நல்லூரின் பெருமையும் நல்லூரான் மகிமையும் | தினகரன் வாரமஞ்சரி

நல்லூரின் பெருமையும் நல்லூரான் மகிமையும்

யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள முப்பெரும் முருக சேஷ்திரங்களுள் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி ஆலயம் பல நூற்றாண்டு காலத்துக்கு முற்பட்ட வரலாற்றுப் பெருமைகொண்டது. ஆலயத்தின் இவ்வருட மகோற்சவம் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நேற்று (8ஆம் திகதி) இரதோற்சவம் இடம்பெற்றது. இன்று (9ஆம் திகதி) தீர்த்தோற்சவமும், நாளை (10ஆம் திகதி) பூங்காவன உற்சவமும் நடைபெறவிருப்பதுடன் இவ்வருட மகோற்சவம் நிறைவுபெறும்.

இந்த ஆலயம் அமைந்திருக்கும் நல்லூர் பிரதேசம் பலவகையிலும் சிறப்புப்பெற்றது. தமிழ் மன்னர்களது ஆட்சிக் காலத்தின்போது நல்லூர் இராசதானியாக விளங்கிய பெருமைக்குரியது. தமிழ் மன்னர்களது ஆட்சிக் காலத்து நினைவுகளையும் வரலாற்றுக் கதைகளையும் சொல்லும் ஒருசில கட்டடங்களும், கட்டட எச்சங்களும் தொல்பொருள் மரபுரிமை சின்னங்களாக நல்லூர் பிரதேசத்தில் இப்போதும் காணப்படுவது வரலாற்றுச் சிறப்பாகவே அமைந்துள்ளன. இவற்றுள் மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு கற்தோரண நுழைவாயில் மற்றும் சங்கிலியன் அரண்மனையின் கட்டிட அத்திவாரம், யமுனாரி போன்றவைகள் குறிப்பிடத்தக்கன.

ஐந்தாம் குரவர் எனப் போற்றப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், சின்னத்தம்பிப் புலவர், சரவணமுத்துப் புலவர் போன்ற அறிஞர் பெருமக்கள் தோன்றிய பிரதேசமும் நல்லூர்தான். அறிஞர் பெருமக்கள் மட்டுமல்ல ஞானபரம்பரையொன்றை தோற்றுவித்த பெருமையும் நல்லூருக்குண்டு. யாழ்ப்பாணத்து சித்தர் பரம்பரையில் முதல்வராகப் போற்றப்படும் கடையிற் சுவாமிகள் நடமாடிய புண்ணிய பூமியாக நல்லூர் விளங்குகிறது. இவரது சீடரான செல்லப்பா சுவாமிகள் நல்லூர் தேரடியில் வாழ்ந்தவர். அவரது ஞானஉபதேசம் பெற்று சீடரான யோகர் சுவாமிகள் நல்லைக் கந்தன் ஆலய புண்ணிய பூமியில் நடமாடியவர். தன் ஞானகுருவை மட்டுமல்ல நல்லைக் கந்தனையும் போற்றிப் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். பின்னாளில் வாழ்ந்த குடைச் சுவாமிகளும் நல்லூர்க் கந்தனின் புனித பூமியில் பாதங்களை பதித்தவர். இத்தகைய ஞானபரம்பரையினரின் திருப்பாதங்களைப் பெற்ற பெருமைக்குரியது நல்லூர்.

நல்லூரில் நாவலர் மணிமண்ட பமும், அங்குள்ள நாவலர் சிலையும், நாவலர் கலாசார மண்டபமும் இன்றும் நாவலர் பெருமானின் நினைவைமீட்டிக் கொண்டிருக்கும் சின்னங்களாக முக்கியத்துவம் பெறுகின்றன. இன்னொரு நினைவுச் சின்னமான அரியாலையிலிருந்து நல்லூர் பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் நாவலர் வீதி, யாழ் குடாநாட்டின் மிகநீண்டதூர வீதியாக பிரபலம் பெறுகிறது.

இலங்கையின் ஒரேயொரு சைவ ஆதீனமாக பெருமை பெறும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் நல்லூரிலேயே அமைந்திருப்பதும் சிறப்புக்குரியது. நல்லூர் கந்தன் ஆலயத்திற்குப் பின்னால், ஆலய மேற்கு வீதியில் ஆதீனத்தின் எழில்மிகு கட்டடம் காட்சி தருகிறது. இலங்கையிலுள்ள பெரும் இந்துமத அமைப்புகளுள் ஒன்றான அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாழ் பிராந்திய பணிமனை, இலங்கை சின்மய மிஷனின் வடபிரதேச நிலையம், திவ்யஜீவன சங்கம், துர்க்காதேவி மணிமண்டபம், கம்பன் கோட்டம் போன்ற சமய மற்றும் கலை, கலாசார நிறுவனங்கள் பல நல்லூர் பிரதேசத்திலிருந்தே சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன. பாரதநாட்டின் இலங்கைக்கான யாழ் துணைத் தூதரகமும் நல்லூரிலேயே இயங்கிக் கொண்டிருப்பதும் இன்னொரு சிறப்புக்குரியது. நல்லூர் முத்திரைச்சந்தி அருகே யாழ்ப்பாணத் தமிழ் மன்னனான சங்கிலியனின் உருவச்சிலை கம்பீரமாகக் காட்சிதருவதும் நல்லூரின் பெருமைக்கு சான்றாகும்.

கடந்த போர்க்கால நிலைமைகளுக்குப் பின் யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், தனது தலைமைப் பணிமனையையும், ஏனைய உப செயலகங்களையும் நல்லூர் பிரதேசத்தில் அமைத்திருப்பதையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இந்த செயற்பாடானது, தமிழ் மன்னர்களது ஆட்சிக் காலத்தின்போது நல்லூர் பிரதேசம் இராசதானியாக விளங்கியிருப்பதை மீளவும் நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாகவே சொல்லத் தோன்றுகிறது.

யாழ். குடாநாட்டில் சிறியது, பெரியது என பெருமளவு இந்துக் கோயில்களைக் கொண்ட பிரதேசமாக நல்லூர் விளங்குகிறது. இங்குள்ள கோயில்கள் பல பழந்தமிழ் மன்னர்களது ஆட்சியுடன் தொடர்புபட்டதான வரலாற்றுப் பெருமைக்குரியது என ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. நல்லூர் கந்தசுவாமி ஆலயம், இதற்குக் கிழக்கே வெயிலுகந்த பிள்ளையார் கோயில், தெற்கில் கைலாசநாதர் கோயில், மேற்கே வீரமாகாளி அம்மன் கோயில், வடக்கில் சட்டநாதர் கோயில் என்பனவற்றை காவல் அரண்களாக்கி அரச ஆட்சிப் பரிபாலனம் மேற்கொள்ளப்பட்டதாக வரலாறு சொல்கிறது. போர்க்காலத்தின்போது அரசர்கள் இந்த ஆலயங்களில் தங்கள் ஆயுதங்களை வைத்து வழிபட்சுச் சென்றிருப்பதாக வரலாற்றுப் பதிவுகளிலிருந்து அறிய முடிகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குப் பின்னால் அமைந்துள்ள நல்லூர் சிவன் கோயிலும் இன்னொரு வகையில் சிறப்புப்பெறுகிறது.

இந்தவகையில் நல்லூர் பிரதேசத்தில் பல ஆலயங்கள் இருந்தாலும், நல்லூரான் என்று போற்றித் துதிக்கப்படும் ஒரு தனித்துவச் சிறப்பு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வேலவனாக எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானுக்கே உண்டு என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நல்லூர் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்துக் கோயில்களில் காலத்துக்காலம் மகோற்சவங்கள் நடைபெற்று வந்தாலும், நல்லூர் கந்தன் மகோற்சவ காலத்தில் யாழ் மாவட்டம் மட்டுமல்ல, நாடளாவிய ரீதியிலும் அதற்கு அப்பால் உலகமே தன் பார்வையை இங்கு திருப்பிவிடும். நாட்டிலுள்ள ஏனைய சகல ஆலயங்களையும் குறிப்பிடும்போது ஊருடன் ஆலயத்தின் பெயரையும் இணைத்துச் சொன்னால்தான் அனைவருக்கும் புரியும். ஆனால் நல்லூரான் என்று சொன்னால், அதற்கு விளக்கம் தேவையில்லை. அது நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தையே குறிக்கும்.

நல்லூரானைப் போற்றி பழந் தமிழ்ப் புலவர்கள் பலர் பாமாலைகளை சூட்டியிருக்கிறார்கள். சித்தர் பரம்பரையில் வந்த யோகர் சுவாமிகள் தனது நற்சிந்தனைப் பாடல்கள் பலவற்றில் நல்லைக் கந்தனைப் போற்றித் துதித்திருக்கிறார். தனது பாடல் வரிகள் பலவற்றில் ‘நல்லூரான்’ என்ற சொல்லைப் பிரயோகித்து இருப்பதை காணமுடிகிறது. “நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி” என்பதுடன், “நல்லூரான் திருவடியைப் பாடு” என்று சொல்லும் அவர், “நல்லூரான் கிருபை வேண்டும், வேறென்ன வேண்டும்?” என்கிறார். “கடல்சூழ் கவினிலங்கை கார்சூழ் நல்லூரான் தொடுக்கும் வல்வேலைத் துதி” என்று இன்னொரு வெண்பா பாடலிலும் நல்லூர்க் கந்தனைப் போற்றுகிறார். “நல்லூரான் திருவடியைப் பாடு, நாமே நாம் என்று சொல்லி நாடு” என்றும்,

 

“நல்லூரான் திருப்பாதம் காப்பு – அடடா நமக்குக் குறைவில்லை நல்ல வாக்கு” என்றெல்லாம் நல்லூர் கந்தன் புகழ்பாடும் யோகர் சுவாமிகள் “எந்நாளும் நல்லூரை வலம்வந்து வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே” என்றும், “நல்லூரைக் கும்பிட்டு நீ பாடு - அதனாலே நாட்டிலுள்ள பிணிகள் ஓடும்” என்றும் நல்லூரான் மகிமையைச் சொல்லும்போது, வேறுசான்று எதுவுமே தேவையில்லை.

அலங்காரக் கந்தனாகப் போற்றப்படும் சிறப்பு நல்லூரானுக்கு உண்டு. மகோற்சவ காலங்களில் கந்தப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராக வெவ்வேறு அலங்காரங்களுடன் வீதியுலாவரும் காட்சி பக்திபூர்வமானது. முருகப் பெருமானுக்குரிய சாத்துப்படியும் வீதியுலாவரும் வாகனமும் விதம்விதமான சோடனையுடனான அலங்கரிப்பில் அமைந்திருக்கும். சில முக்கிய உற்சவங்களின்போது வீதியுலாவரும் முருகப் பெருமானின் அலங்காரத்துடன் இணைந்த நிறங்களிலான வஸ்திரங்களையே மகோற்சவத்தை நடத்திவைக்கும் குருமார்களும் அணிந்திருப்பார்கள். இதற்கும்மேலாக நல்லூர்க் கந்தன் ஆலயமும் அலங்காரச் சிறப்பினையும், ஒர் அழகுப் பாரம்பரியத்தையும் கொண்டு விளங்குகின்றது. ஆலயத்திலும் அதன் சூழலிலும் நிலவுகின்ற தூய்மை, ஆலய நித்திய நைமித்திய பூசை ஆராதனைகளில் நேரந்தவறாமை, ஆலய முகாமைத்துவச் சிறப்பு, குருமாா்கள் தொண்டர்கள் வழிபடுவோர் ஆகியோரின் ஒத்துழைப்பு ஒழுங்குமுறைகள் என்பன அழகுக்கு அழகு செய்வனவாக அமைந்துள்ளதையும் சிறப்பாகச் சொல்லலாம்.

இங்கு தினந்தோறும் ஆறு காலப் பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. திட்டமிடப்பட்டு குறிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு, ஆலயத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கடிகாரத்தின் மணி ஒலிக்கவும் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகும். இதுபோலவே மகோற்சவ காலங்களிலும் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு சகல கருமங்களும் ஆரம்பமாகி நடைபெறுவது வழக்கமாகும். உபயகாரர்களின் அல்லது முக்கிய பிரமுகர்களின் வருகையை எதிர்பாரத்து பூசைகள், கிரியைகள், உற்சவங்கள் என்பன பிற்போடப்படும் அல்லது காலதாமதம் செய்யும் வழக்கம் இந்த ஆலயத்தில் முற்றாகக் கிடையாது.

இப்போது இந்து ஆலயங்களில் பல்வேறு கட்டணங்களில் பலவகையான அர்ச்சனைகள் செய்யப்பட்டு வருகின்றபோது, நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் அன்றுமுதல் இன்றுவரை அர்ச்சனைக் கட்டணமாக ஒரு ரூபாய்தான் பெற்றுக்கொள்ளப்படுகிறது. அர்ச்சனைச் சீட்டில் ஒரு ரூபாய் என்றுதான் குறிக்கப்பட்டிருக்கும். அடியார் ஒருவர் பத்து, இருபது, ஐம்பது அல்லது நூறு ரூபாகொடுத்து அர்ச்சனைசெய்ய விரும்புகிறார் என வைத்துக்கொள்வோம். ஆலய அலுவலகத்தில் விரும்பிய பணத்தைக் கொடுத்து அர்ச்சனை சீட்டைக் கேட்டால் அவரது பணத்தின் பெறுமதிக்கு ஏற்றவகையில் (ஒருரூபாவுக்கு ஒன்று என்ற ரீதியில்) சீட்டுகள் வழங்கப்படும். இதுவே இங்குள்ள நடைமுறையாகும்.

இலங்கையிலுள்ள பல வர்த்தக நிறுவனங்கள் தங்கள் விளம்பர செயற்பாடுகளின் போது நல்லைக் கந்தன் ஆலய முகப்பை பயன்படுத்துவது வழக்கமாக இருந்துவருகிறது. இலங்கை அரசு 2013 ஆம் ஆண்டில் இலங்கையின் இருபந்தைந்து மாவட்டங்களைப் பெருமைப் படுத்தும் வகையில் அந்தந்த மாவட்டங்களின் பொதுச் சின்னம் தாங்கியதாக பத்துரூபா பெறுமதியான வெள்ளிநாணயக் குற்றிகளை வெளியிட்டிருந்தது. இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய நாணயக் குற்றியில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முகப்பு பொறிக்கப்பட்டமையானது நல்லூரான் பெருமைக்கு இன்னுமொரு சான்று என்றுதான் சொல்லவேண்டும்.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் நிர்வாகச் சிறப்பு ஆலய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிக்கொண்டிருக்கிறது. மாப்பாண முதலியார் பரம்பரையினரின் சிறப்பான பரிபாலன செயற்பாடுகளினால் காலத்துக்குக் காலம் புனருத்தாரண வேலைகளும், திருத்தப் பணிகளும், புதியவடிவமைப்பு செயற்திட்டங்களும் ஆலயத்திற்கு அதிசிறப்பான நிலையை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன. ஆலயத்தின் தெற்குவீதியில் புதிதாக அமைக்கப்பட்ட நவதள இராஜகோபுரம் 2011ஆம் ஆண்டு மகோற்சவ காலத்தின் போது மகா கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. ஆலய வடக்குவீதியில் புதிதாக அமைக்கப்பட்ட நவதள குபேரவாசல் இராஜகோபுரம் 2015ஆம் ஆண்டு மகோற்சவ காலத்தின் போது மகா கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. கடந்த(2017)வருடம் ஆலய தீர்த்தக் கேணியின் நான்கு பக்கங்களிலுமுள்ள படிக்கட்டுகள் திருத்தியமைத்து, பிறநாட்டு மாபிள் கற்களால் அழகுபடுத்தப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

இவ்வருடம் ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சண்முக சுவர்ண சபா மண்டபம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு விமானத்திற்கு(துாபி) தங்கக் கலசத்துடன் அமைந்த பொற்கூரை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன்மூலம் இலங்கையில் பொற்கூரை வேயப்பட்ட முதலாவது கோயிலாக நல்லூர் கந்தசுவாமி ஆலயம் பெருமைபெறுகிறது.

அ.கனகசூரியர்  

 

Comments