புதிய பரிணாமத்துடன் புதிய சமுதாயம் | தினகரன் வாரமஞ்சரி

புதிய பரிணாமத்துடன் புதிய சமுதாயம்

சிறுவர் கிராமமான SOS ஊடாக அதிகமான சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு, கல்வி ரீதியாக பிள்ளைகள் மேலோங்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. இக்கிராமத்தில் தங்கி கல்வி கற்கும் பிள்ளைகளின் பெரும்பாலானோர் பெற்றோர்களை இழந்தவர்கள். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பிள்ளைகளையும் பொறுப்பேற்று வளர்த்து ஆளாக்குவதே இக்கிராமத்தில் முக்கிய செயற்பாடாகும். இக்கிராமங்கள் பிலியந்தலை, அனுராதபுரம், மொனராகலை, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இங்குகின்றன. இதற்கு தேசிய இயக்குநராக திவாகர் இரட்ணதுரை கடமையாற்றுகின்றார்.

SOS கிராமத்தில் வளர்ந்து கல்வி கற்றவர்களில் அதிகமானவர்கள் உயர் பதவிகளில் உள்ளனர். அத்துடன் இக்கிராமங்களிலிருந்து வெளியேறுபவர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குவதற்கும் இப்பயிற்சியூடாக எதிர்கால வாழ்வாதாரத்தை தேடவும் வழிவகை செய்யும் வகையில் SOS நிறுவனம் யாழ்ப்பாணத்தில் தொழிற்பயிற்சிக் கல்லூரி ஒன்றினை ஆரம்பித்துள்ளது.

இத்தொழிற்பயிற்சி பாசறையில் தற்போது அறுபது மாணவர்கள் தங்களது தொழிற் பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் SOS கிராமத்தில் தமது பாடசாலை கல்வி நடவடிக்ைகயினை முடித்தவர்களும், வறுமைக்ேகாட்டிக்கு கீழ் வாழும் மாணவர்களும் ஏனைய சிறுவர் இல்லங்களில் வளர்ந்தவர்களும் முன்னுரிமை அடிப்படையில் இணைத்து கொள்ளப்படுவர். தொழிற்பயிற்சியின் ஊடாக சமுதாயத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாக்கப்பட வேண்டும் என்ற உயர் நோக்குடனே இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு யாழ். பல்கலைக்கழக பீடாதிபதியுடன் இணைந்து பல ஆய்வுகளை நடத்தி, தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டிய அவசியம், இதனூடாக எத்தகைய பயிற்சிகளை அளிக்கலாம் என்பது பற்றி ஆய்வு நடத்தி, இதனூடாக ஏழு தொழிற்பயிற்சிகளை முன்னெடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தொழிற்பயிற்சி என்பது வறுமைக்ேகாட்டுக்குக் கீழ் வாழும் இளைஞர் யுவதிகளுக்கு வாழ்வாதார பயிற்சியாக அமையும், அத்துடன் சிறந்த சம்பளத்துடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில்களை முன்னெடுக்க கூடிய சாத்தியமும் உருவாகும்.

தொழிற்பயிற்சியுடன் மேலதிக பயிற்சியாக ஆங்கிலம், கணனிப் பயிற்சி ஆகியவை முக்கியத்துவப்படுத்தப்பட்டதுடன், ஆங்கிலம், கணனி சர்வதேச ரீதியில் முக்கியத்துவமான விடயங்களாக மாறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்பயிற்சியாக ஒப்பனைக் கலை (Beauty culture), குளிரூட்டி, குளிர்ச்சாதனப் பெட்டி திருத்துதல், வெதுப்பகம் மற்றும் ​கைவேலைகள் என்பவை முக்கியமானவை. அதிகமான சிபார்சுகள் கிடைக்கப் பெற்றாலும் SOS க்கு கிடைக்கும் நிதியினை வைத்தே தொழிற்பயிற்சிக் கல்வியினை முன்னெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஒரு வகுப்பில் சுமார் பதினைந்து மாணவர்களுக்ேக பயிற்சி அளிக்கப்படுவதுடன், கடந்த மார்ச் மாதம் முதல் இவ்வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது இதில் ஆறுபது மாணவர்களே பயிற்சி பெறுகின்றனர். இப்பயிற்சி நவம்பர் மாதம் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்களுக்கு தொழிற்பயிற்சியுடன் பொதுப்பயிற்சிகளும் வழங்கப்படுவதுடன் மேலதிகமாக தீயணைப்பு பயிற்சிகளும் வழங்கப்படும். தற்போது பயிற்சி பெறும் மாணவர்களில் SOS கிராமத்தின் மாணவர் ஒருவரும் ஏனையோர் வறுமைக்ேகாட்டின் கீழ் வாழ்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் பயிற்சி பெறுபவர்கள் வறுமைக்ேகாட்டுக்குக் கீழ் வாழ்பவர்களேயாவார். அத்துடன் க.பொ.தவுடன் கல்வியை தொடர முடியாதவர்களும், சாதாரண தரத்தை எட்ட முடியாமல் போனவர்களும் தொழிற்பயிற்சியை மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். இவர்கள் பயிற்சியை முடித்துக் கொண்டவுடன் இவர்களுக்கான சான்றிதழ் NVQ3 தரத்தையுடையது, இதில் SOS தொழிற்பயிற்சி நிறுவனமும், அரசாங்க தொழிற்பயிற்சி நிறுவனமும் கைச்சாத்திட்டிருக்கும். இச்சான்றிதழ் சர்வதேச அங்கீகாரம் பெற்றதாகவே காணப்படும். இச்சான்றிதழை பெறுபவர்களுக்கு சமுதாயத்தில் ஓர் அங்கீகாரம் கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு கற்பிக்கப்படும் பாடம் அனைத்தும் தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தின் பாடத்திட்ட அடிப்படையிலேயே அமையும். அத்துடன் கற்பிக்கும் ஆசிரியர்களும் தகுதி பெற்றவர்களே. இவ்வாசிரியர்கள் NVQ3 மற்றும் NVQ4 தரமுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்பயிற்சியை பெறும் சகல மாணவர்களும் பாடத்திட்ட அடிப்படையில் வெளிநிறுவனமொன்றில் பயிலுநர்களாக சுமார் ஆறு மாதங்கள் பணிபுரிய வேண்டும். அவர்கள் ஒரு நிறுவனத்தில் நேரடியான தொழிற்பயிற்சியையும் பெறுவர். அத்துடன் இப்பயிற்சிக் காலம் முடிவடைந்தவுடன், அரச தொழிற்பயிற்சி நிறுவகத்தினால் முன்னெடுக்கும் பரீட்சைக்கு தேற்ற வேண்டும். இதில் சித்தியெய்யும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழகப்படும்.

SOS கிராமத்தில் கல்வி நடவடிக்ைககளை பூர்த்தி செய்து விட்டு சுமார் மூவாயிரம் பேர் சமுதாயத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் திருமண வாழ்வில் இணைந்து கொண்டுள்ளனர்.

இதில் வளர்ந்தவர்கள் ஏதோ ஒருவழியில் இக்கிராமத்தினுடன் தொடர்பு வைத்துள்ளனர். தொழில்பயிற்சி பெற்றவர்களின் தொழில்வாய்ப்புக் குறித்தும் அக்கறை செலுத்தப்படுகின்றது.

இதற்குரிய நிதி எங்கிருந்து கிடைக்கிறது என்ற கேள்விக்கு பதிலளிக்ைகயில், கடந்த 2009 ஆம் ஆண்டுவரை SOS கிராமத்திற்கு​ எந்தவிதமான தடையுமின்றி நிதி கிடைக்கப் பெற்றது.

தற்போது இலங்கை ஒரு நடுத்தர வருமானமுடைய நாடாக கணக்கிடப்படுவதால், SOS தலைமையகம் 2023இலிருந்து சுயமாக உள்நாட்டில் வருமானத்தை தேடிக்ெகாள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பினைக் கொண்டுள்ளது. எமது நாட்டைப் பொறுத்த வரை உடனடியாக தேவைகளை நிறைவேற்றுவதற்கு யாரும் முன்வந்தாலும் நீண்டகால அடிப்படையில் உதவுவதற்கு அதிகமானவர்கள் முன்வருவதில்லை, என்றார் தேசிய இயக்குநர்.

யாழ்ப்பாணத்தில் SOS கிராமம் அமைக்கப்பட்டதன் பின்னர் நல்லதொரு சிந்தனை எழுந்துள்ளது. அதிகமானவர்கள் உதவும் மனதுடன் முன்வந்துள்ளனர். இது நல்லதொரு பிரதிபலிப்பினை உருவாக்கும் என்ற நம்பிக்ைகயுண்டு.

போல் வில்சன்

Comments