செப்டம்பர் 5 ஆர்ப்பாட்டம் வென்றது யார்...? | தினகரன் வாரமஞ்சரி

செப்டம்பர் 5 ஆர்ப்பாட்டம் வென்றது யார்...?

மக்கள் சக்தி கொழும்பிற்கு என்ற தொனிப் பொருளில் எதிரணி நடத்திய ஆர்ப்பாட்டம் புஸ்வாணமாக மாறியுள்ளதென ஆளும் தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. ஆனால் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய எதிர்ப்பு நடவடிக்கை வெற்றியளித்தாக ஒன்றிணைந்த எதிரணி தம்பட்டம் அடித்து வருகிறது. இதில் யார் வெற்றி பெற்றனர் என மக்கள் குழம்பியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இரு நாட்களுக்கு முன்னர், கூடிய ஒன்றிணைந்த எதிரணி கூட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தை அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. 5 ஆம் திகதி இறுதி நேரத்தில் அதனை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டது. அரச தரப்பு தடைகளை தவிர்க்கவே இவ்வாறு ரகசியமாக ஆர்ப்பாட்ட இடத்தை வெளியிடாதிருக்க திட்டமிடப்பட்டதாம். எது எப்படியோ அன்று காலை பாராளுமன்ற அமர்வில் உதய கம்மன்பில இடத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை அரசாங்கம் குழப்பி தாக்குதல் நடத்த இருப்பதாக மஹிந்த தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தது. சில உயிர்ப்பலிகளை கொடுத்து ஆட்சியை பிடிக்க முயல்வதாக ஆளும் தரப்பில் விமர்சிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இரண்டும் நடக்காதது பற்றி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியின் ஆர்ப்பாட்டத்திற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என ஐ.தே.க தரப்பில் முன்னதாக ஆராயப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாம். எக்காரணம் கொண்டும் கொழுப்பிற்கு இவர்கள் வருவதை தடுக்க வேண்டாம் எனவும், தாக்கவோ இடையூறு செய்யவோ கூடாது எனவும், கடுமையாக கூறப்பட்டதாம். கட்சி அலுவல்கள், அமைச்சுக் காரியாலயங்கள் என்பவற்றுக்கு அருகில் மோசமாக நடந்தாலும் கண்டுகொள்ளக் கூடாது என கட்சி தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டதாம். கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்குமாறும் அரச சொத்துக்களுக்கு செய்யும் சேதங்கள்,பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் அசெளகரியங்களை படம் பிடித்து ஆதாரங்களை திரட்ட மாத்திரம் தான் அனுமதி வழங்கப்பட்டதாம்.

எந்த இடையூறும் இன்றி ஊர்வலம் கொழும்பு வந்தடைந்தது. எவரும் தாக்கப்படவில்லை.கொழும்பை சுற்றிவளைத்து ஆட்சியை பிடிப்பதாக பரபரப்பாக அறிவித்திருந்தும் எதுவும் நடக்கவில்லை. ஆட்சியை பிடிக்காமல் ஊர் திரும்ப மாட்டோம் என சிலர் தம்பட்டம் அடித்திருந்தார்கள். ஆனால் இரவோடு இரவாக எல்லோரும் ஊர்களுக்கு திரும்பியிருந்தார்கள்.

ஓரிரு நாட்கள் கொழும்பில் கூடாரம் அடிக்கவே முன்னர் திட்டமிடப்பட்டதாம். லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தில் குழுமியிருந்த கூட்டம் இரவாகும் போது குறைய ஆரம்பித்ததாம். மறுநாள் எத்தனை பேர் எஞ்சுவார்களோ என இது தலைவர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. குடி, கும்மாளம் என சந்தோசமாக ஆரம்பித்த பயணம் இறுதியில் சப்பென்று ஆகிவிடப் போகிறது என்பதை உணர்ந்து, இரவோடு இரவாக இடத்தைக் காலி செய்ய முடிவு செய்யப்பட்டதாம். இரவு 12.01க்கு டளஸ் அலஹப்பெரும இதனை அறிவிக்க கூட்டம் நிறைவடைந்ததாம். பலர் தப்பினோம் பிழைத்தோம் என இடத்தை காலி செய்தார்களாம்.

கூட்டத்தை தக்கவைக்க முடியாமல் போனது பற்றி சில கட்சித் தலைவர்கள் வெளிப்படையாக விமர்சனம் தெரிவித்துள்ளனராம்.

நாமல் ராஜபக்‌ஷ தான் இந்த ஆர்ப்பாட்டத்தை திட்டமிட்டதால் அவர் மீதும் விரல் நீட்டப்படுவதாக தகவல். அவரை தலைவராக்கத்தான் இந்த ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டது என்பது ஆளும் தரப்பு குற்றச்சாட்டு.

எது எப்படியோ கத்தியின்றி இரத்தமின்றி இரண்டு தரப்பும் செப்டம்பர் 5 போராட்டத்தை வெற்றிகொண்டுள்ளதாக விசயமறித்தவர்கள் கூறுகின்றனர்.

ஜனாதிபதி,சுகாதார அமைச்சர் சந்திப்பு

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த வாரம் இந்தியாவின் புதடில்லி நகரில் நடைபெறும் சுகாதார ஸ்தாபன கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொண்டார். புதுடில்லி நோக்கி பயணமான விமானத்தில் அமைச்சர் அடங்கலான குழு இந்தியா வந்தடைந்தது. அதே விமானத்தில் இலங்கை திரும்புவதற்காக முக்கிய நபர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்தார். அவர் வேறு யாருமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தான்.

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் நாடு திரும்புவதற்காக அவர் காத்திருந்தார். அவரை சந்தித்த சுகாதார அமைச்சர் விமான நிலையத்தில் இருந்தவாறு பேசிக் கொண்டிருந்தாராம்.நேபாள சுற்றுலா தொடர்பில் இருவரும் கலந்துரையாடினார்கள்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த அதிகாரிகள், அமைச்சர் செல்வதற்கான ஏற்பாடுகள் தயாராகி இருப்பதாக அறிவித்தார்கள். ஆனால் தான் அங்கிருந்து செல்லும் வரை தரித்திருக்கமாறு ஜனாதிபதி, அவரிடம் கூறவே இருவருக்குமிடையிலான பேச்சு தொடர்ந்தது. உலக சுகாதார ஸ்தாபன செயற்பாடுகள், இலங்கை அரசியல் நிலைமை, குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்கள். ஜனாதிபதி இலங்கை பயணமான பின்னர் அமைச்சர் தான் தங்கும் தாஜ் ஹோட்டலுக்கு பயணமானார்.

சதுர சேனாரத்னவின் திருமணம்

சுகாதார அமைச்சர் ராஜிதவின் புதல்வர் சதுர சேனாரத்னவின் திருமணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு கொழும்பு நட்சத்திர ஹோட்டலொன்றில் நடைபெற்றது. கடந்த மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றிருக்கவில்லை. அந்த சமயம் அவர் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். அதானால் இரண்டாம் நாள் திருமண நிகழ்வில் பங்கேற்பதாக அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன் படி இரவு 8.00 மணியளவில் அவர் திருமண வைபவத்தில் கலந்து கொண்டார். மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஜனாதிபதி, அவர்களுடன் உரையாடவும் தவறவில்லை. ஜனாதிபதி இப்பொழுதே சென்றுவிடுவீர்களா? தொடர்ந்தும் இருப்பீர்களா என சதுர எம்.பி ஜனாதிபதியிடம் வினவவே தான் இருந்துவிட்டுத்தான் செல்வதாக அவர் குறிப்பிட்டார். பின்னர் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த மேசையில் அமர்ந்து விருந்தினர்களுடன் அவர் பேசிக்கொண்டிருந்ததோடு இரவு விருந்திலும் பங்கேற்றார். தற்கால அரசியல் பற்றியும் நல்லாட்சி அரசு உருவாக சதுர எம்.பி அளித்த பங்களிப்பு பற்றியும் இதன் போது சுவாரஸ்யமாக பேசப்பட்டதாம்.

இதே வேளை சதுர சேனாரத்னவின் திருமண நிகழ்வுக்கு அலரி மாளிகை ஒதுக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சை பற்றியும் இங்கு அலசப்பட்டதாக அறிய வருகிறது. திருமணத்திற்கு அலரி மாளிகை ஒதுக்கப்பட்டது தொடர்பில் எதிரணியனர் கடுமையாக சாடி வருகின்றனர்.

ஆனால் தேவையான கட்டணம் செலுத்தியே மண்டம் பெறப்பட்டதாக ஐ.தே.க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் எதிர்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அலரிமாளிகையை வழங்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. ஜ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டத்திலும் இது பற்றி கவனம் செலுத்தப்பட்டதாம்.

ரவி மீண்டும் அமைச்சர்

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்க முன்னெடுப்புகள் இடம்பெறுவதாக கதை அடிபடுகிறது. கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் பின்னர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மீண்டும் அமைச்சு பதவி வழங்குவது குறித்தும் பேசப்பட்டதாம். ரவிக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி ஆட்சேபனை தெரிவித்து வந்ததாக முன்னர் பரவலாக கூறப்பட்டது. ஆனால் தான் அவருக்கு அமைச்சு பதவி வழங்குவ​தை எதிர்க்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்தாக அறிய வருகிறது.

அதன் பின்னர் நடந்த ஐ.தே.க அரசியல் குழு கூட்டத்தில் இந்த விடயம் பற்றி பேசப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவிப்பை, ரவி கருணாநாயக்க இங்கு தெ ளிவு படுத்தினாராம். இதனையடுத்து அவரை மீண்டும் அமைச்சராக நியமிக்க ஐ.தே.க தயாராவதாக அறிய வருகிறது.

இப்னு ஷம்ஸ்

Comments