இனவாதிகளின் பூச்சாண்டியே காத்தான்குடியில் வஹாபிசம் | தினகரன் வாரமஞ்சரி

இனவாதிகளின் பூச்சாண்டியே காத்தான்குடியில் வஹாபிசம்

முஸ்லிம் சமூகத்தின் மீது இனவாதச் சக்திகள் தொடுக்கும் குற்றச்சாட்டுக்கள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி, முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டிவருவதை தொடர்ந்து அவதானிக்க முடிகிறது. இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைப்பதன் மூலம் தமது வங்குரோத்து அரசியலை முன்னெடுக்கும் தீய சக்திகள் விடயத்தில் மக்கள் விழிப்படைய வேண்டும். இந்தச் சக்திகளின் பின்னணி என்ன? அந்தப் பின்புலத்துக்கு நீர்வார்ப்பது யார்? என்பதைக் கண்டறிந்து உரிய பதிலடிகொடுக்க மக்கள் தயக்கம் காட்டக்கூடாது. பொதுபலசேனாவினதும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளியான இன்பராசவும், தேசிய சுதந்திர முன்னணியின் முஸம்மிலும் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் ஆதராமற்றவையாகவே காணப்படுகின்றன. பெரும்பான்மை இனமக்களையும், தமிழினத்தையும் சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடுவதே இவர்களது ஒரே நோக்கமாகும்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இருவருக்கும் புலிகளின் போராளிகள் ஆயுதங்களை விற்றதாக இன்பராசா வெளியிட்டிருக்கும் கருத்தை திட்டமிடப்பட்ட சதியாகவே நோக்க வேண்டியுள்ளது. இது முற்றுமுழுதான ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும். எந்தவொரு ஆதாரத்தையும் காட்டாமல் அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டுக்களையே இவர்கள் சுமத்திவருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் தொடர்பு கொண்டுகேட்டபோது அவர் அளித்த பதில்களை இங்கு பதிவு செய்கின்றோம்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி இன்பராசா உங்கள் மீதும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதும் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு, மக்கள் மத்தியிலும், அதுவும் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பலத்த சந்தேகத்தை தோற்றுவித்திருக்கின்றதே?

விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வளவு செய்து நான் முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக என்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனை முற்றாக நிராகரிக்கின்றேன். என்மீதான குற்றச்சாட்டை முடிந்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு இன்பராசாவுக்கு சவால் விடுக்கின்றேன். இக் குற்றச்சாட்டின் பின்னணியில் தேசவிரோத, இனவாதச் சக்திகள் செயற்படுவதை காணமுடிகிறது.

இது எனது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கின்றது.

என் மீதான இந்த வீண் பழி தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோருக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றேன். புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரெனக் கூறப்படும் இன்பராசா கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பொன்றின் போதே இக்குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கின்றார். அவர் இவ்வளவு காலமும் எங்கிருந்தார். அப்போதெல்லாம் எதுவும் பேசாதிருந்த அவர் யாருக்காக, யாருடைய தூண்டுதலால் இந்த அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டை முன்வைக்கின்றார் எனக் கேட்க விரும்புகின்றேன்.

சிங்கள, தமிழ் சமூகங்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விடுவதே இவர்களின் ஒரே நோக்கமாகும். இதன் பின்னணியிலிருந்து இயங்குவது யார் என்பதை கண்டறிந்து அம்பலப்படுத்த வேண்டும். பாதுகாப்புத் தரப்பும், அரசும் இதனைச் செய்யவேண்டும்.

கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக தீய சக்திகள் பெரும்பான்மை மக்களை தூண்டிவிட்டனர். இன்று தனியே உங்களையும், அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் இலக்கு வைத்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அதுவும் இன்பராசாவும், தேசிய சுதந்திர முன்னணியின் முஸம்மிலும் இதில் நேரடியாகச் செயற்பட்டு வருகின்றனர். இதன் பின்னணி என்ன?

இதன் பின்னணி குறித்து நான் ஆரம்பத்திலேயே கூறியுள்ளேன். தேசவிரோத, இனவாதச்சக்திகள் முதலில் முஸ்லிம்களுக்கு எதிராக வீண்பழியை சுமத்தி வந்தனர். அவை மக்களிடம் எடுபடாத நிலையில் இன்று என்மீதும் அமைச்சர் ரிஷாத்மீதும் பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி பெரும்பான்மை மக்களையும், தமிழ்ச் சகோதரர்களையும் எமக்கெதிராக தூண்டிவிடும் ஒரு மறைமுக நாடகத்தை அரங்கேற்ற முற்படுகின்றனர். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.

விடுதலைப்புலிகளிடம் இருந்து 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதங்களை நானும் அமைச்சர் ரிஷாத்பதியுதீனும் பெற்று அதனை கிழக்கு மாகாணத்திலுள்ள மூதூர், கிண்ணியா, காத்தான்குடி உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள இளைஞர்களுக்கு வழங்கியதாக தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிப்பதோடு, ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்தமை தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அத்துடன், அவ்வாறு ஆயுதங்கள் இருக்குமாயின் அது எங்குள்ளது? விற்பனை செய்யப்பட்டுள்ளதாயின் அது யாருக்கு? எப்போது? எவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது போன்ற தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தேன்.

இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்கள் எனது கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், எனது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேசவிரோத, இனவாத சக்திகள் செயற்படலாம். நாட்டின் அமைதியை சீர்குலைத்து சாதாரண மக்களை குழப்பி நாட்டில் மீண்டுமொரு யுத்த சூழலை ஏற்படுத்துவதே குறித்த சக்திகளின் எதிர்பார்ப்பும் முயற்சியுமாகும்.

எனவே, இது சம்பந்தமாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாக முறையான தீவிர விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். அத்துடன் இவ்வாறு போலிக் குற்றச்சாட்டு முன்வைத்த தரப்பை தீர விசாரிப்பதோடு, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இவ்வாறான பிரச்சாரங்களை செய்வதற்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார்? என்பது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்வது அத்தியாவசியமாகும்.

இது தொடர்பில் மேற்கொள்ளும் விசாரணைக்கு நான் எனது பூரண ஒத்துழைப்பினை வழங்குவேன்.

ஐ.எஸ். அமைப்பின் பின்புலம் வட, கிழக்கில் உள்ளதாகவும் காத்தான்குடி வஹாபிசத்தின் பிரதேசமாக மாற்றம் பெற்றிருப்பதாகவும் பொதுபலசேனாவின் டிலந்தவிதான குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறாரே?

முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த காலத்தில் பொதுபலசேனா தொடுத்த இலக்கு வைத்த தாக்குதல்களை நாடு இன்னமும் மறந்துவிடவில்லை. அவர்கள் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் சமூகத்தை வெறுப்புக்குரிய சமூகமாகவே காண்பித்து வருகின்றனர்.

இனவாத நச்சுவிதைகளை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர். அந்த முயற்சிகளில் பின்னடைவு காணும் போது என்ன கூறுகிறார்கள்? தாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சில முஸ்லிம் அமைப்புகளும், குறிப்பிட்ட முஸ்லிம் தலைவர்களுமே எமது எதிரிகள் எனக்கூறுகிறார்கள்.

இப்போது தனிநபர் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் நானும், அமைச்சர் ரிஷாதுமே முதன்மையானவர்கள். முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்பதற்காகவும், அந்தச் சமூகத்தை ஒன்றிணைப்பதற்காகவும் நாம் குரல் கொடுக்கும் போது எமக்கிடையே பிளவுகளை உண்டுபண்ணுவதே இனவாதிகளின் இலக்காகவுள்ளது.

காத்தான்குடியிலோ, கிழக்கில் எந்தவொரு இடத்திலுமோ முஸ்லிம்களுக்கிடையில் முரண்பாடுகள்காணப்படவில்லை. இனவாதச் சக்திகள் ஐ.எஸ்.என்றும் வஹாபிஸம் என்றும் மக்கள் மத்தியில் பூச்சாண்டி காட்டிவருகின்றனர்.

மேற்குலகம் இஸ்லாத்திற்கு எதிரான சதிமுயற்சிகளில் ஈடுபடும் நிலையில் அதன் ஒரு அங்கமாகவே இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத முன்னெடுப்புகளாகும். இந்த வேளையில் முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் எமக்கிடையேயான கட்சி முரண்பாடுகளைவிட்டு,. சுயநலநோக்கங்களை புறந்தள்ளி ஒரே சமூகமாக ஒற்றுமையெனும் கயிற்றை இறுகப்பிடித்துக் கொள்ள வேண்டும். இனவாதிகளுக்கும், சதிகாரர்களுக்கும் அதன் மூலமே பதிலடி கொடுக்க முடியும்.

இன மத மொழி பேதம் கடந்து தமிழ் மக்களோடும், சிங்கள மக்களோடும் உறவுகளை மேம்படுத்திக்கொள்ளமுன்வர வேண்டும்.

தமிழ் மக்களுடனான நல்லுறவைச் சீர்குலைக்க இன்பராசா போன்ற சதிகாரர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் தீனியாகிவிடக் கூடாது. தமிழ் – முஸ்லிம் உறவு எந்தவிதத்திலும் இனிமேல் பிளவுபட இடமளிக்கக் கூடாது. அதே போன்று தெற்கில் சிங்கள – முஸ்லிம் உறவும் பாதுகாக்கப்படவேண்டும். என்பதே எமது குறிக்கோளும், நோக்கமுமாகும்.

 

Comments