எமது பிரச்சினைகளுக்கு பாணியிலான தீர்வூ | தினகரன் வாரமஞ்சரி

எமது பிரச்சினைகளுக்கு பாணியிலான தீர்வூ

நாட்டினதும் குடிமக்களினதும் உள்ளகப் பிரச்சினைகளை தீர்ப்பது தமது கடமையும் பொறுப்புமாகும் என்றும் அதற்கு உலகின் ஆதரவை எதிர்பார்க்கின்ற, வரவேற்கின்ற அதேநேரம் தம்மால் இயன்ற வேகத்திலேயே தமது சொந்த தீர்வுகளை தாம் கண்டறியவுள்ளோம் என்பதையும் சர்வதேச சமூகத்திடம் எடுத்துக்கூறுவதற்கு இலங்கை படிப்படியாக தன்னை தயார்படுத்தி வருகின்றது.

செப்டெம்பர் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த வருடத்திற்கான அமர்வின்போது கவனத்திற்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதியதோர் யோசனையினை முன்வைக்கவிருக்கின்றார். அத்தோடு அதனை அவர் ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குடேரஸ்ஸிற்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெஷலட் ஆகியோருக்கும் சமர்ப்பிக்கவிருக்கின்றார். அடுத்த வாரம் இவர்களுடைய சந்திப்பு நியூயோர்க்கில் இடம்பெறவிருக்கின்றது.

கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இந்த புதிய திட்டத்தைப் பற்றி தாம் பெஷலட்டுடன் கலந்துரையாட இருப்பதாக தெரிவித்தார்.

“நல்லாட்சி என்பது நீதி, கண்ணியம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை அடைந்து கொள்வதிலுள்ள இடைவெளிகளை அடையாளம் காணுதல் மற்றும் திருத்தங்களைச் செய்வதை அடிப்படையாகக் கொண்டதாகும். இதன் மூலம் அனைவரும் கெளரவத்துடனும் ஐக்கியத்துடனும் வாழ முடியும் என்பதுடன் செயற்திறன்மிக்க, பேண்தகு அபிவிருத்தியையும் அனுபவிக்க இது வழிவகுக்கும்” என பதவியேற்றதைத் தொடர்ந்து, பெஷலெட் ஜெனீவாவில் நிகழ்த்திய தனது முதல் உரையில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் சமீபத்திய அறிக்கையானது சமநிலைதன்மை மிக்கதாக அமைந்திருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி பினோசேவின் சர்வாதிகார ஆட்சியின் போது சிறையில் அடைக்கப்பட்ட சிலி நாட்டைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரான பெஷலட், மனித உரிமைகள் பற்றிய தனது ஆழ்ந்த உறுதிப்பாட்டை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தார். அத்தோடு இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் “இலங்கையில், நிலைமாறும் கால நீதித்துறை நிகழ்ச்சிநிரலை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்தல் மிகவும் மந்தகதியாக இருந்தபோதிலும் காணாமற்போனோரின் அலுவலகம் தற்போது தனது ஆணையை நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகளையும், நிறுவன ரீதியான திறன்விருத்தி நடவடிக்கைகளையும் ஆரம்பித்திருக்கின்றது. காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு தக்க பதிலைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அவ் அலுவலகம் துரிதமாக செயற்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

அத்தோடு இழப்பீட்டுக்கான அலுவலகமொன்றை தாபிப்பதற்கான சட்டவாக்க பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொறுப்புக்கூறுதல் மற்றும் உண்மையை கண்டறிதல் ஆகிய விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்படுவது நாட்டின் நீண்டகால ஸ்திர த்தன்மையிலும் சுபீட்சத்திலும் முக்கிய பங்கைக் கொண்டிருக்கும். மீண்டும் மீண்டும் இடம்பெறும் இனவாத செயல்கள் மற்றும் சமூகங்களுக்கிடையிலான வன்முறைகள் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கான முயற்சிகள் குழப்பமாக இருப்பதாக அவர் கூறியிருக்கின்றார்.

இச்செயற்பாடுகளில் இலங்கையின் முன்னேற்றம் மெதுவாக இருப்பதாக புதிய ஆணையாளர் கூறியிருப்பதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி, ஆயினும் அச்செயற்பாடுகள் உறுதியானது எனத் தெரிவித்ததோடு, கொந்தளிப்பான விடயங்களை அவசரமாக கையாள இயலாது என்பதை சுட்டிக்காட்டினார். பல உணர்ச்சிகரமான விடயங்களை சமநிலைப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்தார். நீண்டகால மோதல்களை எதிர்கொண்ட எல்லா நாடுகளுக்கும் தீர்வுகளை அடைந்துகொள்ள மிக நீண்ட நாட்கள் தேவைப்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை எடுத்துரைத்தார்.

எல்.டீ.டீ.ஈ சார்பான அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிச் சார்பான சில அரச சார்பற்ற அமைப்புக்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் இருந்துவந்த ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் நிலைமையை தவிர்த்து நாட்டை நல்வழிப்படுத்த முடிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஐ.நா.வின் முன் தான் சமர்ப்பிக்கவிருக்கும் யோசனையானது, பாதுகாப்புப் படையினருக்கு பங்கம்விளைவிக்காத அதேவேளை நாட்டின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதோடு, பிரச்சினைகளை தீர்ப்பதையும் நிவாரணமளிப்பதையும் நோக்கமாக கொண்டிருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கும் அதேசமயம், இந்த முன்மொழிவுகள் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கும் மோதலின் போது இருதரப்பிலும் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் இணக்கப்பாட்டு தீர்வுகளை எட்ட உதவும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார்.

நியூயோர்க்கில் நடைபெறவிருக்கின்ற 73 வது ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தொடர் செப்டெம்பர் 18 ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமாகியது. செப்டெம்பர் 25 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 01 ஆம் திகதி வரை பொது விவாதம் இடம்பெறும். செப்டெம்பர் 25 ஆம் திகதி ஐ.நா. பொதுச்சபையின் 73 வது கூட்டத்தொடரின் உயர்மட்ட விவாதத்தில் ஜனாதிபதி உரையாற்றவிருக்கின்றார்.

இந்த ஆண்டு புதிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்க இலங்கை எடுத்திருக்கும் முடிவு உண்மையில் நீண்ட காலமாக உணரப்பட்டு வந்த தேவையை பூர்த்தி செய்வதாகவே அமைகின்றது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 72 வது கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, “தமது சுதந்திரம் மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் அதேநேரம் தனது பிரச்சினைகளையும் அரசாங்கம் கையாண்டு வருகின்றது” என்பதை வலியுறுத்தினார். எமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு நிரந்தர தீர்வினை கண்டறியும் வகையில் எமது இலக்குகளை அடைந்து கொள்வதற்கு மெதுவான, அதேநேரம் உறுதியான எமது முன்னேற்ற பயணத்திற்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். “எமது இறைமையை மீறக்கூடிய எந்தவொரு வாசகத்தையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம்” என்பது மேற்குலகிற்கான ஒரு தெளிவான செய்தியாகும். சில தீவிரவாத குழுக்கள் துரித தீர்வுகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

“அயினும் மூன்று தசாப்த கால நீண்ட போருக்கு முகங்கொடுத்த ஒரு நாடு என்ற வகையில், ஆழ்ந்த பிளவுகளை எதிர்கொண்டிருக்கும் பின்னணியிலும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் முன்னேற்றுவதற்கான அனைத்து ஆதரவையும் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்வதாகவும் அன்புக்குரிய நாட்டையும் அதன் மக்களையும் தற்போதைய சூழ்நிலையிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்றும் அதனாலேயே தமது மெதுவான ஆயினும் வெற்றிகரமான ஒரு பயணத்திற்கு அவர்கள் ஆதரவளிக்க வேண்டும்” என தாம் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

அதேநேரத்தில், “ஒரு அரசாங்கம் என்ற வகையில், எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்துவதுடன், அவற்றுக்குரிய தீர்வைக் கண்டறிவதற்கு முன்னுரிமை அளித்திருப்பதாகவும் குறிப்பாக தமது அரசாங்கம் ஜனநாயகத்தை பலப்படுத்துவதிலும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும் எதிர்காலத்திலும் அத்துறைகளில் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சிக்கும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கின்றார்.

உள்நாட்டு பிரச்சினை

இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றியும் அவற்றுக்கான உள்ளூர் தீர்வுக்கான தேவை குறித்தும் சர்வதேச சமூகத்திற்கு விளக்குவதற்கு 73வது ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடர் ஜனாதிபதிக்கு ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக அமைகின்றது. இம்முறை அவர் சர்வதேச சமூகத்திற்கு தனது முன்மொழிவுகளை விளக்கவும் அதற்கான ஆதரவைப் பெறவும் எதிர்பார்த்திருக்கின்றார்.

63 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக இருந்து வருகின்ற இலங்கை, இந்த உறவுகளை மேலும் மேம்படுத்திவரும் அதேநேரம்் தனது உடன்படிக்கைகளையும், ஒப்பந்தங்களையும், விதிமுறைகளையும் மதிக்கின்ற ஒரு நாடாகவே இருந்து வந்துள்ளது. இன ஐக்கியம், ஒற்றுமை, சுதந்திரம், இறையாண்மை மற்றும் நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கும் நிலையான தீர்வை கண்டறிவதற்கும் மெதுவான, அதேநேரத்தில் உறுதியான வழியை தொடர்வதற்கு சர்வதேச சமூகமும் உதவ வேண்டும் என்பதே இலங்கையின் கோரிக்கையாக இருக்கின்றது.

ஆக்கம் - சுகீஸ்வர சேனாதீர தமிழாக்கம் - ஐயூப்கான்

Comments