ஆசிய நாடுகளுக்கு சார்பானதாக மாறிவரும் புதிய பொருளாதார ஒழுங்குபாடு | தினகரன் வாரமஞ்சரி

ஆசிய நாடுகளுக்கு சார்பானதாக மாறிவரும் புதிய பொருளாதார ஒழுங்குபாடு

இரண்டாம் உலகப்போரின் பின்னர் உருவாக்கப்பட்ட உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், வர்த்தகம் மற்றும் தீர்வைகள் பற்றிய பொது உடன்படிக்கை ஆகிய அமைப்புகள் புதிய உலக பொருளாதார ஒழுங்குபாட்டினை செல்வாக்குப்படுத்தும் சக்தியாக அமைந்தன.

மூன்றாம் உலக நாடுகள் தமது பொருளாதார சுதந்திரத்தைக் காப்பாற்றும் நோக்கில் கடைப்பிடித்த உள்நோக்கிய அபிவிருத்தி உபாயங்களும் இறக்குமதி பதிலீட்டு கைத்தொழில் மயமாக்கல் நடவடிக்கைகளும் அந்நாடுகளின் பொருளாதாரங்களை ஏறிய நிலையிலிருந்து மீட்டு வலுவான பொருளாதாரங்களாக மாற்ற உதவவில்லை. உள்நோக்கிய அபிவிருத்தி உயாயங்களில் தனிப்பட்ட குறைபாடுகளும் வேறுபல அரசியல் பொருளாதார பலவீனங்களும் இக்கொள்கைகள் தோல்வியடையக் காரணமாகின.

1970களின் இறுதியிலும் 1980களின் ஆரம்பத்திலும் மூன்றாம் உலகநாடுகள் பலவும் பொருளாதார வலுவிழந்து கடனாளி நாடுகளாக மாறின. பெற்றோலிய விலையுயர்வும் காலநிலை மாற்றங்களும் இந்நாடுகளை வெகுவாகப் பாதித்தன. கடன் நெருக்கடிக்குள்ளாகிய மூன்றாம் உலக நாடுகள் பல உலகின் நிதி நிறுவனங்களாகிய உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் கையேந்த நேரிட்டது. சர்வதேச ரீதியில் சலுகைக் கடன்களைப் பெறவில்லை. இவை இரண்டும் தமது நிதி வசதிகளை வழங்கும் பொருட்டு இம் மூன்றாம் உலக நாடுகள் மீது பல்வேறு கடன் நிபந்தனைகளை (Loan Conditionality) விதித்தன. இந்நிபந்தனைகள் பெரும்பாலும் இந்நாடுகளின் பொருளாதாரங்களில் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தின. வொஷிங்டன் நகரை மையமாகக் கொண்ட மேற்படி நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளுக்கு விதித்த கடன் நிபந்தனைகள் “வொஷிங்டன் கருத்தொருமைப்பாடு” (Washington Consensus) என அழைக்கப்படுகின்றன.

இதன்படி உலக வங்கியானது 1982இல் தனது முதலாவது கட்டமைப்புச் சீராக்கக் கடனை (Structural Adjustment Loan) வழங்கியது. கடன் அலைக்குள் மூழ்கியிருந்த மூன்றாம் உலக நாடுகள் பலவும் இக்கடன்களை பெற நிர்ப்பந்திக்கப்பட்டன.

பொருளாதாரத்தைத் தாராள மயப்படுத்தல், அரசு சார் நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தல் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை உலக மயமாக்கலுக்கு திறந்து விடல் (Liberalization Privatization and Globalization) என்பன பிரதான கட்டமைப்புச் சீராக்கங்களாகும். இதன் கீழ் பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகள் தமது பொருளாதார கட்டமைப்புகளை மாற்றியமைத்தன.

அரச செலவினங்களைக் குறைத்தல் – குறிப்பாக சமூக நலன்புரிச் செலவினங்களைக் குறைத்தல், நிர்வாகக் கட்டுப்பாடுகளைக் குறைத்தல், வெளிநாட்டு வர்த்தகத்தையும் நிதி நிறுவனங்களையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள், மூன்றாம் உலக நாடுகளை சந்தைப்பொருளாதாரங்களாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டிருந்தன.

மறுபுறம் இரண்டாம் உலகத்தின் அசைக்க முடியாத அரசனாக விளங்கிய சோவியத் ஒன்றியம் 1990களின் ஆரம்பத்தில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள விழைந்து சிதறிச் சின்னாபின்னமாகிப் போனது. அதன் அங்கத்துவ நாடுகள் தனித்தனி நாடுகளாகப் பிரிந்து முன்னாள் சோவியத் நாடுகள் அல்லது நிலைமாறு பொருளாதாரங்கள் (Transitional Economic) என அழைக்கப்பட்டன. இவை சமவுடைமைக் கட்டளைப் பொருளாதார முறைமையிலிருந்து விலகி சந்தைப் பொருளாதாரங்களாக மாற்றமடைந்தன. பேர்லின் சுவர் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனிகள் ஒரே நாடாக மாறின.

சுருங்கக்கூறின் ஒருபுறம் மூன்றாம் உலக நாடுகள் தவிர்க்கமுடியாவாறு கடன் சுமை காரணமாக கட்டமைப்புச் சீராக்க கொள்கைகளைக் கடைப்பிடித்து சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் வந்தன. மறுபுறம் கட்டளைப் பொருளாதாரங்களாக விளங்கிய சமவுடைமை ரஷ்யக் கட்டமைப்பு சிதறியதால் இரண்டாம் உலகமொன்று இல்லாமல் மறைந்து போனது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல முதலாளித்துவச் சந்தைச் சக்திகள் அசைக்க முடியாத – யாரும் போட்டிபோட முடியாத நிலைக்கு உயர்ந்தன.

கட்டமைப்புச் சீராக்கங்களுடன் மூன்றாம் உலகமென முன்னர் அழைக்கப்பட்ட அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் யாவும் சந்தைப்பொருளாதாரங்களாக மாற்றப்பட்டு உலகமயமாக்க செயற்முறையினுள் இணைத்து கொள்ளப்பட்டன.

அதேவேளை சுயமாகவே சந்தைப் பொருளாதார வழிமுறைகளைத் தெரிவு செய்திருந்த கிழக்காசியாவைச் சேர்ந்த சில நாடுகள் தமது பொருளாதார வல்லமைகளை வளர்த்துக் கொண்டு புதிய கைத்தொழில்மய நாடுகளாக மாறின (Newly industrialized countries) இந்நாடுகளின் வளர்ச்சி மேற்குலக நாடுகளின் வளர்ச்சி வேகங்களை விஞ்சியதாக அமைந்திருந்த அதேவேளை இவற்றின் அனுபவங்களை “கிழக்காசிய அற்புதம்” (East Asian Miracle) என உலக வங்கி குறிப்பிடுகிறது. கட்டமைப்புச் சீராக்க கொள்கைகளின் உருவாக்கத்துக்கு இந்நாடுகளின் துரித வளர்ச்சியும் ஒரு காரணமாக அமைந்தது.

மேற்குலக முதலாளித்துவம் என்பது சந்தை சக்திகளின் ஊடாக தமது ஆதிக்கத்தை பொருளாதார ரீதியில் உலக நாடுகளை கட்டுப்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்த அதேவேளை எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் தமது நலன்களைப் பேணும் நோக்கில் இராணுவ ரீதியில் மேற்கொண்ட வளைகுடாப் போர், ஈராக்கியப்போர், ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போர் என்பன இராணுவ ரீதியில் வலுச்சமநிலையினை அமெரிக்க சார்புடைய மேற்குலக நாடுகள் வசம் தங்கியிருக்கச் செய்தன.

2001இல் அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக் கோபுர விமானத்தாக்குதல் இவ்வலுச் சமநிலையின் உயர்நிலையினை அசைப்பதாக அமைந்த போதிலும் அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் மேற்குலக நாடுகளின் நிலைப்பாடுகளுக்கு நியாயம் கற்பிப்பனவாக காட்டிக்கொள்ளப்பட்டன. பயங்கரவாத எதிர்ப்பு என்பது இதில் முக்கியமான ஒன்றாக அமைந்தது.

பத்தாயிரமாண்டின் பின்னர் உலகப்பொருளாதாரத்தில் சில புதிய நாடுகள் பொருளாதார வல்லமையில் தம்மை வலுவான நாடுகளாக மாற்றியமைத்துக் கொண்டன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் ‘பிறிக்ஸ்’ (Brics) நாடுகள் எனும் கூட்டணியில் புதிதாக எழுச்சி பெற்றுவரும் பொருளாதாரங்களாக அடையாளங்காணப்பட்டன (Newly Emerging Economic).

இவற்றுள் குறிப்பாக சீனாவின் துரிதமான வளர்ச்சியானது மேற்குலக நாடுகளுக்கு சவால் விடுப்பதாக அமைந்தது. உலகின் பிரதான உற்பத்தி மையமாக விளங்கும் சீனா உலக வர்த்தக நிறுவனத்துடன் (WTO) இணைந்து கொண்டதன் பின்னர் உலகின் பொருளாதார வலுச் சமநிலையில் மிக துரிதமானதொரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய நிலப் பரப்பைக் கொண்டதும் உலகின் மிகப் பெரிய சனத்தொகையைக் கொண்டதுமான மூன்று ஆசிய நாடுகளான சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா என்பன உலகின் பேரம்பேசும் சக்திகளாக மாறக்கூடிய நிலை உள்ளது.

சீனா ஏலவே உலகின் முதன்மைக் கடன் வழங்கும் நாடாக மாறிவிட்டது. அதன் முதலீடுகள் உலகம் பூராகவும் வியாபித்துள்ளன.

ஏனைய இருநாடுகளும் கூட தமது உள்ளூர் பொருளாதாரங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவற்றின் முதலீடுகளும் சர்வதேச ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

உலகின் புதிய பொருளாதார ஒழுங்குபாடொன்று ஆசிய நாடுகளுக்கு சார்பானதாக மாறிவருகிறது. ஆசியா இதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

கலாநிதி எம். கணேசமூர்த்தி,

பொருளியல்துறை,

கொழும்பு பல்கலைக்கழகம்.

Comments