ஈழத்து எழுத்தாளர் இளங்கோவனுக்கு கௌரவம்...! | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்து எழுத்தாளர் இளங்கோவனுக்கு கௌரவம்...!

பல்துறை ஆற்றலாளரான வி.ரி.இளங்கோவனின் கவிதைத் தொகுதியினை புத்தகத் திருவிழாவின் உலகத் தமிழர் படைப்பரங்கில் வெளியீடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கலை - இலக்கியவாதியாகவும், முற்போக்குச் சிந்தனையாளராகவும் விளங்கும் இளங்கோவன் புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் நாட்டிற்கும் எமக்குமிடையே தமிழ் இலக்கியப் பாலமாக, - தொடர்பாளராக விளங்குகிறார். பல நூல்களை வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க சிறந்த படைப்பாளியான அவரது கவிதைத் தொகுதியை உலகத் தமிழர் படைப்பரங்கில் வெளியிட முன்வந்தமைக்காக அவருக்கு மக்கள் சிந்தனைப் பேரவை மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.'

இவ்வாறு ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவரும் எழுத்தாளருமான ஸ்டாலின் குணசேகரன், ஈரோடு புத்தகத் திருவிழாவின் உலகத் தமிழர் படைப்பரங்கில் இடம்பெற்ற கலாபூஷணம், இலக்கியவித்தகர் வி. ரி. இளங்கோவனது' ஒளிக்கீற்று' கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.

'ஒளிக்கீற்று' கவிதைத் தொகுதியை வெளியிட்டு வைத்து, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற ஈரோடு மாவட்டச் செயலாளர் ஓடை பொ. துரைஅரசன் பேசுகையில், 'ஈழத்துக் கவிஞர்கள் பலரின் கவிதைகள் யதார்த்தப் பூர்வமானவை. அந்தவகையில், முற்போக்குச் சிந்தனை வயப்பட்ட இளங்கோவனின் கவிதைகள் அவரது அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றன, சிந்தனையைத் தூண்டுகின்றன.

மரபு சார்ந்தும், மரபு சாராமலும் உணர்வுகளின் ஊற்றாக அவரது கவிதைகள் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளன. புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. அவருக்கு எமது பாராட்டுக்கள்' எனக் குறிப்பிட்டார்.

நூலாசிரியர் இளங்கோவனது உணர்ச்சிமிகுந்த ஏற்புரை சபையோரின் பாராட்டுதலைப் பெற்றது.

ஓடை பொ. துரைஅரசன் நூலை வெளியிட, மூத்த வழக்கறிஞர் யு. கே. செங்கோட்டையன் அதனைப் பெற்றுக்கொண்டார்.

படைப்பாளிகள், இலக்கிய அபிமானிகள், பேராசிரியர்கள் உட்பட பெருந்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பணியாற்றிய இலங்கை, மலேசியா நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகளது உருவப் படங்களும், அவர்கள் குறித்த விபரங்களும் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது.

அன்று மாலை இடம்பெற்ற சிந்தனை அரங்கில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வேண்டுகோளுக்கு இணங்க நினைவுப்பரிசு - விருதை நடிகர் சிவகுமார் இளங்கோவனுக்கு வழங்கிக் கௌரவித்தார்.

தனது சில நூல்களையும் வி. ரி. இளங்கோவன் நடிகர் சிவகுமாருக்கு அன்புடன் வழங்கினார்.

இந்நிகழ்வில் சுமார் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மறுநாள் மாலை இடம்பெற்ற சிந்தனை அரங்கில் நடிகர்கள் பார்த்திபன், சத்தியராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் நடிகர் பார்த்திபன் தனது' 'கிறுக்கல்கள்' என்ற நூலை இளங்கோவனுக்கு வழங்கிக் கௌரவித்தார்.

ஈரோடு புத்தகத் திருவிழா தமிழ்நாட்டில் மிகப்பெரிய நிகழ்வாக இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து நடைபெற்றது. 250 - க்கு மேற்பட்ட புத்தக அரங்குகள் இங்கு இடம்பெற்றிருந்தன.

தினமும் தமிழகமெங்குமிருந்து கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட பல்லாயிரம் மக்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை கடந்த 14 வருடங்களாக சிறப்பான ஒழுங்கமைப்பில் புத்தகத்திருவிழாவை நடத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.

 

தமிழகத்திலிருந்து: சோழ. நாகராஜன்

Comments