இலங்கையின் அபிவிருத்திக்கான வாய்ப்புகளும் சவால்களும் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் அபிவிருத்திக்கான வாய்ப்புகளும் சவால்களும்

கலாநிதி  எம்.கணேசமூர்த்தி,  பொருளியல்துறை,  கொழும்புப் பல்கலைக்கழகம்

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றபோது ஆசியப் பிராந்தியத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்புகளை அதிகளவு தன்னகத்தே கொண்டிருந்த சிறந்த தெரிவாக அது இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆசியாவின் இன்றைய பொருளாதார வல்லமைமிக்க நாடுகள் பலவற்றின் அதே பொருளாதார அடைவுகளுக்கு சமமான நிலையில் இலங்கை இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் 70 வருடங்களின் பின்னர் இந்தோ பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி திருப்திகரமானதாக இல்லாதது மட்டுமன்றி மிகவும் பலவீனமானதொரு நிலையினை அடைந்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது. இந்த வகையில் இலங்கையை ஆசியாவின் 'ஆச்சரியமாக'வே பார்க்க வேண்டியுள்ளது. அபிவிருத்திக்கான சிறப்பான வாய்ப்புகள் இருந்தும் அவற்றை மிகமோசமான வகையில் தவறவிட்ட ஆச்சரியமிக்க நாடாகவே பலரும் எம்மைப் பார்க்கின்றனர். இந்நிலைக்கான காரணங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலில் சுதந்திரம் பெற்றபோது இலங்கையின் பொருளாதார நிலை பற்றிய ஒரு உசாவல் அவசியமாகிறது. பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் இலங்கையில் அதுவரை காலமும் நிலவிய தற்சார்பு - தன்னிறைவுப் பொருளாதாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பணப் பொருளாதாரமொன்று அறிமுகம் செய்யப்பட்டது. பண்டமாற்று அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் செய்த நிலை மாறி நவீன பணப்பொருளாதாரத்திற்கான அடித்தளம் பெருந்தோட்டத்துறையின் வருகையோடு ஏற்படுத்தப்பட்டது.

பொதுமக்களின் நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவிய பல நுகர்வுப் பொருட்களின் அறிமுகமும் அதிகளவு வரிவிதிப்புகளும் பணத்தின் தேவையை அதிகரித்தன. குறிப்பாக தீப்பெட்டி, மண்ணெண்ணெய் "லாந்தர்" விளக்கு, கோதுமை மா போன்ற வெகு சாதாரண நுகர்வுப் பொருட்களை, மேல் நாட்டவர் அறிமுகப்படுத்தியபோது அவற்றை மறுக்கும் நிலையில் மக்கள் இருக்கவில்லை. காரணம் இவை மக்கள் வாழ்க்கையை இலகுபடுத்துவனவாக இருந்தன. எனவே பணப்பொருளாதாரமொன்று படிப்படியாகத் தோற்றம் பெற்றதில் ஆச்சரியமில்லை.

மறுபுறம் பெருந்தோட்டத்துறையில் வளர்ச்சி காரணமாக ஏற்றுமதி இறக்குமதியை அடிப்படையாகக் கொண்ட தங்கியிருக்கும் பொருளாதாரமொன்றும் உருவாகியது.

பெருந்தோட்ட ஏற்றுமதி வருவாய்களைக்கொண்டு இறக்குமதிச் செலவினங்களை செலுத்தும் பொருளாதாரமும் இதுவாகும். அத்துடன் இரட்டைப் பொருளாதாரம் என அழைக்கப்படும் நவீன துறையாக பெருந்தோட்டத்துறையையும், மரபு ரீதியிலான துறையாக நெல் மற்றும் உப உணவு உற்பத்தியில் ஈடுபட்ட உள்ளூர் விவசாயத்துறையும் அடையாளப்படுத்தப்பட்டன.

பெருந்தோட்டத்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் பாதைக் கட்டமைப்புக்களும், புகையிரத போக்குவரத்துக் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டன. இலங்கையின் ஏனைய முக்கிய இடங்களையும் இணைக்கும் வண்ணம் இச்சாலை மற்றும் புகையிரதக் கட்டமைப்புகள் விஸ்தரிக்கப்பட்டமைக்கு பாதுகாப்புக் காரணங்களே பின்னணியில் இருந்தன.

இதனோடு இணைந்ததாக வர்த்தக சேவைகள் குறிப்பாக களஞ்சியப்படுத்தல், வங்கி, காப்புறுதி, கப்பற் சேவை போன்ற சேவைத்துறைகளும் வளர்ச்சியடைந்தன. தபால், தொலைத் தொடர்பு போன்றனவும் ஏற்படுத்தப்பட்டன.

பிரித்தானிய ஆட்சியில் ஆங்கில மொழிமூலக் கல்வி மிஷனரிகள் மூலமாக வழங்கப்பட்டதால் ஆங்கிலப் புலமை கொண்ட நிர்வாக அதிகாரிகள் குழாமொன்று உருவாகியது. மத்தியதர வர்க்கமொன்றின் முக்கிய அம்சமாக இவர்கள் விளங்கினர். இவர்களே பிரித்தானிய ஆட்சியை இலங்கையில் கொண்டு நடத்தினர். திறமை, புலமை, ஒழுக்கமிக்க ஒரு குழுவாக இவர்கள் அடையாளங்காணப்பட்டனர். மறுபுறம் பிரித்தானியருக்கு ஆதரவு வழங்கிய வர்த்தகர்கள் கொண்ட குழாமொன்றும் இயங்கியது. எனவே தெளிவாக அடையாளப்படுத்தத் தக்கவகையில் மத்தியதர வகுப்பொன்று இலங்கையில் காணப்பட்டது.

ஆங்கிலக் கல்விக்குப் போட்டியாக சிங்கள மொழியிலான பிரிவெனாக்களிலும் சைவசமய தாபனங்களூடாக தமிழ்மொழிக் கல்வியும், மதரஸாக்கள் ஊடாக அரபு மற்றும் தமிழ்மொழிக் கல்வியும் கற்பிக்கப்பட்டன. எனவே சுதந்திரம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை மக்களின் கல்வியறிவு பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நல்ல நிலையில் இருந்தது.

இலங்கையில் மேலைநாட்டு வைத்திய முறைமைகள் பிரித்தானியர் காலத்தில் விஸ்தரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் பிரித்தானியர்கள் தங்கியிருந்த நகரங்களில் இவ்வைத்திய முறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. பெருந்தோட்டத்துறையின் வருகையுடன் மன்னாரிலிருந்து கண்டி வரையிலான சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தியாவிலிருந்து மன்னார் ஊடாக மலையகப் பகுதிகளுக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்கள் மலேரியா போன்ற நோய்கள் காரணமாக இடை வழியிலேயே மடிந்து போவதைத் தடுப்பதும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தியமைக்கான இதன் நோக்கமாக இருந்தது. எவ்வாறாயினும் சுதந்திரம் பெற்ற காலப்பகுதியில் இலங்கை பூராகவும் மேனாட்டு வைத்தியத்துறை சேவைகளை வழங்கும் சுகாதாரக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இது சுகாதாரம் சார்ந்த சமூகக் குறிகாட்டிகள் தொடர்பில் இலங்கை முன்னணியில் திகழக் காரணமாகிறது.

இலங்கையில் ஆட்சிமுறையே பிரித்தானிய வெஸ்ட் மினிஸ்டர் முறையிலான ஜனநாயக அடிப்படையிலான ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டு 1930களின் ஆரம்பத்தில் சர்வசன வாக்குரிமை ஏற்படுத்தப்பட்டது. இது ஆண் பெண் இருபாலாருக்கும் வழக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். எனவே இலங்கை சுதந்திரம்பெற இரு தசாப்தங்களுக்கு முன்பிருந்தே மேற்குலக ஜனநாயக பாரம்பரியமிக்க ஆட்சிமுறையொன்று தோற்றம் பெற்றுவிட்டதை காணமுடிகிறது.

அத்துடன் ஆட்சி நிர்வாகத்தின் மற்றுமொரு தூணாகிய சட்டவாதிகளும் நீதித்துறையும் பிரித்தானியராட்சியின்போது வலுவான முறையில் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

ரோமன் டச்சு சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகத்துறைக் கட்டமைப்பு சட்ட ஆதிக்கத்திற்கான ஆதாரமாக இருந்ததுடன் சிறு எண்ணிக்கையாக இருந்தாலும் ஒழுக்கமும் திறமையும் கொண்ட காவல்துறைக் கட்டமைப்பும் அதற்கு உறுதுணையாக அமைந்தது. இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்க்கைகள் அதிகமாக இருந்ததுடன் புதியவற்றை ஏற்கும் மனநிலையில் அவர்கள் இருந்தமை மாற்றங்களைப் புகுத்த வாய்ப்பளிப்பதாக இருந்தது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றபோது இலங்கையின் எதிர்காலத் தேவை கருதி பிரித்தானியர் சுமார் 987 மில்லியன் ரூபா பெறுமதியான வைப்புக்களை விட்டுச்சென்றிருந்தனர். அக்காலப்பகுதியில் இது மிகவும் பெரியதொரு தொகையாகும். இத்தகைய ஒரு வசதி பிரித்தானிய சாம்ராச்சியத்தின் ஏனைய காலனி நாடுகளில் ஏதாவது ஒன்றுக்காவது இருந்ததா என்பது தெரியவில்லை. 1951இல் இலங்கைக்கு வந்த உலக வங்கிக்குழு இலங்கைப் பொருளாதாரம் தொடர்பாக ஆய்வு செய்து அகராதியின் பருமனில் ஒரு ஆய்வறிக்கையை தயார்செய்து 1953இல் வெளியிட்டது. இலங்கைப் பொருளாதாரம் தொடர்பில் உலகவங்கியின் மிகமுக்கிய அறிக்கையாக இவ்வறிக்கையை குறிப்பிடலாம். அதில் இலங்கைப் பொருளாதாரத்தின் சகல துறைகளைப்பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு பிரச்சினைகள் அடையாளங்காணப்பட்டு விதந்துரைப்புக்களும் முன்வைக்கப்பட்டன. ஆயினும் அவற்றில் குறிப்பிட்டிருந்த விதந்துரைப்புகளில் பொருளாதாரத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வாக முக்கியமான எந்தவொரு நடவடிக்கையையும் அப்போதைய அரசாங்கம் எடுக்கவில்லை.

குறிப்பாக இலங்கை தனது அபிவிருத்திப் பாதையில் பயணிப்பதற்கு அவசியமான நிதி பற்றி குறிப்பிடுகையில் ஏனைய நாடுகளைப் போலன்றி அபிவிருத்திக்கு தேவையான போதியளவு நிதி வசதியை இலங்கை கொண்டிருப்பதாகவும் எனவே இலங்கைக்கு அபிவிருத்திக்குத் தேவையான நிதிப்பிரச்சினை இல்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் சுதந்திரம் பெற்ற பின்னர் அடுத்துவந்த சிலவருட காலப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக 1957இல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் முதற் தடவையாக கடனுக்காக கையேந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அதன் பின்னர் இலங்கை ஒரு கடனாளி நாடாகவே தன் பயணத்தைத் தொடர்ந்து வருவது மிகவும் துரதிருஷ்டமானதொரு நிலையாகும்.

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் வெளி நின்ற கடன்களைத் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு மட்டத்தில் இருக்கும் அதேசமயம், பெற்ற கடனை மீளச்செலுத்த மீண்டும் மீண்டும் கடன்பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதையும், பொருளாதாரத்தின் பலவீனமான செயலாற்றம் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி மிகச் சடுதியான வீழ்ச்சியடைந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.

Comments