இ.தொ.காவும், முற்போக்குக் கூட்டணியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்! | தினகரன் வாரமஞ்சரி

இ.தொ.காவும், முற்போக்குக் கூட்டணியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்!

தென்னிலங்கை அரசியலை விட்டு வடபுலத்துக்கு போனது ஏனோ?

தென்னிலங்கை, வடபகுதி, கட்சி என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஒட்டுமொத்த நாட்டையும் இலங்கையாகவே கருதுகின்றோம். அதன்படி இன்று நான் வடபகுதியில் கட்சியின் வேலைகளை முன்னெடுத்து வருகிறேன். இங்கே பல்வேறு இன்னல்களைச் சந்தித்தப் பிரதேசமாகும். பல்வேறு துன்பங்களை அனுபவித்த மக்களுக்காக சேவையாற்ற கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. ஆகவே, எமது கட்சிக்கு 1983க்குப் பிறகு இப்பிரதேசங்களில் அரசியல் செய்வதற்கான சூழல் இல்லாமல் போய்விட்டது. அதன் காரணமாகவும் எமது கட்சியின் செயற்பாடுகளை வடபகுதியில் முன்னெடுக்க வேண்டிய தேவையின் நிமித்தமாகவும் என்னை வடபகுதியில் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி பணித்துள்ளது.

ஒக்டோபர் 15ம் திகதி கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிறது. குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுவதே நல்லது. ஆனால் கடந்த காலங்களில் பார்த்தோமானால் கூட்டு ஒப்பந்தம் முதலாளிமாருக்கு சார்பானதாகவே இருந்து வந்திருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பெருந்தோட்டங்களை தனியாருக்குத் தாரைவார்த்ததன் பின்னர் தேட்ட மக்களின் வாழ்க்கை மிகவும் கவலைக்கிடமானதாகவே அமைந்திருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விகுறியாகிவிட்டது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை உயர வேண்டுமானால் அவர்களின் வருமானமும் உயர வேண்டும். அந்த வகையில் இந்த கூட்டு ஒப்பந்தம் முக்கியமானதாக அமைகிறது. ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இரண்டு தொழிற்சங்கங்களான ஐ.தே.க. - இ.தொ.கா என்பனவற்றின் வரலாற்றை நோக்கினால் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சார்பாகச் செயற்படுவதற்குப் பதிலாக முதலாளிமார் சம்மேளனத்திற்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்துள்ளனர் என்பதையே அது காட்டும்.

சுமார் 15 இலட்சம் மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற ஒப்பந்தமே இந்தக் கூட்டு உடன்படிக்கையாகும். ஆனால் வரலாறு முழுவதும் கட்டிக்கொடுப்பாகவே இருந்து வந்துள்ளது. கூட்டு ஒப்பந்தம் செய்வதற்கான காலம் வரும்போது இந்தத் தோட்டக் கம்பனிகள் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும், தேயிலை விலை வீழ்ச்சி கண்டுவிட்டதெனவும் வழமையான புராணத்தைப்பாடி வந்துள்ளன. இன்றும் அதே பல்லவியையே பாடுகின்றன. அதனால் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் சம்பள உயர்வை வென்றெடுக்க வேண்டுமென்றால் போராட்டமே ஒரே வழியாகும். ஆனால் பழைய சங்கங்களுடன் செல்வதன் மூலமாக அதைச் சாதிக்க முடியாது. அதனால் நாம் தோட்டத் தொழிலாளர்களிடம் எமது சங்கத்துடன் அணிதிரளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

ஜே.வி.பி.யின் பெந்தோட்டப் பார்வை அல்லது கொள்கை எப்படியானது?

தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் எமது பார்வை மிகத்தெளிவானது. 180 வருடங்களுக்கு மேலாக இந்நாட்டின் அந்நியச் செலாவணிக்காக உழைக்கும் சமூகம் இது. மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து சூப்பி எறியப்பட்ட மாங்கொட்டைகளாக வீசியெறிப்பட்ட மக்கள் கூட்டம் என்றாலும் பொருத்தமாகத்தான் இருக்கும். எமது விடிவு எப்போது வருமென ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களை தலைமைத் தாங்குவதாக கூறிய அனைவரும் அவர்களை பகடைக்காய்களாகவே பயன்படுத்தியுள்ளனர். அதனால் இவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஊட்ட வேண்டும். புத்தெழுச்சியுடன் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு அவர்களுக்கான புதிய பாதையை காட்டுவதற்காக மக்கள் விடுதலை முனன்ணி இன்று தோட்டப்புறங்களில் துரிதமாகச் செயற்பட்டு வருகிறது. அதற்கிணங்க மாதச்சம்பளம், சுகாதாரம், கல்வி, வீடு உள்ளிட்ட பிரச்சினைகளை முதன்மையாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். தோட்டத் தொழிலாளர்களை வெறும் தோட்டத் தொழிலாளர்களாக மட்டும் கருதாது அவர்கள் இந்நாட்டின் பிரஜைகள் ஏனவும் மக்கள் அனுபவிக்கின்ற உரிமைகள் அனைத்தையும் அனுபவிக்க உரித்துடையவர்கள் எனவும் நாம் கருதுகிறோம்.

பெருந்தோட்டம், அதன் எதிர்காலம், கூட்டு ஒப்பந்தம் பற்றிய கட்சியின் பார்வை இன்னும் வெளிப்பட்ட மாதிரித் தெரியவில்லையே?

தோட்ட மக்களின் எதிர்காலம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலங்கைவாழ் மகக்ளின் எதிர்காலமும் கோள்விக்குறியாகியுள்ளது என்பதே உண்மை. அதில் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் இன்னல்களைச் சந்திக்கிறார்கள் என்பதும் உண்மையே.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை உயர வேண்டுமென்றால் நாட்டின் நிலை உயர வேண்டும். நாட்டின் நிலை உயர வேண்டுமென்றால் நாட்டின் மக்களின் அரசியல் உயர வேண்டும். அதை இன்று மக்கள் விடுதலை முன்னணி செய்து வருகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் தனியான விடுதலை கிடையாது. நாம் கடந்த 70 வருடங்களாக அனைத்து மக்களுமே ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர். அது முதலாளித்துவ முறையின் பண்பாகும். அதனால் இந்த மக்களை வதைக்கும், மக்களின் உரிமைகளை பறிக்கும், சுயநலத்தை மட்டும் குறிகோளாகக் கொண்டு செயற்படுகின்ற, நாட்டை சூறையாடும் கொள்கையுடைய முதலாளித்துவ முறையை மாற்றியமைக்க வேண்டும். அதற்குப் பதிலாக அனைத்து மக்களுக்கும் அனைத்தும் சமமாக கிடைக்கின்ற சமவுடமை சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதன் மூலமாகவே நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்பதே எமது நிலைப்பாடாகும்.

பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை படிப்படியாக அழிந்துவிடும் என்று நம்புகிறீர்களா? வெளிவாரி பயிர்ச்செய்கை பற்றிய உங்கள் பார்வை? தொழிலாளர்களை சிறுதோட்ட குத்தகையாளர்களாக்குவது நல்ல முயற்சி தானே?

அழிந்துவிடும் என்பதல்ல அழித்து விட்டார்கள் என்பதே உண்மை. 150 வருடங்களுக்கு மேலான தேயிலையே இன்னமும் நமது நாட்டில் இருக்கிறது. ஆனால் தேயிலையின் வளமான கால எல்லை 35 _ 45 வருடங்களாகும். நமது நாட்டில் புதிய வகைத்தேயிலைகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அவை அனைத்தும் செயலிழந்து போயுள்ளன. இதன் காரணமாக தோட்டக் கம்பனிகள் வெளிவாரிப் பயிர்ச்செய்கையை முயற்சித்து வருகின்றன. அதாவது தோட்டக் கம்பனிகளுக்குத் தேவைப்படுவதெல்லாம் இலாபத்தை ஈட்டுவது மட்டுமேயாகும். தோட்ட மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அதேபோன்று புதிய தேயிலைக் கன்றுகளை நாட்டி தேயிலைத் தோட்டங்களை புத்தெழுச்சியுடன் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுமில்லை. அதனால் அழிவுப்பாதையை நோக்கியே தேயிலைத் தோட்டங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

அதுபோன்று எமது நாட்டுத் தேயிலை ஏற்றுமதியுடன் ஏனைய நாட்டு தரமற்ற தேயிலை கலக்கப்படுவதால் எமது நாட்டுத் தேயிலையின் தரம் குறைந்துள்ளது. அதன் காரணமாக எமது நாட்டுத் தேயிலைக்கான உலக சந்தையில் கேள்வி குறைந்துள்ளது. இதுவும் அழிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

குத்தகைக்கு விடுவது நல்ல முயற்சிதான். ஆனால் குத்தகைக்கான காணிகள் அனைத்தும் தோட்டத் தொழிலாளர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். ஏனென்றால் இன்று எமது நாட்டுத் தேயிலையில் 70வீத உற்பத்தி தனியார் உற்பத்தியாகும். ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? அதனால் இது பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும்.

தொழிலாளர் தரப்பில் மூன்று பிரிவினர் மாத்திரமே கையொப்பமிடும் வகையிலேயே கூட்டு ஒப்பந்த நடைமுறை உள்ளது. இது மாற்றியமைக்கப்பட்டு மேலும் சில சங்கங்களுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா? அல்லது இது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

ஏனைய சங்கங்களும் சேர்க்கப்படுமானால் நல்லது தான். ஆனால் அவர்கள் யார்? அவர்களிடம் இருக்கும் கொள்கை என்ன? மக்கள் நலன் சார்ந்ததா? என்ற கேள்வி எழும்போது இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என்பதால், யார் கையொப்பம் இட்டாலும் இந்த நிலமையில் பாரிய மாற்றத்தைக் காண முடியாது என்பதே எமது நிலைப்பாடு. அதனால் மக்கள் நலன் சாாந்த தொழிற்சங்கத்தை மக்கள் பலப்படுத்த வேண்டும்.

கடந்த அரசாங்கத்துடன் ஒன்பது ஆண்டுகளாக இணைந்திருந்தும் இ.தொ.கா.வினால் சாதிக்க முடியாதவற்றை கடந்த மூன்றாண்டு காலத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியால் சாதிக்க முடிந்ததாகக் கருதுகிறீர்களா?

இல்லை என்பதே எனது கருத்து. இ.தொ.கா இப்போது இருந்திருந்தாலும் இதையே தான் செய்திருக்கும். அதனால், இ.தொ.கா ஒன்பது வருடமல்ல, கடந்து 70 வருடங்களுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்கிறது. அதன்போது அவர்கள் அரசாங்கத்தின் ஊதுகுழலாகவே இருந்துள்ளனர். இன்று அந்தப் பணியை மனோ கணேசன், திகாம்பரம், இராதகிருஷ்ணன் போன்றவர்கள் சேர்ந்து செய்கின்றனர். பெரிய மாற்றங்கள் எதையும் காண முடியவில்லை. ஒரு சில நூறு வீடுகளை கட்டிக்கொடுப்பதனால் மட்டும் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை தீர்ந்து விடாது. இன்று அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான வேலைத்திட்டம் என்ன? தோட்டத்து இளைஞர்கள் இன்று கொழும்பு நகரில் அடிமைகளாக வேலைசெய்கிறார்கள். அவர்களுக்கு விடிவுக்கான திட்டம் என்ன? தோட்டப் பெண்களே இன்று கூடுதலான இரத்தச் சோகையால் பீடிக்கப்பட்டுள்ளனர். பிறக்கின்றபோதே இறக்கின்ற குழந்தைகள் இன்றும் மலையகத்திலேயே அதிகம். அதற்கான வேலைத்திட்டமென்ன? கூடுதலாக போசாக்கின்மையால் வாடும், வயதுக்கேற்ற வளர்ச்சியில்லாத, இன்னும் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படும் சிறுவர்கள் கூடுதலாக இருப்பது மலையகத்திலாகும். அதற்கான திட்டமென்ன? கல்வியில் பின்தங்கியிருக்கிறோம் அதை மீட்டெடுப்பதற்கான திட்டமென்ன? என்பதை முற்போக்கு கூட்டணித் தலைவர்களிடம் கேட்டால் விடையிருக்காது. அது மட்டுமல்ல; மலையகத்தில் இன்று புதிதாக நியமனம்பெற்றுள்ள (வெறும் பத்தாயிரம் சம்பளத்திற்கு) ஆசிரியர் உதவியாளர் 3000த்துக்கும் அதிகமானவர்களுக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுத்தார்களா? அவர்கள் இன்று பாரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர் என்பதை இவர்களால் உணர முடியுமா? அதனால் இந்த நிலைமைகளை இனங்கண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்வைக்க முடியாத முற்போக்கு கூட்டணியும், இ.தொ.காவும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என்பதே எமது கருத்தாகும்.

யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் மலிந்து வருவதாகவும் போதைப் பாவனை அதிகரித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆம்! யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல; இன்று நாடு முழுவதிலும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. அதில் யாழ்ப்பாணமும் விதிவிலக்கல்ல. இன்று நமது நாட்டில் 2017ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 3263. தற்கொலைக்கு முயற்சித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. என்ன நாடு இது? யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் இன்று வாள்வெட்டுக் கும்பலின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் அச்சத்திலேயே வாழ்கின்றனர் என்பதே உண்மை. அதேபோன்று போதைப்பொருள் பாவனை, கடத்தல் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல, மது பாவனையும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு சமூகம் என்றவகையில் நமது நாடு இன்று பல்வேறு நெருக்கடிக்களுக்கு முகங்கொடுத்துள்ளது. நமது நாட்டை ஆட்சியாளர்கள் படுபாதளத்தில் தள்ளியுள்ளனர். இது 70 ஆண்டுகள் இந்த ஆட்சியாளர்களின் விளைப்பயிராகும். ஆட்சியாளர்கள் சீரழியும்போது சமூகம் சீரழிவது தவிர்க்க முடியாது. அதுவே இந்த குற்றச் செயல்களாகும்.

கடந்த சில ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள். பயணம் எப்படி இருக்கிறது? சவாலாகக் கருதுவது எதை? ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த இடமல்லவா?

ஆம், நாங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல முறையில் அரசியல் பணிகளை முன்னெடுத்துச் செல்கிறோம். மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போதிருப்பது பழைய யாழ்ப்பாணமல்ல, புதிதாக சிந்திக்கின்ற புதிய தலைமுறை புதிய பாதையை தேடுகிறது. அந்த புதிய பாதைக்கு, மாற்று அரசியலுக்கு இருக்கும் ஒரே கட்சி மக்கள் விடுதலை முன்னணியாகும். அதனால் மக்கள் இன்று படிப்படியாக எம்முடன் அணிதிரண்டு வருகின்றனர். இப்போது நாம் யாழ்ப்பாணத்தில் எமது சகல செயற்பாடுகளையும் அதாவது தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகளின் அமைப்பு, உள்ளிட்ட அனைத்து வெகுசன வேலைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். அதில் விசேடமாக எமது ஆசிரியர் சங்கத்தின் நடவடிக்கைகள் துரிதமான வளர்ச்சிகண்டு வருகிறது.

அதேபோன்று யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகள் அனைத்தும் தென்னிலங்கை கட்சிகளைப் போன்றே குடுமிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மக்களின் பிரச்சினைகளை உதாசீனம் செய்து தமது அரசியல் இருப்பிற்காக அங்கு ராஜபக்ஷக்களைப் போன்றே இங்குள்ள அரசியல்வாதிகளும் இனவாத அரசியலையே முன்னெடுத்து வருகின்றனர். அதனால் இன்று மக்களுக்கான குரலாக ஒலிப்பது மக்கள் விடுதலை முன்னணியாகும். அதனால் எதிர்காலத்தில் இலங்கையில் ஏற்படப்போகும் அரசியல் மாற்றத்திற்கு வடபகுதி வாழ் மக்கள் பெரும் பங்காற்றுவார்கள் என்பதே எமது நம்பிக்கையாகும்.

Comments