இன்றைக்கும் தொடரும் கண்ணிவெடி ஆபத்து! | தினகரன் வாரமஞ்சரி

இன்றைக்கும் தொடரும் கண்ணிவெடி ஆபத்து!

வெடிப்பொருட்கள்

பெண் தலைமைத்துவக் குடும்பமாகிய எனக்கு ஒரு தொழல் வாய்ப்பும் அதற்கான சம்பபளமும் மாதாந்தம் கிடைக்கின்றது.

ஆனால் இதுஒரு ஆபத்தான தொழில். நான் சுயகௌரவத்தோடு வாழவேண்டும் என்பதால்தான் இந்த கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.

எனினும் தினமும் அதிகாலையில் வேலைக்குச்செல்வதும் என்னுடைய உழைப்பில் கௌரவாக வாழ்வது சமுகத்தில் தவறாகப் பார்க்கப்படுகின்றது'' என்றார் சசிகலா.

“நான், மக்கள் மீள்குடியேற வேண்டும் அவர்களுடைய நிலங்களில் பயிர்செய்யவேண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்ளவேண்டும், என்ற முழு நிறைவான எண்ணத்தோடு கண்ணிவெடி அகற்றும் பணியில் கடந்த ஐந்து வருடங்களாக ஈடுபட்டு வருகிறேன்.

இந்த தொழில் உயிரைக் குடிக்கக் கூடியது என்பதைத் தெரிந்து கொண்டு தான் இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றேன்” என்கிறார். பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணான செல்வம் சசிகலா (வயது 40).

கிளிநொச்சி மாவட்டத்தையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கின்ற எல்லையோரப்பகுதியான கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரைக்குமான பகுதி எப்பொழுதும் வெடிபொருள் ஆபத்து நிறைந்த பகுதியாகக் காணப்படுகின்றது.

இந்தப் பகுதிகளில் கடந்த 2010ம் ஆண்டு வரைக்கும் வெடிபொருள் காரணமாக பல உயிரிழப்புகளும் பாதிப்புக்களும் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப் பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை இத்தாவில். வேம்பொடுகேணி, போன்ற கிராமங்கள் இவ்வாறான வெடிபொருள் ஆபத்து நிறைந்த பகுதிகளாகக் காணப்படுகின்றன.

இந்தப் பகுதிகளில் வாழ்ந்து இடம்பெயர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடந்த பதினெட்டு வருடங்களுக்கு மேலாக உள்ளூரிலும் வெளிமாவட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றன.

இந்தப் பகுதிகளில் வெடிபொருட்கள அகற்றி தம்மை மீள்குடியேற்றுமாறு இந்த மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், வெடிபொருட்களை அகற்றுவதில் காணப்படுகின்ற சவால்கள் நெருக்கடிகள் மேலும் காலதாமதப்படுத்துகின்றன. நீண்டகாலமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக மிக மோசமாகப்பாதிக்கப்பட்ட இடங்களில் இந்த முகமாலைப் பிரதேசமும் அடங்குகின்றது.

ஆரம்பத்தில் மக்கள் வாழ்ந்த பூர்வீக நிலங்களில் அவர்களால் வாழ்வாதாரத்தேவைக்கு வளர்க்கப்பட்ட பெருமளவான வானுயர்ந்த தென்னை மற்றும பனை மரங்கள், கட்டடங்கள் அனைத்துமே யுத்தத்தின் வடுக்கள் தாங்கி சிதைந்து சின்னா பின்னமாகிக் காணப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் வெடிபொருட்களை அகற்றி கட்டம் கட்டமாக விடுவித்து மக்கள் மீள்குயேற அனுமதிக்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு காணப்படுகின்றது,

இந்தப் பிரதேசத்தில் இன்னமும் 33900 சதுர மீற்றர் பரப்பரளவில் வெடிபொருட்களை அகற்ற வேண்டியிருப்பதாகவும் 2020ம் ஆண்டளவில் இதன் பணிகள் நிறைவு பெறும் என்றும் அமைச்சர் டி. எம் சுவாமிநாதன் கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் ஏற்பட்ட உள் நாட்டு போர் காரணமாக மக்கள் வாழ்ந்த சுமார் 640 வரையான கிராமங்களில் 105 மில்லியனுக்கு மேற்பட்ட நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிப்பதாகவும் இதைவிட, வெடிக்காத வெடி பொருட்கள், ஆபத்தான வெடிபொருட்கள் என்பன காணப்படுவதாக 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் வெடிபொருள் ஆய்வு மேற்கொண்ட யுனிசெப் நிறுவனம் அப்போது குறிப்பிடடிருந்தது.

தற்போது இந்த நிலக்கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு மிக சவால் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.

முகமாலைப் பகுதியில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புக்களும் பரஸ்பரம் தமது வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற ஓர் இடமாகக் இந்தப் பிரதேசத்தைக் கருதியதால் நிலக்கண்ணி வெடிகள், ஆபத்தான வெடிபொருட்களை இரு சாராருமே என வகைதொகையின்றி புதைத்து வைத்தனர். போர் முடிந்து பத்து ஆண்டுகள் நிறைவுறுகின்றபோதும் இவற்றை அகற்றுவது என்பது இலேசான காரியமாக இல்லை

கடந்த 2010ம்ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் வெடிபொருட்களால் 27 விபத்துக்கள் இடம்பெற்றதுடன், 47 பேர் வரையில் பாதிக்கப்பட்டனர்.

இதேபோன்று 2011ம் ஆண்டில் 17 விபத்துக்களில் 24 பேரும் 2012ம்ஆண்டு 28 விபத்துக்களில் 47 பேரும் 2013ம் ஆண்டு 13 விபத்துக்களில் 21 பேரும் 2014ம் ஆண்டு 11விபத்துக்களில் 16பேரும், 2015ம் ஆண்டு 05 விபத்துக்களில் 08 பேரும், 2016ம் ஆண்டு 06 விபத்துக்களில் 07 பேரும் 2017ம் ஆண்டு 14 விபத்துக்களில் 21 பேரும் பாதிககப்பட்டனர்.

இதேவேளை இவ்வாண்டு ஏற்பட்ட விபத்துக்களில் பத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், பல உயிரிழப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

இம்மாத முற்பகுதியில் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இந்த வெடிபொருள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் பணியாளர்களான இளம் குடும்பஸ்தர் இருவர் விபத்தில் படுகாயமடைநது உயிரிழந்தனர்.

தற்போது வெடிபொருட்களை அகற்றுவதற்கு நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றை காடுகள் மற்றும் கட்டடங்கள் போன்ற பகுதிகளில் பயன்படுத்த முடியாத சூழல் காணப்படுகிறது. எனவே கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களைக்கொண்டுதான் நிலங்கள் துப்பரவு செய்யப்பட்டு கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை ஆபத்தான பகுதியாக அடையாளப் படுத்தப்பட்ட இடங்களுக்குள் சட்ட விரோதமாக சென்று அங்கே காணப்படுகின்ற வெடிபொருட்களில் மருந்துகளை மட்டும் பிரித்து எடுத்து அவற்றை மீன்பிடித்தொழிலுக்கு பயன்படுத்துகின்ற நோக்கோடு பலர் செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டதுடன். புலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைவிட. இவ்வாறு விடுவிக்கப்படாத பிரதேசங்ளில் காணப்படுகின்ற பனை மரங்களை வெட்டுதல், மணல் அகழ்வுகள் போன்றசெயற்பாடுகளிலும் பலர் ஈடுபட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணிவெடியகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பணியாளர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற பணியென்பது தரைமட்டத்திலிருந்து பதினைந்து சென்ரிமீற்றர் ஆழமான பகுதிகளில் காணப்படுகின்ற வெடிபொருட்களை அகற்றுவதாகும்.

இந்த பதினைந்து சென்ரி மீற்றர் ஆழத்திற்கும் கீழ் புதையுண்டு போயிருக்கின்ற வெடிபொருட்களை அடையாளம் காண்பதும் அகற்றுவதும் பாரிய சவாலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெடி பொருட்களின் ஆபத்து பத்து வருடங்களாகியும் மீள்குடியேற்றம் வாழ்வாதாரம், என்ற பல்வேறு செயற்பாடுகளுக்கும் சவாலாகவே அமைந்துள்ளது.

 

கட்டுரையும் படங்களும்

ஜது-பாஸ்கரன்

Comments