அலபாமாவில் எமக்குக் கிடைத்த அமெரிக்க வீட்டு விருந்துபசாரம் | தினகரன் வாரமஞ்சரி

அலபாமாவில் எமக்குக் கிடைத்த அமெரிக்க வீட்டு விருந்துபசாரம்

அலபாமா மாநிலத்தின் ஹன்ஸ்வில் நகரம், விண்வெளி ஆய்வுக்கு மாத்திரமன்றி விருந்தோம்பலிலும் சிறந்த நகரமாகவே காணப்பட்டது. நாம் சென்றிருந்த ஏனைய மாநிலங்களைவிட இங்கு ஹன்ஸ்வில்லில் நாம் சந்தித்த நபர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்களாகவே காணப்பட்டனர். ஹன்ஸ்விலில் நாம் தங்கியிருந்தபோது எமக்கு வழிகாட்டியாக தம்பதியர் இருவர் இணைந்து கொண்டிருந்தனர். ஐம்பது வயதுகளில் உள்ள இவர்கள் வழிகாட்டிகளாக தன்னார்வ ரீதியில் செயற்பட்டு வருகின்றனர். கணவன் அரசாங்க சேவையொன்றில் இருந்து ஓய்வுபெற்றவர். மனைவி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நாம் இருக்கும் ஹோட்டலுக்கு காலையிலேயே வந்துவிடும் இவர்கள் மாலை வரை எம்முடன் தங்கியிருந்த ஹன்ஸ்வில் நகரத்தை சுற்றிப் பார்ப்பதற்கும், எமது சந்திப்புக்கள் நடைபெறும் இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் உதவியாக இருந்தனர்.

அலபாமாவிலிருந்து புறப்படுவதற்கு முதல்நாள் அவர்கள் எமக்காக பை நிறைய பொருட்களுடன் வந்திருந்தனர். ரீஷேட்ஸ், புத்தகங்கள், நினைவுச் சின்னங்கள், சிறிய பொம்மைகள் எனப் பல பொருட்களை எடுத்துவந்து உங்களுக்குப் பிடித்தமானவற்றை தெரிவுசெய்து கொள்ளுங்கள் என்றனர். அவை அனைத்தும் அமெரிக்க நினைவுகளை பேணக்கூடிய பொருட்களாக இருந்ததால் நாமும் ஆர்வத்துடன் அவற்றைத் தெரிவுசெய்து எடுத்துக் கொண்டோம். அமெரிக்காவில் தங்கியிருந்த நாட்களில் அன்றையதினம் எமக்கு கிடைத்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது என்றே கூறவேண்டும். அமெரிக்கர்கள் பெரும்பாலும் உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்களாக இருந்தாலும், இன்னொருவருடைய சுதந்திரத்தில் வீணாகத் தலையிட மாட்டார்கள். எமக்கு வழிகாட்டியாக வந்த இரு தம்பதியினரும் ஒருபடி மேற்சென்று எமக்காக நினைவுப் பொருட்களை வழங்கிய அந்த அன்பு எம்மை நெகிழச் செய்துவிட்டது. பதிலீடாக நாம் இலங்கையிலிருந்து கொண்டுசென்ற நினைவுச் சின்னங்களை அவர்களிடம் கொடுத்தோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அலபாமா மக்கள் மற்றவர்கள் மீது காண்பிக்கும் அன்பை அவர்களிடமிருந்து அறிந்து கொண்டோம்.

அவர்கள் மாத்திரமன்றி, அலபாமா மக்கள் ஏனையவர்களுடன் அன்புடன் பழகக்கூடியவர்கள் என்பதை உணர்வதற்கு மற்றுமொரு சந்தர்ப்பமும் கிடைத்தது. எமது இந்தப் பயணத்தில் ‘ஹோம் ஹொஸ்பிட்டாலிட்டி’ அதாவது வீட்டு உபசரிப்பு என்ற அம்சமொன்று உள்ளடக்கப்பட்டிருந்தது. நாம் செல்லும் பகுதியில் ஒருவருடைய வீட்டுக்கு எம்மை அழைத்துச் சென்று உபசரிப்புக்களுடன் பழகுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். எமது அணியினர் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இரு குடும்பங்களைச் சந்திப்பதற்கு அனுப்பப்பட்டோம். என்னுடன், சக ஊடக சகோதரர்களான இந்திரஜித் மற்றும் லசந்த ஆகியோர் வந்திருந்தனர். எமக்கு ட்ரியூ மற்றும் லைன் ரெய்னோல்ட்ஸ் தம்பதியினரின் வீட்டில் உபசரிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நாம் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து சுமார் ஒரு மணித்தியாலம் பயணித்தால் அவர்களின் வீடு வந்துவிடும். வீதியின் இரு மருங்கிலும் பெரிய மரங்கள் நிறைந்த பகுதியில் நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் வீடுகள் காணப்பட்டன. ஒவ்வொரு வீட்டுக்கும் இடையில் கணிசமானளவு இடைவெளி நேர்த்தியாக காணப்பட்டது. நன்கு இருட்டிவிட்டிருந்ததால் அமைவிடங்களை சரியாக கவனிக்க முடியவில்லை. எமக்கு வழங்கப்பட்ட முகவரியை சரிபார்த்து வீடொன்றின் முன்னால் எம்மை சாரதி இறக்கிவிட்டார். நாமும் உள்ளேசென்று கதவைத் தட்டியதும் எமக்காக காத்திருந்தவர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர். கைலாகு கொடுத்து எம்மை வரவேற்க, நாம் சென்ற வீட்டின் பெண்மணி சமையலறையிலிருந்து வந்தார். எமக்கான உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததாகக் கூறிக்கொண்டு வந்த அவர் எம்மை வரவேற்று, ஹோலில் அமரச் சொன்னார். நாம் இருவரை எதிர்பார்த்துச் சென்றபோதும் அங்கு மேலும் மூவர் இருந்தனர். இலங்கையிலிருந்து மூன்று விருந்தாளிகள் வருவதாகக் கூறி அயல்வீட்டில் உள்ள நண்பர்களின் குடும்பத்தவர்களும் அங்கு வந்திருந்தனர்.

எம்மைப் பற்றிய அறிமுகங்களுடன் கலந்துரையாடத் தொடங்கினோம். தமக்கும் இலங்கைக்கும் சிறியதொரு தொடர்பு இருப்பதாகக் கூறினார்கள். நாம் சென்ற வீட்டுக்காரர்களின் மகள் மருத்துவத் துறையில் கல்வி கற்பதாகவும், பயிற்சியொன்றுக்காக சில மாதங்களுக்கு முன்னர் காலி வைத்தியசாலையில் பணியாற்றச் சென்றதாகவும் கூறினார்கள். காலிக்கும் கொழும்புக்கும் இடையிலுள்ள பயணத் தூரங்கள் தொடர்பில் தமது மகள் கூறியிருப்பதாகவும், இலங்கையின் அனுபவங்கள் பற்றி மகள் சொல்லக் கேட்டதாகவும் எம்மிடம் கூறினார்கள்.

அங்கு வந்திருந்த அயல்வீட்டு நண்பர்களுக்கு எமது அரசியலில் ஆர்வம் இருந்தது. இலங்கையின் அரசியல் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். இலங்கை அரசியல் மாத்திரமன்றி அமெரிக்காவின் குறிப்பாக ட்ரம்ப் நிர்வாகத்தின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம். ட்ரம்பிற்கு ஆதரவாக வாக்களித்த மாநிலங்களில் அலபாமா முக்கிய மாநிலமாக இருந்தபோதும், நாம் சந்தித்த அவர்களுக்கு அந்த நிர்வாகத்தில் பெரிதாகப் பிடிப்பு இருக்கவில்லை.

நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது விருத்துக்கு அழைத்தனர். அவர்களின் பாணியிலான உணவினைப் பரிமாறினர். இந்திய உணவுகளை தயாரிக்க முடியாமை தொடர்பில் மன்னிப்புக் கோரினர். இருந்தபோதும் அவர்கள் எமக்காக அன்புடன் பரிமாறிய உணவுகள் சிறப்பானதாகவே இருந்தன. சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் சென்றதே தெரியவில்லை. வெளியே வாகனச் சாரதி காத்திருந்ததால் மேலும் நேரத்தை நீடிக்காது விடைபெறத் தயாரானோம்.

அவர்களை இலங்கைக்கு வருமாறு அழைத்தோம். பல மணித்தியாலங்கள் விமானத்தில் பயணிக்க வேண்டியிருப்பதாக அவர்கள் கூறினார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது நிச்சயமாக வருவதாகக் கூறினார்கள். மிகவும் சாதாரணமான மற்றும் அன்பான குடும்பமொன்றைச் சந்தித்த மகிழ்ச்சியில் ஹோட்டலுக்குத் திரும்பினோம். எமது ஏனைய நண்பர்கள் பேராசிரியர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தனர். விண்ணியல் ஆய்வு தொடர்பான அந்தப் பேராசிரியர் தமக்கு அளித்த விருந்துபசாரம் பற்றித் தெரிவித்து மகிழ்ந்தனர்.

நான் ஹோட்டலுக்குத் திரும்பி படுக்கையில் ஒரு வகையான திருப்தியுடன் சாய்ந்த போது, அதிர்ஷ்டவசமான எனக்குக் கிடைத்த ஒரு பழைய ஹொலிவூட் திரைப்பட இறுவட்டின் நினைவு வந்தது. அது அமெரிக்காவில் இனவெறி நிலவிய அறுபதுகளின் இறுதியில் வெளியான Guess who is Coming for dinner? என்பது அதன் பெயர். அப்போது வெகு பிரபலமாக இருந்த சிட்னி பொயிட்டர் என்ற கறுப்பின நடிகர் நடித்த படம். அது கறுப்பின இளைஞரைக் காதலிக்கும் வெள்ளை அமெரிக்கப் பெண், தன் பெற்றோரிடம் தன் நண்பர் ஒருவர் இரவு உணவுக்கு வரவுள்ளார் என்று சொல்ல, பெற்றோர் விருந்து சமைத்து, மகளின் நண்பருக்காகக் காத்திருக்கின்றனர். கதவு தட்டப்பட்டதும் அம்மா, கதவைத் திறக்க, வாசலில் ஒரு கறுப்பு இளைஞன். தூக்கிவாரிப் போடுகிறது. கறுப்பனை மேசையில் அமரச் செய்து வீட்டுச் சாப்பாடு போடுவதா என்று யோசிக்கிறாள். எனினும் பண்பு கருதி உள்ளே அழைக்கிறார்கள். பின்னர் அவர்கள் பேசுகிறார்கள். பேசுவதுதான் படம். பேச்சுக்கு மத்தியில் உணவும் நடக்கிறது அந்த இளைஞன்குட்நைட் சொல்லிக் கிளம்பும் போது வெள்ளை பெற்றோர் மனம் மாறுகிறார்கள். தன் மகள் அவனைத் திருமணம் செய்யலாம் என்ற மன நிலைக்கு வருகிறார்கள்.

அக்காலத்தில் பரவலாகப் பேசப்பட்டு, கொழும்பில் வெற்றிகரமாகவும் ஓடிய இப்படத்தையும் அன்றைய தினம் நாம் சென்று வந்த இரவு வீட்டு விருந்தையும் பொருத்திப் பார்த்த நான் நிம்மதியாக உறங்கிப்போனேன்.

 

நினைவுகள் தொடரும்.....

Comments