ஐ.நாவின் அறிக்கையும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் இன அழிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

ஐ.நாவின் அறிக்கையும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் இன அழிப்பும்

உலக வரலாற்றில் புதிய உலக ஒழுங்கின் பின் தேசிய இனங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் அற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. இனத்தினாலும் மதத்தினாலும் அடையாளப்படுத்தப்பட்ட சிறுபான்மைத் தேசிய இனங்களின் இருப்புக்கான பாதுகாப்பு அனுசரணையுடன் கூடிய அரசுகளின் பொருளாதார நலன்களுக்காகவும் அரசியல் ஆதிக்கத்திற்காகவும் அத்தகைய உத்தரவாதங்களை அழித்து வருகிறது. இதன் வரிசையில் மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை சர்வதேச மட்டத்தில் பாரிய தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது. ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான மியன்மார் அரசாங்கத்தின் நடவடிக்கையையும் அதற்கு எதிராக எழுந்துள்ள சர்ச்சைகளையும் வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை இன சுத்திகரிப்பிற்கான நடவடிக்கை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமன்றி மியன்மார் இராணுவ தளபதியை பதவியிலிருந்து நீக்குமாறும் அவருக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் மியன்மார் ஆட்சியாளருக்கு ஐ.நா சபை பணிப்புரை விடுத்துள்ளது. மேலும் 2017இல் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மார் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 20,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனிதவுரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. மியன்மார் இராணுவத்தின் அடக்கு முறையிலிருந்தும் நெருக்கடியிலிருந்தும் உயிர் ஆபத்துக்களை தவிர்க்கவும் சுமார் 7 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்துக்கு தப்பிச் சென்றதாகவும் அவ்வறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மியன்மாரில் இருந்த போது ரோஹிங்யா முஸ்லிம் பெண்களை இராணுவம் கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுக்களை அடுத்து உண்மையை அறிவதற்கு இராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்பான பங்களாதேஷின் அகதி முகாம்களில் தங்கியிருந்த மக்களை விசாரணைக்குட்படுத்தி மேற்குறித்த அறிக்கையினை ஐ.நா சபையின் மனிதவுரிமை பேரவை சமர்ப்பித்துள்ளது. அதுமட்டுமன்றி மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழ்ந்த ராக்கைன் மாநிலத்தில் மேற்கொண்ட விசாரணையிலும் ஆய்வுகளிலும் மியன்மார் இராணுவம் மீதான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து கொண்டது. இதுமட்டுமன்றி பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹாசினா, மியன்மாரின் ஆளும் கட்சி தலைவர் அங்கான் சூகி மற்றும் அந்நாட்டு முப்படைத் தளபதி மின் அவுங் ஹிளாங் ஆகியோருடன் உரையாடியதன் பிரதிபலிப்பாக ரோஹிங்யா முஸ்லிம் இன அழிப்புக்கு மியன்மார் இராணுவமே காரணம் என்றும் உடனடியாக இராணுவ தளபதி பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய ஐ.நா சபையின் கோரிக்கையை மியன்மார் அரசு நிராகரித்துள்ளது. ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளுக்கும் உண்மையை கண்டறியவும் அதற்கான தீரவை எட்டும் விதத்தில் மியன்மார் நாட்டின் சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை அமைக்க போவதாகவும் அத்தகைய குழுவே இராணுவத்தின் நடவடிக்கை பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு தீர்ப்புக்களை வழங்கும் என்றும் மியன்மாரின் ஆளும் தரப்பு பதில் அளித்துள்ளது.

அதுமட்டுமன்றி 2012 ஆம் ஆண்டு முதல் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மார் இராணுவம் அடக்குமுறைக்கு உரித்துடைய இன அழிப்பு, இனசுத்திகரிப்பு, இனப்படுகொலை போன்ற சர்வதேச விதிகளுக்கு முரண்பாடான அனைத்து விடயங்களையும் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய அடக்குமுறைகளை எதிர்த்து ஆயுதம் தாங்கிய போராட்டத்தை தொடங்கிய ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார் இராணுவ காவல்துறைக்கு எதிரான தாக்குதல்களை அவ்வப்போது நிகழ்த்தி வந்தனர். இதன் பிரதிபலிப்பாகவே மியன்மார் இராணுவம் இன அழிப்பை மேற்கொண்டு வருவதை காணமுடிகின்றது. இதே சந்தர்ப்பத்தில் மியன்மார் அரசின் படுகொலைகளை அம்பலப்படுத்த முயற்சித்த ஊடகவியலளார் மீதும் விசாரணை மேற்கொண்டும் அவர்களை கைது செய்தும் உள்ளது. அவர்கள் மீதான சட்டநடவடிக்கைக்கு ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான படுகொலை மற்றும் அவ் இன பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை பற்றிய ஆவணத்தினை தாம் மீட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் அரசுக்கு குரோதமாக தேசத்துரோக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள் என்றும் அந்த நாட்டின் இராணுவ சட்டத்தை மீறியுள்ளார்கள் என்றும் மியன்மார் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் மேற்குறித்த செய்தியளார்கள் ரோஹிங்யா முஸ்லிம்களின் வடக்கு ராக்கைன் மாநிலத்தின் கிராமம் ஒன்றில் தூக்கிலிடப்பட்ட 10 இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் தொடர்பான தகவலை திரட்டியதோடு ரோஹிங்யா இன ஆண்கள் அடைக்கலம் தேடிச்சென்ற கடற்கரை பிரதேசத்தில் வைத்து பெரும்பான்மை இன மக்களால் கொல்லப்பட்டனர் என்றும் தெரியவருகின்றது. இத்தகைய தகவலை நாட்டுக்கு வெளியே கொண்டுசெல்ல முயற்சிப்பதும் சர்வதேச மட்டத்தில் பல நாடுகள் அதிருப்தி கொண்டு இருப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளது என மியன்மார் இராணுவம் கூறுகின்றது.

அதுமட்டுமன்றி பாதுகாப்பின்மை, உணவின்மை, போதிய தங்குமிடவசதிகள் இன்மை ஆகிய நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுள்ள ரோங்கியோ அகதிகள் பாரிய இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பெண்களும் குழந்தைகளும் பாரிய அழிவுகளை எதிர்நோக்கி இருப்பதோடு ரோங்கியோ முஸ்லிம் ஆண்களை முழுமையாக அழிக்கின்ற நடவடிக்கையை மியன்மார் இராணுவம் பின்பற்றி வருகின்றது. பெளத்த மத பாரம்பரியத்தை கொண்டுள்ள மியன்மார் இன சமரசத்திற்கு பதிலாக இன அழிப்பினை விதைத்து வருவது தொடர்ச்சியான ஒரு அம்சமாக இப்பிராந்தியத்தில் நிகழ்ந்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மியன்மார் தொடர்பான நடவடிக்கையை நிராகரித்து இருப்பதும் உள்ளக விசாரணையை தொடங்கப்போவதாக அறிவித்து இருப்பதும் இலங்கை போன்றதொரு நிலைக்குள் பிரவேசிப்பதாகவே அமையவுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மியன்மார் தொடர்பான இராணுவத்தின் அணுகுமுறையை நிராகரித்திருப்பதோடு மியன்மார் இராணுவத்திற்கு வழங்கி வருகிற நிதியை நிறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பு மியன்மார் இராணுவத்தை கண்டித்து அறிக்கை வழங்கியுள்ளது. இதே சந்தர்ப்பத்தில் ஐ.நாவின் நடவடிக்கை மீறப்படுகின்ற போது ஐ.நாவின் பொதுச்சபை, பாதுகாப்பு சபை என்பன இலங்கை சார்ந்து முன்வைக்கப்பட்ட அதே உத்திகளை பின்பற்றும் என்பதும் கவனத்திற்குரிய விடயம். இஸ்லாமிய நாடுகள் மீதான அதிருப்தியை கொண்டிருக்கும் அமெரிக்கா, ரோஹிங்யா முஸ்லிம்களைப் பொறுத்து தீர்க்கமான சில முடிவுகள் எடுப்பதற்கு முயற்சிக்கின்றது என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம் மியன்மார் இராணுவத்திற்கும் சீனாவிற்கும் உள்ள உறவுகளும் தேரவாத பெளத்தம் மீதான உலகளாவிய அதிருப்தியும் இந்த நடவடிக்கையின் தீவிரத்துக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவிற்கும் அங்கான் சூகிக்குமான உறவு எதிர்பார்க்கப்பட்ட சாதகமான வாய்ப்புக்களை அமெரிக்காவிற்கு கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ரோஹிங்யா முஸ்லிம்களின் விவகாரத்தை முதன்மைப்படுத்த ஆரம்பித்தது. மியன்மாரில் நிகழ்ந்தவை இன அழிப்பு நடவடிக்கை என ஐ.நாவும் அமெரிக்காவும் கூறிவந்தபோதும் அதனை இலங்கையைப் பொறுத்த விடயத்தில் தவிர்த்து வருவதும் பிராந்தியம் சார்ந்த கொள்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட இன அழிப்பை ஏற்க முடியாத ஐ.நாவும் அமெரிக்காவும் மியன்மாரை மட்டும் குற்றம் சாட்டுவது அரசியல் உள்நோக்கத்திற்கானது என கருதவேண்டியுள்ளது. ஆனாலும் ரோஹிங்யா முஸ்லிம்களும் அவர்கள் மீதான மியன்மாரின் அடக்கு முறைகளும் ஐ.நா சபையால் கவனத்திற்கு

உட்பட்டு இருப்பது இன அழிப்பை தவிர்க்கவா அல்லது இன அழிப்பின் பின்னான பதிவுகளை வெளிப்படுத்துவதற்காகவா என்ற சந்தேகம் நியாயமானது. காரணம் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இராணுவ உதவிகளையும் பொருளாதார ஒத்துழைப்புக்களையும் வழங்கிய அமெரிக்கா இப்போது இனஅழிப்புத் தான் என்று கூறுவது நியாயப்படான ஓர் அம்சமாக கொள்ள முடியாதுள்ளது. இத்தகைய சந்தரப்பத்தில் மியன்மாரை கண்டிப்பதும் இராணுவ தளபதியை அகற்ற முயல்வதும் மியன்மாரை அரசியல் ரீதியாக கையாள்வதற்கான உத்தி என்றே கருதவேண்டியுள்ளது. இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் போர் நடந்த காலத்தில் வருகை தந்த போதும் போரை தடுத்து நிறுத்த எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பின்னர் ஜெனிவா அரங்கைத் திறந்து அரசியல் களமாக அதனை பயன்படுத்த திட்டமிட்டனர். எனவே அத்தகையதொரு அணுகுமுறையை மியன்மாரில் மேற்கொள்ள ஐ.நா சபையின் அறிக்கையும் அமெரிக்காவின் அணுகுமுறையும் அதனையே வெளிப்படுத்துகின்றது.

எனவே ஐ.நா சபை மியன்மார் தொடர்பாக முன்வைத்த அறிக்கை அரசியல் களத்துக்கான ஆரம்ப புள்ளியாகும். அப்பிராந்தியத்தில் மியன்மார் சார்ந்த நாடுகள் மீதான அதிருப்தியை கையாள்வதற்கும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் முயல்வதை அவதானிக்க முடிகிறது. ரோஹிங்யா இன முஸ்லிம்கள் 2012 இலிருந்து தொடர்ச்சியாக இன அழிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதனை தடுத்து நிறுத்த முடியாத ஐ.நா சபை தனது எல்லைக்குட்பட்ட பலவீனங்களை வைத்துக் கொண்டு மியன்மார் இராணுவத்தை நெருக்கடிக்குள்ளாக்க முடியும் என கருதுவது வேடிக்கையானது.

 

 

கலாநிதி

கே.ரீ. கணேசலிங்கம்

யாழ்.பல்கலைக்கழகம்

 

 

Comments