சார்க் முடங்கினாலும் பிம்ஸ்டெக் நிலைத்திருக்கும்... | தினகரன் வாரமஞ்சரி

சார்க் முடங்கினாலும் பிம்ஸ்டெக் நிலைத்திருக்கும்...

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா வலய நாடுகள் அமைப்பின் (BIMSTEC) புதிய தலைமை என்ற வகையில் இலங்கைக்கு, உறுப்பு நாடுகளின் துரித ஒத்துழைப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது. இது சுலபமான காரியம் அல்ல. ஆயினும் அதிர்ஷ்டவசமாக இந்த முயற்சிக்கு பிராந்தியத்தின் முக்கிய பொருளாதார சக்தியான இந்தியாவிடமிருந்து அதிகபட்ச ஆதரவை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான கருத்து முரண்பாடுகள் காரணமாக, பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பை (SAARC) ஊக்குவிப்பதற்கான எந்தவித மனநிலையிலும் இந்தியா இல்லை என்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வலியுறுத்தி வருகின்றார். இந்திய பாகிஸ்தான் முரண்பாட்டினால் சார்க் நாடுகளுக்கிடையில் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துவதை விட பாகிஸ்தான் ஒரு உறுப்பு நாடாக இல்லாத BIMSTEC அமைப்பை ஊக்குவிப்பதும் வலுப்படுத்துவதும் தமக்கு வசதியானதாக இருக்கும் என இந்தியா கருதுகின்றது. சில இந்திய ஆய்வாளர்கள் பாகிஸ்தானை தவிர்த்தும், மியான்மார் மற்றும் தாய்லாந்து ஆகியவற்றை இணைத்தும் BIMSTEC, SAARC என அழைக்கின்றனர்.

2016 ஆம் ஆண்டு சார்க் உச்சி மாநாட்டை இரத்து செய்ததன் பின்னர் கோவாவில் 3வது BIMSTEC உச்சி மாநாடு கூடியபோது, மோடி சார்க் மற்றும் பிம்ஸ்டெக் பற்றிய தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தினார். அத்தோடு பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா (BRICS) ஆகிய மிகப்பெரிய ஐந்து பொருளாதார நாடுகளுடனான ஒரு கூட்டு நிகழ்வாக BRICS-, BIMSTEC உச்சி மாநாட்டை நடத்தியிருக்கின்றார்.

ஆகஸ்ட் 30 ஆம் திகதி பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் உரையாற்றிய மோடி, BIMSTEC அமைப்பின் அனைத்து நாடுகளும் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் வேண்டி நிற்பதாகவும் பிராந்தியத்தின் உறுப்பு நாடுகளுக்கிடையே சகல துறைகளிலும் நட்புறவு இருந்தால் மாத்திரமே இது சாத்தியமாகும் என்றும் கூறியிருக்கின்றார். ஒவ்வொரு நாடும் சமாதானத்தையும், சுபீட்சத்தையும், மகிழ்ச்சியையும் தேடுகின்றன. ஆயினும் ஒன்றோடொன்று பிணைந்த உள்ளக தொடர்புகளைக் கொண்ட இன்றைய உலகில், இதனை எம்மால் தனியாக அடைய முடியாது எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

BIMSTEC கரையோரக் கப்பல் மற்றும் மோட்டார் வாகன உடன்படிக்கைக்கான ஆயத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்திய பிரதமர் அழைப்பு விடுத்தார். 1997 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பாங்கொக் பிரகடனத்தின் மூலமே BIMSTEC அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.

வங்காள விரிகுடா நாடுகள் அபிவிருத்தி, வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆகிய அபிலாஷைகளை கொண்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் வலியுறுத்தி இருக்கின்றார்கள். BIMSTEC அமைப்பானது பிராந்திய தொடர்புகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றை அமுல்படுத்துவதற்கான இயற்கையான இயங்குதளமாக இருக்கின்றதனால் இது சாத்தியமாகின்றது.

வங்காள விரிகுடா பிராந்தியம் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட புவியியல் பிரதேசமாகும். மிக முக்கியமான கடல் மார்க்கங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இப்பிரதேசம், கிழக்கிந்திய கரையோரம், பங்களாதேஷ் மற்றும் மியான்மார் எல்லைப் பிரதேசம், தெற்கே தாய்லாந்து மற்றும் மலேசியா முதல் இந்தோனேசியாவின் சுமாத்ராவின் வடக்கு கரையோரம் வரையும் பரந்து காணப்படுகின்றது. இதனாலேயே வங்காள விரிகுடா ஒரு மூலோபாய கடல்சார் கேந்திரமாக வளர்ந்து வருகின்றது.

கடலோர வர்த்தகம் மற்றும் கடல்சார் இணைப்பு, இவை அனைத்திற்கும் மேலாக, கலாசார மற்றும் பழமையான நாகரிக தொடர்புகளை கொண்டிருப்பதுடன் இப்பிராந்தியத்தில் அதனை வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

பண்டைய காலம் தொட்டு நீர் வழிகள் ஒரு முதன்மை வர்த்தக மார்க்கமாக பயன்படுத்தப்பட்டு வருவதுடன், கடலோர தொழில் முயற்சிகளின் வளர்ச்சிக்கு செறிவான மக்கள் தொகை நிறைந்த நாடுகளுக்கு அது சாதகமாக அமைந்திருக்கின்றது. இந்தப் பின்னணியிலேயே வங்காள விரிகுடாவில் இந்தியாவின் கடல்வழி தொடர்புகள் பற்றி இந்த அறிக்கை ஆராய்கிறது. இந்தியாவிற்கும், விரிகுடாவை அண்மித்த நாடுகளான பங்களாதேஷ், மியன்மார், இலங்கை, இந்தியாவின் அந்தமான் தீவு மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு இடையிலான தொடர்பு, வர்த்தகம், மக்கள்தொகை, நிதி தொடர்புகள் ஆகியவற்றை பொருத்தவரையில் இப்பிராந்தியம் சாத்தியமான வாய்ப்புகளையும் வளங்களையும் கொண்டிருக்கின்றது.

BIMSTEC அமைப்பானது தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் (ASEAN), ஐரோப்பிய ஒன்றியம் (EU) போன்ற மிகவும் வெற்றிகரமான பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பாக வளர்ச்சி பெறத்தக்க சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கின்றது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், வறுமை ஒழிப்புத் திட்டம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம், சக்திவளம், காலநிலை மாற்றம், சுற்றுலா ஆகிய துறைகள் உட்பட வங்காள விரிகுடா அமைப்பின் கீழ் வரும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய சுமார் 14 செயற்குழுக்கள் ஊடாக பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்கும் ஆணையை BIMSTEC கொண்டிருக்கின்றது.

இருப்பினும், சார்க் அமைப்பின் தோல்விகளில் இருந்து BIMSTEC படிப்பினை பெற வேண்டும். நிறுவனத்தை பலப்படுத்துவதற்கு உறுப்பு நாடுகள் குறிப்பிடத்தக்க வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுதல் வேண்டும். இல்லையேல் தொடர்ந்தும் குறைந்த செயலாற்றுகையையே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

BIMSTEC அமைப்பினை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதில் இந்தியாவிற்கு முக்கிய பங்கு இருக்கின்றது. அத்தோடு ஆரம்பத்திலேயே அதற்கு ஒரு வலிமையான நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும், ஏனெனில் BIMSTEC செயலகம் குறிப்பிடத்தக்க வகையில் வலுவூட்டப்படாவிட்டால் சாதிப்பதென்பது இயலாத காரியமாகிவிடும். ஒரு பிராந்தியம் என்பதால் பல பல்தரப்பு கூட்டுக்கான வழிகள் பிறக்க வாய்ப்பு இருக்கின்றது. அத்தோடு வலுவான பிராந்திய அமைப்புக்களை உருவாக்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.

பிரபல வெளியுறவுக் கொள்கை நிபுணர் கான்ஸ்டன்டினோ சேவியரின் கருத்தின்படி, BIMSTEC அங்கத்துவ நாடுகள் தொழில்நுட்ப நிபுணர்களை நியமித்து, பன்முக செயற்பாட்டு நிகழ்ச்சி நிரல்களை அமைத்து, உச்சி மாநாடுகளுக்கும் அமைச்சரவை மட்ட கூட்டங்களுக்கும் இடையில் உந்துசக்தியாக செயற்பட செயலகத்திற்கு சுய அதிகாரத்தை வழங்க வேண்டும். கடந்த 20ஆவது ஆண்டு விழாவில் நடந்ததைப் போல் தலைவர்கள் உயர் மட்டத்தில் சந்திக்கத் தவறும் பட்சத்தில் அதிகாரிகள் மாயாஜால வித்தைகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்பது பயனற்ற காரியமாகும். சார்க் போன்ற பன்முக முன்னெடுப்புகள் இந்தியாவின் துணை கண்ட மேலாதிக்கத்தை சமன் செய்யப் பயன்படுத்தப்பட்ட கடந்த காலங்களைப் போலல்லாது தற்போது பிராந்திய ஒத்துழைப்பு எனும் பந்து புதுடில்லி வசமே இருக்கின்றது. இதனால் BIMSTEC அமைப்பை வலுப்படுத்துவதற்கு இராஜதந்திர ரீதியிலான ஊக்கத்தை வழங்குவதன் மூலமோ அல்லது நிதி மற்றும் மனித வளங்களை வழங்குவதன் மூலமோ இந்தியா எப்போதும் மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதையும், நீண்ட தூரம் பயணிக்கத் தயாராக இருப்பதையும் உறுதிப்படுத்தி அதன் சுமையை சுமக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. “உரிய நேரத்தில் ஆரம்பித்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலமே பல்தரப்பு அமைப்பின் வெற்றியின் அரைவாசியை உறுதிப்படுத்திவிட முடியும்” என சேவியர் கூறுகிறார்.

பொருளாதார தொடர்புகள் இன்னுமொரு முதன்மைத் துறையாக அமைகின்றது. எந்தவொரு அமைப்பினதும் பிராந்திய ஒருங்கிணைப்புக்கு இது ஒரு முன்நிபந்தனையாக அமைகின்றது. BIMSTEC அமைப்பின் வெற்றி அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பொருட்கள், மூலதனம், சேவைகள் மற்றும் மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கான பெளதீக வளங்கள், சட்ட ரீதியான தடைகளை அகற்றுதல் ஆகியவற்றிலேயே தங்கியிருக்கின்றது. அத்தோடு பூகோள ரீதியிலான கட்டாய நிபந்தனைகளாகிய பாதுகாப்பு பற்றிய கருத்துப் பரிமாறல், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற பாதுகாப்பு ரீதியிலான ஒத்துழைப்பு மிக முக்கியமானதாக அமைகின்றது. அந்தவகையில் BIMSTEC பிராந்திய ஒத்துழைப்புக்களை அதிகரிக்கவும் வங்காள விரிகுடா சமூகத்தை புத்துயிர் அளிப்பதற்கும் முன்னோக்கி செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. ஆகையால் இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் குறிப்பிட்டதைப் போன்று, வங்காள விரிகுடாவின் மக்கள் ஒரு பொதுவான வரலாற்று மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை பகிர்ந்து கொண்டவர்கள் ஆவார்கள். அது பல்தரப்பு புரிந்துணர்வினதும் மற்றவர் மீதான மதிப்புணர்வினதும் அடிப்படையாக அமைகின்றது. எனவே, பிராந்திய ஒருங்கிணைப்பின் மூலம் சுபீட்சமானதொரு வங்காள விரிகுடாவை உருவாக்குவதற்கு உறுப்பு நாடுகளுக்கு மத்தியில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த வேண்டியது BIMSTEC தலைவர்களின் பொறுப்பாகும்.

சுகீஸ்வர சேனாதீர தமிழில் : அயூப் கான்

Comments