வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம் இன்று | தினகரன் வாரமஞ்சரி

வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம் இன்று

மட்டக்களப்பூராம் ஆரையம்பதி மூன்றில் வெள்ளை மணல் பரப்பில் கோவில் கொண்டு வேண்டிவரும் அடியவர்க்கெல்லாம் வேண்டிய வரங்களை வாரி வழங்கிக்கொண்டிருக்கும் மூல கணபதியாக ஆரையம்பதிவாழ் மக்கள் அதீத நம்பிக்கை கொண்டு வழிபடும் தெய்வமாக அருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அரசடிப் பிள்ளையார் ஆலையத்தின் கொடியேற்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு இடம்பெறுகிறது .

இற்றைக்கு இரு நூற்றாண்டு காலப்பகுதி வராலாற்று பெருமை கொண்ட இவ்வாலயம் ஆரயம்பதியில் தனிப்பெரும் பிள்ளையார் ஆலயமாகவும் வெள்ளைமணல் பரப்பில் கோவில் கொண்டதனால் வெள்ளைமணல் பிள்ளையார் என்றும் பக்தர்களினால் பெயர்கொண்டு அழைக்கப்பட்டதுடன் அரசமர நிழலில் அமர்ந்திருந்து அருள் பாலிப்பதினால் ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் எனும் நாமமும் பெற்றார். இவ் ஆலயத்தின் சுற்றுப் பிரவாகத்தில் அரசு, வம்மி,தென்னை விருட்சங்களும், வெள்ளெருக்கு, பால் அறுகு என்பனவும் இருப்பதனால் விநாயகருக்கு ஏற்புடையதொன்றாகும்.

அழகுத் தமிழர் குலம் செறிந்து வாழும் இப்புனித பூமியில் அரசடிப்பிள்ளையார் நாமம் சொன்னாலே இருகரம் கூப்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பக்தர்கள் மனதில் நீக்கமற நிறைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது .

அழகான வெள்ளைமணற்

பரப்பில் கோவில்

அதனருகே நிழல் கொடுக்கும்

அரசால் வம்மி

இளையவனார் முருகனுக்கும்

உமையன்னைக்கும்

எதிரினிலே ஆலயங்கள் அங்கே உண்டு

வளமான ஆரையூர் பதியில் வந்து

வரம் தந்து எமை ஆட்சி புரியும் ஐயா

உளமாற உனை வேண்டிப் பாடுகின்றோம்

ஒருகுறையும் வாராமல் அருள் செய்வாயே

இவ்வாலயத்தின் திருவிழாக் ஐந்து தினங்ககளே நீடித்தாலும் இவ்வாலயத்தின் ஆடம்பரமற்ற பக்திபூர்வமான கிரியைகளில் கலந்து கொண்டு இப்பெருமானின் பேரருள் கிடைப்பதற்காக அணிதிரளும் பக்தர் கூட்டத்திற்கு அளவேயில்லை இன்று நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும், கொடியேற்றத் திருவிழாவுடன் நாளை 10 ஆம் திகதி திங்கட்கிழமை இரண்டாம் நாள் திருவிழாவும், 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்றாம் நாள் திருவிழாவும் 12 ஆம் திகதி புதன்கிழமை தேரோட்டத் திருவிழாவும் 13 ஆம் திகதி விநாயகசதுர்த்தி தினமான வியாழக்கிழமை விநாயகப் பெருமானுக்கு 108 அஷ்டோத்திர சத சங்காபிஷேகமும் இடம்பெற்று முற்பகல் 10.30 மணிக்கு வெள்ளைமணல் தீர்த்தக்கேணியில் ஸ்ரீ அரசடிப்பிள்ளையாருக்கு தீர்த்தோற்சவம் இடம்பெறும் .

வெள்ளைமணல் பிள்ளையாரின்

தீர்த்தமாட

வருமடியார் கூட்டத்தை நேரில் பார்த்தேன்

வெள்ளமென அக்கூட்டம் திரண்டு நின்று

விநாயகரே என்று கைகள்

வணங்கக் கண்டேன்

வெள்ளைமனம் திறந்து நின்று

பக்தரெல்லாம்

விக்கித்து அவர் பாடும் பாடல் கேட்டேன்

உள்ளமெலாம் உனைக்காணத்

துடிக்குதய்யா

ஓடிவந்து எமைக் காத்து ரட்சிப்பாயே

தீர்தோற்சவத்தினை தொடர்ந்து அன்னதானமும் இடம்பெறும் அன்றைய தினம் சுவாமிக்கு திருப்பொன்னூஞ்சலும் பூங்காவானத்திருவிழாவும் இடம்பெற்று மறுநாட் காலை வெள்ளிக்கிழமை வைரவர் பூஜையும் இடம்பெற்று உற்சவம் இனிதே நிறைவுபெறும். கிரியைகள் யாவும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் மற்றும் தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலயங்களின் பிரதம குரு பிரதிஷ்டா திலகம் சிவஸ்ரீ மு.கு .சச்சிதானந்தக்குருக்கள் மற்றும் உற்சவ கால பிரதம குரு களுவாஞ்சிகுடி மதுரை மாரியம்மன் மற்றும் திருமுருகன், அற்புதப்பிள்ளையார் ஆலயங்களின் பிரதம குரு சாதக திலகம் தேவிசாதகப்பிரியன் மதுரசாதகம் சிவஸ்ரீ மயூரவதனக்குருக்கள்,பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ பத்மநிலோஜ சர்மா உட்பட ஆலயகுரு சிவஸ்ரீ தோ . மிதுஷன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளன. உற்சவத்தின்போது, பரதநாட்டிய நிகழ்வுகளும், பக்திமிகு பண்ணிசையும், பதுளை சிவதாசன் குழுவினரின் மேளவாத்தியக் கச்சேரியும் இடம்பெறுவது விசேட அம்சமாகும்.

விஸ்வநாதன் பத்மசிறி...

Comments