வாழ்வியல் தத்துவம் | தினகரன் வாரமஞ்சரி

வாழ்வியல் தத்துவம்

பேருந்தின் இருக்கைகள் கூட்டத்திற்குப் போதுமானதாக இருந்தது. ஹாபிழும் கடைசி வரி இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான். ஜன்னல் வழியே பூமியை முத்தமிடும் மழைத்துளிகளை ரசிப்பது இளமைக்கும் ஓர் இனிமை தான். பயணத்தில் விழித்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையை விட உறங்கிக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை தான் உயர்வாக இருந்தது. அறுபது பேர் நிறைந்த கூட்டத்தில் அவனது உணர்வுகள் பட்டாம் பூச்சி போல் எங்கெங்கோ பறந்து கொண்டிருந்தன, அவனது சிறகினை யாரோ பிடித்ததைப் போல.

‘தம்பி எங்கே போறீங்க’ கண்டக்டரின் கடமைக்குரல் செவிகளுக்குள் நுழைந்தது.

‘வாழைச்சேனை ஒண்ணு தாங்க’ என்று செம்மஞ்சள் நிற நூறு ரூபாய் நோட்டை நீட்டினான். கண்டக்டரும் டிக்கட்டுடன் மீதி நாற்பது ரூபாயை நீட்டினான். அவனது கைகள் மீதிப் பணத்தை பர்சுக்குள் வைத்துவிட்டு எதேச்சையாக டிக்கட்டின் மேல் கண்களை மேயவிட்டான். பயணப் பெறுமதியாக ரூபாய் ஐம்பத்து ஐந்து மாத்திரம் அச்சாகி இருந்தது. பெற்றோரின் அரவணைப்புக்குள் வாழும் கல்லூரி மாணவனான அவனுக்கு ஐந்து ரூபாய் என்பது ஒரு பொருட்டாகவே படவில்லை. ஆனாலும், அவனருகில் இருந்தவர்களிடமும் அதே பாணியில் கண்டக்டர் நடந்து கொண்டது ஒரு குற்றமாக தென்பட்டும் அவனது ஏக்கம் கூட்டத்தில் கூட்டமாக தொலைந்து போனது. இருக்குமிடம் தெரியாமல் முகநூலில் முகத்தை மறைத்துக் கொண்டு பிளவுகளைத் தூண்டும் சமுதாயம் தானே இது. அவன் கைகள் கண்களைத் தூங்கவிட்டாலும் அந்த இரு பைகளையும் மடியோடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டன.

எதிர்பாராத வேளையில், கண்களில் கருத்தரிக்கும் தூக்கம் என்றும் இதமானது. உலகை விட்டு கனவுலகில் இதயம் மிதந்து கொண்டிருந்தது. ஒரு தலைக்காதலியின் பேரழகு முகமும், அவனது இலட்சியங்கள் வெல்கின்ற காட்சிகளும் விழித்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு புத்துணர்வில் அவனது கண்கள் தூக்கத்தைக் கடந்து விழிப்புக்குள் மெது மெதுவாக அடங்கிக் கொண்டிருந்தது. தன் ஊர் வந்து விடடதா? என்ற இதயத்தின் வினாக்களுக்கு கண்களால் விடை தேடினான். ஏறாவூரைக் கடந்து செங்கலடி வழியாக பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆமை வேகத்தில் ஓடும் பேருந்து முயல் வேகத்தை எப்படி எட்டிப் பிடிக்க முடியுமென்ற அவனது எண்ணம் இதழ்களில் புன் சிரித்தது. முதல் வரியில் தொடங்கி நடுவரிசையில் வளர்ந்து அவன் அமர்ந்திருக்கும் கடைசி இருக்கையை நோக்கி அவனது வயதை ஒத்த ஒருவன் கைகளில் பல வண்ணக் காகிதக் கட்டுக்களுடன் ஹாபிழை நெருங்கிக் கொண்டிருந்தான். அவனது முகத்தை பார்த்து ஹாபிழ் இதமாக புன்னகைத்தான். மறுதலையாக அவனும் புன்னகைத்தான்.

ஹாபிழை நோக்கி மஞ்சள் நிற காகிதத்தில் கறுப்பு நிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அக்கடதாசியை நீட்டினான்.

‘அன்பார்ந்த உள்ளங்களே’

“என்னுடைய அப்பா கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று ஏழு வருடங்களாகி விட்டன. இதுவரை வீடு திரும்பவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று கூடத் தெரியாது. அம்மா இதுவரை கூலி வேலை செய்துதான் குடும்பத்தை நடாத்தி வந்தாங்க. ஆனாலும், அவங்க உடம்பு முடியாத நிலையில் இப்போது இருக்காங்க. எனக்கு இரு தங்கைகளும் ஒரு தம்பியும் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள், பேனா, கொப்பி, காலணிகள் என்பவற்றை வாங்க நீங்கள் உதவும் பணத்தை பயன்படுத்துகின்றேன். மீதத்தை குடும்பத்திற்காக செலவும் செய்கிறேன். அத்திவாரமில்லாத வீட்டில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்”

மடலின் வார்த்தைகளுக்குள் அவனது இதயம் உறைந்து போயிருந்தது. இங்கே மௌனங்களே வினா!

ஹாபிழின் கண்கள் அவனைத் தேடியது. பயணிகளிடம் அவன் கொடுத்த கடதாசியை வாங்கிக் கொண்டிருந்தான். ஹாபிழின் கண்கள் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. பல வெறும் கைகளுக்கு மத்தியில் ஒரு சில சில்லறைக் குற்றிகள் அவனது கைகளில் கிடைத்தன. ஹாபிழை அவன் நெருங்கும் நொடிகள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. சந்திவெளி பிள்ளையார் கோயிலின் அருகே பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காய் நிறுத்தப்பட்டது. அங்கு நின்றவர்களையும் ஏற்றிக்கொண்டு பேருந்து மீண்டும் பயணத்தை ஆரம்பித்தது. ஏற்கனவே இருக்கைகள் முழுமையானதால் பேருந்தின் நடுவில் சுமார் அறுபது வயதை தாண்டிய ஓர் அம்மா தள்ளாடியடி நின்று கொண்டிருந்தார். ஹாபிழின் கண்கள் இருக்கைகளில் உள்ளவர்களிடம் மனிதத்தை தேடிக் கொண்டிருந்தது. ஆனாலும் அதனை அவனால் அவர்களிடம் பெற முடியவில்லை. சட்டென அவனது இருக்கையை விட்டு எழுந்தவனாய் ‘அம்மா...’ என்ற அவனது கூரான ஓசை அவளது காதினுள் நுழைந்தது. ‘இங்கே வந்து அமருங்க’ என்றபடி அந்தத் தாயினை அழைத்து அவனது இருக்கையில் அமர்த்தினான்.

ஹாபிழின் கண்களை நோக்கி அவள் சிரித்தபோது பல லட்சம் பூக்கள் பூத்தது போல இதயம் நிறைந்தது. ஆயிரம் காயங்கள் நெஞ்சில் இருந்த போதும் சில நிர்ப்பந்தங்கள் அவைகளுக்கு தற்காலிக மருந்து போடுவது சாத்தியம் தான். கண்டக்டரை அழைத்து அவளுக்கான டிக்கட்டையும் ஹாபிழே எடுத்துக் கொண்டான். அவனது கையிலிருந்த பைகளை அவளின் கைகள் பற்றி மடியோடு பத்திரமாக அணைத்துக் கொண்டன.

குளிர்காற்றின் இதம் தேகத்தை இரு கைகளால் கட்டிப் போட்டது. இனிமைகளுக்குள் மெய்மறந்தவனை மீண்டும் பெயர் தெரியாத அவனின் நெருக்கம் மீட்டது. அவன் எதுவும் பேசாமல் கண்களால் ஹாபிழின் கையிலிருந்த கடதாசியைக் கேட்டான். ஹாபிழும் சிறு நொடிகள் தாமதித்தவனாய் தன் பர்சுக்குள் ஒளித்து வைத்திருந்த அந்த ரூபாய் நோட்டை கலப்படமில்லா புன்னகையுடன் அவனிடம் நீட்டினான். அந்நோட்டினை வாங்கிக் கொண்டவன்

‘தம்பி என்னிடம் சில்லறை இல்லைங்க’

‘அண்ணா.... சில்லறை எல்லாம் வேணாம் நீங்கள் வைத்துக் கொள்ளுங்க’ ஹாபிழின் வார்த்தைகளை அவனது செவிகளால் நம்ப முடியவில்லை.

கடதாசி எல்லாவற்றையும் ஹாபிழை வைத்துக் கொள்ளும் படி... கண்கள் சொல்லிய படி தன் பக்கட்டுக்குள் நீண்டநேர தேடலின் பின் சில தாள்களும் சில்லறைகளுமாக வெறுமனே நூற்றி பதினைந்து ரூபாய், தான் காலையிலிருந்து இரவு வரை ஏறி இறங்கிய பலன் என்று அவன் பேசாமலே ஹாபிழின் மனதில் உணர்த்தினான். ஆனால், ஹாபிழ் எதுவுமே யோசிக்காமல் ஐநூறு ரூபாவை அவனுக்குக் கொடுத்து உதவியமை பெரும் ஆச்சர்யமாக இருந்தது. அவன் கண்களில் கண்ணீர்த்துளிகள் வார்த்தைகளை அச்சடித்தது. ஹாபிழின் கண்களும் கண்ணீரை மறைத்தது.

கிரான் சந்தியில் அவனது இ(ர)றக்கம் ஹாபிழின் கண்களைப் பார்த்த படியே முடிந்தது. ஹாபிழின் இதயத்தில் ஏதோ ஒன்றைச் சாதித்த வியூகம். “மனம் இருப்பவனிடம் பணமில்லை; பணம் இருப்பவனிடம் மனமில்லை. திறமை உள்ளவனிடம் வாய்ப்பில்லை; வாய்ப்பு உள்ளவனிடம் பொறுப்பில்லை”. என்ற வாழ்வியல் தத்துவத்தை ஒரு முறை சொல்லிக் கொண்டது.

 

 

Comments