ஜான்ஸி | தினகரன் வாரமஞ்சரி

ஜான்ஸி

மலையகம் வாசகத்திற்கு ஏற்பவே சூழவும் மலைகளைக் கொண்டு விளங்கியது. அதிலும் சிறப்பு என்னவென்றால் அம்மலைகள் பார்ப்போர் கண்களுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு இன்ப மகிழ்ச்சியையும் அள்ளித்தெளிக்கும் பச்சைப்பசேல என்ற தேயிலைச் செடிகளால் ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டு இருந்ததுதான். இதனைத் தவிர மரக்கறித் தோட்டங்கள், மெய்சிலிக்கும் நீர்வீழ்ச்சிகள், பனிமூட்டங்கள் என பல வகைப் பண்புகளையும் சிறப்புக்களையும் கொண்ட பண்டாரவளையில் அம்பிட்டிய என்பது ஒரு சிறிய தோட்டக் கிராமம். அதில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்தனர். அதிலும் பெண்கள் தான் பெரும்பான்மையாக இருந்தது. அவர்களின் நாள் சம்பளத்தை கரைத்துக் குடிக்கவெனவே அனேகர் ஆணாதிக்க கணவன்கள் வீடுகளில் கிடந்தனர். பெண்களும் என்னதான் செய்வார்கள்? அந்த ஆணாதிக்க அரக்கர்களிடம் முரண்பட்டாலும் சரணடைந்து விடுவார்கள். குடிப்பதற்கு பணத்தை கொடுக்காவிட்டால் அடியினால் அவன் பிணமாகுவதை விரும்பாமல் தான் அந்த முடிவு. எங்கு தான் பெண்களுக்கு சமஉரிமை வழங்கப்படுகிறது? அவை வெறும் வார்த்தைகளே. அதிலும் கலாசார விழுமியங்கள் ஓங்கி இருக்கும் எந்தப் பெண்தான் கணவனை எதிர்த்து உரிமை கேட்பாள். அவளுக்கு தெரிந்ததெல்லாம் “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்பதுதான். கல்லாதவனானாலும் புல்லிய குணங்களை உடையவனானாலும் அவனுடன் வாழ்க்கை நடத்த முடியும். ஆனால் இந்த கணவன்கள் மகா அரக்கர்களாக இருக்கின்றார்களே?

ஒவ்வொரு மலையக தோட்டப் பெண்களும் தமக்கு விடிவு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் காலத்தை கழிக்கின்றனர். ஒருவேளை அவர்கள் இந்தியாவில் இருந்து தோட்டங்களில் வேலைக்கமர்த்துவதற்காக கொண்டுவரப்பட்ட கொத்தடிமைகளின் பரம்பரையாச்சே. அதுதான் சுதந்திரம் கிடைத்தும் கூட இவர்களிடம் இருந்து உரிமைவிட முடியாத அடிமைகளாக காணப்படுகின்றனர் போலும். எது எப்படியோ மலையகத்தில் பெண்களின் நிலை இதுதான்.

அத்தோட்டத்தில் சுமித்திராவின் குடும்பம் லயனில் வசிக்கவில்லை. காரணம் சுமித்ராவின் தாத்தாவுக்கு பாதையின் அருகே ஒரு சிறு நிலப்பரப்பு சொந்தமாக இருந்தது. அதில் சிறுமண் குடிசையை அமைத்து குடும்பத்தோடு வசித்து வந்தனர். குடும்பம் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவளுக்கு உறவுகள் இருக்கவில்லை. அவளுக்கு இருக்கும் உறவுகள் உயிரான தாய், தாயின் தந்தை அதாவது தாத்தா இருவரும் தான். அவள் இதுவரை புகைப்படங்களில் கூட தன் தந்தையைக் கண்டதில்லை, ஏன் அவளுக்கு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை பிள்ளை மனம் கல்லு என்பார்கள் ஆனால் அவள் மனம் கல்லாக இருப்பதில் எந்தவித குற்றமும் இல்லை, ஏனெனில் அவளை பெற்றெடுத்த மனதை தாக்கி ரணமாக்கிய உளியல்லவோ அவன் அந்தப் பாதகனைப் பற்றி அவள் முதன் முதலாக தாயிடம் கேட்டது அவள் பருவமடைந்த போதுதான். பருவமடைந்ததாலோ என்னவோ அப்போதுதான் தந்தைபற்றி தாயிடம் விசாரித்தாள். எது எவ்வாறாயினும் அவளின் தாய், தந்தைக்கு சமமாக கண்ணும் கருத்துமாக அன்பு கலந்த கண்டிப்புடன் 13 வருடங்கள் அவளை வளர்த்ததுதான் சுமித்ரா அந்த பாதகனை பற்றி விசாரிக்காமல் மட்டுமல்ல கனவில் கூட அவனை எண்ணாமல் இருந்ததற்கு உண்மைக் காரணம். 13 வருடங்களின் பின் தான் ஏதோ சமூகத்தில் பிரஜா உரிமை பெற்று விட்டவனைப் போல அந்தக் கயவனைப் பற்றி விசாரித்தாள். மகள் என்றும் இக்கேள்வியைக் கேட்டுவிடக்கூடாது என்று ஒவ்வொரு நாளும் பிராரத்தித்தவளுக்கு பதில் தொண்டைக் குழிக்குள் புதைந்துவிட்டது. மழைக் காலத்தில் மண்சரிவு ஏற்பட்டு கீழ்நோக்கி சரியும் சேற்று நீரைப்போல கண்களில் இருந்து கண்ணீர் கனமாக வழிந்து நிலத்தை நனைத்தது. ஆம், தாய் பாக்கியவதி அந்த கயவனைப் பற்றி சொன்னாள். மகளின் உணர்வை அறிந்து மறுக்காமல் சொன்னாள். இன்னதான் செய்தாலும் “அவளின் தந்தை அல்ல” என்று கூற முடியாது என்பதனை உணர்ந்தவளாய்,

“உன் தந்தை சேகரன். வெலிமட தோட்டத்தில் இருந்து நம்ம தோட்ட ஸ்டோருக்கு வேலைக்கு வந்தாரு. அப்போ என்ன கல்யாணம் கட்ட விருப்பப்பட்டு தாத்தாக்கிட்ட கேட்டாரு. அவரும் சம்மதிக்கவே தோட்ட காளிகோயில்ல கல்யாணம் நடந்துச்சி. அவ்வளவுதான் என் வாழ்க்கைல எல்லாத்தயும் தொலச்சன். தாத்தா எனக்கெண்டு கொடுத்த எதையுமே விட்டு வெக்கல்ல. ஏன் என்னயே அவன் விட்டுவெக்கல்ல. எந்த நாளும் குடிச்சிட்டு வந்து, அடிச்சு அடிச்சே கொண்டான். ஒருநாள் குடிபோதைல தல்லாடிட்டு வந்து உதைச்ச உதைல கீழ விழுந்து தலைல அடி பட்டுச்சி. அதனால பயந்து போனவன் திரும்ப வரவே இல்ல. இன்டைக்கு 14 வருஷமாயிடுச்சி. அடுத்த தோட்டத்துல இன்னொருத்திய கட்டியிருக்கானாம். ஏன்ட விதி உசுற மாய்ச்சிக்கொள்ளப் போனன் ஆனால் எனக்குள்ள ஒரு உசுறு வளருத அப்புறம்தான் தெரிஞ்சிச்சி. அதுக்கப்புறம் ஒன்ட வாழ்க்கைய அந்த உசுறுக்காக தியாகம் செய்ய நெனச்சன். தோட்டத்துல கொழுந்து எடுக்க போனேன். காட்டுல சுள்ளி பொறக்கப் போனன். எனக்கு இந்த நாழி வரைக்கும் துணையா இருக்கிறது தாத்தாதான். இன்னிக்கு நீ வளந்து பெரியவளாயிட்ட இனி படிக்கனும் நீ இந்த தோட்டத்துல வேல பாக்க கூடாது. நீ படிச்சி பெரியவளாகனும். ஆம்புலங்களுக்கு சமனா வாழனும், நீ உங்கப்பா பத்தி கேட்டதாலதான் சொன்னன். இல்லாட்டி அந்த ஆளப்பத்தி ஒனக்கு தெரியவே கூடாதுண்டு நெனச்சன்” என்ற கூறி முடிப்பதற்குள் தாயின் நரகமான மணவாழ்க்கை அதன்பின் இன்று வரை அவள் படும் மனவேதனைகள் கஷ்டங்கள் என அனைத்தும் மின்னலென ஒரு குறுந்திரைப்படமாக சுமித்ராவின் மனதில் திரையிடப்பட்டு, செல்லவே மயான அமைதி பரவியது. அதற்குப் பிறகு அவள் அந்த தந்தை எனும் மகா பாதகனைப் பற்றி மறந்தும் கூட நினைக்கவில்லை. படிக்கத் துவங்கினாள். கலகலத்த சுபாவம் கொண்ட அவளுக்கு ஒரு நண்பர் பட்டாளம் பாடசாலை வளவில் கிடைத்தது. அவள் முயற்சியுடன் கற்றாள்.

அவளின் வீடு குடிசையாக இருந்தாலும் அவ்வீட்டில் எந்தக்குறையும் இருக்கவில்லை. அவளின் வீட்டைச் சுற்றி கிணற்றோடு சேர்த்து ஒரு சிறுபரப்பு தாத்தாவுக்குச் சொந்தமானது. அதற்கு அடுத்து உள்ள சிறுகாணி தாத்தாவின் தம்பிக்கு சொந்தமானதாக இருந்தது. எனினும் அது 15 வருடங்களுக்கு முன்பாகவே ஒரு முதலாளிக்கு விற்கப்பட்டு விட்டது. இருவரின் தோட்டத்தையும் சுற்றி உள்ள ஏனைய மொத்த பரப்பும் அந்த முதலாளிக்கு உரியதே. அதில் அவர் மரக்கறித் தோட்டத்தை அமைத்து பராமரித்து சந்தைகளுக்கு விநியோகித்து வந்தார். வீட்டினதும் அயல் நிலங்களினதும் நிலை இவ்வாறு இருக்க யாருக்காகவும் வேலை நிறுத்தம் செய்யாத காலம் உருண்டோடியது. சுமித்ரா சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று உயர் தரத்தில் கலைப் பிரிவை தெரிவு செய்து கற்று வந்தாள். தாய் பாக்கியமும் வயதின் முதிர்ச்சியை ஓரளவு உணர்ந்தாள். எல்லாவற்றையும் விட தாத்தா தருமலிங்கம் உயிர் என்ற ஒன்றைப் பிடித்துக் கொண்டு காலனின் வருகைக்காக காத்திருந்தார்.

காத்திருந்தது போலவே காலனை சந்தித்து இமைகளை மூடிக் கொண்டார். அவர் இமைகளை மூடியதும் அந்தக் குடும்பத்தை வறுமை எனும் இமைகள் மூடிக் கொண்டது. அந்த இருளைப் போக்க ஒரே வழி சுமித்ராவின் கல்வி என்பதனை உறுதியாக அறிந்து கொண்ட பாக்கியம் இருக்கும் இரண்டு வேலைகளுடன் சேர்த்து தன் வீட்டைச் சுற்றியுள்ள மரக்கறித் தோட்டத்திற்கும் வேலைக்குப் போனாள். கொஞ்ச நாட்கள் செல்கையில், பாக்கியத்தின் வயதிற்கு ஏற்ற பிணிகள் தலைகாட்டத் துவங்கின. கால் வலி, இடுப்பு வலி, கண் பார்வைக் குறைவு என பல வருத்தங்கள் அவளைச் சார்ந்தது. அதற்குள்ளும் அவள் பலவாறாக முயற்சித்து வேலைக்குச் சென்றாள். எனினும் அதற்கு மேல் செல்ல முடியவில்லை. சுமித்ராவும் அவளை அதற்கு மேல் வேலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. குடும்ப நிலையை யோசித்த பாக்கியம் “வீட்டுக்கு பக்கத்துல தானே”

என்று மரக்கறித் தோட்டத்துக்கு மட்டும் வேலைக்குச் சென்றாள். வீட்டின் நிலையை நன்குணர்ந்த சுமித்ரா வீட்டின் அருகாமையில் சிறு பெட்டிக் கடையைத் திறந்து அதன் மூலம் குடும்பத்தையும் படிப்பையும் சமாளிக்கலாம் என எண்ணினாள். எனினும் அதற்கான முதல் அவளிடம் இல்லை. அதற்கும் ஒரு வழியை கண்டு பிடித்தவளாய் வங்கியில் கடன் எடுப்பதற்கு எண்ணி அதற்காக விண்ணப்பித்தாள். அதற்கு அவர்கள் புதிய முறையொன்றை கூறி அவளுக்கு உதவ முன்வந்தார்கள். அதாவது இவர்களின் சொந்தக் காணியில் அவர்கள் கடையை அமைத்து அதற்கான பொருட்களையும் கொடுப்பார்கள். அதன் மூலம் ஈட்டும் வருமானத்தில் இருந்து மாதம் ஒரு தொகையை இவர்கள் வங்கிக்கு செலுத்த வேண்டும். இதற்கு உடன்பட்டவளாய் அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டாள். அதற்கு காணி உறுதிப்பத்திரம் வேண்டும். எனினும் முறையான பத்திரங்கள் அவர்களிடம் காணப்படவில்லை. எனினும் அவர்களுக்குரிய காணிதான். யாவரும் அறிந்த உண்மை, முதலில் செலவோடு செலவாக காணி உறுதிப் பத்திரத்தை தயாரிக்க தயாரான போதுதான் அதிகாரிகளின் முன் மரக்கறித் தோட்ட முதலாளியின் குரலோசை பெரும் இடியோசையாக அவர்களின் காதில் விழுந்தது.

“விட்டா இந்த அநாதைக ரெண்டும் மரக்கறித் தோட்டம் பூரா அவளுகளுக்கு சொந்தம் என்டு முரசு கொட்டுவாளுகள். ஐயோ பாவம் வாழ வழி இல்லாதவ கைல கொழந்தையோடயும் தகப்பனோடவும் கஷ்டப்படுறா என்டு பரிதாபப்பட்டு அவளுக்கு தோட்டத்தில வேலை பாக்கவும் அத பராமரிச்சு காவல் காக்கவும் கிணத்துப் பக்கமாக ஒரு குடிசைய அமச்சிக் கொடுத்தா இந்த நிலம் அவளுக்கு சொந்தம் என்டு ஆயிடுமா? இது என்ட நிலம். எனக்கெதிராகவே பேச வந்துட்டியல் தானெ இனி ஒரு நாழி கூட நிக்க வேணாம்”

அவர்களிடம் அதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை என்பதனை நன்கு அறிந்து வைத்திருந்தவன் சமயம் பார்த்து கத்திவிட்டான். அவன் ஒரு முதலாளி என்பதால் அவனின் வார்த்தைகளுக்கு வந்திருந்த எந்த அதிகாரியும் எதிர்த்துப் பேசவில்லை. தோற்றத்தில் மாஓ சேதுங்காக காணப்பட்டாலும் தோரணையில் ஹிட்லராக காணப்பட்டான். சுமித்ராவும் பாக்கியமும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்கள். வந்திருந்த அதிகாரிகள் திருவிழா முடிந்து செல்லும் பக்தர்களைப் போல எந்தவித பதிலுமே இல்லாமல் சென்று விட்டார்கள். பெட்டிக் கடைக் கனவு நனவாக இருந்த நிலத்தையும் குடிசையையும் சேர்த்து களைத்து விட்டது. இனி என்னதான் செய்தாலும் நிலம் திரும்ப கிடைக்கப் போவதில்லை என்று பாக்கியம் முடிவு செய்து விட்டாள். இரண்டு நாட்கள் கோயிலில் தங்கி சுமித்ராவை உயர்தரப் பரீட்சை முடியும் வரை அவளது நண்பியின் வீட்டில் வைத்துவிட்டு வாழவழி தேடி வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபார்க்க கொழும்பு நோக்கி புறப்பட்டாள். கஷ்டத்தின் மத்தியில் மாதாமாதம் பணத்தை எடுத்துக்கொண்டு இரண்டு நாட்கள் மகளோடு தங்கிவிட்டுச் செல்வாள். நண்பியாக இருந்தாலும் “எவ்வளவு நாள்தான் அவள் வீட்டில் தங்க முடியும்?” என சங்கடப்பட்டவளாய் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்தாள் சுமித்ரா. அங்குள்ள சிறுபிள்ளைகளுக்கு கற்பித்து கிடைக்கும் சிறுதொகைப் பணத்தை செலவுக்காக வைத்துக் கொண்டாள். இவ்வாறுதான் இருவரினதும் வாழ்க்கை சக்கரம் உருண்டோடியது.

இன்று பண்டாரவளை மேல் நீதிமன்றம். ஏழு வருடங்களாக போய்க் கொண்டிருந்த வழக்கின் இறுதித் தீர்ப்புநாள். வழமையான வழக்காக இருந்தாலும் வழமைக்கு மாறான விடயம் ஒன்றும் எல்லோரையும் பிரம்மிக்கச் செய்தது. ஏழு வருட காலமும் வாதியாக வாதிட்டுக் கொண்டிருந்த பெண் இன்றும் வாதியாகத்தான் இருக்கிறாள். ஆனால் அவளை ஏற்று வாதாட எந்த சட்டத்தரணியும் ஆஜராகி இருக்கவில்லை. ஏனென்றால் வாதியும் சட்டத்தரணியும் அவளே தான். தனக்காக வாதாட தன்னையே ஆஜராக்கி இருக்கின்றாள். அவளின் முதல் வழக்கு. ஏழு வருட நீதிமன்ற புலக்கத்தினால் இவ்வித பயமும் இல்லாமல் வாதாடி வெற்றியை சூடிக் கொண்டாள்.

ஆம், அவள் வேறு யாருமல்ல சுமித்ராதான். ஆனந்தக் கண்ணீரும் வலி நிரம்பிய கண்ணீருமாக கண்ணங்கள் நனைந்திருந்தன. நிலத்தைப் பெற்று விட்டாலும் அதில் அவள் குடியிருக்கவில்லை. வாசிகசாலை ஒன்று அமைத்து, பொதுமக்களுக்கு அன்பளிப்பு செய்தாள். நினைத்த அவ்வளவும் நடந்தேறிவிட்டது. பாவம் பாக்கியம் தான் பாக்கியமற்றவள். மகளின் வளமான எதிர்காலத்தை காண ஆசைப்பட்டவள் இரண்டு வருடங்களுக்கு முன் கண் மூடினாள்.

தாய் விரும்பியதைப் போலவே கல்வி எனும் கவசத்தை ஏந்தி அடிமைத் தனத்துடன் போராடி உரிமைகளைக் கைப்பற்றும் வீரப்பெண் ஜான்சியாக சுமித்ரா வாழ்க்கையை தொடருகிறாள்.

ஷாபியா நதீம்

Comments