இன ஐக்கியத்தின் இலக்கணம் ‘தேசமான்ய’ பாக்கீர் மாக்கார் | தினகரன் வாரமஞ்சரி

இன ஐக்கியத்தின் இலக்கணம் ‘தேசமான்ய’ பாக்கீர் மாக்கார்

இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தில் தனக்கென தனியானதொரு இடத்தை நிறுவிச்சென்றவர் மர்ஹும் பாக்கீர் மாக்கார். தாம் வாழும் காலத்தில் மனித சமுதாயத்தின் நலன்களுக்காக ஆற்றிய அளப்பரிய சேவைகளால் அவர் மக்களால் என்றும் நினைவுபடுத்தப்படுகிறார்.

இனங்களிடையே ஐக்கியம் பற்றி அதிகமாக பேசப்படும் காலமிது. ஆனால் அன்று தான் வாழும் காலத்திலேயே இன ஐக்கியத்துக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் பாக்கீர் மாக்கார். இதனாலேயே சிங்களவர்களையே பெரும்பான்மையாகக் கொண்ட பேருவளையின் செல்வாக்குமிக்க தனித்துவத் தலைவராக தன் வாழ்நாள் முழுவதும் சிறப்பிடம் பெற்றார். இதனால்தான் இவ்வுலகை விட்டும் பிரிந்து 21 வருடங்கள் கடந்துவிட்ட இன்றைய நாளிலும் அவரை சகல இன மக்களும் மிகவிருப்பத்தோடு நினைவு கூர்கின்றனர்.

1917ம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி பேருவளை மருதானை “ஹகீம் விலா”வில் புகழ்பூத்த குடும்பத்தைச் சேர்ந்த ஹகீம் அலியா முஹம்மட் மரிக்கார் றாஹிலா உம்மா தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். கொழும்பு புனித செபஸ்டியன் வித்தியாலயம், ஸாஹிராக் கல்லூரி என்பவற்றில் கல்வியைப்பெற்ற பாக்கீர் மாக்கார் ஸாஹிராக் கல்லுரியின் அதிபராக ரி. பி. ஜாயா கடமையாற்றியபோது அவரது நேரடி கண்காணிப்பில் கற்று தேர்ச்சி பெற்றார். கலாநிதி ஜாயா அவர்களையே தனது அரசியல் ஆசானாகவும் எடுத்துக் கொண்டார். பாடசாலைக் காலத்தில் கல்லூரி சஞ்சிகையின் ஆசிரியராக, முஸ்லிம் மஜ்லிஸ் தலைவராக, தமிழ் இலக்கிய கழகத் தலைவராக என்று பல்வேறு பதவிகளை வகித்து இளம் பிராயத்திலேயே தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.

கிராம மட்டத்தில் இருந்து தேசிய மட்டம் வரை அரசியலில் சேவையாற்றி பல்வேறு பதவிகளையும் வகித்து உயர்வடைந்தவர் பாக்கீர் மாக்கார். 1950இல் பேருவளை நகரசபை உறுப்பினராக போட்டியின்றி தெரிவாகிய அவர் முதலாவது வருடத்திலேயே பேருவளை நகர சபைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். இந் நகர சபையின் அங்கத்தவராக மிக நீண்ட கால சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

1960ஆம் ஆண்டு வரை உள்ளூராட்சி மன்றத்தில் சேவையாற்றிய அவர் 1960ஆம் ஆண்டு பேருவளைத்தொகுதியில் இருந்து பாராளுமன்ற அங்கத்தவராக தெரிவானார். பேருவளைத் தொகுதியில் முஸ்லிம்கள் பதினேழு வீதம் மட்டுமே இருந்த போதும் பெரும்பான்மை மக்களின் பேராதரவே பாக்கீர் மாக்காரை அத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக்கியது என்றால் மிகையாகாது.

இவர் இதே தொகுதியை 1965,1970,1977,1978,1978-,1988 காலப்பகுதிகளில் பாராளுமன்ற அங்கத்தவராக பிரதி நிதித்துவம் செய்தார். 1977ஆம் ஆண்டு அன்றைய தேசிய அரசுப் பேரவையின் பிரதி சபாநாயகராக தெரிவானார். 1978ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சபாநாயகராகத் தெரிவானார். கொழும்பில் உள்ள பழைய பாராளுமன்றத்தின் கடைசி சபாநாயகராகவும், ஜயவர்தன புறக்கோட்டையில் அமைந்துள்ள புதிய பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராகவும் செயலாற்றும் சிறப்பைப் பெற்றவர் பாக்கீர் மாக்கார். 1988 முதல் 1993 வரை தென்மாகாண ஆளுநராகவும் பதவி வகித்து மக்கள் நலனுக்கு சேவை ஆற்றினார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக்

அகில இலங்கை முஸ்லிம் லீக் இயக்கத்துக்கு பாக்கீர் மாக்காரின் பங்களிப்பு அளப்பரியது. முஸ்லிம் லீக்கின் சகல முக்கிய நடவடிக்கைளிலும் முன்னின்று செயற்பட்டார். அதன் பிரதி நிதியாக பல ஆணைக்குழுக்களின் முன்னிலையில் தோன்றினார். குறிப்பாக 1958களில் தல்கொடபிட்டிய எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழுவின் முன் இவர்வைத்த ஆலோசனையின் அடிப்படையிலே பேருவளை உட்பட இலங்கையில் சிறுபான்மையினரின் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை உறுதிப்படுத்த இரட்டையர் தொகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டன எனலாம். அவ்வாறு உருவாக்கப்பட்ட பேருவளைத் தொகுதியில் இருந்தே அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாக்கிர் மாக்காரின் சேவைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவது அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தை தோற்று வித்ததாகும். இலங்கையின் குக்கிராமங்களில் இருந்தும் கூட தேசிய அளவில் சேவை செய்யக்கூடிய தலைவர்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவ்வியக்கத்தை அவர் தோற்றிவித்தார். தனது நோக்கம் பூரணத்துவமாக நிறைவேற வேண்டும் என்ற அவாவில்,தான் சபாநாயகராக இருந்தபோதும், அதன் பின்னரும் தன் பதவியின் சலுகைகளை அதற்காகவே அர்ப்பணித்தார். இலங்கையின் தெற்கே ஹம்பாந்தேட்டை முதல் வடக்கே யாழ்ப்பாணம் வரை, கிழக்கே கல்முனை முதல் மேற்கே புத்தளம் வரை சகல பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 550க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து வாலிப முன்னணிகளை உருவாக்கினார். அன்று வாலிப முன்னணிகளின் அங்கத்துவம் பெற்ற பலர் இன்று உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகள் மட்டுமன்றி பாராளுமன்றம் வரை பதவிகளைப் பெற்றிருக்கின்றார்கள். பல்வேறு கட்சிகளில் அங்கத்துவம் பெற்று உயர்வடைந்திருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் இருந்து தேசிய அளவிலான இயக்கத்துக்கு முதலாவது தலைமைத்துவத்தை வழங்கியதும் வாலிப முன்னணிகள்தான்.

முஸ்லிம்களுக்கு தனியான ஊடகம்

முஸ்லிம்களுக்கென தனியானதொரு செய்தி ஊடகம் இருக்கவேண்டுமென்பது அவரது நோக்கமாக இருந்தது. அதற்காக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஊடாக “உதயம்” என்ற தமிழ் பத்திரிகையையும், “டோன்” என்ற பத்திரிகையையும் வெளியிட்டார். பத்திரிகை வெளியிடுவதற்கு பொருளாதரப் பிரச்சினை பொதுவானது என்ற நியதி இப்பத்திரிகைகளையும் பாதித்த போது தனது சொந்த பணத்தை தாராளமாக செலவிட்டு அதைத் தொடர்ந்து வெளிவர வகை செய்தார். முஸ்லிம்களுக்கென தனியாக தேசிய அளவிலான ஒரு “தினசரி”ப் பத்திரிகையேனும் வெளிவர வேண்டுமென்பது அவரது அவாவாக இருந்தது.

யாழ்ப்பாண விஜயம்

யுத்தத்துக்கு முன்னர் யாழ் தீபகற்பத்துக்கு விஜயம் செய்த கடைசி தென்பகுதி அரசியல்வாதி பாக்கீர் மாக்கார் ஆவார். அவருக்கு யாழ்ப்பாண மாநகர சபையால் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ் நகர மேயர், யாழ் சமூகத் தலைவர்கள், அப்போதைய தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள், மதிப்புக்குரிய தமிழ் பிரமுகர்கள்என பெருந்திரளானோர் இவ் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு பாக்கீர்மாக்காரை கௌரவித்தமை யாழ் சரித்திரத்தில் முக்கிய நிகழ்வாகும்.

மக்கள் சேவகன்

மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் அவற்றுக்குப் பரிகாரம் காண்பதில் பாக்கீர் மாக்கார் காட்டிய ஆர்வம் விசேடமாக குறிப்பிடத்தக்கது. 1980ஆம் ஆண்டு ஹஜ்ஜாஜிகளை ஏற்றி வந்த இந்தோனேசிய விமானமொன்று இலங்கையில் வீழ்ந்த போது சபாநாயகராக இருந்த பாக்கீர் மாக்கார் உடனடியாகவே அங்கு விஜயம் செய்து உரிய ஏற்பாடுகளை செய்தார். இந்த ஹஜ்ஜாஜிகளின் ஞாபகார்த்தமாக கட்டுநாயக்காவில் நினைவு மண்டபம் ஒன்று அமையவும் இவர் அடிகோலினார்.

இதே போன்று 1970களில் கிழக்கு மாகாணத்தில் திடீர் சூறாவளிளியினால் மக்கள் பாதிக்கப்பட்டபோது வெளிநாட்டுத் தூதுவர்களையும் அழைத்துக்கொண்டு விரைந்து அங்கு சென்று நிவாரணப்பணிகளை மேற்கொண்டார். இவரது முயற்சியினால் ஈராக்கிய அரசாங்கத்தின் உதவியோடு “சதாம் ஹுசைன்” கிராமம் ஏறாவூரில் உருவானது.

பொதுவாக அரசியல் வாதிகள் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே முன்னுரிமை கொடுத்து செயல்படுவார்கள். ஆனால் பேருவளைத் தொகுதியில் வாக்குகளைப் பெறவேண்டிய பாக்கீர் மாக்கார் நாட்டின் எண் திசைகளிலும் உள்ள குக்கிராமங்களுக்கும்சென்று அவர்களின் குறை நிறைகளை அறிந்து சேவையாற்றியது ஏனைய அரசியல்வாதிகளுக்கும் மிகச்சிறந்த முன்மாதிரியாகும்.

“மக்கள் சேவகனே மக்கள் தலைவன்’’ என்பதற்கு இலக்கணமாக அவர் வாழ்ந்தார் என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும்.

சேவா மனப்பான்மை உள்ள ஆசிரியராக, திறமை மிக்க வழக்கறிஞராக, நகர சபையின் தலைவராக, ஆளுநராக, அமைச்சராக, முஸ்லிம் லீக் தொண்டனாக, முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் ஸ்தாபகராக என பல்வேறு பதவிகளை வகித்து குறிப்பாக, முஸ்லிம் சமூகத்துக்கும், பொதுவாக முழு இலங்கை திரு நாட்டுக்கும் பாக்கீர்மாக்கார் ஆற்றிய சேவைகள் காலத்தால் அழியாதவை. இவற்றை கௌரவிக்கும் முகமாக இலங்கை அரசாங்கம் இவருக்கு “தேசமான்ய” என்று பட்டம் வழங்கி கௌரவித்தது.

1997ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் திகதி தனது 80வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்த பாக்கீர் மாக்கார் நேர்மையான அரசியலை நிலைநாட்டுவதிலும், இன ஐக்கியத்தை மேம்படுத்துவதிலும், முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதிலும், இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களை அரசியலில் விழிப்புணர்வூட்டி நன்நெறிப்படுத்துவதிலும், குக்கிராமங்களையும் நாடிச்சென்று அம்மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதிலும், ஆன்மீக செயற்பாடுகளில் பங்களிப்புச் செய்வதிலும், மக்கள் நலனுக்காக தன் சொத்தை செலவழிப்பதிலும் காட்டிய முன்மாதிரி ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் மிகச் சிறந்த படிப்பினையாகும்.

சிரேஷ்ட சட்டத்தரணி

ரஷீத் எம். இம்தியாஸ்...

(முன்னாள் தலைவர் அகில இலங்கை முஸ்லிம்லீக்

வாலிப முன்னணிகளின்

சம்மேளனம்)

 

Comments