'ஜனபல' பேரணி கற்றுத்தந்த பாடம் என்ன ? | தினகரன் வாரமஞ்சரி

'ஜனபல' பேரணி கற்றுத்தந்த பாடம் என்ன ?

இலங்கை மக்களைப் பொறுத்தவரை எந்தவொரு சம்பவத்தையும் ஒரு வாரத்தில் மனத்தில் இருந்து இறக்கிவிடுவார்கள் என்பது ஒரு பொதுவான அபிப்பிராயம்.

அதுபோல், இப்போது கூட்டு எதிரணியினர் நடத்திய ‘மக்கள் பலம் கொழும்புக்கு ‘என்ற எதிர்ப்புப் பேரணியையும் மறந்துபோய் இருப்பார்கள். எனினும், இந்தப் பேரணி மறக்க முடியாத பல அரசியல் பாடங்களை இரு சாராருக்கும் கற்றுத்தந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஓர் அரசாங்கத்தை அதே மக்களின் வாக்குகளினாலன்றி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மூலம் பலவீனமடையச்செய்யலாமா? என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறான ஒரு எதிர்ப்பு நடவடிக்கையைத் திட்டமிடாமல் மேற்கொண்டால், அஃது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வேண்டுமானால், கூட்டு எதிரணியினர் பாடமாகக் கொண்டிருக்கலாம்.

மறுபுறம் அரசாங்கம் இந்தப் பேரணியைப் பெரிதாக அலட்டிக்கொள்ளாததுடன், பாதுகாப்புப் பலத்தைப் பிரயோகித்துத் தடுப்பதைத் தவிர்த்துக்கொண்டதைக் கூட்டு எதிரணியினர் தமக்குச் சாதகமான சூழலாகவே கருதவேண்டும். ஏனெனில், கொழும்பில் நடந்த, நடக்கின்ற ஆர்ப்பாட்டங்களின்போதெல்லாம் அது மாணவர்களாக இருந்தாலென்ன, வேறு அமைப்புகளாக இருந்தாலென்ன, கடும் பாதுகாப்பை ஏற்படுத்துவதோடு, கலகம் அடக்கும் பொலிஸாரைத் தயார் நிலையில் வைத்திருப்பதுதான் வழக்கம். அஃது எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் இதுதான் நடைமுறை. அதுவும் கொழும்பை ஓரிரு நாட்கள் முடக்குவோம் என்று அறிவிப்புச் செய்தும்கூட, அரசாங்கம் அதனைத் தடுப்பதற்கு எத்தனிக்கவில்லை.

நாட்கணக்காக அல்லாவிடினும், ஒரு சில மணித்தியாலங்களாவது பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முற்றாகப் பாதிக்கவே செய்தது. இதற்கு கூட்டு எதிரணி மாத்திரமன்றி, ஆளுந்தரப்பும் அதேவேளை, அரசியலில் பங்கெடுத்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்புக்கூற வேண்டும்.

லிப்ரன் சுற்றுவட்டத்திலோ லோற்றஸ் வீதியிலோ ஆர்ப்பாட்டப் பேரணி நடக்கிறதென்றால், அங்கு நிச்சயமாக கண்ணீர்ப்புகைப்பிரயோகமும் குண்டாந்தடியடிப்பிரயோகமும் இருக்கும். நடந்து முடிந்த 'ஜனபலய கொழம்பட்ட' பேரணி கொழும்பை சில மணித்தியாலம் முடக்கியபோதும் அரசாங்கம் அதற்கு வழிவிட்டது. இஃது அரசாங்கத்தின் பெருந்தன்மையா, அரசியல் நாகரிகமா, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

உண்மையில் இஃது அரசாங்கத்தின் அரசியல் நாகரிகமும் பெருந்தன்மையுந்தான். கூட்டு எதிரணியின் தோல்வி இதில்தான் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடக்கித் தடுப்பதன் மூலம் ஏற்படும் விளைவுகளுக்கும் அதற்குப் பாதுகாப்பு வழங்கி வழிவிட்டால் ஏற்படும் விளைவுகளுக்கும் என்ன வேறுபாடு என்பதுபற்றிய ஒரு சிறந்த பாடத்தை, 'மக்கள் பலம் கொழும்புக்கு' என்ற பேரணி அரசாங்கத்திற்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் பேரணியைப் பார்த்துத் தடைகளை ஏற்படுத்தி தாக்குதல் நடத்திப் பெரிதாக்குவதால்தான் அது மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கும் தலைவலியை உண்டாக்குகிறது என்ற பாடத்தைத்தான் தனது பேரணியின் மூலம் அரசாங்கத்திற்குக் கூட்டு எதிரணி கற்றுக்கொடுத்திருக்கிறதேயன்றி, அரசாங்கத்திற்கு வேறெந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இஃதுதான் உண்மை.

அதேநேரம், கூட்டு எதிரணியின் பேரணி பிசுபிசுத்துவிட்டது என்பதற்காக அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளும் சரியானது என்று திருப்தியடைந்துகொள்தற்கு இயலாது என்பதையும் இங்குச் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். உண்மையில் எதிரணியின் பேரணி தோல்வியடைந்ததுதான் அரசாங்கத்திற்கு வெற்றியேயன்றி வேறொன்றில்லை. அரசாங்கம் மேற்கொள்கின்ற நன்மையான விடயங்களை மக்கள்மயப்படுத்துவதற்கான இலக்கு இன்னமும் பூர்த்தியாகவில்லை.

எஃது எவ்வாறாயினும், ஒரு மாணவர் அமைப்போ தொழிற்சங்கமோ எதிர்ப்புப் பேரணியை நடத்துவது ஒருவிதத்தில் ஏற்புடையதாக இருந்தாலும், ஓர் அரசியல் கட்சி அல்லது கட்சிகள் ஒன்றிணைந்து – அதுவும் எதிர்க்கட்சியினர் என்று கூறிக்கொள்பவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக மக்களைத் திரட்டிக்கொண்டு வீதிக்கு இறங்குவார்களாக இருந்தால், அஃது அவர்களின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது. எதிரணி என்பது அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்தோடு மக்களுக்கு ஒவ்வாத செயற்பாடுகளுக்குத் தமது எதிர்ப்பைப் பாராளுமன்றத்தில் தெரிவிப்பதுதான் என்பதை பள்ளி மாணவர்களும் அறிவார்கள்; அவ்வாறுதான் மக்களும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் வாளாவிருந்துவிட்டுப் பாதைக்கு இறங்குவது அல்லது வாக்களித்த மக்களைத் துன்பப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்தும் அரசியல் தார்மிக உரிமை, எந்தவோர் அரசியல் கட்சிக்கும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், தங்களுடைய பங்கிற்காக எதனையாவது செய்து முடித்துவிட்டோம் என்றிருப்பது நியாயமாகாது.

இன்று பாராளுமன்றத்தில் இருக்கின்ற எதிர்க்கட்சி, எதிர்க்கட்சியாக இல்லை என்ற விமர்சனத்திற்கு மத்தியில், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் கட்சிகள், அதனைவிடப் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. அதனைவிடுத்து மக்களைக் கஷ்டத்தில் ஆழ்த்தி; இயல்புவாழ்வைக் குலைத்து அரசியல் நடத்துதை இனியும் மக்கள் விரும்பமாட்டார்கள்.

ஒரு காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி 'ஜனபல மெஹயும' மக்கள் சக்தி நடவடிக்கை என்ற ஓர் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது. விளைவு எதுவுமில்லை. தேர்தல் மூலமே ஆட்சி மாறியது.

அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்காரவும் ஒரு காலத்தில் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிராக கொழும்பில் இருந்து கதிர்காமத்திற்குப் பேரணியாகச் சென்று கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் சிதறு தேங்காய் உடைத்தார்கள். எதுவும் நடக்கவில்லை. தேர்தலே மாற்றத்தைக்கொண்டு வந்தது.

வெளிநாடுகளில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரவென நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களும் பெரும் அழிவையே ஏற்படுத்தின என்பது வரலாறு.

இலங்கையில் அத்தகைய போராட்டங்கள் நடந்ததும் இல்லை, நடத்தி ஆட்சியைப் பிடித்ததும் இல்லை. அப்படியென்றால், வீணான செலவுகளைச் செய்து மக்களைத் துன்புறுத்துவது ஏனென்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.நடந்து முடிந்தது பேரணிக்குக் குறைந்தபட்சம் பத்துக்கோடியாவது செலவாகியிருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அப்படியாயின் இந்தப் பணம் எங்கிருந்து கிடைத்தது. அதிகாரத்திற்கு வருவதற்குக் கோடி கோடியாய் செலவழிக்கும் ஒரு கட்சி, அந்தச் செலவை எவ்வாறு ஈடுசெய்யும்? என்பது மக்களின் கேள்வி.

இந்தப் பேரணியால் நடந்தது இரண்டு மரணங்களைத் தவிர, பலர் வைத்தியசாலை செல்லவும் நேர்ந்தது. அதிக போதையில் இருந்த 81 பேரை பொலிஸார் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதுவும் பல விமர்சனங்களுக்குள்ளான அம்பியுலன்ஸ் வண்டியில் என்கிறார் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா.

பிற மாவட்டங்களில் இருந்துவந்த பேரணி அமைப்பாளர்கள் பொருளாதார ரீதியில் வளம்பெற இந்தப்பேரணி வழிவகுத்தது என்றும் சொல்கிறார்கள்.

கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் பேரணியினர் திரண்டிருந்தபோது சிலர் எங்கிருக்கின்றோம் என்ற நினைவிழந்து வீதியில் வீழ்ந்து கிடந்தார்கள். இன்னும் பலர் பேரணியை முற்றாகப் பார்ப்பதற்கு முன்னரே வீடுகளுக்குச் சென்றிருந்தார்கள்.

இந்தப் பேரணிக்கென்று பல நூறு பஸ் வண்டிகள் அமர்த்தப்பட்டிருந்தாலும், அநேகமானவற்றில் சுமார் பத்துப் பதினைந்து பேரளவில் வருகை தந்ததையும் காணக்கூடியதாகவிருந்தது. இஃது ஆதரவாளர்கள் செய்த துரோகச் செயல் என்கிறார்கள் விடயமறிந்தவர்கள். அதாவது, கூடுமானோரை அழைத்து வருவதாகக் கூறிப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒரு சிலரை மட்டுமே அழைத்துவந்து மோசடி செய்திருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சில ஏற்பாட்டாளர்கள் பஸ் வண்டிகளில் சிலரை அழைத்துவந்துவிட்டுப் புறக்கோட்டைப் பகுதியில் முக்கியமானவர்களைக் கண்டு கைலாகுகொடுத்துவிட்டு மறுவலத்தில் பஸ் வண்டியைத் திருப்பிக்கொண்டு வீடுகளுக்குச் சென்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

அமைப்பாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, எங்கே இருக்கிறீர்கள்? என்று கேட்டால், அவர்கள் ஊரில் தமது வீட்டில் இருந்துகொண்டு, இதோ புறக்கோட்டை அரச மரச் சந்தியில் இருக்கின்றோம் என்று கூறியிருக்கிறார்கள். சனநெரிசலில் அமைப்பாளர் அருகில் வந்து பார்க்கவா முடியும் என்ற தைரியம் அவர்களுக்கு. அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும்போது மக்கள் அரசியல்வாதிகளை ஏமாற்றத்தொடங்கிவிட்டார்கள் என்பதையே இஃது எடுத்துக்காட்டுகிறது.

ஆக, பேரணிக்கு வந்தவர்களின் நோக்கமும் ஏற்பாட்டாளர்களின் நோக்கமும் பணமாக இருந்திருக்கிறதேயன்றி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக இருந்திருக்கவில்லை என்பது விமர்சகர்களின் கருத்து. அத்தோடு, வெறி தலைக்கேறிய சிலர் வீதிகளில் வீழ்ந்தது மாத்திரமன்றி வேறு சிலர் மின்சாரக் கம்பங்களில் ஏறித்தொங்கிக் கொண்டிருந்தார்கள். இதனைப் படம் பிடித்துப் பிரசுரித்திருந்த ஓர் ஆங்கிலப் பத்திரிகை, இவர்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்க வந்தார்களா, மின்கம்பத்தைக் கவிழ்க்க வந்தார்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தது.

நடந்து முடிந்த பேரணியை ஆளுந்தரப்பினர் மாத்திரமன்றி எதிரணியினரும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இஃது ஒரு கழுத்தறுந்த கோழியின் நிலை என்றும் ஓர் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஏற்பாட்டாளர்களின் ஏமாற்று வேலையே முதன்மை வகித்தது என்பதை இப்போது எல்லோரும் புரிந்துகொண்டிருப்பார்கள். சிலவேளை, பேரணியை நடத்தாமல் இருந்திருந்தால், மக்கள் மத்தியில் இருக்கும் ஒருவித மாயையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கலாமே! என்ற ஆதங்கமும் ஏற்பாட்டாளர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும் என்கிறார் அந்த அமைச்சர். ஆனால், தமது பேரணியைப் பார்த்துவிட்டுப் பயந்துபோன அரசாங்கத் தரப்பினர் வாய் உளறுகிறார்கள் என்கிறார்கள் கூட்டு எதிரணியினர். ஆனால், நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய ஜனநாயகத்தை அனுபவிப்பதற்கு வாய்ப்பளித்திருக்கிறோம். பேரணிக்கு எந்தத் தடையை ஏற்படுத்தமாட்டோம் என்று ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்ததையும் இங்குக் கவனிக்க வேண்டும்.

இறுதியாக இந்தப் பேரணி அரசாங்கத்திற்கோ எதிரணிக்கோ மாத்திரமன்றி ஒட்டுமொத்த அரசியல்வாதிகளுக்கும் சிறந்த பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது என்றால் மிகையில்லை.

விசு கருணாநிதி

Comments