எமது பிள்ளைக்கு நேர்ந்த கதி | தினகரன் வாரமஞ்சரி

எமது பிள்ளைக்கு நேர்ந்த கதி

குழந்தையின்  பெற்றோர் உருக்கம்

"சங்கரின் பிள்ளைக்குச் சரியான வருத்தமாம்! டொக்டர்ஸ் யாரும் கவனிக்கவில்லையாம்"

திருவிழாவில் கலந்துகொண்டிருந்த சிலருக்குச் செய்தி வருகிறது. அப்போதுதான் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்குச் சென்ற சங்கருக்கும் தகவல் வருகிறது. அரக்கப்பரக்க மீண்டும் வைத்தியசாலைக்கு ஓடுகிறார். அவருடன் சில ஊர் மக்களும் ஓடுகிறார்கள்!

சங்கரின் ஒன்றரை வயது குழந்தை சஜி, வைத்தியசாலை 'வார்டில்' கிடத்தப்பட்டிருக்கிறது எந்தவித சிகிச்சையும் இல்லாமல். குழந்தையைக் கொண்டுசென்ற அதனுடடைய தாய் பதறிக்ெகாண்டிருக்கிறார். வைத்தியசாலையின் மருத்துவர்களும் ஏனைய தாதிய உத்தியோகத் தர்களும் விபத்துப் பிரிவில் பரபரப்பாக இருக்கிறார்கள். அங்கு ஓடிச்சென்ற சங்கர், தன் குழந்தையைப் பார்த்துப் பரிதவிக்கின்றார். குழந்தையிடம் எந்தவித அசைவுமே இல்லை! பயந்துபோன அவர் மருத்துவரிடம் சென்று கெஞ்சுகிறார். "என் பிள்ளையைக் காப்பாற்றுங்கள் ஐயா!"

அதற்கிடையில், குழந்தையையும் பேராதனை வைத்தியாசாலைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய அம்பியுலன்ஸ், விபத்தில் காயமடைந்தவர்களை மாத்திரம் ஏற்றிக்ெகாண்டு பறந்துவிடுகிறது. கலஹா வைத்தியசாலைக்குப் பொறுப்பான மருத்துவர், சில தாதியர்கள் சகிதம் ஓடிவந்து ஏதேதோ சிகிச்சையளிக்க முயற்சிக்கிறார். குழந்தையின் நிலை மோசமடைவதை எல்லோரும் புரிந்துகொண்டுவிடுகிறார்கள். அப்போது அந்த மருத்துவர் குழந்தைக்கு ஓர் ஊசியைப் போடுகிறார். தெல்தோட்டையிலிருந்து மற்றொரு அம்பியுலன்ஸ் வரும் அதில் ஏற்றி பேராதனைக்கு அனுப்புவோம் என்று கூறிவிட்டு மருத்துவர் நகர்ந்துவிடுகிறார். சங்கருக்குக் குழந்தையின் நிலை பற்றிய சந்தேகம் வலுவடையத்தொடங்குகிறது. அந்தச் சமயத்தில் இரண்டாவது அம்பியுலன்ஸும் வந்துவிடுகிறது. அப்போது அதில் வந்த ஓர் ஊழியர், குழந்தையிடம் வந்து அதன் நாடியைப்பிடித்துப் பார்த்துவிட்டுக் கையைக் கீழே போட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார். அந்த அம்பியுலன்ஸும் குழந்தையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டது.

இவ்வாறான ஒரு பதற்றம் உருவாகிய நிலையில், அங்கிருந்த மருத்துவர்களும் தாதியர்களும் தலைமறைவாகிவிடுகிறார்கள். செய்வதறியாத சங்கரும் அவர் மனைவி புவனராணியும் பிள்ளையைப் பேராதனைக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். ஒரு முச்சக்கர வண்டியில் மனைவியுடன் பிள்ளையை அனுப்பிவிட்டு மீண்டும் மருத்துவரைச் சந்திக்கத் தேடியிருக்கிறார். உடன் வந்த ஊர் மக்கள் சிலரும் அவருடன் சேர்ந்து குழந்தையின் நிலையை அறிந்துகொள்ள முயற்சித்துத் தோற்றுப்போகிறார்கள். அந்தச் சமயத்தில் பேராதனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தையைப் பார்க்க அங்கு விரைகிறார் சங்கர்.

"ஐயோ, குழந்தை இறந்துவிட்டது என்கிறார்கள். இன்னும் ஓர் அரை மணித்தியாலத்திற்கு முன்பதாகக் கொண்டு வந்திருந்தால், காப்பாற்றியிருக்கலாமாம்! இறந்த குழந்தையைக் கொண்டு வந்திருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்"

கணவர் சங்கரைக் கட்டிப்பிடித்துக்ெகாண்டு கதறுகிறார் புவனராணி. விடயம் காட்டுத்தீயைப்போல் கலஹா தோட்டப்பகுதியெங்கும் பரவுகிறது!

கடந்த 28ஆம் திகதி கலஹா, தெல்தோட்டை பெருந்தோட்ட ஆலயத் திருவிழாவின் ஓர் அங்கமாக மஞ்சள் நீராட்டு விழா நடந்துகொண்டிருக்கும் வேளையில்தான் சங்கரின் ஒன்றரை வயது குழந்தை சஜிக்கு இந்தப் பரிதாப நிலை.

தோட்ட ஆலய கோவில் குழுவில் உப தலைவரான சங்கர் (43 வயது), அத்தோட்டத்தில் கூட்டுறவு சங்கக் கடை நடத்துகிறார். மனைவி புவனராணி (35 வயது) தோட்ட முன்பள்ளி ஆசிரியை. இவர்களுக்குப் 13 வயதில் ஒரு பெண் பிள்ளையும் 11 வயதில் ஓர் ஆண்பிள்ளையும் இருக்கிறார்கள். இறந்தது மூன்றாவது குழந்தை. கலஹா பகுதியில் பெருங்கலக்கத்தை ஏற்படுத்தியது இந்தக் குழந்தைதான்.

"சின்னவன் எப்போதும் நான் எழும்பும்போது எழுந்துவிடுவான். சம்பவ தினமான அன்று எழும்பாமல் படுத்திருந்தான். பார்த்தபோது இலேசான காய்ச்சல் இருந்தது. நான் கோவில் கமிட்டியில் இருப்பதால், பிள்ளையை மருத்துவரிடம் கூட்டிப்போகுமாறு மனைவியிடம் கூறிவிட்டுக் காலை ஏழு மணிக்ெகல்லாம் நான் கோவிலுக்குப் போய்விட்டேன். மனைவி காலை 8.15 அளவில் பிள்ளையைக் கூட்டிக் ெகாண்டு ஆறு ஏக்கர் சந்தியில் உள்ள தனியார் மருந்தகத்திற்குச் சென்றிருக்கிறார். அங்குள்ள மருத்துவர் குழந்தையைப் பரிசோதித்துவிட்டு வலி நிவாரண மாத்திரையை குழந்தையின் குதவழியாகக் கொடுத்துவிட்டு, உடனடியாகக் கலஹா வைத்தியசாலைக் ெகாண்டுசென்று அனுமதிக்குமாறு கூறி, ஒரு கடிதத்தையும் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அதன்படி காலை 8.30 அளவில் குழந்தையை கலஹா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார் மனைவி. அங்கிருந்த பெண் மருத்துவர் ஒருவர், மற்றைய மருத்துவரிடம் காண்பிக்குமாறு கூறியிருக்கிறார். அவர்தான் வைத்தியசாலைக்குப் பொறுப்பானவர். அவர் வார்டில் அனுமதிக்குமாறு கூறிவிட்டு ஓரிருவருக்கு மருந்து கொடுத்துவிட்டுத் தொலைபேசியில் பிஸியாக இருந்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள விருந்தொன்றைப் பற்றிக் கதைத்துக் ெகாண்டிருந்ததாக மனைவி கூறினார். ஆனால், பிள்ளையை அவர் சென்று பார்க்கவில்லை. அதற்கிடையில் நான் ஆலயத்திலிருந்து வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டேன். குழந்தையின் நிலை பற்றித் தாதி ஒருவருடன் கதைத்தேன். "மருந்து போடப்பட்டிருக்கிறதுதானே, காய்ச்சல் குறைந்துவிடும். இல்லையென்றால், அம்பியுலன்ஸ் வந்ததும் பேராதனைக்கு அனுப்புவோம்" என்றார்.

நான் குழந்தைக்குத் தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு வர முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு ஓடினேன். அதற்கிடையில் குழந்தைக்கு வருத்தம் அதிகரித்துவிட்டதென்று மனைவியிடமிருந்து தகவல் வந்தது" என்கிறார் சங்கர்.

"குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், காலை 9.07 அளவில் நடந்த ஒரு விபத்தில் காயமடைந்த இருவரைக் கொண்டு வரவும், மருத்துவர்கள் எல்லோரும் அங்குச் சென்றுவிட்டார்கள். நான் குழந்தையுடன்தான் இருந்தேன். அந்தத் தனியார் மருந்தகத்தில் வழங்கிய நிவாரணியைத்தவிர வேறு எந்தச் சிகிச்சையும் கலஹா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவில்லை" என்கிறார் புவனராணி.

"காலை 10.15 அளவில் குழந்தையின் நிலை மோசமடைவதை உணர்ந்துகொண்டோம். அப்போதுதான் மருத்துவர் வந்து ஊசி ஏற்றினார். எனினும், மகனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. என் பிள்ளைக்கு என்ன நடந்திருக்கிறது டாக்டர்? என்று சத்தமாகக் கேட்டேன். அப்போது டாக்டர்களும் தாதியர்களும் அவ்விடத்திலிருந்து அகன்றுவிட்டார்கள். நான் பொறுப்பான மருத்துவரைத் ​ேதடியபோது அங்கிருந்த பெண் மருத்துவர் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டார். தவறு நடந்திருந்தால் மன்னித்துக் ெகாள்ளுங்கள் என்றார். அப்போதே எனக்குக் குழந்தையின் நிலை பற்றிப் புரிந்துவிட்டது. என்றாலும், பிள்ளையின் உடல் உஷ்ணமாக இருந்ததால், பேராதனைக்குக் கொண்டுசென்றாவது முயற்சிக்கலாம் என்றுதான் முச்சக்கர வண்டியில் கொண்டுசென்றோம். அப்போது நேரம் 11.48. காலை 8.30 இற்குக் கொண்டு சென்றபோதே அம்பியுலன்ஸ் இல்லை என்று கூறியிருந்தால், நாம் எப்படியாவது பேராதனைக்குக் கொண்டு சென்றிருப்போம். அல்லது என் பிள்ளைக்கு ஓர் ஐந்து நிமிடம் ஒதுக்கியிருந்தால், காப்பாற்றியிருக்கலாமே" என்கிறார்கள் சங்கரும் அவரது மனைவியும்.

"குழந்தையைப் பறிகொடுத்த ஆத்திரத்தில் மீண்டும் நான் கலஹா வைத்தியசாலைக்கு வந்தேன். அங்கு சுமார் நான்காயிரம் பேர் திரண்டிருந்தார்கள். அதற்கிடையில் பொலிஸாரும் வந்துவிட்டார்கள். பிரச்சினையைச் சமரசமாகத் தீர்த்துக்ெகாள்ளலாம் என்று பொலிஸ் பொறுப்பதிகாரி சொன்னார். நான் அந்த மருத்துவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும். அதற்காக ஒரு சில நிமிடங்கள் அவரைச் சந்திக்க அனுமதிக்குமாறு பொலிஸாரிடம் கேட்டேன். அவர்கள் அனுமதிக்கவில்லை. திரண்டிருந்த மக்கள் அனைவரும் வைத்தியசாலைக்கு வெளில்தான் இருந்தார்கள். ஆனால், வைத்தியசாலையின் உள்ளே இருந்த பொருள்கள் உடைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இஃது எப்படி நடந்திருக்க முடியும்? எங்களைச் சிக்க வைப்பதற்காக மருத்துவர்களும் தாதியர்களும் ஏற்படுத்திய சோடிப்புதான் அது. நாங்கள் மாலை 6.40 வரை அங்கே மருத்துவரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தோம். இருள் பரவத் தொடங்கியதால், வருவது வரட்டும் என்று நான் வைத்தியசாலையின் உள்ளே சென்றேன். அங்கு மருத்துவர்களோ தாதியர்களோ இருக்கவில்லை. நாங்கள் தேடிய மருத்துவரின் உடையும் பாதணியும் அங்கே கழற்றி வைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் ெகாண்டு வந்து வெளியில் எறிந்தேன். அப்போதுதான் மருத்துவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள் என்பது சனத்திற்குத் தெரியவந்தது. பொலிஸ் சீருடையை அணிவித்து மருத்துவர்களைக் கொண்டுசென்றிருக்கிறார்கள் என்பது பிறகுதான் தெரியவந்தது" என்று அன்றைய சம்பவத்தை விளக்குகிறார் சங்கர்.

கலஹா வைத்தியசாலை இப்போது மூடப்பட்டிருக்கிறது. அங்கிருந்த நோயாளர்கள் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். வைத்தியசாலை மூடப்பட வேண்டும் என்பது தோட்ட மக்களின் நிலைப்பாடு அல்ல. அங்குள்ள இனவாத, பொறுப்பற்ற மருத்துவர்கள் அனைவரும் மாற்றப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்ைக.

இதேநேரம், கலஹா வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைதுசெய்யாவிட்டால், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மத்திய மாகாணம் முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்திருக்கிறது. வைத்தியர்களின் பணியில் தலையீடு செய்தார்கள் என்றும் அந்தச் சங்கம் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

அரசாங்க வைத்தியசாலைகளில் முன்னரைப்போல் இல்லை; சிறந்த சேவை நடக்கிறது; மருத்துவர்கள் நன்றாகக் கவனிக்கிறார்கள் என்ற கருத்து பொது மக்கள் மத்தியில் நிலவுவது என்னவோ உண்மைதான். ஆனால், சில மருத்துவமனைகளில் கலஹாவில் நடந்த உதாசீனப்போக்கு இடம்பெறுவதையும் மறுக்க முடியாது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர்கூட கலஹா வைத்தியசாலைக்குச் சென்ற தாயொருவரைப் பாதணியைக் கழற்றுமாறு மருத்துவர்கள் தாக்கியதாகச் செய்தி வந்திருந்தது. இதற்குப் பழிவாங்கும் போக்கினையும் இந்த மருத்துவர்கள் கைக்ெகாண்டு வருவதாகப் பொதுமக்கள் சொல்கிறார்கள். அதேவேளை, இதற்கு முன்னரும் ஐந்தாறு நோயாளர்கள் மருத்துவர்களின் கவனவீனத்தால் மரணமடைந்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இதையெல்லாம் அரசாங்க மருத்துவ அதிகாரகள் சங்கம் அறியுமா? என்ற கேள்வியையும் கலஹா பகுதி மக்கள் முன்வைக்கிறார்கள். அதேசமயம், ஆறு ஏக்கர் மருந்தகத்தின் மருத்துவர் கொடுத்தனுப்பும் கடிதத்தை மட்டுமல்ல, அவரிடம் சென்று வரும் நோயாளர்களுக்கும் கலஹா வைத்தியசாலையில் உரிய மரியாதை இல்லையாம் என்றும் அரசல் புரசலாகக் கதைக்கிறார்கள்.

அவருக்கும் இவர்களுக்கும் 'சரியில்லையாம்' என்கிறார்கள். இதற்கெல்லாம் யார் நடவடிக்ைக எடுப்பது? மருந்தகம் நடத்துவது வர்த்தகத்திற்காக என்றாலும், பொதுமக்களின் நலன் அதில் இல்லை என்று சொல்ல முடியுமா? அவரும் ஓர் அரசாங்க வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர்தான்.

என்ன நடவடிக்ைகயாக இருந்தாலும் பச்சிளம் பாலகன் சங்கர் சஜிக்கு நேர்ந்த இந்தத் துர்ப்பாக்கிய நிலை வேறு எந்தக் குழந்தைக்கும் ஏற்பட இடம் வைக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்பு மிக வலுவாகவே காணப்படுகிறது. தெய்வமாக மதிக்கப்படும் மருத்துவர்கள் அந்த மரியாதையைத் தக்கவைத்துக்ெகாள்ள வேண்டும் என்பதில் யாருக்குத்தான் விருப்பம் இருக்காது!

விசு கருணாநிதி

Comments