ஊதியத்தில் ஏன் பாலின வேறுபாடு? | தினகரன் வாரமஞ்சரி

ஊதியத்தில் ஏன் பாலின வேறுபாடு?

ஆண் - பெண் பாகுபாடு கூடாது என்று கொள்கை அளவில் பேசினால் மட்டும் போதாது. செயல்படுத்த அரசு மட்டுமல்ல, தொழிலதிபர்களும் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் வாய்ப்பளிக்க முன் வர வேண்டும்.

உலக பொருளாதாரத்தில் மறைமுகமாக 50 சதவீதம் பெண்களின் பங்களிப்பு இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் பெண்கள் ஆரோக்கியம், கல்வி, பொருளாதார பங்களிப்பு, அரசியல் தலைமை போன்றவைகளில் குறிப்பிடும் வகையில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், சம உரிமை பெறுவதில் ஆண்- பெண் வித்தியாசம் இன்றும் இருக்கிறது. அண்மையில் உலக பொருளாதார பொது மன்றம் வெளியிட்ட பாலின இடைவெளி அறிக்கையின்படி இந்த வித்தியாசம் மறைய இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகுமென்பது தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, உதாரணமாக 2017 -ஆம் ஆண்டில் உலகளவில் பெண்களின் சராசரி ஆண்டு வருமானம் அமெரிக்க ​ெடாலர் 12 ஆயிரம். அதே நேரத்தில் ஆண்களின் ஆண்டு வருமானம் அமெரிக்க ​ெடாலர் 21 ஆயிரம். ஆண்கள் செய்யும் வேலை, இலக்கு அனைத்தும் பெண்களுக்கு இருந்தாலும் ஊதியம் குறைவு. இது உலகளவில் நடப்பதுதான். பெண்களுக்கு குறைந்த சம்பளம் வழங்குவது மட்டுமல்ல. உயர் நிர்வாகம் அவர்களுக்குரிய மரியாதையையும் அளிப்பதில்லை. அமெரிக்காவில் உள்ள 500 மிகப் பெரிய நிறுவனங்களிலேயே 4 சதவீதம் பெண்கள் மட்டுமே தலைமை செயல் அதிகாரி பதவியில் உள்ளனர்.

இதுபோன்ற பாகுபாடு காரணமாக பெண்களின் கடின உழைப்பு, தகுதி ஆகியவை ஊதியம் மற்றும் பதவி உயர்வு போன்றவைகளால் பாதிக்கப்படுவதால் நிர்வாகங்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது. பொறியியல், கணிதம், கணனி புரோகிராம், அறிவியல், விளையாட்டு போன்றவைகளில் பெண்கள் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.

பாலின பாகுபாட்டிற்கும் முடிவு கட்டுவது அவசியமாகும். பெண்களுக்கு சரிசமமான வாய்ப்புகளை அளிப்பது, பொருளாதாரம் மூலமாக அதிகாரமளிப்பது நியாயமானது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரமும் நல்ல வளர்ச்சி அடையும். அதற்கான உத்தரவாதம் அளிப்பதற்கு முன் நாம் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளது.

பெண்கள் உண்மையிலேயே சந்திக்கும் ஆரோக்கியம், கல்வி, வேலை வாய்ப்புக்கான கொள்கை திட்டங்களை நிறை வேற்றுவதுடன், சுயமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் குறிப்பிட்ட தொகையை அளிக்க ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம்.

கல்வி, பாட திட்டத்தை பெண்கள் எளிதில் கிரகித்து கொள்ளும் வகையில் அமைக்க வேண்டும். பாட புத்தகங்களில் வழக்கமாக இடம்பெறும் படங்களுடன் பெண்களை மேன்மை படுத்தும்படியான படங்களை சேர்க்க வேண்டும். பெண்களுக்கு அறிவியல், தகவல் தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் போன்றவைகளை தேர்ந்தெடுத்து கற்க ஊக்கமளிக்க வேண்டும்.

சமூக மட்டத்தில் பெண்களுக்கு அதிகாரமளிப்பது பெண்கள் கல்வியை உயர்த்த உதவும். எப்போது ஒரு தாய் கல்வி கற்றவளாக, அதிகாரம் மிக்கவளாக, தன் வாழ்க்கையை தானே அமைத்து கொள்பவளாக இருக்கிறாளோ அவள்தான் தன் பெண்ணை கற்பிக்கும் சக்தியுடையவளாக இருப்பாள்.

ஆண்களை விட பெண்களுக்கு ஊதியம் குறைவாக கொடுக்கும் முறை இன்றும் ஏன் தொடர்கிறது என்ற கேள்வியை கேட்க வேண்டிய தேவை உள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஒரே மாதிரியான வேலை, நேரம் என்றிருக்கும் போது, ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான ஊதியம் அளிப்பதை எதிர்த்து உலக அளவில் 'சமமான ஊதியம், சமமான வேலை' என்ற போராட்டம் நடத்தப்பட வேண்டும். இதற்கான சட்டமியற்ற அரசு முன் வர வேண்டும்.

சட்டமியற்றும் போதும், அரசியலிலும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளில் தெளிவாக பேச அனுமதிப்பதன் மூலம் ஆண்-, பெண் என்ற இடைவெளியை குறைக்க உதவும்.

செவிலியர், ஆசிரியை, விற்பனையாளர்.... என குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே பெண்களை ஒதுக்குவதை தவிர்த்து, அவர்களது திறமைகளுக்கேற்ற பணிகளை வழங்கும் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். தாயின் ஆரோக்கியத்துக்கு அளிக்கப்படும் உதவிகள்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கும், நன்னடத்தைக்கும், திறமையாக கல்வி கற்பதற்கும் உதவும். அது மட்டுமல்ல, குடும்பத்தினர் நலனுக்கும் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.

பால்ய விவாகங்கள் பெண்களின் கல்வியை பாதிக்கும் மிகப் பெரிய இடையூறாக உள்ளது. பெண்கள் தடையில்லா கல்வி பெற வேண்டுமெனில் பால்ய விவாகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

Comments