வடுக்களை குணப்படுத்தினால் மட்டுமே விடிவுக்கு வழிபிறக்கும் | தினகரன் வாரமஞ்சரி

வடுக்களை குணப்படுத்தினால் மட்டுமே விடிவுக்கு வழிபிறக்கும்

மைத்திரி - - ரணில் இணக்க அரசாங்கத்திற்கும் அதன் தலைவர்களாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிராக முன்வைக்கப்படுகின்ற அனைத்து குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முற்றுமுழுதாக நியாயமானவையாக இல்லாவிட்டாலும் அதன் ஒட்டுமொத்த விளைவாக அரசாங்கத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவிக்கப்படுகின்றது. ஊடகங்கள் வாயிலாக அரசாங்கத்திற்கும் அதன் தலைமைத்துவங்களிற்கும் எதிராக முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களுக்கு மேலதிகமாக சமூக ஊடகங்கள் மூலமாகவும் எல்லையற்ற வகையில் மிகக் கீழ்த்தரமான சேறுபூசும் செயற்பாடுகளும் குறைவின்றி இடம்பெற்று வருகின்றன. இதே அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஜனநாயக சுதந்திர சூழலை பயன்படுத்தியே அத்தகைய இழிவான தாக்குதல்களை அவ் ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த அரசாங்கத்தை பதவியில் அமர்த்துவதற்கு பாடுபட்ட பலருக்கும் ஏமாற்றம் ஏற்படுவதற்கான நியாயமான காரணிகள் இருக்கின்றது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதிலும் திருடர்களை மடக்கிப் பிடிப்பதிலும் காணப்படுகின்ற மந்தகதியான செயற்பாடுகள் இந்த அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

குற்றம் புரிந்தவர்களாக கருதப்படுபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மந்தகதியாகவே முன்னெடுக்கப்படுகின்றது என்பது வெளிப்படையாகத் தென்பட்ட போதிலும் இதுவரை பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. அதற்கு மேலாக விசேட நீதிமன்றங்களை அமைத்து வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

முன்னைய ஆட்சிக் காலத்தின்போது நிகழ்த்தப்பட்ட கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்களை கொலை செய்தமை போன்ற குற்றங்களுக்கு ஆளாகியிருப்போர் இன்னும் சுதந்திமாகத் திரிகின்றனர் என்ற குற்றச்சாட்டும் மேலோங்கியிருக்கின்றது. லசந்த மற்றும் தாஜுடீன் கொலை எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீத் நொயார் மீது மேற்கொண்ட தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை என்பதும் இந்த அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு இழுக்காகவே இருந்து வருகின்றது. மறுபுறத்தில் பழைய திருடர்களை தேடிப்பிடிப்பதை விட்டுவிட்டு மத்திய வங்கியை சூறையாடியது தொடர்பாக இவ் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. இதனால் இந்த அரசு திருடர்களுடனும் குண்டர்களுடனும் கள்ளத்தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் இவ் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. இவை அனைத்தையும் விட மிகப் பாரதூரமான குற்றச்சாட்டும் அண்மையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. 11 மாணவர்களை கடத்திச் சென்று காணாமலாக்கப்பட்டமை, பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் படுகொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நேவி சம்பத்துக்கு பாதுகாப்பு வழங்கி நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு படைகளின் பதவிநிலை பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவின் கைதினை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் இவ் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.

இக்குற்றச்சாட்டினை முன்வைக்கும் பலரும் பாதுகாப்பு படைகளின் பதவிநிலை பிரதானியை பாதுகாப்பதன் மூலம் நீதிக்கும் நியாயத்திற்குமான வழியினை மறுத்து மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி சட்டத்தை கையில் எடுக்கின்றாரா என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். இதை அடிப்படையாகக் கொண்டே குற்றப் புலனாய்வு திணைக்களத்தை சுதந்திரமாக செயற்படுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியும் தடையாக இருக்கின்றார்கள் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது.

அத்தோடு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. நாட்டின் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு துறையின் அதி உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராகவும் சட்டத்தை செயற்படுத்துவதில் எந்தவொரு விடயமும் தடையாக இருக்க வேண்டியதில்லை. மறுபுறத்தில் குற்றம் தொடர்பான சந்தேக நபர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆயினும் முப்படைகளின் தளபதிகள் பற்றிய விசாரணைகளின் போது அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரச தலைவர் ஆகியோருக்கு அறிவிப்பதா இல்லையா என்பது ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். ஏனெனில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கு முன்னர் சபாநாயகருக்கு அறியக்கொடுப்பது வழக்கமாகும். ஆனால் இங்கு மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளரோ ஜனாதிபதியோ அறிந்திருக்கவில்லை எனக் கூறப்படுகின்ற அதேநேரம் சில ஊடகங்கள் இந்த விசாரணைகளுக்கு ஜனாதிபதி முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறப்படுகின்றது. பாதுகாப்பு துறையின் அந்தரங்க தகவல்களை வெளியே கசியவிடாது தடுக்க வேண்டியது அரச தலைவரின் பொறுப்பாகும். அதன் அர்த்தம் குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டும் என்பதல்ல. மறுபுறத்தில் பாதுகாப்பு தரப்பினரின் அந்தரங்க தகவல்களைப் பெற்று அதனை வைத்து வயிற்றுப்பிழைப்பை நடத்தும் சில பிரிவுகள் இருக்கின்றதென்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆயினும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கோ அல்லது வேறு முக்கிய விடயங்களுக்கோ பாதுகாப்பு தரப்பின் உள்ளக தகவல்கள் தேவைப்படுகின்ற போது அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான உகந்த முறைமை ஒன்று இருத்தல் அவசியமாகும். அதேநேரத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காது தகவல்களை தேவைக்கேற்ப பெற்றுக்கொடுத்த போதிலும் அத்தகவல்களை வகைதொகையின்றி அம்பலப்படுத்துவது ஆரோக்கியமானதா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

காரணம் பல குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுப்பப்பட்டிருந்த முன்னாள் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் கருணாசேகர விடுவிக்கப்பட்டிருத்தலும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

ஐந்து மாதங்களாக அவரைத் தடுத்துவைத்திருந்த போதிலும் அவருக்கு எதிராக எவ்வித குற்றப்பத்திரமும் முன்வைக்காதமை வியக்கத்தக்க விடயமாகும். மூன்று தசாப்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் முக்கிய பங்குதாரிகளாக இருந்த இத்தகைய உயர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கும்போது உறுதியான தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டும் என்பதும் அப்படி இல்லாதபட்சத்தில் அது அனாவசிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதும் அப்பட்டமான விடயமாகும்.

இந்நாட்டின் பிரிவினைவாத யுத்தமானது ஒட்டுமொத்த நாட்டையும் குறிப்பாக தென்னிலங்கையையும் மிகுந்த பீதியில் ஆழ்த்தி அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த பின்னணியில் அதனை போர்முனையில் முடிவு கட்டியவர்கள் என்றவகையில் இந்நாட்டின் பெரும்பான்மையினர் அரச படையினரை தமது உயிரைக் காத்த உத்தமர்களாகவும் வீரர்களாகவும் மதித்துப் போற்றி வருகின்ற பின்னணியில் அவர்களுக்கு எதிராக உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறைப் பிடித்து இம்சைப்படுத்துவதென்பது நாட்டில் தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு துணை போவதாகவே அமையும்.

அதனாலேயே பாதுகாப்பு படையினரை குற்றவாளிகளாக இனங்காட்டப்பட்டு அவர்கள் மீது அவதூறு சுமத்தப்படுவதாக தென்னிலங்கையின் ஒரு சாரார் குரல் எழுப்பி வருகின்றனர். சட்டத்தை மீறி செயற்படுவதற்கு எவருக்கும் உரிமை இல்லாதபோதிலும் நாட்டைப் பாதுகாப்பதற்காக பாரிய அர்ப்பணிப்புகளை செய்த பாதுகாப்பு படையினர் மீது வீண் பழி சுமத்துவதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கில்லை.

அந்தவகையில் குற்ற விசாரணைகள் பற்றிய ஆழமான அறிவும் அனுபவமும் அற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படுவதில்லை என அரசுக்கு எதிராக குற்றம் சுமத்துவது அர்த்தமற்ற விடயமாகும். அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்வதற்கு உறுதியான தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அதனை தடுப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் தலையிடுவார் எனக் கூறமுடியாது.

அதேநேரத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் தகவல்கள் எதிரியின் கைகளில் சிக்குவதை தடுப்பதற்கு அரச தலைவருக்கு அதிகாரம் இருப்பதுடன் அது அவரது தலையாய கடமையும் ஆகின்றது.

எந்தவொரு யுத்தத்திலும் வெற்றி கொள்வோர் எவரும் இல்லை என்பதும் மாறாக யுத்தமானது யுத்த களத்தில் அழியா வடுக்களையே ஏற்படுத்தும் என்பதும் உலகறிந்த உண்மையாகும்.

அந்தவகையில் தூரநோக்கற்ற இனவாத வங்குரோத்து அரசியலினால் இந்த நாட்டில் ஊட்டி வளர்க்கப்பட்ட பிரிவினைவாத யுத்தம் அதன் பிரதான பங்குதாரிகளாகிய தமிழ், சிங்கள இரு தரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தியிருக்கின்ற ஆழமான வேதனைமிக்க வடுக்களை குணப்படுத்தாதவரை விடிவுக்கான வழிபிறப்பது சாத்தியமில்லை.

ரவீந்திரன்

Comments