இந்திய கிரிக்ெகட் அணி அந்நிய மண்ணில் சொதப்புவது ஏன்? | தினகரன் வாரமஞ்சரி

இந்திய கிரிக்ெகட் அணி அந்நிய மண்ணில் சொதப்புவது ஏன்?

கடந்த வருடங்களில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலிருந்து வரும் இந்திய அணி இவ்வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுடன் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2- -1 என்ற கணக்கிலும் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 5 போட்டிகள் கொண்ட தொடரின் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 3- -1 என்ற கணக்கில் தோல்வியுற்று சற்று பின்னடைந்து வருகின்றது.

வருட ஆரம்பத்தில் தரவரிசையில் முதலிடத்திலிருந்த இந்திய அணி தென்னாபிரிக்காவுடனான தொடரில் வெல்லும் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய மண்ணில் ஆடும் போது இந்திய துடுப்பாட்ட வீரர்கள் இரட்டைச்சதம், சதம், அரைச்சதம் எனக் குவித்து ஒரு இன்னிங்ஸில் 500 ஓட்டங்களைக் கடந்தாலும் தென்னாபிரிக்க மண்ணில் ஓர் இன்னிங்சில் 300 ஓட்டங்களைக் கடப்பதே அவ்வணிக்கு சிரமமாகவிருந்தது. அத்தொடரில் கோலி மட்டுமே 3 டெஸ்ட் போட்டிகளிலும் 286 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் இழந்துள்ள இந்திய அணி இத்தொடரிலும் தனியாளாக நின்று கோலியே போராடி வருகிறார். அவர் இதுவரை 4 டெஸ்களிலும் ஒரு சதம் அடங்கலாக 544 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். மற்றைய முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களில் எவரும் இதுவரை கோலிக்குக் கைகொடுக்கவில்லை. இந்தியாவின் தற்போதைய நங்கூரமென பெயரெடுத்த புஜாரா கூட இத் தொடரில் ஒரு சதமடித்திருந்தாலும் இந்திய அணியை வலுவான நிலைக்கு இட்டுச்செல்ல அவரால் முடியாதுள்ளது. ரஹானேயின் நிலைமையும் இதுவே. ஒரு நாள் மற்றும் ரி/20 போட்டிகளில் வெளுத்து வாங்கும் கே. எல். ராகுல், தவான் ஆகியோரும் இந்திய டெஸ்ட் அணிக்கு சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் திணறுகின்றனர். ராகுல் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் 113 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 3 போட்டிகளில் 158 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொடுத்துள்ளனர். இந்திய அணி வெற்றிபெற்ற மூன்றாவது போட்டியின் போது மட்டுமே சுமாரான ஆரம்பத்தை இந்த ஜோடி வழங்கியிருந்தது.

சகல துறை ஆட்டக்காரர்களான ஹார்த்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் இந்திய அணி எதிர்பார்த்தபடி திறமை காட்டவில்லை. பாண்டியா 4 டெஸ்ட் போட்டிகளிலும் வெறும் 148 ஓட்டங்களையே பெற்றார். அஸ்வினின் துடுப்பாட்டத் திறமை காரணமாக கடந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் முன்வரிசையில் களமிறக்கப்பட்டிருந்தார். அப்போட்டிகளில் அவர் சதடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இத் தொடரில் அரைச்சதம் கூட எட்ட முடியாமல் போனதும் இந்திய அணியின் பின்னடைவுக்குக் காரணமாகும். தினேஸ் கார்த்திக்குக்குப் பதிலாக ஐ. பி. எல். லில் வெளுத்து வாங்கிய துடுபாட்ட விக்கெட் காப்பாளரான ரிஷப் பண்ட் இரு போட்டிகளிலும் 48 ஓட்டங்களையே பெற்று ஏமாற்றமளித்தார்.

இந்திய அணியின் வேகப்பத்து வீச்சு இத்தொடரில் சிறப்பாகவுள்ளது. நான்கு போட்டிகளிலும் 55 விக்கெட்டுகளை பும்ரா, சமி, யாதவ், ஷர்மா, பாண்டியா ஆகியோரே கைப்பற்றியிருந்தனர். இந்தியத் தொடர் வெற்றிகளுக்கு களமமைக்கும் அவ்வணியின் சுழற் பந்துவீச்சாளரான அஸ்வின் நான்கு டெஸ்ட் போட்டியிலும் மிளிரவில்லை. நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கியபங்காற்றியது அவர்களின் சுழற்பந்து வீச்சே. இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளரான மொயின் அலி 9 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற அஸ்வின் இப்போட்டியில் தாராளமாக ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையே வீழ்த்தியிருந்தார்.

இங்கிலாந்து அணியின் இத்தொடர் வெற்றிக்கு அவ்வணியின் பின் வரிசையில் வரும் சகலதுறை ஆட்டக்கார்களின் சிறப்பான ஆட்டமே காரணமாயமைந்திருந்தது. இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களும்., நடுவரிசையில் களமிறங்குபவர்களும் சோபிக்கத் தவறும் பட்சத்தில் பின் வரிசையில் வரும் பட்லர். வோக்ஸ், சாம் குர்ரான், மொயின் அலி கைகொடுத்து ஓட்டக் குவிப்பை அதிகரிக்கின்றனர்.

அதிலும் அறிமுக சகலதுறை ஆட்டக்காரரான சாம் குர்ரான் முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் முக்கிய நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, இங்கிலாந்து துடுப்பெடுத்தாடிய 2வது இன்னிங்சில் 87 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்த நிலையில் களமிறங்கிய சாம் குர்ரான் விரைவாக 63 ஓட்டங்கள் பெற்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

அதேபோல் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியுற்ற லோட்ஸ் டெஸ்டிலும் இறுதி நேரத்தில் விரைவான ஓட்டங்களை தனது அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார். இவர் விளையாடாத மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியுற்றது.

மீண்டும் நான்காவது போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட இவர். இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் 86 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இக்கட்டான நிலையிலிருந்த அவ்வணியை குர்ரான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 78 ஓட்டங்களைப் பெற்று மீட்டதோடு, இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் இக்கட்டான நிலையில் களம்புகுந்து 46 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்து அணியின் வெற்றிவாய்ப்பை பிரகாசிக்கச் செய்தார்.

20 வயதான சாம் குர்ரான் தனது அறிமுகத் தொடரிலேயே இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற மூன்று போட்டிகளிலும் துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் பிரகாசித்து இங்கிலாந்து அணியின் தொடர்வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.

ஆனால் இந்திய அணியோ தனது சொந்த மண்ணில் எதிரணியினரை திக்குமுக்காட செய்து இரட்டைச் சதம், சதம் எனப் பிரகாசிக்கும் துடுப்பாட்ட வீரர்களும், இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்கள், போட்டியில் 10 விக்கெட்டுகள் என்று போட்டி போட்டுக்கொண்டு கைப்பற்றும் பந்துவீச்சாளர்களும் (முக்கியமாக சுழற்பந்து வீச்சாளர்கள்) வெளிநாட்டு மண்ணில் சொதப்புவது வரலாறாகியுள்ளமை இங்கு குறிப்பிட்டத்தக்கது.

எம். எஸ்.எம். ஹில்மி

Comments