எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் ‘என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா’ | தினகரன் வாரமஞ்சரி

எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் ‘என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா’

சர்வதேச சந்தையுடன் தொடர்பு கொள்வதற்கான இலங்கை மக்களின் இடையறாத ஆவலைப் பூர்த்தி செய்வதற்கான அடித்தளமாக ‘என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா’ கருத்திட்டம் அமைந்துள்ளது.

மொனராகலையில் இடம்பெற்ற என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியைப் பார்வையிட வந்திருந்த மக்களிடமிருந்து வெளிப்பட்ட ஆவலும் எதிர்பார்ப்பும் இதனை உறுதிப்படுத்தின.

புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பித்து எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கிக் கொள்வதற்கு இளைஞர், யுவதிகளிடையே காணப்பட்ட எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இக்கண்காட்சியில் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா என்றால் என்ன அதில் எம்மாலும் கடன்பெற முடியுமா என அதன் அடிப்படையைப் புரிந்து கொள்ளாத சாதாரண மக்களுக்கான வழிகாட்டல் மற்றும் ஆலோசனை என்பனவற்றை வழங்குவதற்கும் அது தொடர்பில் உதவுவதற்கும் இக்கண்காட்சியில் அதிக வாய்ப்புகள் காணப்பட்டன. குறிப்பாக அரச, தனியார்துறை வங்கிகள் காணப்பட்ட வலயத்துக்கு பெருமளவில் மக்கள் படையெடுத்திருந்தனர்.

எந்த வங்கிக்குப் போவது என மலைத்து நிற்கும் அளவிற்கு அத்தனை வங்கிகளும் அங்கு தம் காட்சிக் கூடங்களை அமைத்திருந்தன. வங்கிகளிலுள்ள அதிகாரிகள் மிகுந்த சுறுசுறுப்புடன் தம்மிடம் வருகின்ற மக்களை அமரச்செய்து வழிகாட்டல்களை வழங்கியதைக் காணமுடிந்தது. இதில் சிங்கள மக்களைப் போலவே தமிழ், முஸ்லிம் மக்களும் பேரார்வம் கொண்டிருந்தமையைக் குறிப்பிட வேண்டும்.

கடன் பெறுவது எப்படி? அதற்காக என்ன செய்யவேண்டும். எவ்வளவு கடன் பெறலாம், அதை மீளச் செலுத்துவது எப்படி? அதற்கான சாட்சியாளர்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பில் தெளிவாக விபரங்கள் வழங்கப்பட்டன. உண்மையில் தாமும் கடனொன்றைப் பெற்றுக் கொண்டு ஏதாவது தொழில் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே அக்கண்காட்சிக் கூடங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதைக் காண முடிந்தது. அவர்கள் வெறுங்கையுடன் செல்லாமல் கைகளில் கடன் பெறுவதற்கான பத்திரங்களையும் எடுத்துக் சென்றமை அதனை மேலும் உறுதிப்படுத்தியது. அத்தகைய சிலரிடம் நம் பேச்சுக்கொடுத்த போது, அவர்கள் மிக சந்தோசமாக பதிலளித்தனர். ஒவ்வொருவரும் தமக்குள்ள வசதி வாய்ப்புக்களைக் கொண்டு புதிதாக தொழில் முயற்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்தனர்.

குறிப்பாக கிராமிய கைத்தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் அதனைச் சார்ந்து வாழும் மக்கள் தமது செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் கருத்துக்களை தெரிவித்தனர்.

ஏற்கனவே, தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களைத் தவிர மேலும் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை ஒரு வருடகாலத்தில் புதிதாக உருவாக்குதே என்டர்பிரைஸ் ஸ்ரீலங்காவின் நோக்கமாகும். அதற்கு செயலுரு கொடுக்கும் வகையிலேயே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை சதந்திரமடைந்து 70 வருட காலமாகிறது. எனினும் நாடு எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவதில் காலத்துக்குக் காலம் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட்டன. 30 வருட யுத்தம், சுனாமி, ஜூலை கலவரம், இயற்கை அனர்த்தங்கள் என நாடு பல இடர்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அத்துடன் எக்காலத்திலும் சாதாரண மக்களுக்குக் கைகொடுத்து அவர்களை சொந்தக்காலில் நிற்கவைக்கும் செயற்றிட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறலாம்.

மாறிமாறி வந்த அரசாங்கங்கள் பல்வேறு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் அவை எதிர்பார்த்த பலனைப்பெற்றுக்கொடுக்கவில்லை என்றே கூறமுடியும். இதனால் அடிமட்ட மக்கள் மற்றும் கிராமிய மக்கள், கூலித் தொழிலை நம்பியும் அல்லது எவரையாவது சார்ந்துமே வாழும் நிலை தொடர்ந்துள்ளது.

1978ல் திறந்த பொருளாதாரக் கொள்கை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டுத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்ட போதும் கிராமிய மட்டத்தில் அம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு அதன் மூலம் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள் மிக அரிதாகவே காணப்பட்டன.

அத்தகைய கடந்தகால பின்னணியைக் கடந்து புது யுகம் ஒன்றை உருவாக்கும் நோக்கை இலக்காகக் கொண்டே ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தூர தரிசனப் பார்வையில் உருவான ஒரு கருத்திட்டம். 10 இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் அவரது இலட்சிய நோக்கை நிறைவேற்றும் ஊடகமாக இக்கருத்திட்டம் அமைந்துள்ளது.

2025ஐ நோக்கிய பயணத்தில் தனியார் துறையின் பங்களிப்போடு புதிய முதலீடுகள், வர்த்தக வலயங்கள், கைத்தொழில் பேட்டைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கிராமிய மட்ட அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட பல்வேறு செயற்திட்டங்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளை அபிவிருத்தி செய்து அங்கும் முதலீடுகளை அதிகரிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனோடு இணைந்ததாக புதிய தொழில் முயற்சிகளை உருவாக்கி இவற்றினூடாக பெருமளவு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதே பிரதமரின் நோக்கம்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பயணத்தின் முக்கிய மைல் கல்லாக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கருத்திட்டம் அமைகிறது. மொனராகலையில் நடத்தப்பட்ட என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி போன்று வடமத்திய மாகாணத்தை இலக்காகக்கொண்டு அநுராதபுரத்திலும் வடக்கை இலக்காகக் கொண்டு யாழ்ப்பாணத்திலும் கண்காட்சிகள் நடத்தப்படவுள்ளன. இது அந்த மாகாண மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

மொனராகலை ‘என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா கண்காட்சியில் பங்கேற்ற ‘லங்கா புத்ர’ வங்கியின் அதிகாரி சீ.பி. லியனகமகேவுடன் நாம் கலந்துரையாடியபோது, “நாம் மக்களிடம் சென்று அவர்களுக்குக் கடன் வெறுவதற்கு உதவுகின்றோம். இப்போதும் எமது வங்கியில் பல்வேறு கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு பெருமளவிலானோர் தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்களின் எதிர்காலம் சிறப்புறும் என்ற நம்பிக்கை எமக்குண்டு” என்றார்.

நாம் சந்தித்த ஹட்டன் நெஷனல் வங்கி அதிகாரியான லோவித்த முத்துக்குமாரன் எம்மிடம் கருத்துத் தெரிவித்தபோது, நாம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கத் தீர்மானத்துள்ளோம். விவசாயிகள் கைத்தொழிலாளர்கள் பெருமளவில் எமது வங்கியில் கடன்பெறப்பதிவு செய்துள்ளனர். நாம் இக்கடன்களை விரைவாக வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

உண்மையில் வங்கிகள் சாதாரண மக்களுக்கு கடன் வழங்குவதைத் தவிர்க்கவும் தட்டிக் கழிக்கவுமே கடந்த காலங்களில் செயற்பட்டுள்ளன. அந்த நிலையை என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா கடன் திட்டங்கள் முற்றிலும் மாற்றியுள்ளன.

16 கடன் திட்டங்களில் நமக்குப் பொருத்தமானது எது என நாம் தேர்ந்தெடுத்து அக்கடனைப் பெற்றுக்கொள்ளலாம். சில கடன்கள் நாம் எதிர்பார்ப்பதைவிட மிகக் குறைந்த வட்டி வீதத்தையே கொண்டுள்ளது. அதிலும் பட்டதாரிகளுக்கான தொழில் முயற்சிக்கான கடனுக்கு 15 இலட்சம் வட்டியில்லாக் கடனாக வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

லோறன்ஸ் செல்வநாயகம்

Comments