நண்பன், சகபாடி, கூட்டாளி! | தினகரன் வாரமஞ்சரி

நண்பன், சகபாடி, கூட்டாளி!

ஒருத்தரைப்பற்றி அறிய வேணுமாக இருந்தால், அவருடைய நண்பரைத் தெரிந்துகொண்டால் போதும் என்பார்கள். இன்றைய காலத்தில் அப்பிடி நண்பர்கள் வாய்ப்பது அரிது. மொத்தத்தில் நண்பர்களே இல்லை என்ற அளவிற்குத்தான் காலம் மாறிக்கிடக்கிறது என்கிறார் நண்பர்.

அநேகமானவர்கள் ஒன்றாகப் பணியாற்றும் எல்லோரையும் நண்பர்கள் என நினைத்து ஏமாந்து போவார்கள்: ஏமாறுகிறார்கள். ஒன்றாகப் பணியாற்றுவோர் எவ்விதத்திலும் உங்களுக்கு நண்பர்களாக இருக்கமாட்டார்கள் என்கிறார் முனைவர் இறையன்பு. இஃது அநேகருக்குத் தெரிவதில்லை: புரிவதில்லை. என்றாலும், ஓரிருவர் இல்லாமலும் இல்லை என்பது என்கிறது என் சிற்றறிவு.

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும்போது அவர்கள் தாங்கள் எப்பிடி மேலே வருவது என்றுதான் நினைப்பார்களே தவிர, உங்களுக்கு நண்பர்களாக ஒருபோதும் செயற்படமாட்டார்கள். நீங்கள் அவர்களை நண்பர்களாக நினைத்தால், அஃது உங்கள் தவறு என்கிறார் இறையன்பு. ஒன்றாகப் பணியாற்றிய நபர், வேறொரு நிறுவனத்திற்குச் சென்றுவிட்டால், அவரை நீங்கள் தாராளமாக நண்பர் என்று சொல்லிக்கொள்ளலாம். அவர் நண்பராக இல்லாவிட்டாலும், உங்கள் நண்பர் என்று சொல்லலாம். ஏனெனில், அவர் தற்போது வேறொரு நிறுவனம்.

சரி, ஒன்றாகப் பணியாற்றும் நபர் நண்பர் இல்லாவிட்டால், யார்தான் அவர்?

அவர் சகபாடி. ஆங்கிலத்தில் Colleague என்பார்கள். எனக்குத் தெரிந்த அன்பர்களில் பலர் செட்டியார் தெருவில் இருக்கிறார்கள். சில நண்பர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் இருக்கிறார், தன்னுடன் நகை வியாபாரம் செய்யும் எல்லோரையும் நண்பர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தார். எங்கு மரண வீடு என்றாலும், வாகனம் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள். கடைசியில் அவர் ஒரு கஷ்டத்தில் வீழ்ந்தபோது எவரும் இல்லை. அப்போதுதான் அவருக்குப் புரிந்தது, ஒன்றாகப் பணியாற்றுபவரும் ஒரே தொழில் செய்பவரும் நண்பர் இல்லை என்று.

நமக்கு மத்தியில் வாழ்கின்றவர்களில் பெரும்பாலானோர் தம்மை மறைத்துக் கொண்டு பிறரை வெளிச்சம்போட்டுக்காட்டிக்கொண்டுதான் வாழ்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி எல்லாம் இவருக்குத் தெரியவேண்டும், இவரைப்பற்றி எவருக்கும் தெரியக்கூடாது. எது நடந்தாலும், அது தமக்கு மட்டுமே சாதகமாக நடக்க வேண்டும். நட்டம் ஏற்பட்டால், அது மற்றவருக்கும் ஏற்பட வேண்டும். தனிப்பட்ட ரீதியில் உறுதியாக இருந்துகொண்டு ஒரு குழுவாக நாம் தோற்றுப்போகிறோமே என்பார் நீயா நானா கோபிநாத். விராத் கோஹ்லி, சச்சின் டென்டுல்கர் எல்லாரும் தனிப்பட்ட ரீதியில் உறுதியானவர்களாகவும் திறமையானவர்களாகவும் இருகிறார்கள். ஆனால், ஓர் அணியாக ஒன்றுசேர்ந்து பங்களாதேஷ் அணியிடம் தோற்பார்கள். அதனால், நாம் தனிப்பட்ட ரீதியில் மாத்திரமன்றிக் குழுவாகவும் பலமடைய வேண்டும் என்கிறார் கோபிநாத். நம்மைச் சேர்ந்த மற்றவர்களும் வெற்றிபெற்று நாமும் வெற்றியடைந்தால்தான் அது வெற்றி, இல்லாவிட்டால், அது வெற்றியல்ல என்பது அவரின் நிலைப்பாடு. அதுதான் சரியானதும்கூட.

நண்பருடன் பணியாற்றும் ஒரு சகபாடி இருக்கிறார், அவர் எல்லோருடனும் நண்பர்போல்தான் பழகுவார், நடப்பார். நடப்பார் என்பதைவிட நடிப்பார் என்பதுதான் சரி. தன்னோடு நண்பராக நினைத்து உறவாடுவோர் யாரையும் அவர் நம்பமாட்டாராம். அவர்களுக்கு எல்லாச் சந்தர்ப்பத்திலும் துரோகம் இழைத்துவிட்டுத்தான் அவர் உயரே பறக்க முயற்சிப்பாராம். ஆனால், இஃது எல்லோருக்கும் தெரியாது. தெரிந்தவர்கள் யாரும் அவரோடு சேரமாட்டார்கள். ஆனால், குப்பை குப்பையோடுதான் சேரும் என்பார் நண்பர். இப்படியானவர்களால்தான், ஒன்றாகப் பணியாற்றுவோரை நண்பராக எண்ணாதே என்று புத்தி சொல்கிறார் அவர். யாரையும் நம்பாதே, நீ உன்னை மட்டுமே நம்பு என்கிறார் அந்த அறிவாளி. நானும் இதை அனுபவ ரீதியாகப் பார்த்திருக்கிறேன், பார்த்துக் கொண்டிருக்கிறேன். சிலர் செய்கின்ற செயல்களால், நல்லவர்களைக் கூடச் சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறது.

சகபாடி புரிந்துவிட்டார். அதென்ன கூட்டாளி? நண்பரும் கூட்டாளியும் ஒன்றுதானே! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

நண்பரும் கூட்டாளியும் ஒன்றுபோல் தெரிந்தாலும், இரண்டு சொல்லுக்கும் அர்த்தம் வேறு. சந்தன மரக்கடத்தல் மன்னன் வீரப்பனையும் அவனது கூட்டாளிகளையும் தேடிப் பொலிஸார் வலைவீச்சு என்று முன்பு ஒரு காலத்தில் பிரபலமான செய்தி வந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதோ என்னவோ, வந்தது. கூட்டாளி என்ற சொல்லும் நண்பனைத்தான் குறிக்கும். ஆனால், அர்த்தம் வேறு.

சிறிய வயதில் கூட்டாளி சேராதே! என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதில் உண்மை இருக்கிறது. அதாவது, தீய செயலுக்குத் துணை போகிறவர்தான் கூட்டாளி என்கிறார்கள் தமிழறிஞர்கள். இப்போது புரிகிறதா, வீரப்பனும் கூட்டாளிகளும் என்பதுதான் சரியென்று. ஆகவே, நீங்கள் கூட்டாளிகளை வைத்துக்கொள்வதா, நண்பனைத் தேர்ந்து கொள்வதா என்று முடிவு செய்து கொள்ளுங்கள். தற்போது நீங்கள் நண்பர்கள் என்று நினைப்போரில் எத்தனை சகபாடிகள், எத்தனை கூட்டாளிகள் இருக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். நண்பனைப் புரிந்துகொள்ளுங்கள். அவனுக்குக் கைகொடுங்கள். கைகொடுப்பான்!

Comments