கூட்டமைப்பு யாருக்கும் அஞ்சும் கட்சி அல்ல! | தினகரன் வாரமஞ்சரி

கூட்டமைப்பு யாருக்கும் அஞ்சும் கட்சி அல்ல!

வணக்கம், கருணாகரன் அமைச்சர் மனோ கணேசனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் ‘கோத்து’ விடும் வேலையை தனது பத்தியில் செய்திருக்கிறார். இது பற்றி தெளிவுபடுத்தல் அவசியம்.

பத்திரிகையில் வந்த ஆதாரமற்ற செய்தி ஒன்றை வைத்துக் கொண்டு தனது முழுப்பத்தியையும் சிண்டு முடியும் வேலைக்கு ‘கருணா’ பயன்படுத்துகிறார். வடக்கில் வீடுகள் எதுவும் கட்டப்படவில்லை என்பது பொய்யான தகவலாகும். பல்வேறு வீடமைப்புத் திட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அமைச்சர் சஜித் பிரேமதாச அண்மையில் ஒரு மாதிரி கிராமத்தைப் புது வீடுகளுடன் திறந்து வைத்திருந்தார். 40,000 வீட்டுத்திட்டம் 50,000 வீட்டுத்திட்டம் என்பன உண்மையில் மக்களுக்குத் தேவையாக உள்ளனவா அல்லது ‘கருணா’ போன்றவர்களுக்குக் கற்பனையாக எழுதுவதற்குத் தேவையாக உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது.

அமைச்சர் மனோ கணேசன் முகநூலில் தெரிவித்த கருத்துக்கள், அதற்கான எதிர்வினைகள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி. துரைராஜசிங்கத்தின் கருத்து என்பவை பற்றி எழுத நான் விரும்பவில்லை. அரசியல்வாதிகள் தமக்கு விரும்பிய கருத்தைக் கூற அல்லது முகநூலில் எழுத அவர்களுக்கு உரிமையுண்டு. தமது அரசியல் சார்ந்து தமது ஆதரவுத்தளம் சார்ந்து தமது பொதுப்பிம்பம் (Public Image) சார்ந்து அவர்கள் ஏதாவது கூறுவார்கள். அதைத் தூக்கிப் பிடித்து அப்படி இப்படி என்று எழுதுவது வங்குரோத்து எழுத்தாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் மனோ கணேசனைப் பார்த்துப் பயப்படுகிறது என்ற கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது. இலங்கையில் பெரும்பாலான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் எடுத்துச் சொல்லும் ஜனநாயக அரசியல் சக்தியே கூட்டமைப்பு. அமைச்சர் மனோவுக்கு மட்டுமல்ல யாருக்குமே கூட்டமைப்பு பயப்படுவதில்லை. பயப்பட வேண்டிய தேவையும் இல்லை. ஏனெனில், சரியான அரசியல் பாதையில் கூட்டமைப்பு பயணிக்கிறது.

வடக்கு கிழக்கில் அரசியல் தேய்நிலை அடைந்துவிட்டதான ஒரு பிம்பத்தை ‘கருணா’ ஏற்படுத்துகிறார். இது பொய்யான கருத்தாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பல இளம் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஒரிருவர் பா.உ.களாக உள்ளனர். ஏனையோர் மாகாண சபை உறுப்பினர்களாக உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தைத் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்பார்கள். தமிழ் அரசியல் தலைவர்கள் சரியான காய் நகர்த்தல்களை மேற்கொண்டால் தமிழரின் ஜனநாயக அரசியல் சமூகத்தை வளப்படுத்தி இலங்கையின் ஜனநாயகத்தையும் வளப்படுத்த முடியும். அதற்குரிய வல்லமையும் தூரநோக்கும் கூட்டமைப்பு தலைவர்களிடம் உண்டு. இளம் தலைவர்களும் சரியான பாதையில் பயணிக்கிறார்கள்.

அரசியல் யாப்பு முயற்சிகள் பற்றி கண்டனம் எதுவும் கூறாமல், அதற்கு மௌனமாக ஒத்துழைப்பது இந்த தூரநோக்கின் அடிப்படையிலானதாகும். நாட்டிற்கு ஒரு ஜனநாயக அரசியல் முறை தான் இன்று உயிர்நாடியாக உள்ளது. இனவாத, மதவாத, லஞ்ச, ஊழல் மலிந்த கேவலமான ஜனநாயக விரோத காட்டாட்சியை நாட்டில் மீண்டும் உருவாகாமல் தடுப்பதே இன்று எல்லோர் முன்னுமுள்ள பணியாகும். அதனால் கூட்டமைப்பு தலைவர்கள் அமைதியாக யாப்பு முயற்சிகளை ஆதரித்து வருகிறார்கள். அமைச்சர் மனோகணேசன் யாப்பு முயற்சியின் மெத்தனத்தில் தான் தனது அதிருப்தியை வெளியிட்டார். அரசாங்கத்தைப் பற்றிக் குறை கூறவோ தனது பதவியை விட்டு விலகவோ அவர் முனையவில்லை. தமிழ் மக்களுக்கு காணப்படும் ஏமாற்றத்தை அரசாங்கத்தில் உள்ள ஒரு தமிழ் அமைச்சர் என்ற வகையில், மனோ வெளிப்படுத்தினார். கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்குள் இல்லை அவர்கள் வெளியில் இருக்கிறார்கள். இந்நிலையில் அமைச்சரையும் கூட்டமைப்பினரையும் ஒப்பிடுவது பொருத்தமில்லாத செயலாகும்.

அமைச்சர் மனோ 1999இல் இருந்து அரசியலில் இருப்பவர். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர் சுதந்திர கட்சி சார்ந்த பெரும்பான்மை சார்ந்த (Majoritarian) அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. தனது அரசியலை ஐக்கிய தேசிய கட்சியின் நிழலில் ஆரம்பித்த அவர், தனக்கென சுயமான அரசியல் பாதையை வகுத்து இன்று ஒரு முன்னணி அரசியல்வாதியாகி உள்ளார். ஆனாலும் தனது அடிப்படைக் கொள்கையான சிறுபான்மை தமிழர் உரிமைகள், உரிமைகளை அங்கீகரிக்கும் அரசில் பங்காளி என்றதிலிருந்து என்றும் விலகியவரல்ல.

கொள்கைக் பிடிப்புள்ள அமைச்சரையும் கருணாகரன் பிறப்பதற்கு முன்னிருந்த தமிழ் உரிமைகளுக்காக போராடிவரும் கட்சியை பிரதானமாக கொண்டுள்ள கூட்டமைப்பையும் இவர் கொளுவிவிட முயற்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த போலியின் எழுத்தைச் சட்டை செய்யாது அமைச்சரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தாம் தேர்ந்தெடுத்த பாதையில் இணைந்து பயணிப்பார்கள் என்பது திண்ணம்.

அமைச்சர் மனோ யாழ்ப்பாணத்தில் அல்லது வன்னியில் போட்டியிட்டாலோ அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிட்டாலோ பாதிக்கப்படுவது தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவமே. விகிதாசார முறையிலும் சரி கடந்த உள்ளூராட்சித் தேர்தல் நடந்த புதிய முறையிலும் சரி மக்கள் அதிகளவில் சென்று வாக்களிப்பது முக்கியமாக உள்ளது. கொழும்பிலும் தமிழர் மத்தியில் வாக்களிப்பு வீதம் மிகவும் குறைவு. வெள்ளவத்தையில் பல வயோதிபர்கள் காணப்படுகிறார்கள். வெளிநாடு செல்லும் பிள்ளைகள் தமது வயோதிப பெற்றோரை கொழும்பில் குடியேற்றுகிறார்கள். இந்த மூத்த பிரஜைகளுக்கு தேர்தல் பதிவு இல்லை. கொழும்பு வாழ் தமிழர்கள் மத்தியில் அதை ஊக்குவிப்பதற்கான முன்னெடுப்புக்களும் நடக்கவில்லை. இந்நிலையில் வாக்களிக்கும் கொஞ்ச பேரும் பிரிந்து (பிரதேச ரீதியாக?) தமிழர் பிரதிநிதித்துவம் நாசமாகும் நிலை ஏற்படும். ‘கருணா’ போன்ற பிரகிருதிகள் அன்றி வேறு யார் இதை விரும்புவார்கள்? அரைப்பதற்கு இன்னும் கொஞ்ச அவல் கிடைத்த சந்தோஷம் இந்த வேடதாரிக்குக் கிடைக்கும்.

அமைச்சர் மனோ வன்னியில் அல்லது யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டாலும் இது தான் நடக்கும். ஏற்கனவே வவுனியாவில் இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கிறார்கள். ஆனாலும் ‘கருணா’ போன்றவர்களின் எழுத்து, சந்தர்ப்பவாதிகளைத் தூண்டிவிட வாய்ப்பிருக்கிறது. வவுனியா, வன்னிப்பகுதியில் உள்ள பெரும்பான்மையான இந்திய வம்சாவளித் தமிழர்கள் 1958 மற்றும் 1977 வன்முறைகளில் விரட்டியடிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு முன்னாள் பா.உ பேராசிரியர் செ. சுந்தரலிங்கம் வவுனியாவில் காணிகளை வழங்கி குடியேற்றினார் என்பது வரலாறு. பிற்காலத்தில் அமைச்சராக விளங்கிய கே. டப்ளியு. தேவநாயகமும் இம்மக்கள் தொடர்பில் கரிசனை கொண்டிருந்தார்.

தமிழர்கள் அழிவதற்குப் பிரதேசவாதம் (Regionalism) ஒரு காரணமாகும். குடும்ப உறவுகளில் திருமண பந்தங்களில் இது காணப்படுவது சில வேளைகளில் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனாலும் அரசியலில் பிரதேசவாதம் இருக்கக் கூடாது. சில காலத்திற்கு முன்னர் அமைச்சர் மனோ அமெரிக்க பாணியிலான சிறுபான்மை சமவாயம் ஒன்றை (Caucus) or Pressure group ஒன்று பற்றி கருத்து கூறியிருந்தார். இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழ் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இதை அமைக்க முடியும். தனிப்பட்ட அரசியல் போட்டிகளைத் தவிர்த்துப் பொது உரிமைகள் பற்றிப் பேசுவதற்கான களமாக இது இருக்கும். இப்படியான முயற்சிகள் தமிழர்களுக்கு அரசியல் பலத்தை வழங்குவதுடன், கருணாகரன் போன்ற சந்தர்ப்பவாத வேடதாரிகளைப் பத்தி எழுத்து என்னும் துறையிலிருந்தே துரத்திவிடும்.

–மொழி அரசன்,

வெள்ளவத்தை.

 

Comments