்டு.

வட மாகாண சபையில் சரியையும் குறிப்பிடுகின்றேன். தவறையும் சுட்டிக்காட்டுகின்றேன். அவ்வாறானதொரு ஆரோக்கியமான கலாசாரம் எங்களிடத்தில் இல்லை. யாரேனும் ஒருவர் எமக்குத் தவறானவர் எனக்கண்டால் அவருக்கு தயவு தாட்சண்யமின்றி துரோகிப் பட்டம் கட்டி விடுகின்றோம்.சரியென்றால் தியாகியாக்கி விடுகின்றோம். அதையிரண்டை மாத்திரமே எங்களால் சிந்திக்க முடிகின்றது. இடைப்பட்ட எதனையுமே நாங்கள் பார்ப்பதில்லை.

வட மாகாணசபையில் அமைச்சராகவிருந்த டெனீஸ்வரனின் பதவி நீக்கம் செல்லுபடியற்றதென மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருக்கின்ற நிலையில் வடமாகாண சபையின் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதா? அங்கே என்ன நடைபெறுகின்றது?

டெனீஸ்வரனின் பதவி நீக்கம் முறையற்றது என்பது மாத்திரமல்ல அவர் தொடர்ந்தும் அமைச்சராகவே இருக்கின்றார் என்பதை மேன் முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்றது. அதேநேரம் அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைக்கு இத்தனை அமைச்சர்கள் தான் இருக்கலாம் என்ற வரையறை இருக்கின்றது. அந்த வரையறைகளுக்கமைய நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆளுனருக்கு அறிவித்திருந்தது. யாரை நியமிக்க வேண்டுமென நீதிமன்றால் கூறஇயலாது. ஆனால் மாகாண சபையில் ஐந்து அமைச்சர்கள் அங்கம் வகிக்கலாம் என அரசியலமைப்பு சொல்கின்றது. மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் டெனீஸ்ரன் தொடர்ந்தும் அமைச்சராக இருக்கின்றார் என்றால் முதலமைச்சரையும் சேர்த்து தற்போது வட மாகாண சபையில் ஆறு அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அரசியலமைப்பின் பிரகாரம் ஆளுனர் தன்னிச்சைாக முடிவெடுக்க முடியாது. எனவே முதலமைச்சரின் ஆலோசனைப்படிதான் ஆளுனரால் நியமிக்க இயலும். அவர்கள் இருவருக்கும் ஒரு கூட்டுப் பொறுப்புண்டு. ஆளுனர் நியமித்தாலும், யாரை நியமிக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனை வழங்கும் முழுப் பொறுப்பும் முதலமைச்சருடையதே. ஆளுனர் முதலமைச்சரின் ஆலோசனையைக் கோரி ஏற்கெனவே அவருக்குக் கடிதம் அனுப்பியிருக்கின்றார். ஆனால் அதற்கான பதிலை முதலமைச்சர் இதுவரை வழங்கவில்லை. இந்தப் பிரச்சினையை நான் வியாழனன்றைய மாகாணசபை அமர்விலும் எழுப்பினேன். உண்மையில் முதலமைச்சரையும், டெனீஸ்வரனையும் தவிர தற்போதுள்ள அமைச்சரவை செல்லுபடியற்றது என்ற அடிப்படையிலேயே அன்றைய தினம் விவாதம் நடந்தது. இத்தவறுக்கு முதலமைச்சரே ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்க வேண்டும். புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால், அது, தான் தனது அமைச்சுப் பதவியை வகிப்பதில் தடையாக இருப்பதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை டெனீஸ்வரன் தற்போது தொடர்ந்துள்ளார்.

வடமாகாணசபையின் வினைத்திறமின்மை தொடர்பில் நீங்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும் ஏன் எந்த விதமான மாற்றங்களோ, முன்னேற்றங்களோ இதுவரை ஏற்படவில்லை?

இது நீங்கள் அவர்களிடமே கேட்க வேண்டிய கேள்வி. இதுவரை மாகாண சபையில் எங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட பல விடயங்களில், திறம்பட செயற்பட்டிருக்கலாம். அதிகார வரம்புக்குட்படாத விடயங்களைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. அதற்காகவே நான் முதலமைச்சரை இரண்டு தடவைகள் பகிரங்க விவாதத்துக்கு அழைத்திருந்தேன். அவ்வாறான விவாதமொன்றில் நான் ஆதாரபூர்வமாக் கேட்கின்ற விடயங்களுக்குப் பதிலளிக்குமாறு கோரியிருந்தேன். எனது குற்றச்சாட்டுக்கள் தவறாயின் அரசியலில் இருந்தே ஒதுங்கிக் கொள்வதாக சவால் விட்டேன். ஆனால் அதற்கான பதிலேதும் முதலமைச்சரிடமிருந்து வரவில்லை.

வட மாகாண அமைச்சர்களிடம் கேட்டால் ஒரு சிற்றூழியரைக் கூட நியமிக்கும் அதிகாாரம் தமக்கில்லை என்கின்றனர். அவ்வாறானதொரு அதிகாரமற்ற அமைப்பா கத்தானே வட மாகாண சபை இருக்கின்றது?

இல்லாத அதிகாரங்களைப் பற்றி நான் பேசவில்லை. இருக்கின்ற அதிகாரங்கள் சரியாக பயன்படத்தப்படவில்லை என்பதே எனது குற்றச்சாட்டு. வியாழனற்று வீதி விபத்துக்கள் பற்றிய பாரிய விவாதங்கள் நடைபெற்றன. போக்குவரத்தென்பது முற்றுமுழுதாக மாகாணத்துக்ெகன ஒதுக்கப்பட்ட விடயம். மாகாணத்துக்குட்பட்ட போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதாயினும் கட்டுப்படுத்துவதாயினும் சகல விடயங்களும் மாகாணத்துக்குட்பட்டவையே. இதற்கும் சிற்றூழியர் நியமனத்திக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நியமனங்களைப் பொறுத்தவரை வேண்டுமானால் மத்தியின் தலையீடுகள் இருக்கலாம். ஏனெனில் மத்தியே சம்பளங்களை வழங்குகின்றது என்பதால். அதிலும் நான் நினைத்த ஒருவரை நியமிக்க எனக்கு அதிகாரம் இல்லையென்பதே தவிர, சிற்றூழியருக்கான வெற்றிடம் நிலவுகின்றதெனச் சொன்னால் நிச்சயம் அதற்கான நியமனம் இடம்பெறும். ஆனால் நான் நினைத்த நபரை அப்பதவிக்கு நியமிக்க இயலாதென்பதுதான் குறையாக இருக்கும்.

அதுவும் சிலவேளைகளில் குறைபாடுதான். நிர்வாக விடயங்களில் தமக்குத் தேவையான ஆளுமை மிக்க ஒரு நபரை நியமிக்க முடியாதிருப்பதும் ஒரு குறைபாடுதான். நான் சொல்வது, உயர் பதவிகளில் தாம் விரும்பும் திறமை மிக்கவர்களை நியமிக்கமுடியாதிருப்பதும் குறைபாடுதான். ஆனால் இந்த குறைபாடுகள் எல்லாவற்றுக்கும் மத்தியிலும் எங்களால் வினைத்திறனுடன் செயற்பட்டிருக்க முடியும் என்பதுதான் எனது தொடர்ச்சியான குற்றச்சாட்டாக இருக்கின்றது.

வாசுகி சிவகுமார்

 

 

Comments