சவால்களை சமாளிக்கும் வகையில் கூட்டு ஒப்பந்தம் மாற்றப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

சவால்களை சமாளிக்கும் வகையில் கூட்டு ஒப்பந்தம் மாற்றப்பட வேண்டும்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை, 2016 கூட்டு ஒப்பந்தம் காலாவதியாவதற்கு முன்னரேயே ஆரம்பிக்கப்பட்டிருப்பது, கடந்த முறையைப் போல பேச்சுவார்த்தை இன்னொரு 18 மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக்கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் 2018 --– 2020க்கான கூட்டு உடன்படிக்கை பிரச்சினைகளில் சிக்காது என்று அறுதியிட்டுச் சொல்வதற்கில்லை.

தொழிற்சங்கவாதியும் சட்டத்தரணியுமான தம்பையா அளித்திருக்கும் பேட்டியில், 18 மாதங்களுக்கான நிலுவைப் பணத்தை வழங்க வேண்டிய அவசியமில்லை என்ற கம்பனிகளின் தரப்புக்கு ஆதரவாகவும், மனுதாரர் தம்பையா இவ் விடயத்தில் தலையிடுவதற்கு உரித்துடையவர் அல்ல என்றும் தொழிலாளர்களுக்காக பேச வேண்டிய சங்கங்கள் முதலாளி தரப்புக்கு ஆதரவாக நின்றதையும் சுட்டிக்காட்டி, கையெழுத்திடும் சங்கங்கள் இவ் வகையில் தமது தார்மிக உரிமையை இழந்துவிட்டன என்றும் குறிப்பிட்டிருப்பது ஆழமாகக் கவனிக்க வேண்டிய விடயம். இது, கவலையை ஏற்படுத்தக் கூடிய கேள்விகளை எழுப்புகிறது. மலையகத்தில் கட்சி அரசியல் நடத்த வெளிக்கிட்ட சங்கங்கள், பதவியும், சொகுசும், அதிகாரமும் தரக்கூடிய கட்சி அரசியலில் ஆழ்ந்து, முதலாளிகளுக்கு சமனான முதலாளிகளாக அவை மாறி வருவதைத் தான் இப் போக்குகள் வெளிப்படுத்துகின்றனவா என்ற கேள்வியையும் முன்வைக்கின்றன.

தொண்ணூறுகளின் முற்பகுதியில் கம்பனிகள் பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றபோது தொழிலாளர் நலன்புரி விடயங்களைத் தாம் பொறுப்பேற்கவியலாது என்று அவை தெரிவித்ததையடுத்தே பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி என்ற அமைப்பு (டிரஸ்ட்) உருவாக்கப்பட்டதோடு சம்பள நிர்ணய சபையின் கீழ் இருந்த தொழிலாளர் சம்பளம், கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப் பட்டது. கூட்டு ஒப்பந்தம் என்பது தொழிலாளர் சம்பளத்தை மீளாய்வு செய்வதை மட்டும் கடமையாகக் கொண்டது அல்ல. அவர்கள் ஏற்கனவே அனுபவித்து வரும் பல்வேறு நன்மைகளைத் தொடர்ந்தும் பாதுகாப்பதும், அவசியமான ஏனயை நலன்களை உறுதி செய்வதும் கூட்டு ஒப்பந்தத்தின் கீழேயே வருகின்றன. கூட்டு ஒப்பந்தம் செயற்பாட்டுக்கு வந்த போது இதை ஒரு கண்துடைப்பு நாடகம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போது, சம்பள அதிகரிப்புடன் பல்வேறு அம்சங்களையும் இது உள்ளடக்கி இருப்பதாலும் இது சட்ட ரீதியானது என்பதாலும் கூட்டு ஒப்பந்தமே பொருத்தமான பொறிமுறை என்ற கருத்து பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால் சமீப காலமாக, பெருந்தோட்ட தொழிற்சங்க அரசியலில் அதிகரித்து காணப்படும் குத்துவெட்டுகள் காரணமாக, அதையே ஆயுதமாகப் பயன்படுத்தும் கம்பனி தரப்பு, சம்பள பேச்சுவார்த்தைகளின் போது தொழிலாளர் தரப்பின் கூர்மையை மழுங்கடித்து, தாமே கூட்டு ஒப்பந்தத்தை தன்னிச்சையாகத் தீர்மானிப்பவர்களாக மாறிவரும் ஒரு போக்கை அவதானிக்க முடிகிறது. தொழிலாளர் தரப்பு ஒருவரை ஒருவர் முறைக்கும் அரசியல் கட்சிகளாகச் சிதறிக் கிடப்பதால், ஒன்றுபட்ட தொழிலாளர் சக்தியாக தொழிலாளர் சமூம் தமக்கெதிராகத் திரளாது என்ற எதிர்பார்ப்பிலேயே, கம்பனி தரப்பு கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் எதேச்சதிகாரமாக நடந்துகொள்ள முயல்கிறது. இம்முறை ஆயிரம் ரூபா இலக்கை வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், முதலாளிமார் சம்மேளனம் நிர்ணயிக்கும் தொகைக்கே தொழிலாளர் தரப்பு இணங்கிவர வேண்டியிருக்கும் என்பதையே கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான தொழில் ஆணையாளரின் அங்கீகாரம் பெற்ற மூன்று தொழிற்சங்கங்களும் பெட்டிச்சாவி தம்மிடம் இருப்பதால் மூன்றாம் தரப்புக்கு இங்கே வேலை இல்லை என்ற இறுமாப்பு போக்கைக் கைவிட்டு, தமிழ் முற்போக்கு முன்னணி, சிறிய தொழிற்சங்கங்கள், மலையக சமூக அமைப்புகள் என்பனவற்றுடனும் கலந்து ஆலோசித்து பொதுப்படையான சில தீர்மானங்களை எடுத்த பின்னர் பேச்சு வார்த்தை மேசைக்கு செல்லுமானால், இந்த வியூகம் முதலாளிமார் தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமையும் என்பதை இங்கு நாம் வலியுறுத்தி சொல்ல விரும்புகிறோம்.

ஜெயலலிதாவின் மறைவின் பின்னர், தி.மு.க உண்மையாகவே தீவிரமாகச் செயற்பட்டிருந்தால் அ.தி.மு.க அரசை பலவீனமடையச் செய்து ஆட்சியைக் கவிழ்த்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல், அ.தி.மு.க அடுத்தடுத்து செய்யும் தவறுகளை எல்லாம் தனக்கு வாய்ப்பாக மாற்றுவதிலும், கலைஞரின் மரணத்தால் மககள் மனதில் ஏற்பட்ட சோகமும் ஏக்கமுமான உணர்வுகளை தனக்கு சாதமாக தி.மு.க சாதூரியத்துடன் பயன்படுத்துவதையும் பார்க்கும் போது, பாராளுமன்ற மற்றும் சட்ட சபைத் தேர்தல்களில் பெரும் வெற்றியை ஈட்டுவதற்கான முஸ்தீபாகவே இதைக் கருத் வேண்டியிருக்கிறது.

இத்தகைய அயல்தேச அரசியல் கட்சிகளின் சாதுரியமான நகர்வுகளை நமது அரசியல் கட்சிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும். பலம் பொருந்திய கம்பனி தரப்பை பலவீனமான நிலையில் எதிர்கொள்வதனால் நன்மை கம்பனிகளையே சென்றடையும் இதுவரை அப்படித்தான் ஆகியுமிருக்கிறது.

எனவே அடுத்துவரும் பேச்சுவார்த்தைகளில், இம்மூன்று தொழிற் சங்கங்களும் ஒட்டு மொத்த பின்னணிப் பலத்துடன் கலந்து கொண்டால் தான் தொழிலாளர் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை ஓரளவேனும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என்பதோடு மாறிவரும் பெருந்தோட்ட சூழல்கள் ஏற்படுத்தக்கூடிய சவால்களை சந்திக்கவும் முடியும்.

பெருந்தோட்டக் குடியிருப்புகளை கிராமங்களாக மாற்றி அமைக்கும் பாரிய திட்டம், வெளிவாரி செய்கை திட்டத்தின் சாதக பாதக நிலைகள், காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளித்தல், சுய கைத்தொழில் திட்டங்கள், 2025 என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட இளைஞர் சமூகம் எவ்வாறான உதவிகளைப் பெறக் கூடும் என்பன பெரும் சவாலான விஷயங்களாக இருக்கையில் மலையகக் கட்சிகள் தொடர்ந்தும் தமது பலவீனமான நிலையை பறைசாற்றிக் கொண்டிருக்க முடியாது. இச் சவால்களுக்கு ஏற்ப கூட்டு உடன்படிக்கையும் மாற்றங்களைக் காண வேண்டியதன் அவசியத்தையும் இங்கே அழுத்தமாகத் தெரிவிக்க விரும்புகிறோம்.

Comments