"எமக்கென ஒரு காணித்துண்டு கட்டாயமாக இருக்கவே வேண்டும்!" | தினகரன் வாரமஞ்சரி

"எமக்கென ஒரு காணித்துண்டு கட்டாயமாக இருக்கவே வேண்டும்!"

மாத்தளை மாநகர பிரதி மேயர் சந்தனம் பிரகாஷ் தனது ஆரம்ப கல்வியை மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரியிலும், உயர்கல்வியை மாத்தளை இந்துக் கல்லூயிலும் கற்றார். உதைப்பந்தாட்ட வீரராக, விளையாட்டுத்துறை தொண்டர் ஆசிரியராக பணியாற்றிய வேளையில் அரச துறையில் தொழில் வாய்ப்பு கிடைத்தது. அக்காலப்பகுதியில் நிலவிய அரசியல் நிலைமைகளால் 2002 ஆம் ஆண்டு தொழிலை இழக்க நேரிட்டதாகவும் அதே ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் மாத்தளை மாநகரசபைக்கு இ.தொ.கா. சார்பில் போட்டியிட்டு மாநகரசபை உறுப்பினராக தெரிவானார்.

இவ்வாண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் இ.தொ.கா சார்பில் போட்டியிட்டு மாத்தளை மாநகர பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள சந்தனம் பிரகாஷ் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்.

கேள்வி: உங்களது அரசியல் பிரவேசம் எப்படி ஆரம்பமானது?

பதில் : உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதி அது. அப்போது நண்பர்கள் மற்றும் சமூகநலன் விரும்பிகளுடன் இணைந்து பல்வேறு சமூக செயற்பாடுகளைச் செய்துவந்தேன். இவ்வாறு பொது விடயங்களில் அதிகளவு ஈடுபாடு கொண்டிருந்ததால் அரசியல் தலைவர்களுடன் தொடர்புகொள்ளக்கூடியதாக இருந்தது. 2002ம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானபோது மாத்தளை மாநகர சபைத் தேர்தலில் இ.தொ.கா.வின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாத்தளை மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். இதுவே எனது அரசியல் பிரவேசமாகும். அரசியல் ரீதியில் தான் இந்த நிலைக்கு உயர இ.தொ.கா. தலைவரும் பொதுச்செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் உறுதுணையாக இருந்து வருகிறார். எனக்கு அனைத்து விதத்திலும் உதவிகளை வழங்கிய மத்திய மாகாண சபை உறுப்பினர் முத்து சிவஞானத்தையும் நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.

கேள்வி : கடந்த காலங்களைப் போலல்லாமல் இம்முறை நடைபெற்ற புதிய முறையிலான தேர்தல் தந்த அனுபவம் என்ன?

பதில் : புதிய முறையிலான தேர்தல் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகமான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். தோல்வியடைந்த பலர் உறுப்பினர்களாகியிருக்கிறார்கள். இதனால் நிர்வாக ரீதியில் செலவு அதிகரித்துள்ளது. இந்தச் செலவை குறைத்திருந்தால் பல அபிவிருத்தி வேலைகள் செய்யக்கூடியதாக இருந்திருக்கும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் 11 வட்டாரங்களிலும் 13 பேர் நேரடியாகவும் 8 பேர் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டார்கள். தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரையில் இந்த 21 உறுப்பினர்களில் 4 தமிழ் உறுப்பினர்கள் தெரிவாகியிருக்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் போதிய தெளிவின்மையே இதற்கான பிரதான காரணம்.

கேள்வி: பிரதி மாநகர மேயராக உங்களது பணிகள்...?

பதில்: 2002ம் ஆண்டு முதல் மாத்தளை மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலம் தொடக்கம் மாத்தளை வாழ் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுடன் இணைந்து சிறந்த முறையில் சேவையாற்றியதால் இம்முறை நடைபெற்ற தேர்தலில் மக்கள் என்னை மீண்டும் தெரிவு செய்திருக்கிறார்கள். எனது அதிகாரத்திற்குட்பட்ட சேவையை மக்களுக்கு சிறந்த முறையில் செய்து வருகிறேன். அவர்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நான் நன்கு கற்றுக் கொண்டிருக்கிறேன்.

மாத்தளை மாநகர வீதிகளின் புனரமைப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீண்டகாலமாக மாநகரப்பகுதியில் குடிநீர்ப் பிரச்சினை நிலவி வருகிறது. அதனை நிவர்த்தி செய்யுமுகமாக மாத்தளை பெரும்பாகப் பகுதியை உள்ளடக்கிய குடிநீர்த்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகத்தை கொண்டுவரவுள்ளோம். மாநகரில் 90 வீதம் மின்சார பயன்படுத்தப்படுகிறது. எஞ்சிய 10 வீதமானோருக்கும் மின் இணைப்பை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வேலை வாய்ப்பின்றி இருக்கும் படித்த இளைஞர் யுவதிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டியுள்ளேன். இவர்களுக்கு அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறேன். வறுமையிலுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு சுயதொழில் முயற்சிகளை ஏற்படுத்தியுள்ளேன். நகர மக்களின் வரிச்சுமையற்ற, அவர்கள் செலுத்தும் வரிப்பணத்துக்கு பெறுமதியளிக்கக்கூடிய விதத்தில் ஊழலற்ற நிர்வாகமொன்றை மாத்தளை மாநகரம் கொண்டிருக்கிறது.

மாத்தளை மாநகரம் சகலரும் சமமாக வாழும் பிரதேசமாக இன ஐக்கியத்திற்கான முன்னுதாரணமாக விளங்குகிறது என்றால் மிகையாகாது. மக்கள் தத்தமது கலை, கலாசார பாரம்பரியங்களை சிறந்த முறையில் பேணி வருகின்றனர்.

கேள்வி: இ.தொ.காவுடன் இணைந்த உங்கள் அரசியல் பயணம் எப்படியிருக்கிறது?

பதில் : இந்திய வம்சாவளி மக்கள் எதுவித உரிமைகளும் இல்லாத நிலையில் நாடற்றவர்களாக இருந்தனர். இந்த மக்களுக்கு உரிமையைப் பெற்றுக்கொடுத்தவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான். அவரது வழியில் இ.தொ.காவின் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் செயற்பட்டு வருகிறார். இ.தொ.கா. ஆலமரம் போன்றது. அதனை எவராலும் அசைக்க முடியாது. எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் இ.தொ.கா பலம் என்னவென்பது எல்லோருக்கும் தெரியவரும்.

கேள்வி : பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளது. இதுபற்றிய உங்களது கருத்தென்ன?

பதில் : தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஏனைய தொழிற்சங்கங்களும் இதற்கான சிறந்த முடிவை எட்ட வேண்டியது அவசியமாகும்.

இரண்டு வருடங்களுக்கொரு தடவை கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதுடன் காலத்துக்குக் காலம் சம்பளம் தொடர்பாக பேசப்படுவதும், பேச்சுவார்த்தைகள் இழுத்தடிப்பு செய்யப்படுவதும் காலங்கடத்தும் நடவடிக்கையாகும். தொழிலாளர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். இவ்விடயத்தில் தொழிற்சங்க அரசியல் பேதங்களை ஒருபுறம் வைத்துவிட்டு ஒருமித்து குரல்கொடுத்து செயற்பட்டால் குறித்த இலக்கை அடையக்கூடியதாக இருக்கும்.

கேள்வி : பெருந்தோட்டத்துறை வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. கண்டி, மாத்தளை மாவட்டங்களிலுள்ள தோட்டங்கள் தனியாருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகவும், காணிகள் சூறையாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

பதில் : கண்டி, மாத்தளைப்பகுதி பெருந்தோட்டங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் அவை வனாந்தரங்களாக மாறி வருகின்றன. தொழிலாளர்கள் பெருந்தோட்டத்துறையை கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு வேலை தேடிச்செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் தொழிலாளர்கள் மீண்டும் குடிசை வாழ்க்கைக்கே இட்டுச்செல்லப்படுவார்கள். தனியாரின் ஆக்கிரமிப்பு காரணமாக தோட்டக்காணிகள் சூறையாடப்படுகின்றன. காணிப்பகிர்வுத் திட்டத்தில் 350 பேருக்கு காணி வழங்கினால் அதில் 50 பேரளவிலேயே தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஐந்து முதல் பத்து வீதம் வரையான சிறுபான்மையினரே அதன் பலனை அடைகின்றனர். லயன் அறைகளுக்குப் பதிலாக தனித்தனி வீடுகள் அமைக்கும் திட்டம் மிகவும் மந்தகதியிலேயே இடம்பெற்று வருகிறது. இவ்விடயத்தில் அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கும் மலையக அமைச்சர்கள் தலையிட்டு தோட்டத் தொழிலாளர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும். இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும் வீட்டுத்திட்டத்தை தமது ஆட்சிக்காலத்திலேயே நிறைவேற்ற வேண்டும்.

காலங்காலமாக பெருந்தோட்டத்திலேயே வாழ்ந்துவரும் முதியோருக்கு தேவையான சகல உதவிகளையும் செய்வதற்கு அமைச்சர்கள், சமூக நலன் விரும்பிகள் முன்வர வேண்டும். நமது இருப்பை தக்கவைத்துக்கொண்டு எதிர்கால சந்ததிக்கு நாம் ஆக்கபூர்வமாக எதையேனும் விட்டுச்செல்ல வேண்டும். அது நமக்கென ஒரு காணித்துண்டாகவே இருக்க வேண்டும்.

நேர்கண்டவர் :டி.வசந்தகுமார்...

Comments