எமக்கான ஆதரவூத்தளம் பெருகியே வருகின்றது | தினகரன் வாரமஞ்சரி

எமக்கான ஆதரவூத்தளம் பெருகியே வருகின்றது

  • மாகாணசபை தேர்தலிலும் குதிப்போம்
  • மக்களுக்கு நம்பிக்கையூட்டும் சரியான மாற்று அணி உருவானால் நல்லது

பூநகரி பிரதேச சபை அமர்வில் அண்மையில் உங்கள் அணியினர் இடையூறாகச் செயற்பட்டதாகவும் மக்களின் விருப்புக்கிணங்க பூநகரி சந்தைக் கட்டடத் தொகுதி பழைய கட்டடத்துக்கு மாற்றப்படுவதை உங்கள் அணியினர் விரும்பவில்லையென்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளனவே?

பூநகரிப் பிரதேச சபையில் மட்டுமல்ல, நாங்கள் பங்குபற்றும் எந்தச் சபைகளிலும் மக்களுக்கு எதிராகவும் சபையின் நடைமுறைகள், ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராகவும் நாம் செயற்பட்டதில்லை. சபையில் ஊடகவியலாளர்கள், பொது மக்கள், சபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியுள்ளனர். அவர்கள் ஒரு போதும் எமது உறுப்பினர்களைப் பற்றிய எதிர் விமர்சனங்களை வைத்ததில்லை. ஆகவே எமது அணியினர் சபையின் நியதிக்கு இடையூறாகச் செயற்படவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

அடுத்தது, நிதிக்குழு அறிக்கை மீதான கேள்வியை எமது உறுப்பினர் ஜோன் பின்ரன் மேரிடென்சியா எழுப்பியிருந்தார். நிதிப்பயன்பாடு பற்றித் தெளிவான விளக்கங்கள் இல்லாத நிலையிலே அதைப்பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கான விளக்கத்தை அல்லது பதிலை நிதிக்குழு தெளிவான முறையில் உரிய ஆவணங்களோடு முன்வைத்திருக்க வேண்டும். அல்லது தவிசாளர் அதற்கான விளக்கத்தைச் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் வீண் வார்த்தைப் பிரயோகங்களிலே ஆளும் தரப்பான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஈடுபட்டனர். இதனாலேயே அங்கே வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இவ்வாறு ஆளுந்தரப்பினர் நடந்து கொள்வது சபையின் நெறிமுறைகளுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் மக்கள் நலனுக்கும் எதிரானது. இதேவேளை வலுவான எதிர்த்தரப்பாக எமது உறுப்பினர்கள் இருக்கின்ற போதும் நிதிக்குழுவில் எவரும் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நம்பிக்கை வைத்தே ஒவ்வொரு உறுப்பினர்களையும் தெரிவு செய்து சபையை இயக்குவதற்கு அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் தனியே ஒரு கட்சியை மட்டும் அனுப்பவில்லை. ஜனநாயக அடிப்படையில் பல தரப்பினரையும் தெரிவு செய்து அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் சபை தவறான முறையில், ஒரு தரப்பினருடைய விருப்பங்களுக்கும் தீர்மானங்களுக்குமாக இயங்குவதற்கு எப்படி நாம் அனுமதிக்க முடியும்? அது மக்களுக்கு விரோதமாக அமையுமல்லவா.

அடுத்ததாக நீங்கள் சொல்வதைப்போல, பூநகரி சந்தைக் கட்டிடத்தொகுதியை பழைய கட்டிடத்தொகுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை என்பதே தவறானது. பழைய சந்தைக் கட்டிடத்தொகுதி என எதுவுமே அங்கில்லை. 1990க்கு முன்பு சிறிய அளவிலானதொரு சந்தை வாடியடிச் சந்தியில் இயங்கியது. யுத்த காலத்தில் மக்களே அங்கிருக்கவில்லை. மீள் குடியேற்றத்தின்போது பூநகரிப் பிரதேசத்தின் எதிர்கால நகரத்துக்கான திட்டமிடலின் அடிப்படையில் பொது மக்களுக்கான புதிய சந்தை, பேருந்து நிலையம் என்பவை 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டன. இவற்றுடன் மருத்துவமனை போன்றன ஒரு நிரையிலும் மக்கள் சேவைகளைப் பெறும் கமநல அபிவிருத்தித்திணைக்களம், பிரதேச சபை, பிரதேச செயலகம், கால்நடை அபிவிருத்தித்திணைக்களம், தபால் நிலையம் போன்றவை ஒரு நிரையிலும் என அமைக்கப்பட்டன. இவற்றுக்கு அண்மையாகவே நீங்கள் குறிப்பிடும் பழைய சந்தை இயங்கிய இடம் உள்ளது. இது நகரத்தின் பசுமைப் பூங்காவாக அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதுதான் பொருத்தமானது.

இந்த இடம் பூநகரியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மையத்தில் உள்ளது. இதில் எதிர்கால நகருக்கான திட்டமிடலின் அடிப்படையில் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர எழுந்தமானமாக எதையும் செய்து பாழடிக்கக் கூடாது. இந்த மையம் என்பது பரந்தன், மன்னார், யாழ்ப்பாணம், ஞானிமடம் ஆகிய இடங்களிலிருந்து இணையும் சந்தியாகும். எப்போதும் போக்குவரத்து நெருக்கடிகள் இருக்கும். இன்றைய வசதி என்பது நாளை இடைஞ்சலாக – நெருக்கடியாக இருக்கக் கூடாது. திட்டமிடலில் இது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று. மற்றும்படி மக்கள் விருப்பம் என்ற பேரில் ஒரு சிலர் எடுக்கும் தவறான முடிவே தற்போதைய குழப்பங்களாகும்.

பூநகரியில் மாத்திரமல்லாமல், பச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சிப் பிரதேச சபைகளிலும் ஆளும் தரப்பின் எதேச்சதிகாரப்போக்குப் பற்றிய விமர்சனங்கள் ஆங்காங்கே முன்வைக்கப்படுகின்றன. அது பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன?

தவறாக நடந்தால் அதற்கெதிரான கண்டனங்களும் விமர்சனங்களும் வெளியே எழும் என்பது நியதி. மேற்குறித்த சபைகளில் ஜனநாயகத்துக்கு மாறான முறையிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் எதேச்சாதிகாரத்துக்கு எதிரான குரல்கள் ஒலிக்கின்றன. இந்தச் சபைகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் விட ஏனைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களே அதிகமாக உள்ளனர். வலுக்குறைந்த நிலையிலேயே ஆட்சித்தரப்பினர் உள்ளனர். ஆனாலும் அவர்கள் தமது அரசியல் லாப நோக்கில் தமது விருப்பு வெறுப்புகளுக்கு அமையவே சபையை வழி நடத்துகின்றனர்.

சபையில் எதிர்த்தரப்பினர் முன்மொழிகின்ற வேலைகள், முன்வைக்கின்ற கருத்துகளையே உரிய முறையில் பதிவதில்லை. சபையின் வேலைகள் முழுவதையும் தாமே செய்வதைப்போன்ற ஒரு தோற்றத்தைச் சமூகத்தில் உருவாக்குவதற்காக முயற்சிக்கின்றனர். இதன் மூலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சரிந்து போயிருக்கும் வாக்கு வங்கியை – அபிவிருத்தி அரசியலை முன்னெடுத்து நிமிர்த்தி விடலாம் என்று நம்புகின்றனர். நாம் வலுவான எதிர்த்தரப்பினர் என்ற அடிப்படையில் மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம். இதற்குத் தொடர்ச்சியாக மறுப்பளிக்கப்படுமானால் நாம் மக்களோடு சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். மக்கள் போராட்டங்களின் மூலம் ஜனநாயக அடிப்படையில் சபைகளை இயக்குவதற்கு முயற்சிப்போம். இது எங்களுடைய பணியாகும்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் உங்கள் கட்சியின் வெற்றி அநேகரை ஆச்சரியப்பட வைத்தது. அந்த வெற்றி தந்த ஊக்கத்துடன் மாகாண சபைத் தேர்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராகின்றீர்களா?

நாங்கள் மேலும் மேலும் பலமடைந்தே வருகிறோம். மக்களுக்கும் எங்களுக்கும் இடையிலான உறவு வலுவாகி வருகிறது. அதிகளவு மக்கள் எம்மை நோக்கி வருகிறார்கள். நாங்கள் மக்களோடு மக்களாக – அவர்களுடைய பிரச்சினைகளை விளங்கி, அதற்கான தீர்வை அளிப்பவர்களாக இருக்கிறோம். எமது வளர்ச்சியை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரித்தானியத் தூதுவரே கிளிநொச்சிக்கு வருகை தந்து எம்மைச் சந்தித்து மக்களுடைய பிரச்சினைகளைப் பற்றிக் கேட்டறிந்திருந்தார். மேலும் பல வெளிநாட்டுத்தரப்பினர் எம்முடன் பேசி வருகிறார்கள். புலம்பெயர்ந்த சூழலிலிருந்தும் எமக்கான ஆதரவுத்தளம் பெருகியுள்ளது. பிற கட்சியினரும் எங்களுடன் பேச்சுகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆகவே அடுத்து வரவுள்ள மாகாணசபைத் தேர்தலில் நாம்போட்டியிடுவோம். நிச்சயமாகக் குறிப்பிடத்தக்க பெரிய வெற்றியைப் பெற்றே தீருவோம்.

எந்தக் கட்சியுடனாவது எதிர்காலத்தில் கூட்டுச் சேரும் எண்ணம் உண்டா?

ஜனநாயக அடிப்படையில் மக்களுடைய நலன்களை முதன்மைப்படுத்தி செயற்படக் கூடிய தரப்புகள் பொருத்தமாக அமையுமாக இருந்தால் அரசியல் கூட்டில் இணைவோம். எமது மக்களின் தியாகத்துக்கும் இழப்புக்கும் கடந்த காலப் போராட்டத்துக்கும் அர்த்தமான முறையில் அந்தக் கூட்டு அமைய வேண்டும் என்பதில் கவனம் கொண்டிருப்போம். அதேவேளை அது நடைமுறையில் எதிர்காலத்துக்கான பணிகளையும் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.

முன்னாள் போராட்டக் குழுக்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் தற்போது அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறான முயற்சிகள் வெற்றியளிக்கையில் நீங்களும் அதில் பங்கேற்பீர்களா?

முதலில் “முன்னாள் போராட்டக் குழுக்கள்” என்ற சொல்லை திருத்தியமைக்குமாறு கேட்கிறேன். ஒரு போராட்ட அமைப்பை முன்னாள், பின்னாள் என்று வரையறை செய்து குறிப்பிடுவது பொருத்தமானதல்ல. அடுத்தது அவை மக்களுக்கான விடுதலை இயக்கங்களே தவிர, குழுக்கள் அல்ல. எனவே அந்த மக்கள் இயக்கங்கள் தம்மை மீள்பார்வைக்குட்படுத்தி, மீள் செயற்பாட்டுக்கு வந்தால் அதைப்பற்றிப் பரிசீலிக்க முடியும். இதில் ஏற்கனவே செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் பகிரங்கத்தளத்தில் மூன்று அணியாகச் செயற்பட்டு வருகிறது. ஒன்று ஈ.பி.ஆர்.எல்.எவ். இதற்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். அடுத்தது ஈ.பி.டி.பி. இதற்கு டக்ளஸ் தேவானந்தா தலைமையேற்றுள்ளார். அடுத்தது தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி. இது சுகு ஸ்ரீதரன் தலைமையில் இயங்குகிறது. இதைவிட புளொட், சித்தார்த்தன் தலைமையிலும் ரெலோ, செல்வம் அடைக்கலநாதனின் தலைமையிலும் இயங்கி வருகின்றன. ஈரோஸ் அவ்வப்போது வெவ்வேறு ஆட்களின் பெயர்களில் இயங்கி வந்தாலும் தற்போதுதான் அதை உரிய முறையில் மீளமைப்புச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிந்திருக்கிறேன். இதை விட இந்த அமைப்புகளிலும் இவற்றுக்கு அப்பாலும் உள்ள பலர், மக்களுக்கான ஒரு மாற்று முன்னணியைக் கட்டமைப்பதைப் பற்றிப் பேசி வருகிறார்கள். தமிழர்களுடைய அடுத்த கட்ட அரசியலை சரியாக முன்னெடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதே அவர்களுடைய முதல் தெரிவு. இதை நாமும் வரவேற்கிறோம். நல்ல முயற்சிகளுக்கு எங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் இருக்கும்.

தற்போதைய சூழலில் அவ்வாறான முயற்சிகளின் அவசியம் பற்றிச் சொல்லுங்கள்.

இதுதான் அவ்வாறான முயற்சிக்குப் பொருத்தமான சந்தர்ப்பம் என்று சொல்வேன். ஏனென்றால், யுத்தம் முடிந்த கையோடு கொந்தளிப்பான சூழலே நிலவியது. வலியோடும் கோபத்தோடும் இருந்த மக்களுக்கு, பாதிப்புகளின் மத்தியிலே இருந்தவர்களுக்கு உடனடித் தெரிவாக அரசாங்கத்தை எதிர்க்கும் மனோ நிலையே இருந்தது. அவர்கள் அதையே செய்தனர். அதன் அடிப்படையிலேயே அவர்களுடைய தெரிவுகளும் அமைந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இதுவரையான வெற்றி என்பது இதுதான்.

இன்று அந்த நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது. சர்வதேச அரசியல் நிலைவரம் என்ன? பிராந்திய சக்திகளாகிய இந்தியா, சீனா ஆகியவற்றின் அணுகுமுறைகள் எப்படி இருக்கின்றன? இலங்கைச் சூழலின் யதார்த்த நிலை என்ன? முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் நிலைவரம் எப்படி உள்ளது? வடக்கு கிழக்கு விடயங்கள் எவ்வாறுள்ளன? யுத்தத்திற்குப் பிந்திய சூழலில் தலைமை ஏற்றிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகள் மக்களிடம் எழுந்து அதற்கான விடைகளையும் அவர்கள் கண்டறியத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பலவீனங்களைக் களைவதாகச் சொன்ன ஏனைய தரப்புகளின் நிலையைக் கூட மக்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.

எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் சரியான – மாற்று அணி ஒன்று மக்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடியவாறு அமையுமாக இருந்தால் நல்லது. ஆனால் அது தமிழ்மொழிச் சமூகங்களின் எதிர்காலத்தை அரசியல் ரீதியாகவும் பொருளாதார அடிப்படையிலும் சமூக சமத்துவப் பண்பிலும் முன்கொண்டு செல்லத் தக்கதாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்குப் புதிய கட்சிகள், புதிய அணிகள் தேவை என்பதற்கும் அப்பால், சரியான – வெற்றியளிக்கும் நடைமுறைகளே அவசியம். போராடிய மக்களுக்கு, பாதிப்பைச் சந்தித்த மக்களுக்கு நியாயமான தீர்வும் வெற்றிகரமான வாழ்க்கையுமே தேவை. இதைச் செய்யக்கூடிய – வினைத்திறனுள்ள அமைப்புகளின் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை.

வாசுகி சிவகுமார்

Comments