சிரியாவின் இட்லிப் பிராந்தியம் மீதான தாக்குதல் | தினகரன் வாரமஞ்சரி

சிரியாவின் இட்லிப் பிராந்தியம் மீதான தாக்குதல்

மீண்டும் மேற்காசிய அரசியலில் சிரியாவை மையப்படுத்தி உலக அரசியல் நகர்ந்து வருகின்றது. மீண்டும் யுத்தத்திற்கான ஆரம்பத்தை நோக்கி சிரியாவும், அதற்கு பக்கபலமாக சிரியா மற்றும் துருக்கி என்பன செயல்பட, மறுபக்கத்தில் இஸ்ரேல், அமெரிக்கா என்பன தாக்குதலின் உத்திகளுக்கு பதில் கொடுக்கும் விதத்தில் உரையாடலையும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய போட்டி மேற்காசியாவை மட்டுமல்ல, உலக அரசியலையும் பாரிய யுத்தத்திற்கான நகர்வாக அமையும் என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இதனை விளங்கிக் கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிரியாவின் போராளிகள் வசமுள்ள இட்லி பிராந்தியம் மீது சிரியாவை ஆளும் அரசும் அதன் கூட்டாளியான ரஷ்யா, ஈரான் என்பனவும் இணைந்து தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளன. நடந்து முடிந்த வாரத்தில் விமானத் தாக்குதலை நிகழ்த்தியுள்ள ரஷ்யா, பாரிய தரை வழி யுத்தத்திற்கு சிரிய படைகளுக்கு உதவும் நோக்கோடு விமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக ஊடகங்கள் மற்றும் ட்விட்டர் மூலம் அமெரிக்க தரப்பு குற்றம் சாட்டுகின்றது. இதே சந்தர்ப்பத்தில் சிரியா மீது இஸ்ரேல் விமானத்தின் மூலமான ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இந்த ஏவுகணைகளில் அனேகமானவற்றை வானத்தில் வைத்து சிரியா இராணுவத்தின் ஆயுதங்கள் மூலம் தகர்த்துள்ளதாகவும் சிரியா அரசாங்கம் அறிவித்துள்ளது. இதே சந்தர்ப்பத்தில் மனிதவுரிமை மீட்பளார்களும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் ரஷ்யாவின் விமானத் தாக்குதலில் 4 பொதுமக்கள் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு பரஸ்பரம் போருக்கான ஒரு முனைப்பு தீவிரம் அடைந்து கொண்டு வரும் வேளையில் அமெரிக்கா சிரியா, ரஷ்யா, ஈரான் கூட்டணி மீது தீவிர எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இட்லிப் பிராந்தியத்தில் பொறுப்பற்ற முறையில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டால், இரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் இட்லிப் பிராந்தியத்தின் மீதான தாக்குதல் மாபெரும் மனிதாபிமான தவறு என்று பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் இத்தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை நிலை மிகக் கவலைக்கிடமான சூழலில் இருப்பதாக ஐ.நா சபை கவலை வெளியிட்டுள்ளது. இதே சந்தர்ப்பத்தில் ஐ.நா சபைக்கான அமெரிக்கா தூதுவர் நிக்கி கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் இட்லிப் பிராந்தியத்தின் எல்லை மீதான பார்வையும் சிரிய ஜனாதிபதி மீதான பார்வையும் மற்றும் ரஷ்யா, ஈரான் மீதும் அமெரிக்காவின் பார்வையும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே மாதத்தில் சிரியாவின் உள்நாட்டு போரில் ஒரு முக்கிய திருப்பத்தை மேற்குறித்த இராணுவ கூட்டு ஏற்படுத்தியது. ஈரான் மற்றும் ரஷ்யா இராணுவ உதவியோடு அலெப்போ பிராந்தியத்தை சிரிய அரசு கைப்பற்றியது. தற்போதைய யுத்தத்தையும் அவ்வாறே செய்து முடிப்பதற்கு இந்த அணி திட்டமிட்டிருக்கிறது. அதற்கான உபாயங்களை தெளிவாக அவதானிக்க முடிகிறது. குறிப்பாக இட்லிப் பிராந்திய தாக்குதலுக்கு முன்னரே ரஷ்யா பாரிய இராணுவ ஒத்திகை ஒன்றை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தது. அவ்வகை உத்தி மூலம் இராணுவ பலத்தை தெரியப்படுத்துவதோடு நிகழ இருக்கும் இட்லி பிராந்தியம் மீதான தாக்குதலை முன்கூட்டியே அறிவித்துள்ளது. மேலும் இந்த யுத்தத்தில் தாம் வெற்றி பெறுவது மட்டுமல்ல தன்னுடைய கூட்டணி வெற்றி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரஷ்யா வெளிப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் இராணுவ உத்தி இட்லிப் பிராந்தியத்தில் கைப்பற்றுதல்களை உறுதிப்படுத்துவதற்கான செய்தியையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களை வெற்றி கொள்ளும் விதத்தில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஈரான், துருக்கி சிரியா நாட்டு தலைவர்களோடு சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு ரஷ்யாவின் அணியை மேலும் விரிவாக்கியிருப்பதோடு துருக்கியை இணைத்து கொண்டு செயல்பட ரஷ்யா முனைகின்றது என்பதை காட்டுவதன் ஊடாக அமெரிக்காவிற்கு பாரிய நெருக்கடியொன்றை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த தாக்குதலில் மிகப்பிரதானமான பங்காளியாக அமெரிக்காவுடன் இணைந்திருக்கும் இஸ்ரேல், ஈரானின் ஆயுத கிடங்குகள் மீது தாக்குதல் நிகழ்த்தப் போவதாக எச்சரித்துள்ளது. இதே சந்தர்ப்பத்தில் ஈராக்கிற்கு ஈரான் வழங்கிய ஏவுகணைகள் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதலிலும் ஈராக்கின் இஸ்ரேலிய எல்லையோரத்தில் நிகழும் அத்துமீறல்களுக்கும் ஈரானின் நடவடிக்கையே முக்கிய காரணம் என்றும் இஸ்ரேல் குற்றம் சாட்டுகின்றது. இவ்வகை சம்பவங்கள் இஸ்ரேலினால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சிரியாவின் எல்லையுடன் இஸ்ரேல் தனது எல்லையை சுருக்கிக் கொள்ளமாட்டாது. ஈரானின் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் எதிர்த்து சமாளிப்போம் என்றும் அச்சுறுத்தல் எங்கு இருந்து ஏற்பட்டாலும் கவலை கொள்ள மாட்டோம் என்றும் இஸ்ரேலின் சுதந்திரத்தை நிலை நாட்டும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சிரியா மீதான இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் இட்லிப் பிராந்தியம் மீதான தாக்குதலை கையாளுவதற்கான உத்திகளாகவே தோற்றமளித்தாலும், இஸ்ரேலின் இருப்பும் ரஷ்யா, - ஈரான் ,- சிரியா அணியினால் நெருக்கடிக்குள்ளாகின்றது என்பதை வெளிப்படுத்துவதோடு, இத்தாக்குதலில் அமெரிக்காவின் பங்கு பலவீனமாக உள்ளது என்பதையும் உணர முடிகின்றது. இது பிராந்திய அரசியலை புதிய கோணத்தில் வகைப்படுத்துவதற்கு காரணமாகியுள்ளது. காரணம் ரஷ்யா அண்மைக்காலத்தில் கஸ்பியன் கடல் நாடுகளோடு செய்த உன்படிக்கையும் இந்திய, துருக்கி மற்றும் ஈரான் சிரியாவோடு செய்கின்ற உடன்படிக்கையும் அதன் தூரநோக்கில் இப்பிராந்தியம் மீதான அமெரிக்காவின் வலுவினை உடைப்பதாகவே உள்ளது. சிரியா, ரஷ்யாவின் மீள் உருவாக்கத்தின் மையமாக மாறியுள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்தல், என்ற பொது இலக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த தாக்குதல் சிரியா கிளர்ச்சியாளர்கள் மீதான அமெரிக்காவின் ஆதரவை தகர்ப்பதற்கு வழியை ஏற்படுத்தியது. இங்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உடைய அரபு தேசத்தின் தோற்றப்பாட்டை நிராகரிப்பதிலும் பயங்கரவாதத்தை அழிப்பதிலும் அமெரிக்கா முதன்மை கொண்டிருந்தது. அதற்கு ஏற்ற வகையில் ரஷ்யா ஒத்துழைப்பதாகவே அறிவித்திருந்தது. அதன் மூலம் சிரியா அரசையும் கிளர்ச்சியாளர்களையும் மோதவிடலாம் என்ற எண்ணத்தை ரஷ்யா படிப்படியாக தகர்க்க ஆரம்பித்தது. ரஷ்யாவின் உத்தியும் சிரிய ஜனாதிபதி ஆசாத்தின் அணுகுமுறையும் தெளிவான அரசியல் போக்கை நிறுவியுள்ளது. முன் பின் முரணான தூரநோக்கற்ற அணுகுமுறைகளால் அமெரிக்கா தனது இருப்பை பலவீனப்படுத்திக் கொண்டது. இந்த சந்தர்ப்பத்தில் ரஷ்யா சிரியாவை ஒரு தெளிவான மீள் எழுச்சிக்கான பிராந்தியமாக கருதியதோடு அதன் ஒவ்வொரு நகர்வையும் திட்டமிட்ட பிராந்திய கூறுக்களை வலுப்படுத்தி அவற்றின் இராணுவ வலுவை பலப்படுத்தி ஒரு நேர்த்தியான அணுகுமுறைக்கு ஊடாக வெற்றிக்கான நகர்வை தனதாக்கி கொண்டது. இயல்பாகவே இஸ்லாமிய நாடுகளுக்குள்ள அமெரிக்க எதிர்ப்பு வாதத்தினை புட்டின் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அலெப்போ பகுதி போன்று இட்லிப் பிராந்தியமும் எல்லா வகை நெருக்கடிகளையும் கடந்து சிரியாவின் கட்டுப்பாட்டிற்குள் உட்படும் என்று எதிர்பார்க்க முடியும். சிரியாவின் அத்தகைய நகர்வின் முடிவுகள் மேற்காசிய அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பலமான ஒரு அணியாகவும் இதன் விரிவாக்கம் மேலும் அதிகரிக்கின்ற சூழலும் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதில் ஏற்படவுள்ள மிகப் பிரதானமான பிரச்சினை இஸ்ரேல் பற்றியதாகும். இஸ்ரேலிய அரசின் இருப்பும் அதன் மீதான நெருக்கடிகளும் அதிகரிப்பதுடன் அதன் எல்லை விரிவாக்கமும் ஆதிக்கமும் பரீசிலனைக்கு உட்பட வேண்டிய நிலை தவிர்க்க முடியாது ஆகும்.

எனவே சிரியாவின் இட்லிப் பிராந்தியம் மீதான தாக்குதல் பிராந்திய சர்வதேச அரசியலில் மேலும் இக்கட்டான நிலைக்கு நகர்த்துகின்றது. இத்தகைய நெருக்கடி என்பது அமெரிக்க இஸ்ரேல் பரப்புக்கானதாகவே காணப்படுகின்றது. மேலும் ரஷ்யா, ஈரான் துருக்கி, சிரியா என்ற இந்த அணியின் இராணுவ பலக் கோட்பாடு வலுவடைவதோடு அதன் எதிர் தரப்பு பலவீனமான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது என்பதையும் உணர்த்துகின்றது. ஈரான் அமெரிக்க உறவில் ஏற்பட்ட சரிவே இதற்கான பின்புலம் என்பது உணரப்பட வேண்டும். அமெரிக்கா துருக்கியை இழப்பது என்பது அதன் இராணுவ பலக் கோட்பாட்டிலும் புவிசார் அரசியல் கோட்பாட்டிலும் நெருக்கடியான அம்சமாகவே அமையும்.

எனவே, இட்லிப்பிராந்திய தாக்குதல் உலகத்திற்கு புதிய செய்தியை வெளிப்படுத்துகின்றது. ஒருபக்கம் அமெரிக்காவின் பலவீனத்தையும் மறுபக்கம் ரஷ்யாவின் பலத்தையும் குறிப்பிடுவதோடு மேற்காசிய சமநிலை ரஷ்ய தலைமையிலான அணிக்குரியதாக படிப்படியாகக் கைமாறும்.

 

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்.

Comments