தமிழ் மக்களின் அதிகாரப்பகிர்வு கோரிக்ைக சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் மக்களின் அதிகாரப்பகிர்வு கோரிக்ைக சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது

நமது நிருபர்

தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கோரிக்ைக சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மீண்டும் இந்நாட்டில் இடம்பெற அனுமதிக்க முடியாது என்பதை வலியுறுத்திய சம்பந்தன், அதனை உறுதி செய்வதற்காக ஒரு புதிய அரசியல் யாப்பு அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இச் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது ஐ.நா பிரதிநிதியிடம் அரசியல் நிலவரத்தைச் சுட்டிக்காட்டிய சம்பந்தன்,

தமிழ் மக்கள் கடந்த காலத் தேர்தல்களில் ஒருமித்த பிரிக்கப்படமுடியாத இலங்கை தீவிற்குள் அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளமையையும் மக்களின் இந்த ஜனநாயக தீர்ப்பை மதிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று எட்டப்படாததன் விளைவாக எழுந்த ஆயுதப்போராட்டத்தின் நிமித்தம் இலங்கையை விட பின்தங்கிய நிலையில் இருந்த நாடுகள் அபிவிருத்தியிலும் மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் தற்போது இலங்கையை விட பன்மடங்கு முன்னேறியுள்ளதையும் ஆயுதப் போராட்டமும் அதன் பாதக விளைவுகளும்

இலங்கையை பல கோணங்களிலும் பின் தங்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளமையையும் சம்பந்தன் எடுத்துக் கூறினார்.

புதிய அரசியல்யாப்பு தொடர்பில் இந்த அரசாங்கம் பதவி ஏற்றபின்னர் முன்னெடுக்கப்பட்ட கருமங்கள் ஒரு சாதகமான முடிவை எட்டவேண்டும் என்பதை வலியுறுத்திய இரா. சம்பந்தன், அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் இந் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்பதையும் வலிறுத்தினார். இதன் போது கருத்து தெரிவித்த எம். ஏ. சுமந்திரன், புதிய அரசியல் யாப்பொன்று நிறைவேற்றப்படுவதை பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என்றும் அவர்களிடையே அதிகாரப் பகிர்வின் நன்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டியதன் அவசியம் உள்ளதையும் எடுத்துக் கூறினார்.

முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில், இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் உள்ளது. எனினும், மக்கள் எதிர்பார்த்த அளவில் கருமங்கள் இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், இராணுவத்தின் வசமுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளின் விடுவிப்பு போன்ற விடயங்களில் திருப்திகரமான முன்னேற்றங்கள் இல்லை என்பதனை வலியுறுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், காணாமல் போன தனது அன்புக்குரியவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவிக்கும் ஒருவர் மனத்தில் சமாதானம் குடிகொள்ள முடியாது எனவும் மக்களின் இந்த அடிப்படையான நாளாந்த ஏக்கங்களுக்கு சரியான தீர்வும் நீதியும் கிடைக்க வேண்டியதன் அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சம்பந்தன், இலங்கை அரசாங்கம் கூட்டாக முன்மொழிந்தது மாத்திரமன்றி தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு கால அவகாசத்தையும் கோரியிருந்தது.

ஆகவே இந்தப் பிரேரணையை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயப் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு எனத் தெரிவித்தார்.

மேலும், பிரேரணையில் இடம்பெற்ற விடயங்கள் சரியாக நிறைவேற்றப்படுவதை அங்கத்துவ நாடுகளும் ஐ.நா.மனித உரிமை பேரவையும் உறுதி செய்யவேண்டிய கடப்பாடு உள்ளதையும் எடுத்துக் கூறினார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது கடந்த காலங்களில் போன்று எதிர்வரும் காலங்களிலும் ஐ.நா.வின் கருமங்களில் ஒத்துழைப்புடன் செயற்படும் எனவும் இலங்கை விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் ஐ.நாவின் ஆக்கபூர்வமான பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தினார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி நிரந்தரமான சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்தும் பாரிய பணியில் ஐ.நா. தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும் என உறுதி வழங்கினார்.

 

Comments