'மகாத்மா காந்திபுரம்' தனி வீடுகள் மக்களிடம் இன்று கையளிப்பு: | தினகரன் வாரமஞ்சரி

'மகாத்மா காந்திபுரம்' தனி வீடுகள் மக்களிடம் இன்று கையளிப்பு:

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் டன்சினன் தோட்டத்தில் கட்டப்பட்ட "மகாத்மா காந்திபுரம்" 404 தனி வீடுகள் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று மு.ப 10 மணியளவில் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொள்வர்.

இவ்வைபவத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் இருந்தவாறே காணொளி மூலம் உரையாற்றவுள்ளார்.

அமைச்சர்களான கயந்த கருணாதிலக, நவீன் திசாநாயக்க, ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்வீடுகள் ஏழு பேர்ச்சஸ் காணியில் 505 சதுர அடிபரப்பு கொண்ட 2 அறைகள், வரவேற்பறை, குளியலறை மற்றும் சமையலறை போன்ற வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்மாண பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தின் 383.5 மில்லியன் நிதியொதுக்கீடு பெறப்பட்டுள்ளதுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 89.5 மில்லியன் செலவில் மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும் உலகவங்கித் திட்டத்தில் நகரத்திட்டமிடல் அமைச்சினால் குடிநீர் வசதிகளும் இவ்வீடமைப்புத் திட்டத்திற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

2017 ம் ஆண்டில் பாரதப் பிரதமர் ஸ்ரீ நரேந்திரமோடியின் இலங்கை விஜயத்தின்போது இந்திய அரசாங்கத்தினால் முதற்கட்டமாக 4000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டதற்கு மேலதிகமாக 10,000 வீடுகளைப் பெற்றுத்தருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கமைய மேலதிக வீடுகளை நிர்மாணிப்பதற்கான இருநாட்டு புரிந்துணர்வு உடன்படிக்கை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து ஆகியோருக்கிடையில் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக மொத்தமாக 14,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் இவை பெருந்தோட்ட மக்கள் அதிகம் வாழும் நுவரெலியா, பதுளை, மாத்தளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, களுத்துறை. குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நிர்மாணிக்கப்படவுள்ளன.

Comments