ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்யூமா? | தினகரன் வாரமஞ்சரி

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்யூமா?

அசோக வனத்தில் சீதையைக் கண்டு பேசி, பின்னர் லங்கா புரியை தீயிட்டு எரித்த அனுமான், மீண்டும் இராமன் இருக்குமிடம் திரும்பினான். இராமன் முன் வந்திறங்கிய அனுமான் சொன்ன வார்த்தையை கம்பர் மிகுந்த யோசனையின் பின்னரேயே உபயோகித்திருக்க வேண்டும். சீதையைக் கண்டேன் என்று சொல்லாமல், கண்டேன் சீதையை என்கிறான் அனுமான். சீதையை என்று ஆரம்பித்தால் சீதைக்கு என்னவோ ஏதோ என ராமன் மனக் கிலேசம் அடைந்து விடுவானோ என்று எண்ணியதால்தான் கண்டேன் சீதையை என்றானாம் அனுமான்!.

கடந்த ஆறாம் திகதி புதுடில்லி உச்ச நீதிமன்றத்தில் இருந்து வெளியான செய்தி பலருக்கு ‘கண்டேன் சீதையை ஒத்த மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிப்பதாக இருந்திருக்கும். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 28ஆம்ஆண்டுகளாக எந்தவொரு முடிவுமின்றி தனிமைச் சிறை அறைகளில் வாடும் அந்த எழுவரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்ற செய்தி எவ்வளவு முக்கியமானது என்பது சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் விடுதலைக்காக தளராமல் போராடி வந்த தமிழுணர்வாளர்களுக்கும் இது, ‘கண்டேன் சீதையை’ செய்தியாகத்தான் இருந்திருக்கும்!

ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார கூட்டத்துக்காகச் சென்றிருந்தபோது விடுதலை புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் உடல் சிதறி மரணமானார். இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட மிகப் பெரிய மனித வேட்டையில், பெங்களூரில் மறைந்திருந்த ஒற்றைக் கண் சிவராசன் உட்பட, இக்கொலையுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, இக்கொலை தொடர்பான விரிவான புலன் விசாரணையில் பலர் சிக்கினர். வழக்கும் நடந்தது. முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரொபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவர் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர்.

முதலில் எழுவருக்குமே தூக்குத் தண்டனையே விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாறியது. சோனியா காந்தியின் கருணை வேண்டுகோளையடுத்து நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னரும் இவர்களை மத்திய, மாநில அரசுகள் ‘ஆபத்தானவர்கள்’ என்ற பட்டியலில் வைத்திருந்ததால் இவர்கள் சார்பாகவும் மேற்கொள்ளப்பட்ட விடுதலைக்கான பல்வேறு முயற்சிகளும், சட்டப் போராட்டங்களும் வியர்த்தமாயின.

இந்த எழுவர் விடுதலை தொடர்பாக கலைஞரின் தி.மு.க அரசு எப்போதும் கடுமையான அல்லது அலட்சிய போக்கையே கடைப் பிடித்து வந்திருக்கிறது. ஜெயலலிதா இவ்விவகாரத்தில் ஒரு மென்மையான போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளதோடு, தமிழக அரசுக்கு ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் உள்ளது என்ற தீர்ப்பு வருவதற்கு மூலகாரணமாக இருந்தவராகவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிடலாம். அவர் தான் 2014ஆம் ஆண்டு தமிழக சட்ட சபையில் இவர்களை விடுவிக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்து, அதை ஏகமனதாக நிறைவேற்றவும் செய்தார். பின்னர் இந்தத் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி அதன் கருத்தகை கேட்டது. ஆனால் மாநில அரசுக்கு தன்னிச்சையாக விடுதலை செய்யும் அதிகாரம் கிடையாது என்று மத்திய அரசு மனுதாக்கல் செய்ததோடு, விடுதலைக்கான வாய்ப்புகள் மறுபடியும் முடங்கிப் போயின. இது தொடர்பான அ.தி.மு.க அரசு எழுதிய இரண்டு கடிதங்களையும் மத்திய அரசு நிராகரித்திருந்த நிலையில், தமிழக அரசு இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுமீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதியரசர் ரஞ்சன் கோகாய் தலைமையில் நடைபெற்றபோது மோடி அரசு. விடுதலைய எதிர்த்தே மனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எழுவர் தொடர்பான சகல தகவல்களும் பரசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றை பரிசீலித்த நீதிமன்றம், இவர்களை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இருப்பதாகவும் ஒரு தீர்மானத்தை சட்ட ரீதியாக நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அவர் இறுதி முடிவை எடுக்க முடியும் என்றும் தன இறுதித் தீர்ப்பை நீதிமன்றம் வெளியிட்டதோடு வழக்கையும் முடித்து வைத்தது. அதாவது, இதுதான் இறுதித் தீர்ப்பு. இனிமேல் இதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசே.

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் தொடர்பில் கலைஞர் ஏன் ஒரு மெத்தனப் போக்கைக் கடைப் பிடித்தார். என்பதுதான் பெரிய கேள்வி. இத்தனைக்கும் ஈழப் போராட்டத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வந்தவரே கலைஞர். இதன் காரணமாக பல கஷ்ட நஷ்டங்களை அவர் அனுபவிக்கவும் செய்தார். 1991 தேர்தலில் ஏற்பட்ட ராஜீவ் அனுதாப அலையில் மாநிலத்தின் எல்லா தி.மு.க வேட்பாளர்களும் அடித்துச் செல்லப்பட, துறைமுகம் தொகுதியில் ஒண்டிவீரனாகக் குறைந்த வாக்குகளைப் பெற்று கரையேறிய ஒரே தி.மு.க வேட்பாளர் கலைஞர் மட்டுமே. ராஜீவ் மரணத்தையடுத்து சென்னையில் ஏற்பட்ட கலவரத்தில் முரசொலி அலுவலகம் முற்றாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. ஈழப் போராட்டத்துக்காக எவ்வளவோ செய்தும், பதிலாக பல துன்பங்கள், இழப்புகளுக்கு ஆற்பட்ட பின்னரும் கூட, தனக்கு வெற்றி வாய்ப்பாக அமையக் கூடிய ஒரு சட்ட சபைத் தேர்தல் அண்மித்து வரும் வேளையில் தன்னைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததற்காக விடுதலைப் புலிகளை அவர் மன்னிக்கத் தயாராக இருக்கவே இல்லை என்பதாக இந்த மெத்தனப் போக்கை எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் சோனியா காந்திக்கு விசுவாசமாகவும் அவர் கிழித்த கோட்டைத் தாண்ட விரும்பாதவராகவும் கலைஞர் இருந்தும் கூட இம் மெத்தனப் போக்குக்குக் காரணமாக இருந்திருக்கலாம். இதே சமயம் இந்த அதிரடித் தீர்ப்பு இவ்வளவு காலமாக வெளிவராமல் இப்போது வந்திருப்பதன் நோக்கம் என்ன என்றொரு கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தி விவகாரத்தில் காங்கிரஸ் அரசோ அல்லது பா.ஜ.க. அரசோ, ஒரே நிலைப்பாட்டைத்தான் எடுத்து வந்திருக்கிறது. ராஜீவின் கொலையை இந்திய பாதுகாப்புடன் தொடர்புபட்டதாகவே அவை கருதி வந்துள்ளன. ஏனெனில் ராஜீவை கொலை செய்தது ஒரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு. அந்த அமைப்பு பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்தில் இருந்தும் கூட வந்திருக்க முடியும் என்ற நோக்கிலேயே புதுடில்லி இக்கொலையை பார்த்து வந்திருக்கிறது. இந்தப் படுகொலைதான் இலங்கை தொடர்பான இந்தியக் கொள்கை தலைகீழ் மாற்றம் அடையக் காரணமாயிற்று, வன்னி யுத்தத்தில் விடுதலை புலிகளை முற்றாக நிர்மூலமாக்குவதற்கு இந்தியா முழு உதவிகளையும் செய்வதற்கு சோனியா காந்தியின் சீற்றமே காரணமானது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்பை மட்டும் வெளியிடுவதற்கும் இந்தியாவின் (சோனியாவின்) உறுதியான நிலைப்பாடே காரணமானது. எனவே, கலைஞர் ஏன் இக் கைதிகளின் விடுதலையில் மெத்தனம் காட்டினார் என்பதை புரிந்து கொள்ளலாம். கலைஞரின் இந்த இயலாமையே, ஜெயலலிதா இவ் விடுதலை தொடர்பாக தீவிரமாகவும் துணிச்சலாகவும் ஈடுபடுவதற்கான செயலூக்கியாக மாறியது என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

அதுசரி, இவ்வளவு காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த விடுதலை விவகாரம் திடீரென உயிர்பெற்று, இறுதித் தீர்ப்பாக வெளிவருவதற்கு மோடி அரசின் கவனம் அதன்மேல் திரும்பியதுதான் காரணமா? என்ற கேள்வியும் தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. ஏனெனில், அடுத்த ஆண்டு இந்திய பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் வெற்றி முகத்தை காட்ட வேண்டிய அவசியம் அ.தி.மு.கவுக்கும் தமிழக பா.ஜ.கவுக்கும் உள்ளது. தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் பெரும்பாலும் அற்றுப்போய் விட்டதாகவே கருத வேண்டியிருப்பதால் பா.ஜ.க.தன் பழைய நண்பனான ஆளும் அ.தி.மு.கவையே நாடியாக வேண்டும்.

அ.தி.மு.க தற்போது மிக மோசமான நிலையிலேயே உள்ளது. தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கரன் மீதான குட்கா ஊழல் விசாரணை மீண்டும் பூதாகரமாகியிருப்பதோடு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இச் சமயத்தில் அ.தி.மு.கவுக்கு உற்சாக டொனிக் போல வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. மிக நீண்டகாலமாக இழுபட்டு வந்துள்ள இந்த விடுதலை விவகாரத்தை முடித்து வைக்க வேண்டிய பொறுப்பு எடப்பாடியாரிடம் வந்திருக்கிறது. அனேகமாக இவ்வாரம் சட்ட சபையில் விடுதலை தொடர்பான தீர்மானப் ஏகமனதாக நிறைவேற்றப்படலாம். அதன்பின்னர் மாநில ஆளுநரிடம் அது இறுதி முடிவுக்காக சமர்ப்பிக்கப்படும்.

தமிழக அரசு அமைச்சரவை ரீதியாக ஒரு முடிவெடுத்து அதை சட்ட சபையில் நிறைவேற்றி மாநில ஆளுநரிடம் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தால் அத் தீர்மானத்துக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது மரபல்ல.

ஆளுநர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி. ஆளும் பா.ஜ.க, அ.தி.மு.கவுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் பங்கேற்க முடிவு செய்திருந்தால், இதைத்தவிரவேறு வழி கிடையாது என்று கருதுமானால், விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்துக்கு மாறாக செயல்பட வேண்டாம் என மத்திய அரசு ஆளுநரைக் கேட்டுக் கொள்ளும். அவ்வாறெனில், எழுவரின் விடுதலை எதிர்வரும் வாரங்களில் சாத்தியமாகிவிடும்! பேரறிவாளனின் அன்னையார் அற்புதம்மாளின் கனவு பலித்துவிடும்! பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணியும் உறுதியாகி விடும்!

 அருள் சத்தியநாதன் ...

Comments