புழுதி படிந்து கிடக்கும் மாங்குளம் புதுநகராக நிமிர்த்தி எடுக்க எவருமே இல்லையா? | தினகரன் வாரமஞ்சரி

புழுதி படிந்து கிடக்கும் மாங்குளம் புதுநகராக நிமிர்த்தி எடுக்க எவருமே இல்லையா?

வடமாகாணத்தின் மையப்பகுதியாக அமைந்துள்ள, மாங்குளம் கடந்த மூன்று சகாப்த காலமாக இடம்பெற்ற போரினால் முழுமையாக அழிவடைந்து போனது.

எனினும் யுத்தம் நிறைவு பெற்று மக்கள் மீள்குடியேற்றங்கள் நடைபெற்று ஒன்பது ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, இந்தப் பிரதேசம், ஒரு நகர அமைப்பை இன்னும் அடைந்த மாதிரித் தெரியவில்லை. ஏனெனில் அடிப்படைக் கட்டுமானங்கள் இன்னும் சீர்செய்யப்படவில்லை. வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களையும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் இணைக்கின்ற ஒரு போக்குவரத்து மார்க்கத்தின் மையமாகவே முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசம் காணப்படுகின்றது.

ஏ-9 வீதியின் வடக்கு, கிழக்கு, தெற்குப் பகுதிகளுக்கான பிரதான வீதியும், முல்லைத்தீவிலிருந்து மாங்குளம் வரையும், மாங்குளத்திலிருந்து மன்னார், யாழ்ப்பாணம் ஏ-32 வீதியினை இணைக்கும் இணைப்பு வீதியும், சந்திக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதான சந்தியாக மாங்குளம் விளங்குகிறது.

மிகவும் பழைமை வாய்ந்த மாங்குளம் மைய நகரம் மூன்று தடவைகளுக்கும் மேல் போரினால் முழுமையாகவே அழிவடைந்தது. யுத்தத்துக்கு முன்னர் மாங்குளம் பல வசதிகளைக் கொண்ட ஒரு வைத்தியசாலையைக் கொண்டிருந்தது. பிரதான தபாலகம், பாடசாலை, புகையிரத நிலையம், பொதுச்சந்தை, வங்கிகள், வன பரிபாலன திணைக்களம், பொலிஸ் நிலையம், உள்ளிட்ட திணைக்களங்கள் இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் என்பனவும் மாங்குளத்தில் இருந்தன. ஒரு முழுமையான நகரத்தில் இவை அமைந்திருக்க வேண்டும்.

1990ம் ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இவை அனைத்தும் முழுமையாக அழிவடைந்தன. இங்கு வாழ்ந்த மக்களும் இடம்பெயர்ந்தனர்.

இங்கு இயங்கிய தபாலகம், பாடசாலை, வங்கிகள் என்பன மல்லாவியில் தற்காலிகமாக இயங்கியபோதும் ஏனைய திணைக்களங்கள் செயலிழந்து போயின.

1994 ஆம் ஆண்டின் பின்னர் நிலவிய சமாதான சூழ்நிலையில் பெரும் இடிபாடுகளுடன் சிதைந்து காணப்பட்ட மாங்குளம் நகரத்தில் தபாலகம் வைத்தியசாலை, பாடசாலை என்பன மீண்டும் இயங்க ஆரம்பித்தன. இடம்பெயர்ந்த மக்களும் திரும்பி வந்தனர்.

இதன் பின்னர் 1997ம் ஆண்டு யாழ் குடா நாட்டிற்கான தரைவழிப்பாதையொன்றை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஜயசிக்குறு படைநகர்வின் போது இடம்பெற்ற கடுமையான போரினால் இங்கு வாழ்ந்த மக்கள் முழுமைவே இடம்பெயர்ந்து சென்றனர்.

வடக்கிற்கான நுழைவாயிலாகக் காணப்பட்ட மாங்குளம், வன்னியில் உள்ள மக்களுக்கான உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கண்காணிப்பில் தெற்கிலிருந்து கொண்டு செல்லும் முக்கிய தளமாகவும் காணப்பட்டது.

1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிலவிய அமைதியான சூழலில் மக்கள் இங்கு மீள்குடியேற ஆரம்பித்தனர். ஆனாலும் அவர்களால் நிலையாக இங்கு தங்க முடியாதவாறு போர் மோகங்கள் சூழ்ந்தன.

2006ம் ஆண்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மக்கள் மீளவும் முழுமையாக இடம்பெயர்ந்து, முள்ளிவாய்க்கால் வரையும் சென்று யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2009ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் மீள்குடியேறினர்.

தற்போது மக்கள் மீளக்குடியேறி ஒன்பது வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் இப்பகுதி அபிவிருத்தியைக் காணாத இடமாகவே இந்தளவும் உள்ளது.

வடக்கு மாகாணத்தின் மையமாக மாங்குளம் காணப்படுகின்றமையால் வடக்கு மாகாண சபையினை இங்கு அமைப்பதற்கும் வடக்கு மாகாணத்திற்கான புனர்வாழ்வு வைத்தியசாலை ஒன்றை நிறுவவும் ஆரம்பத்தில் வடக்கு மாகாணசபையினால் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. இது ஓருபுறமிருக்க, முல்லைத்தீவிலிருந்து மாங்குளத்திற்கும் மாங்குளத்திலிருந்து மல்லாவி, துணுக்காய் மன்னார் ஆகிய பகுதிகளுக்கும், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளுக்கும் பயணிப்பதற்கான முக்கிய சந்தியாக மாங்குளம் விளங்குவதால், தினமும் இரவு பகலாக ஐயாயிரத்திற்கும் அதிகமான பயணிகள் மாங்குளத்தில் ஒன்று கூடுகின்றனர். ஆனால் இவ்வளவு முக்கியமான இம் மாங்குளத்தில் ஒரு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என எவருக்குமே தோன்றவில்லை.

கூரை, இருக்ைக வசதி கொண்ட ஒரு பேருந்து நிலையம் இங்கு இல்லாததால் பயணிகள் வீதிகளிலும், வெயில் மற்றும் மழைக் காலங்களிலும் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலைேய காணப்படுகின்றது.

விபத்துக்களில் காயமடைந்தோர் மற்றும் திடீரென நோய்வாய்ப்படுபவர்களுக்கு சிசிச்சை பெற்றுக் கொள்வதற்கென ஒரு அடிப்படை வசதியும் இல்லாத வைத்தியசாலையாகவே மாங்குளம் வைத்தி-யசாலை காணப்படுகின்றது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தினமும் ஐயாயிரத்திற்கும் அதிகமான பயணிகள், மக்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் தமது இயற்கை கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு பொதுமலசலகூட வசதி கூட மாங்குளம் நகரில் இல்லை என்றால் நம்புவீர்களா?

மாங்குளத்தில் இல்லை என்ற சொல் விரவிக் கிடக்கிறது. ஐயாயிரம் பேர் வரை தினசரி வந்து போகும் இடமானாலும், சாப்பிடுவதற்கு உருப்படியான ஒரு ஹோட்டல் கிடையாது. குழாய் நீர் விநியோகம் கிடையாது. முறையாகக் கழிவகற்றும் நடைமுறை இல்லை. பிரதான வீதிகளில் பஸ்கள் ஓடினாலும், கிராமப் புறங்களுக்கான பஸ் வசதி இல்லை. நடந்தோ வாடகை வண்டிகளிலோதான் பயணித்தாக வேண்டும். சுத்தமான குடிநீர் வசதி இல்லை என்பது பெருங்குறை. குண்டும் குழியுமான பாதைகளே காணப்படுகின்றன. பயணிகள் இளைப்பாறுவதற்கான எந்த வசதியும் இல்லை. முக்கியமான பொருட்கள், காய்கறிகள் வாங்குவதற்கான ஒரு சந்தைக் கட்டடம் இருந்தாலும் போதுமான கடைகளும் இல்லை. கூடிக் கலையும் சந்தையும் மாங்குளத்தில் இல்லை.

யுத்தம் நிறைவடைந்து மக்கள் மீள்குடியேறி ஒன்பது வருடங்கள் நிறைவடைந்தும் மாங்குளம் நகரம் இன்றுவரை வசதிகளின்றி அடிப்படை காணப்படுகின்றது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் துணுக்காயில் வலயக்கல்வி அலுவலகம், பாடசாலை, வைத்தியசாலை, பொலிஸ் நிலையம், தபாலகம், புகையிரத நிலையம் பொதுச்சந்தை, போன்ற அடிப்படை வசதிகள் காணப்படுகின்றபோதும் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் இங்கு அமைந்தால் தான் மாங்குளம் சிறப்புப் பெறும். இங்கு வரும் பயணிகள்,பொது மக்களின் நலன்கருதி நவீன வசதிகொண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும். பொது மலசலகூடம், போன்ற அடிப்படைக் கட்டமைப்புக்கள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும். வெகுவிரைவில் வடக்கு மாகாணத்தின் நவீன நகரமாக மாங்குளம் அமையவேண்டும் என்பது பலரதும் கனவு. அது நனவாக வேண்டும். இதற்கு அரசியல்வாதிகள்தான் மனம் வைக்க வேண்டும்.

கட்டுரை, படங்கள் ஐது பாஸ்கரன்

Comments